012. நடுவு நிலைமை - 01. தகுதியென ஒன்று





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     நடுவு நிலைமை என்பது, பகைவர், அயலார், நண்பர் என்னும் மூவகையோரிடத்திலும், அறநெறி வழுவாமல் நின்று ஒழுகுவது. ஒருவர் செய்த நன்மையை நினைக்க, நடுவு நிலைமை தவற வாய்ப்பு உள்ளது. அந்த நிலையிலும், நடுவு நிலை தவறாது ஒழுகும் பாங்கு வாய்க்க வேண்டும் என்பதால் செய்ந்நன்றி அறிதலின் பின்னர் இது சொல்லப்பட்டது.

     இம் முதல் திருக்குறள்,  பகைவர், அயலார், நண்பர் என்னும் மூவகையினர் இடத்தும், தனது முறைமையினை விடாது அறவழியில் ஒழுகப் பெற்றால், அந்த யோக்கிதை ஒன்றுதான் நடுவுநிலைமை என்று சொல்லப்படுகின்ற நல்ல அறம் ஆகும்; அதுவே நன்மையை ஒருவனுக்குத் தரத்தக்கது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....
  
தகுதி என ஒன்று நன்றே, பகுதியான்
பால்பட்டு ஒழுகப் பெறின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தகுதி என ஒன்றே நன்று --- நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று;

     பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் --- பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்.

     (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

பின்வரும் பாடல்களை, இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக எண்ணலாம்....

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

நடுவுநிலைமையில் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவே அன்றி ஞானமும் பெற்று வீடு பேற்றினை எய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்,
நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதி,
நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவார்,
நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.    --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

     நடுவுநிலைமை பிறழாதவர் திருமால், பிரமன் முதலிய நிலைகளைப் பெறுவதோடு அல்லாமல், அவர்கள் சிவஞானிகளாய்த் திகழ்ந்து, இறுதியில் சிவமாம் தன்மையையும் பெறுவர்.

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் --- மேலைக்
கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை இல்.  --- பழமொழி நானூறு.

இதன் பொழிப்புரை ---

     சான்றவர் --- அறிவு நிரம்பிய அமைச்சர்கள். சால மறைத்து ஓம்பி கை கரப்பவும் --- மிகுதியானவைகளைக் கூறி இது பெரும் குற்றமல்ல என்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும், காலை கழிந்ததன் பின்றை --- அன்றிரவு கழிந்த பின்னர், மேலை --- முன்னாள், கறவை கன்று ஊர்ந்தானை --- பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, தந்தையும் ஊர்ந்தான் --- அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்), முறைமைக்கு மூப்பு இளமை இல் --- செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி, இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை. இதுவை நடுவிநிலைமை ஆகும்.

         முதுமை இளமை கருதியோ, உறவு நட்பு கருதியோ நீதி கூறல் ஆகாது என்பதாம்.


தேரா மன்னா! செப்புவது உடையேன்,
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன், அன்றியும்,
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட, தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார் என் பதியே, அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ்கழல் மன்னா! நின்னகர்ப் புகுந்து ஈங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே...      --- சிலப்பதிகாரம், வழக்குரை காதை.
        
இதன் பதவுரை ---

     தேரா மன்னா செப்புவது உடையேன் --- மன்னர்க்குரிய ஆராய்ச்சியறிவு இல்லாத மன்னவனே! நின்னிடத்துச் சொல்லத் தகுவது ஒன்றுடையேன் யான்;

     எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீரித்தோன் --- இகழ்தலற்ற சிறப்பினை உடைய தேவர்களும் இறும்பூது எய்தப் புறா ஒன்று உற்ற மிக்க துன்பத்தினைப் போக்கியோனும்,

     அன்றியும் --- அவன் அன்றியும்,

      வாயிற் கடைமணி நடு நா நடுங்க --- கடைவாயிலின் இடத்துக் கட்டிய மணியின் நடுவிலுள்ள நா அசைய, ஆவின் கடைமணி உகு நீர் நெஞ்சு சுட --- பசுவொன்றின் கண்மணிக் கடையினின்றும் ஒழுகும் நீர் தன்னுடைய உள்ளத்தை வெதுப்பலானே, தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் --- தானே தன்னுடைய பெறுதற்கரிய மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்றோனும் ஆகிய இவரது, பெரும் பெயர்ப் புகார் என் பதியே --- மிக்க புகழினையுடைய புகார் நகரமே யான் பிறந்த ஊர்;

     அவ் ஊர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி --- அவ் ஊரின்கண் பழிப்பில்லாத சிறப்பினை உடைய புகழ் யாங்கணும் சென்று விளங்கிய பெருங்குடிக்கண் மாசத்துவான் என்னும் வணிகனுடைய புதல்வனாகத் தோன்றி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ் கழல் மன்னா நின் நகர்ப் புகுந்து --- வீரக் கழலணிந்த மன்னனே! பொருளீட்டி வாழ்க்கை நடத்தலை விரும்பி, முன்னைத் தீவினை செலுத்தலானே, நினது மதுரை நகரத்தின்கண் புக்கு, இங்கு என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி --- இந் நகரிடத்தே என்னுடைய காலின்கண் அணிந்த சிலம்பொன்றனை விற்றல் காரணமாக நின்னிடத்துக் கொலையுண்ட கோவலன் என்பானுடைய மனைவியாவேன், கண்ணகி என்பது என் பெயரே என --- என் பெயர் கண்ணகி எனப்படும்.

      புள் --- புறா. பருந்து ஒன்றினால் துரத்தப்பட்டுத் தன்னை வந்தடைந்த புறாவினைக் காத்து, அதன்பொருட்டுத் தன் ஊனை அப் பருந்திற்கு அளித்தான் சிபி.

     தன் புதல்வனை ஆழியின் மடித்தோன் மனுச்சோழன்.

     இவ்விரண்டு பாடல்களிலும், நீதி வழுவாத மனுநீதிச் சோழன் வரலாறு கூறப்பட்டது. பெரியபுஆணத்தில் கூறப்பட்டுள்ள அவ் வரலாறு வருமாறு....

     சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா யிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். ஊனமில் வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

     அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடைசூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றார். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ தான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

     வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.

தன்உயிர்க் கன்று வீயத்
         தளர்ந்தஆத் தரியாது ஆகி
முன்நெருப்பு உயிர்த்து விம்மி
         முகத்தினில் கண்ணீர் வார
மன்உயிர் காக்கும் செங்கோல்
         மனுவின்பொன் கோயில் வாயில்
பொன்அணி மணியைச் சென்று
         கோட்டினால் புடைத்தது அன்றே. --- பெரியபுராணம்.

     அம் மணி ஓசை மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான்.
கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.

அவ்வுரை கேட்ட வேந்தன்
         ஆஉறு துயரம் எய்தி
வெவ்விடம் தலைக்கொண் டால்போல்
         வேதனை அகத்து மிக்குஇங்கு
இவ்வினை விளைந்த வாறுஎன்று
         இடர்உறும் இரங்கும் ஏங்கும்
செவ்விதுஎன் செங்கோல் என்னும்
         தெருமரும் தெளியும் தேறான்.    --- பெரியபுராணம்.

மன்உயிர் புரந்து வையம்
         பொதுக்கடிந்து அறத்தில் நீடும்
என்நெறி நன்றால் என்னும்
         என்செய்தால் தீரும் என்னும்
தன்இளம் கன்று காணாத்
         தாய்முகம் கண்டு சோரும்
அந்நிலை அரசன் உற்ற
         துயரம்ஓர் அளவிற்று அன்றால்.   --- பெரியபுராணம்.

     இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள்.

மந்திரிகள் அதுகண்டு
         மன்னவனை அடிவணங்கிச்
சிந்தை தளர்ந்து அருளுவது
         மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்
கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்
         கோவதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை
         வழிநிறுத்தல் அறம்என்றார்.   --- பெரியபுராணம்.

     அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார்.

வழக்குஎன்று நீர்மொழிந்தால்
         மற்றுஅதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்துஅலறுங்
         கோஉறுநோய் மருந்துஆமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன்று
         எல்லீரும் சொல்லியஇச்
சழக்குஇன்று நான்இயைந்தால்
         தருமம் தான் சலியாதோ.   --- பெரியபுராணம்.

மாநிலம்கா வலன்ஆவான்
         மன்உயிர்காக் கும்காலைத்
தான்அதனுக்கு இடையூறு
         தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
         கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து
         அறம் காப்பான் அல்லனோ.   --- பெரியபுராணம்.

என்மகன்செய் பாதகத்துக்கு
         இருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியன்ஓர் உயிர்கொன்றால்
         அவனைக்கொல் வேன்ஆனால்
தொன்மனுநூல் தொடைமனுவால்
         துடைப்புஉண்டது எனும்வார்த்தை
மன்உலகில் பெறமொழிந்தீர்
         மந்திரிகள் வழக்கு என்றான்.   --- பெரியபுராணம்.

     மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.

அவ்வுரையில் வருநெறிகள்
         அவைநிற்க அறநெறியின்
செவ்விய உண்மைத்திறம் நீர்
         சிந்தை செயாது உரைக்கின்றீர்
எவ் உலகில் எப் பெற்றம்
         இப்பெற்றித்து ஆம் இடரால்
வெவ் வுயிர்த்துக் கதறிமணி
         எறிந்து விழுந்தது விளம்பீர்.  --- பெரியபுராணம்.

போற்றி இசைத்துப் புரந்தரன்மால்
         அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச
வீற்றுஇருந்த பெருமானார்
         மேவிஉறை திருவாரூர்த்
தோற்றம்உடை உயிர்கொன்றான்
         ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவும் மற்று அவற்கொல்லும்
         அதுவே ஆம் எனநினைமின்.  --- பெரியபுராணம்.

     அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.

ஒருமைந்தன் தன்குலத்துக்கு
         உள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை
         கடன்என்று தன்மைந்தன்
மருமம் தன் தேர்ஆழி
         உற ஊர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி
         அரிதோ மற்று எளிதோதான்.  --- பெரியபுராணம்.

     கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.

தண்அளிவெண் குடைவேந்தன்
         செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
         வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணல்அவன் கண்எதிரே
         அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
         வீதிவிடங் கப்பெருமான்.    --- பெரியபுராணம்.

சடைமருங்கில் இளம்பிறையும்
         தனிவிழிக்கும் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும்
         எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
         கண்டுஅரசன் போற்றிஇசைப்ப
விடைமருவும் பெருமானும்
         விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான். --- பெரியபுராணம்.

அந்நிலையே உயிர்பிரிந்த
         ஆன்கன்றும் அவ்அரசன்
மன்உரிமைத் தனிக்கன்றும்
         மந்திரியும் உடன்எழலும்
இன்னபரிசு ஆனான் என்று
         அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்
முன்னவனே முன்நின்றால்
         முடியாத பொருள்உளதோ.   --- பெரியபுராணம்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...