006. வாழ்க்கைத் துணைநலம் - 03. இல்லதென் இல்லவள்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்
  
     இந்த அதிகாரத்தின் மூன்றாவது திருக்குறள், ஒருவனுக்கு வாய்க்கும் மனையாள், நற்குண நற்செய்கைகள் உடையவளாய் இருந்தால், அவனிடத்தில் இல்லாதது எதுவும் இல்லை. மனையாள் நற்குண நற்செய்கைகளை உடையவளாக இல்லாது இருந்து விட்டால், அவனிடத்தில் என்ன இருந்தும் அவன் இல்லாதவனாகவே கருதப்படுவான் என்கின்றது. 

     எனவே, இல்லாள் ஒருத்திக்கு இருக்க வேண்டியவை நற்குண நற்செய்கைகளே ஆகும்.

திருக்குறளைக் காண்போம் ---

இல்லதுஎன் இல்லவள் மாண்பு ஆனால், உள்ளது என்
இல்லவள் மாணாக் கடை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் --- ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது?

     இல்லவள் மாணாக்கடை உள்ளது என் --- அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?

         ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இல்வாழ்க்கை்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர், தாம் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் பின்வருமாறு பாடி உள்ளார்...

உலகு உண்டு உறங்கும் ஒருத்தி, ஒருத்தி
சிலகொண்டு அரன் உவப்பச் செய்யும் அறன் என்றால்
இல்லதுஎன் இல்லவள் மாண்பு ஆனால், உள்ளது என்
இல்லவள் மாணாக் கடை.               

ஒருத்தி உலகு உண்டு உறங்கும் --- ஒருத்தி என்பது  திருமாலாகிய சக்தி. திருமால் ஈசனுக்குச் சக்தி ஆவார்.
  
நாக அணியார், நக்கர்எனும்
     நாமம்உடையார், நாரணன்ஓர்
பாகம் உடையார், மலைமகள்ஓர்
     பாங்கர் உடையார், பசுபதியார்,
யோகம் உடையார், ஒற்றி உளார்,
     உற்றார் அல்லர், உறுமோக
தாகம் ஒழியாது என்செய்கேன்,
     சகியே இனிநான் சகியேனே.  

என வரும் திருவருட்பாப் பாடலாலும்,

மால்அன மாயன் தன்னை
     மகிழ்ந்தனர், விருத்தர் ஆகும்
பாலனார், பசுபதியார்,
     பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலால் செற்றார்,
     காஞ்சிமா நகர்தன் உள்ளால்
ஏலநல் கடம்பன் தந்தை
     இலங்குமேற் றளிய னாரே.

மண்ணினை உண்ட மாயன்
     தன்னை ஓர் பாகம் கொண்டார்,
பண்ணினைப் பாடி ஆடும்
     பத்தர்கள் சித்தங் கொண்டார்,
கண்ணினை மூன்றுங் கொண்டார்,
     காஞ்சிமா நகர்தன் உள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார்,
     லங்குமேற் றளிய னாரே.

பைஅரவு அசைத்த அல்குல்,
     பனிநிலா எறிக்குஞ் சென்னி,
மைஅரிக் கண்ணி யாளும்,
     மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய் அரி தில்லை தன்னுள்
     திகழ்ந்த சிற்றம்ப லத்தே
கைஎரி வீசி நின்று
     கனல் எரி ஆடு மாறே.

எரி அலால் உருவம் இல்லை,
     ஏறு அலால் ஏறல் இல்லை,
கரி அலால் போர்வை இல்லை,
     காண்தகு சோதி யார்க்குப்
பிரிவு இலா அமரர் கூடிப்  
     பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்
அரி அலால் தேவி இல்லை,
     ஐயன் ஐயாற னார்க்கே.

என வரும் அப்பர் தேவாரப் பாடல்களாலும் இது விளங்கும்.

அந்தத் திருமால் இந்த உலகத்தையே உண்டவன்.

உலகம் உண்ட பெருவாயா
      உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
      நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்கு ஆய் நின்ற
      திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம்
      கூடும் ஆறு கூறாயே.

என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி.

     அவன் திருப்பாற்கடலில் அறிதுயில் கொள்ளுபவன். உலகத்தையே உண்ணத்தக்க பெருவயிறு படைத்து, ஒரு வேலையும் செய்யாமல் உண்பதும் உறங்குவதுமாகத் திருமால் ஆகிய தேவி இருக்கின்றாள் என்று நயம்படச் சொல்லப்பட்டது.

ஒருத்தி சிலகொண்டு அரன் உவப்பச் செய்யும் அறன் ---

     பின் உள்ள ஒருத்தி உமாதேவியார். சில என்றது சிவபெருமான் தந்த இருநாழி நெல்லைக் குறித்தது. உமாதேவியார் சிவபெருனிடம் இரண்டு நாழி நெல் பெற்று முப்பத்திரண்டு அறங்களையும் புரிந்த கதை காஞ்சிப் புராணம், பெரியபுராணம் முதலியவற்றால் தெரியவரும்.

     திருமால் ஆகிய தேவி உலகை உண்டவன்.

     உமாதேவியார் உலகத்தை எல்லாம் ஈன்றவள்.   ஈன்றதோடு முப்பத்திரண்டு அறங்களையும் செய்து வருகின்றாள். எனவே, மனைமாட்சி என்பது உமாதேவியாரிடத்திலே உள்ளது.

         நனைமாட்சி மென்கொன்றைத் தாரோன்
                  தரும் இருநாழி நெல்லால்,
         வினைமாட்சி கொண்டு உயிர் எல்லாம்
                  அளித்து அருள் மேன்மையினால்,
         மனைமாட்சி எய்தும் உனக்கே பெருங்
                  கற்பு மாட்சி அன்றி,
         பினை மாட்சி யார்க்கு உண்டு உலகு ஈன்ற
                  குன்றைப் பெரியம்மையே,
                                        ---பெரியநாயகியம்மை கட்டளைக்கலித்துறை.

இதன் பொருள் ---

திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் எழுந்தருளி இருக்கும் பெரியம்மையே! தேன் பொருந்திய பெருமையை உடைய மென்மையான கொன்றை மலர் மாலையை அணிந்துள்ள சிவபெருமான் தந்தருளிய இருநாழி நெல்லைக் கொண்டு, உலகு உயிர்களை எல்லாம் காத்து அருள் புரியும் செயல் திறமை உனக்கு உள்ளதால், மனைமாட்சி என்பது பொருந்தி உள்ள உனக்கே பெரும் கற்பு மாட்சியும் உள்ளதாகும். இந்த மாட்சிமை வேறு யாருக்கு உள்ளது?

நனை மாட்சி --- தேன் பொருந்திய பெருமையை உடைய.
வினை மாட்சி --- காரியத் திறமை.

கணவர் அளித்தது கொண்டு அறம் வளர்ப்பார்க்கே கற்புமாட்சி உரித்து என்பது நூல் துணிபு. ஆகலின், மனைமாட்சி எய்தும் உனக்கே பெருங்கற்பு மாட்சி எனவும், அஃது இயற்றார்க்கு எங்ஙனம் எய்தும் என்பார் பினைமாட்சி யார்க்கு உண்டு எனவும் கூறினார்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியார் தாம் பாடிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பின்வருமாறு பாடி உள்ளார்....

ஆதியில் ஆரூரர்க்கு அமுது ஆக்கவே, பரவை
வீதியெல்லாம் நெல்லாய் விளைந்ததே, - நீதியால்
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால், உள்ளது என்
இல்லவள் மாணாக் கடை.
                         
         குண்டையூர்க் கிழார் என்னும் அடியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சிறப்புக்களைக் கேள்வியுற்று, சுந்தரமூரத்தி சுவாமிகள் அடியார்களுக்கு மகேசுர பூசை சிறப்புறச் செய்தருளுமாறு அவருக்கு நெல், பருப்பு முதலியவற்றைப் பரவையார் திருமாளிகைக்கு அனுப்பி வந்தார். வருநாளில் மழை வளம் சுருங்கிற்று. குண்டையூர்க் கிழாருக்கு போதிய நெல் கிடைக்கவில்லை. அவர் வருந்தினார். சிவபிரான் அவர் கனவிலே தோன்றி, "ஆரூரனுக்காக உமக்குப் போதிய நெல் அளித்தோம்" என்றார். உடனே குபேரனை ஏவினார். குபேரன் குண்டையூர் முழுதும் நெல்லைக் குவியச் செய்தான். நெல் குவியல்களால் விண்ணும் மறைந்தது. எங்கும் நெல் மயமாகவே இருந்தது. பொழுது விடிந்து, நெல் மலையைக் குண்டையூர்க் கிழார் கண்டார். திருவருளை வியந்தார். வன்தொண்டரை நினைந்தார். "இதனை வன்தொண்டர்க்குத் தெரிவிப்பேன்" என்று திருவாரூர் நோக்கி விரைந்தார்.

     இந் நிகழ்ச்சியைச் சிவபிரான் நம்பியாரூரருக்குத் தெரிவித்தார். குண்டையூர் நோக்கி வந்த நம்பியாரூரரை குண்டையூர்க் கிழார் வணங்கினார். நாவலர் பெருமான் நெல் மலையைக் கண்டார். சிவபிரான் கருணையை வியந்தார். "நீள நினைந்து அடியேன்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, "ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித் தரப் பணியே" என்று வேண்டினார். பூதகணங்கள் நெல் மலையைத் திருவாரூர்த் தெருவு தோறும் நிரப்பின.

     திருவாரூர் வாசிகள் எங்கணும் நெல்மலையைக் கண்டு வியந்தார்கள். "நடப்பதற்கும் வழியில்லாமல் குவிந்து கிடக்கும் இந்த நெல்லை, பரவையார் எங்கே வைப்பார் என்றார்கள். பலர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சிறிது நேரத்தில் பரவையார், "அவரவர் வீட்டின் எல்லையில் உள்ள நெல்லை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்" என்று பறை அறைவித்தார்.  மக்கள் அவ்வாறே செய்து மகிழ்ந்தார்கள்.

     ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கைகள் உடையவள் ஆயினக்கால் அவனுக்கு இல்லாதது யாது? அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளதுதான் யாது? எனத் திருவள்ளுவர் அருளிய இத் திருக்குறளால் இதனை அறியலாம்.

     இத் திருக்குறள் கருத்துக்கு ஏற்ப, ஔவையார், "மூதுரை" என்னும் நூலில் பாடியுள்ள பாடலைக் காண்போம்.

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,
இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

இதன் பொருள் ---

நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ,  மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.

         நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அஃது அல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும்.

     திருமந்திரம் என்னும் நூலும் இந்த உலகியல் முறையையே காட்டி, திருவருட் சத்தியின் அருளைப் பெறுகின்ற பேற்றினைப் பற்றிப் பேசுகின்றது.

கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே. --- திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்றது..

     கூத்தனார் ஒளியினைக்கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியாரும் கலந்த கலப்பால் உலகு உடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மைச் செந்தமிழ்த் திரு நான்மறைகளெல்லாம் அம்மையின் அடியிணையை எங்கணும் தேடுகின்றன. அத்தகைய அம்மை என் உள்ளத்தைக் குடியிருப்பாகக்கொண்டு என்னை ஆண்டருளினள் என்க.


இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை,
இல் அடைந்தானுக்க் இரப்பது தான் இல்லை,
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்,
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்ஆன்ஐயே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணைவியைப் பெற்றால், அவளுக்கே அன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. எல்லா நன்மைகளும் குறைவின்றி உளவாம். அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.

     பராசத்தியைத் தன் உடம்பினுள் குடிகொள்ளப் பெற்றவனுக்கு, இல்லாத செல்வம் இல்லை. அவன் இறப்பது இல்லை. அவனுக்கும் தேவரும் நிகர் ஆவார். அவனிடம் சிவம் இல்லாதது இல்லை.

     என்றும் நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் இல் அடைந்தார் ஆவர். அத்தகைய திருவடியாகிய இல்லத்தை அடைந்தார் யாண்டும் எவரிடத்தும் ஒன்றினையும் இரவார். அத்தகையோர்க்கு விண்ணாட்டில் வாழும் வினைப்பயன் சேர் இமையவரும் ஒப்பாகார்; தாழ்ந்தவரே ஆவர். அவர்கட்குக் கிடைத்தற்கரிய பொருள் என்று ஏதும் இல்லை. அதற்குக் காரணம், அவர்கள் புகலிடமாக ஆருயிர்க்குத் தலைவனாம் சிவபெருமானையே கொண்டிருத்தலான் என்க.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...