006. வாழ்க்கைத் துணைநலம் - 02. மனைமாட்சி இல்லாள்கண்




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், இல்லறத்திற்கு உரிய நற்பண்புகள் மனைவியிடத்தில் இல்லாது போனால், வாழ்க்கையானது எவ்வளவு மேன்மை உடையதாய் இருந்தாலும் பயன் இல்லை என்கின்றது.

மனைவி பழுதானால் வாழ்வும் பழுதே.

திருக்குறளைக் காண்போம்....

மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் --- மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்;

     வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் --- அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமை உடைத்தாயினும் அஃது உடைத்தன்று.
                          
         ('இல்' என்றார் பயன்படாமையின்.)

இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல்களைக் காண்போம்...

மழைதிளைக்கும் மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்று இமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியதோர் காடு.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     மழை திளைக்கும் மாடமாய் மாண்பு அமைந்த காப்பாய் இழை விளக்கு நின்று இமைப்பின் என்னாம் --- மேகங்கள் தவழும் உயர்ந்த மாளிகையாய்ச் சிறப்பமைந்த பாதுகாப்பு உடையதாய் மணிகளால் இழைக்கப்பட்ட விளக்குகள் அங்கங்கும் இருந்து ஒளிவிடினும் என்ன பயனாகும்?,

     விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் காண்டற்கு அரியதோர் காடு --- மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக்கிழத்தியை இல்லாதவனது வீடு கண்கொண்டு பார்த்தற்கு இயலாததொரு கொடிய காடாகும்.

குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.       --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     குடம் நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும் கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும் --- குடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் இன்னாக் காலத்தும் கடல் நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினர் ஒருங்கு விருந்தாக வந்தாலும்,

     கடன் நீர்மை கை ஆறாக் கொள்ளும் மடமொழி மாதர் --- அந் நேரத்தில், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பைச் செயன்முறையாக மேற்கொள்கின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே,

     மனை மாட்சியாள் --- இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமை உடையவளாவாள்.


தாரம் மாணாதது வாழ்க்கை அன்று. ---  முதுமொழிக் காஞ்சி

இதன் பதவுரை ---

     தாரம் மாணாதது --- மனையாள் மாட்சிமை உடையவளாகப் பெறாத இல்வாழ்க்கை,

     வாழ்க்கை அன்று --- இல்வாழ்க்கை என்னத்தக்க தன்று.

         மனையாள் மாட்சிமை யுடையவளாகப் பெற்ற இல்வாழ்க்கையே இல்வாழ்க்கை யென்று சிறப்பித்துச் சொல்லத் தக்கதாம்.

         மனையாளுக்கு மாட்சியாவது நற்குண நற்செயல்கள். நற்குணங்களாவன : துறவிகளை ஆதரித்தல், விருந்தினரை உபசரித்தல், ஏழைகளிடத்து அருளுடைமை முதலியன. நற்செய்கைகளாவன : வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களைச் சேகரித்தல், உணவைப் பாகமாக அமைக்குந் திறமை, ஒப்புரவு முதலியன.

நனைமாட்சி மென்கொன்றைத் தாரோன்
     தரும் இரு நாழி நெல்லால்
வினைமாட்சி கொண்டு உயிர் எல்லாம்
     அளித்து அருள் மேன்மையினால்
மனைமாட்சி எய்தும் உனக்கே,
     பெருங்கற்பு மாட்சி அன்றிப்
பினைமாட்சி யார்க்கு உண்டு உலகுஈன்ற
     குன்றைப் பெரியம்மையே.    --- பெரியநாயகியம்மை கலித்துறை.

இதன் பொருள் ---

     திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தில் எழுந்தருளி இருக்கும் பெரியம்மையே! தேன் பொருந்திய பெருமையை உடைய மென்மையான கொன்றை மலர் மாலையை அணிந்துள்ள சிவபெருமான் தந்தருளிய இருநாழி நெல்லைக் கொண்டு, உலகு உயிர்களை எல்லாம் காத்து அருள் புரியும் செயல் திறமை உனக்கு உள்ளதால், மனைமாட்சி என்பது பொருந்தி உள்ள உனக்கே பெரும் கற்பு மாட்சியும் உள்ளதாகும். இந்த மாட்சிமை வேறு யாருக்கு உள்ளது?

நனை மாட்சி --- தேன் பொருந்திய பெருமையை உடைய.
வினை மாட்சி --- காரியத் திறமை.

   கணவர் அளித்தது கொண்டு அறம் வளர்ப்பார்க்கே கற்புமாட்சி உரித்து என்பது நூல் துணிபு. ஆகலின், மனைமாட்சி எய்தும் உனக்கே பெருங்கற்பு மாட்சி எனவும், அஃது இயற்றார்க்கு எங்ஙனம் எய்தும் என்பார் பினைமாட்சி யார்க்கு உண்டு எனவும் கூறினார்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...