013. அடக்கம் உடைமை - 10. கதம்காத்து கற்று




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "கோபத்தை மனத்தில் தோன்றாமல் காத்து, கல்வி அறிவு உடையவன் ஆகி, மனம் அடங்குதலில் வல்லவனாய் இருப்பவனது, செம்மையை நோக்கி, அறக்கடவுள் அவனைச் சென்று சேரும் வழியில் சேரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி,
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி --- மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையவனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை,

     அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து --- அறக் கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெற்றியின்கண் சென்று.

      (அடங்குதல் - மனம் புறத்துப் பரவாது அறத்தின் கண்ணே நிற்றல். செவ்வி - தன் குறை கூறுதற்கு ஏற்ற மனம், மொழி முகங்கள் இனியனாம் ஆம் காலம். இப் பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம். இதனான் மனவடக்கம் கூறப்பட்டது.)


அறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்வது ---  பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.      --- நாலடியார்.

     அறிவது அறிந்து அடங்கி --- நூல் வழக்கிலும் உலக வழக்கிலும் தெரிந்து கொள்ளவேண்டுவன தெரிந்து கொண்டு, அடக்கம் உடையவராய்,  அஞ்சுவது அஞ்சி --- அஞ்சத்தக்க நிலைகளுக்கு அஞ்சி, உறுவது --- தமக்குத் தகுதியாகத் தாமே பொருந்துஞ் செயல்களை, உலகு உவப்பச் செய்து --- உலகம் பயன்கொண்டு மகிழும்படி செய்து, பெறுவதனால் --- அதுகொண்டு அடைந்த ஊதியத்தினளவில், இன்புற்று வாழும் இயல்பினார் --- மகிழ்ந்து வாழ்க்கை நடத்தும் தன்மையுடையவர். எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது --- எந்தக் காலத்திலும் துன்பமடைந்து உயிர்வாழ்வது இல்லை.


கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்,
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.    ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     அறைகல் அருவி அணிமலை நாட --- பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர்தளும்பல் இல் --- நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் --- நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் --- கற்றதோடமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் --- மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.


கற்புஉடைய பெண்அமிர்து, கற்றுஅடங்கி னான்அமிர்து,
நற்புடைய நாடுஅமிர்து,அந் நாட்டுக்கு - நற்புடைய
மோகமே சேர்கொடி வேந்துஅமிர்து, சேவகனும்
ஆகவே செய்யின் அமிர்து.      ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---
    
     கற்பு உடைய பெண் அமிர்து --- கற்புள்ள பெண்ணானவள், தன் கணவனுக்கு அமிர்தம் போல்வாள்; கற்று அடங்கினான் அமிர்து --- (அறிவு நூல்களைக்) கற்று, (அவற்றின் வழியல்) அடங்கி நிற்பவன, (உலகத்தார்க்கு) அமிர்தம் போல்வான;
நற்பு உடைய நாடு அமிர்து --- நன்மையுள்ள நாடு  (அந்நாட்டரசனுக்கு) அமிர்தம் போன்றதுஅந் நாட்டுக்கு நற்புடைய மேகமே சேர் கொடி வேந்து அமிர்து --- அந்த நாட்டுக்கு, நன்மையைச் செய்கின்ற மேகத்தை அளாவுகின்ற கொடியையுடைய அரசன், அமிர்தம் போல் இன்பஞ் செய்வான்,

     கற்புடைய பெண் தனது கொழுநற்கு அமிர்தம் போன்றவள். கற்று வைத்துப் பொறிகள் ஐந்தையும் அடக்கினான் உலகத்தார்க்கு அமிர்தம் போன்றவன்.  நற்செயல்களை உடைய நாடுகள் அந்நாடாளும் அரசரக்கு அமிர்தம் போன்றவை. அந்நாட்டிற்கு மழைபோல நன்மையைச் செய்யும் மேகத்தைச் சேர்ந்த கொடி வேந்தன் அமிர்தம் போன்றவன். அவன் சேவகனும் அவ்வரசற்கு நன்மையாகவே செய்யின் அமிர்தோடு ஒக்கும்.


மதித்து இறப் பாரும் இறக்க, மதியா
மிதித்து இறப் பாரும் இறக்க - மிதித்து ஏறி
ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதம் இன்மை நன்று.         --- நாலடியார்

இதன் பதவுரை ---

     மதித்து இறப்பாரும் இறக்க --- தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும் ; மதியா மிதித்து இறப்பாரும் இறக்க --- அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும், மிதித்து ஏறி ஈயும் தலைமேல் இருத்தலால் --- ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால், அஃது அறிவார் --- அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர், காயும் கதம் இன்மை நன்று --- எரிந்து விழும் சினம் இல்லாது இருப்பராயின் நல்லது.


தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை--தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.    ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின் --- தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை ---பின்னர் அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்தும் இல்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல் -- -தன்னைத் தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட களிறு --- பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத்து அகப்பட்ட களிறேபோல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.
        

வாயின் அடங்குதல் துப்புரவாம், மாசற்ற
செய்கை அடங்குதல் திப்பியமாம், --- பொய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகும், இம்மூன்றும்
வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.     ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் --- தீய வழிச் செல்லாமல் காக்குதலால், இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை அடங்கல் மாசு அற்ற திப்பியம் ஆம் --- உடலின் செய்கை அடங்குதலால், குற்றம் அற்ற (மறுமையில்) தெய்வப் பிறப்பு உளதாகும்; பொய் இன்றி நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் --- உண்மையாக மனம் அடங்குதலால் விடுபேறு உள்ளதாகும், இ மூன்றும் வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - இம் மூன்று அடக்கமும், பொய்யினின்றும் நீங்கிய பொருள்களாகும்.


பொய்குறளை வன்சொல் பயன்இல என்று இந்நான்கும்
எய்தாமை, சொல்லின் வழுக்காத்து - மெய்யில்
புலம்ஐந்தும் காத்து மனமாசு அகற்றும்
நலம்அன்றே நல்ஆறு எனல்.    --- நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     பொய் --- பொய்யும், குறளை --- புறங்கூறலும், வன்சொல் --- கடுஞ்சொல்லும், பயனில --- பயனில் சொல்கூறலும், என்ற இந்நான்கும் --– என்று சொல்லப்பட்ட இந்த நான்கு பாவங்களும், எய்தாமை --- வராமல், சொல்லின் வழுகாத்து --- சொல்லின் குற்றங்களை நீக்கி, மெய்யில் புலம் ஐந்தும் காத்து --- ஐம்புலன்களையும் உடம்பின்கண் அடக்கி ஆண்டு, மனம் மாசு அகற்றும் --- மனக்குற்றங்களை நீக்கும், நலம் அன்றே --- நற்செயல் அன்றோ, நல் ஆறு எனல் --- நன்னெறி என்று சொல்லத்தகும்.

     இனி, தீவினை, நல்வினை ஆகியவற்றைப் பகுத்து "மணிமேகலை" என்னும் காப்பியம் கூறுமாறு காண்க...

தீவினை என்பது யாதுஎன வினவின்,   
ஆய்தொடி நல்லாய்! ஆங்குஅது கேளாய்,    
கொலையே களவே காமத் தீவிழைவு            
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்;       
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்   
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்;
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்; எனப்            
பத்து வகையால் பயன்தெரி புலவர்     
இத்திறம் படரார், படர்குவர் ஆயின்,     
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக்  
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்,

நல்வினை என்பது யாதுஎன வினவில்,          
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி, 
சீலம் தாங்கி, தானம் தலைநின்று,  
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்...
               ---  மணிமேகலை, ஆபுத்திரன் நாடடைந்த காதை.  

இதன் பதவுரை ---

     தீவினை என்பது யாது என வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் --- தீவினை எனப்படுவது யாது என்று வினவினால் ஆராய்ந்த வளையல்களை அணிந்த நங்காய்! அதனைக் கேட்பாயாக, கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் --- கொலையும் களவும் காமமாகிய கொடிய விருப்பமும் என்று உடலின்கண் தோன்றுவன மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் --- பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்று சொல்லிற் பிறப்பன நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையாம் --- விரும்பல் சினத்தல் மயக்க மெய்துதல் என மனத்தின்கண் எழுவன மூன்றும் எனப் பத்து வகையாகும், பயன்தெரி புலவர் இத்திறம் படரார் --- வினைகளின் பயனை உணர்ந்த அறிஞர் கொலை முதலிய இத் தீய வழிகளிற் செல்லார், படர்குவர் ஆயின் --- யாரேனும் அந்நெறிகளில் செல்வராயின் அங்ஙனம் செல்லுபவர், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் --- விலங்கும் பேயும் நரகருமாய்க் கலக்கமுற்ற உள்ளக் கவலையின்கண் படுவர்;

     நல்வினை என்பது யாது என வினவின் --- நல்வினை எனப்படுவது எத்தகைத்து என்று வினவினால், சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி --- மேலே கூறப்பட்ட பத்துவகைக் குற்றங்களினின்றும் நீங்கி, சீலம் தாங்கித் தானம் தலை நின்று --- சீலத்தை மேற்கொண்டு தானம் வழங்குதலில் நிற்றல்; அங்ஙனம் நிற்போர், மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து --- உயர்வுடையன என்று வகுக்கப் பட்ட மூவகையினையுடைய, தேவரும் மக்களும் பிரமரும் ஆகி --- வானவர் மக்கள் பிரமர் என்போராய், மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் --- பொருந்திய நல்வினைப் பயனை அனுபவிப்பர்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...