005. இல்வாழ்க்கை - 06. அறத்தாற்றின் இல்வாழ்க்கை





திருக்குறள்
அறத்துப்பால்
                                   
இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை


     இந்த அதிகாரத்தின் ஆறாவது திருக்குறள், ஒருவன் இல்வாழக்கையை பயன் தருவதாகிய அறநெறியில்  நடத்தினால், அந்த இல்வாழ்க்கைக்குப் புறம்பாகிய துறுவற வழியில் சென்று பெறக்கூடிய பயன் ஏதும் இல்லை என்கின்றது.

     "அறநெறி" அல்லது "அறத்து ஆறு" என்றது பழி அஞ்சிப் பகுத்து உண்ணுதல் என்று சொல்லப்படும் அறத்தைக் குறித்தது. ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும் குறித்தது. துணைவி மேல் அன்பு எனவே, இயல்பாகவே பிறர் மாட்டும் அன்பு செல்லும் என்றது. இது இந்த அதிகாரத்தின் நான்காவது, ஐந்தாவது திருக்குறள் பாடல்களில் காட்டப்பட்டது.

     "புறத்து ஆறு" என்றது இல்லத்தை விட்டு, வனத்தில் செல்லும் நிலையைக் குறித்தது.

திருக்குறளைக் காண்போம் ---
 
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றின்
போஒய்ப் பெறுவது எவன்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் --- ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்;

     புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் --- அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?

         ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)

     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, ஏலாதி என்னும் நூலில் வரும் கீழ்க்குறித்த பாடலை இங்கு வைத்து எண்ணுக.

துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல்,
இறந்தார்க்கு இனிய இசைத்தல் --- இறந்தார்
மறுதலை, சுற்றம் மதித்து ஓம்புவானேல்,
இறுதல் இல்வாழ்வே இனிது.                 --- ஏலாதி.

இதன் பதவுரை ---

துறந்தார்கண் துன்னி --- துறந்தார் நிலையில் பொருந்தி, துறவார்க்கு --- அங்ஙனம் துறவாமல் இரப்பவர்க்கு, இடுதல் --- வேண்டுவன கொடுத்தலும், இறந்தார்க்கு --- கல்வி முதலியவற்றாற் சிறந்தவர்க்கு, இனிய இசைத்தல் --- நன்மொழிகளைச் சொல்லுதலும், இறந்தார் --- துணையற்று இறந்தவர்களையும், மறுதலை --- தனக்குத் தீமை செய்தவர்களையும், சுற்றம் --- உறவினரையும், மதித்து ஓம்புவானேல் --- கருத்து வைத்துப் பாதுகாப்பானாயின், இறுதல் இல் --- நன்மை அழிதலில்லாத, வாழ்வே --- இல்லற வாழ்க்கையே, இனிது --- துறவறத்தினும் நல்லது.

         மனைத் துறந்த அருந்தவரைச் சேர்ந்து, துறவார்க்கு ஈதலைச்செய்து கல்வியில் மிக்கார்க்கு இனியவற்றை மருவிச் செய்து, தான் குடிப்பிறந்த வருந்தவரைச் சேர்ந்து, குடியுள் இறந்தாரையும், தனக்கு இன்னாதாரையும் மதித்தவர்க்கு வேண்டுவன செய்வானாயின் இறுதலில் வாழ்வே துறவறத்தினும் இனிது.

         துறவற ஒழுக்கத்தை இல்வாழ்க்கையினின்றே செய்யின், அவ்வில்வாழ்க்கை புறத் துறவினும் சிறந்தது.

     பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான, "நான்மணிக் கடிகை" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல்...

திருவொக்கும் தீதில் ஒழுக்கம், பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல், பிறனைக்
கொலையொக்கும் கொண்டுகண் மாறல், புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.  --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     தீது இல் ஒழுக்கம் திரு ஒக்கும் --- தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்;

         ஆற்றின் ஒழுகல் பெரிய அறன் ஒக்கும் --- முறைப்படி ஒழுகுதல் சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்;

         பிறனைக் கொண்டு கண் மாறல் கொலை ஒக்கும் --- பிறன் ஒருவனை நட்பாகக் கொண்டு பின்பு அந் நட்பு மாறிப் புறங் கூறுதல் அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்;

         போற்றாதார் முன்னர்ச் செலவு புலை ஒக்கும் --- தம்மை மதியாதார் இடத்தில் சென்று ஒன்றை நயத்தல் இழி தகைமையை ஒப்பதாகும்.

         நல்லொழுக்கம் செல்வம் போன்றது; முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலை செய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம் மதித்தல் இழிதகைமை ஆகும்.


இல்லறத்தார் கடன் குறித்து "அறப்பளீசுர சதகம்" என்னும் நூலில் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.

தந்தை,தாய், சற்குருவை, இட்டதெய் வங்களை,
     சன்மார்க்கம் உள மனைவியை,
  தவறாத சுற்றத்தை, ஏவாத மக்களை,
     தனைநம்பி வருவோர்களை,

சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய்வோர்களை,
     தென்புலத்தோர் வறிஞரைத்
  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
     தேனுவைப் பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது
     தான் புரிந்திடல் இல் லறம்;
  சாருநலம் உடையராம் துறவறத்தோரும் இவர்
     தம்முடன் சரியாயிடார்!

அந்தரி உயிர்க்கெலாம் தாய்தனினும் நல்லவட்கு
     அன்பனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

இதன் பதவுரை ---

     அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே ---- பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!,

     அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- அரிய மதவேள் என்பான் எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

      தந்தைதாய் சற்குருவை --- தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை --- வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை --- நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை --- நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை --- குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை --- தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை --- மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை --- தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை --- குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை --- அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை --- பசுக்களையும், பூசுரர் தமை --- அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய்கடனை --- எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை --- (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது --- எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் --- ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் --- பொருந்திய நன்மையையுடையராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...