014. ஒழுக்கம் உடைமை - 08. நன்றிக்கு வித்தாகும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "நல்லொழுக்கம் என்பது அறத்திற்குக் காரணமாய் நின்று இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை விளைக்கும். தீய ஒழுக்கமானது எப்போதும், பாவத்திற்குக் காரணமாய் இருந்து துன்பத்தையே தரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

நன்றிக்கு வித்து ஆகும் நல்ஒழுக்கம், தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் --- ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;

     தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் --- தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.

      ('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல்லோடு,
இன்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.        --- ஆசாரக்கோவை.

இதன் பதவுரை ---

     நன்றி அறிதல் --- தனக்குப் பிறர் செய்த நன்றியை மறவாமையும், பொறையுடைமை --- பொறுமையும், இன் சொல் ஓடு --- இன்சொல்லும், எ உயிர்க்கும் --- எல்லா உயிர்க்கும், இன்னாத செய்யாமை --- துன்பந்தருபவற்றைச் செய்யாது இருத்தலும், கல்வி ஓடு --- கல்வியும், ஒப்புரவு --- ஒப்புரவை, ஆற்ற அறிதல் --- மிக அறிதலும், அறிவுடைமை --- அறிவு உடைமையும், நல் இனத்தார் ஓடு நட்டல் --- நல்ல இயல்பு உள்ளவர்களுடன் நட்புச் செய்தலும், இவை எட்டும் --- என்ற இவ்வெட்டு வகையும், சொல்லிய --- அறிஞர்களால் சொல்லப்பட்ட, ஆசார வித்து --- ஒழுக்கங்கட்குக் காரணம்.

     தனக்குப் பிறர் செய்த நன்றியினை அறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக அறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம்.


பிறர்மனை கள்களவு சூது கொலையோடு
அறன் அறிந்தார் இவ்வைந்து நோக்கார், - திறன்இலர்என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.     --- ஆசாரக்கோவை.

இதன் பதவுரை ---

     திறன் இலர் என்று --- நல்லொழுக்கம் இல்லாதவர் என்று, எள்ளப்படுவதூஉம் அன்றி --- இகழப்படுவதும் அல்லாமல், நிரயத்து செல் வழி உய்த்திடுதலால் --- நரகத்துக்குச் செல்லும் வழியில் செலுத்துதலால், அறன் அறிந்தார் --- ஒழுக்கம் அறிந்தவர். பிறர் மனை --- பிறருடைய மனையாளை விரும்புவதும், கள் --- கள் குடிப்பதும், களவு --- களவு செய்வதும், சூது --- சூதாடுதலும், கொலையோடு --- கொலை செய்தலும், இவ் ஐந்தும் --- ஆகிய இவ்வைந்தையும், நோக்கார் --- மனத்தாலும் நினையார்.

     பிறர்மனை நயத்தல். கள்ளுண்ணல், களவு செய்தல், கொலைசெய்தல், சூதாடல் இவை இகழ்ச்சிக்கும் நரகத்துக்கும் காரணமாதலால் இவைகளை மனத்திலும் நினைத்தல் ஆகாது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...