015. பிறனில் விழையாமை - 07. அறன்இயலான்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "பிறன் ஒருவனுக்கு உரிமையான மனையாளின் தன்மையை விரும்பாதவன், அறநெறியில் நின்று இல்லறத்தை நடத்துபவன் என்று சொல்லப்படுவான்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான்,

     பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பின்கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன்.

         (ஆன் உருபு ஈண்டு உடன் நிகழ்ச்சிக்கண் வந்தது. இல்லறம் செய்வான் எனப்படுவான் அவனே என்பதாம்.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

சீலம் குலம் அடியாள் தீண்டின் கெடும், கணிகை
ஆலிங்கனம் தனம் நாசம் ஆகும், --- நூல்இழந்த
வல்லி தழுவக் குறையும் வாழ்நாள், பிறர்தாரம்
புல்லினர்க்கு எல்லா நலமும் போம்.     ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

     வேலைக்காரப் பெண்ணைக் கூடினால் ஒழுக்கமும் குலமும் கெட்டுப் போகும். பரத்தையரைக் கூடினால் செல்வம் அழிந்து போகும். தாலி இழந்த விதவையைக் கூடினால் வாழ்நாள் குறைந்து போகும். பிறர் மனைவியரைக் கூடினவர்களுக்கு மேற்சொன்ன ஒழுக்கம், குலம்,செல்வம், ஆயுள் என்பவகைளும் பிறவும் ஆகிய எல்லா நன்மைகளும் அழிந்து போகும்.

(சீலம் - ஒழுக்கம்.  அடியாள் - பணிப்பெண்.  கணிகை - வேசி.  ஆலிங்கனம் - தழுவுதல்.  தனம் - செல்வம்.  நூலிழந்த வல்லி - கைம்பெண்.  தாரம் - மனைவி.  புல்லுதல் - தழுவுதல்.)

பெண்மை வியவார் பெயரும் எடுத்துஓதார்
கண்ணோடு நெஞ்சுஉறைப்ப நோக்குறார் - பண்ணொடு
பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார்
வீடில் புலப்பகையி னார்.  ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     வீடு இல் புலம் பகையினார் --- புலன்களுக்குப் பகைவராகிய கெடுதலில்லாத துறவிகள்; பெண்மை வியவார் --- பெண்மை என்னுந் தன்மையைப் புகழ்ந்து கூறார்; பெயரும் எடுத்து ஓதார் --- பெண் என்னும் பெயரையும் எடுத்து உரையார். நெஞ்சு உறைப்ப கண்ணோடு நோக்கு உறார் --- நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் பெண்களைப் பார்க்கமாட்டார்கள்; பண்ணொடு பாடல் செவி மடார் --- தம்மை வயப்படுத்தும் பொருட்டு அவர்கள் இசையோடு பாடும் பாடல்களுக்கும் செவி கொடார்: பண்பு அல்ல --– குணமற்றனவான பிறசெயல்களையும் , பாராட்டார் --- பாராட்டமாட்டார்கள்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...