010. இனியவை கூறல் - 01. இன்சொலால் ஈரம்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "அன்பு கலந்து, உள்ளத்தில் வஞ்சகம் இல்லாதவனாகி, மெய்ப்பொருள் உணர்ந்தாருடைய வாயில் இருந்து பிறக்கும் சொற்கள் இன்சொற்கள் ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....
        
இன் சொலால் ஈரம் அளைஇ, படிறு இலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இன்சொல் --- இன்சொலாவன;

     ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் --- அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.

      (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. --- திருமந்திரம்

இதன் பொருள் ---

     உண்ணப் புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத்தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.


ஆரம் என்பு புனைந்த ஐயர்தம்
         அன்பர் என்பது ஓர் தன்மையால்
நேர வந்தவர் யாவராயினும்
         நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர்கொண்டு, கைகள்
         குவித்து நின்று, செவிப்புலத்து
ஈரம் மென் மதுரப்பதம் பரிவு
         எய்த முன்உரை செய்தபின்.    --- பெரியபுராணம்.

இதன் பொருள் ---

     எலும்பினை மாலையாக அணிந்த சிவபெருமானுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப் பொருந்த வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மையான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லிய பின்பு.

         அடியவரை வரவேற்கும் சொற்கள் மூவகைப் பண்பினவாய் அமைய வேண்டும். முதலாவதாகக் குளிர்ந்த மொழிகளாக இருத்தல் வேண்டும். ஈண்டுக் குளிர்ச்சி அன்பின் மேலதாம். `ஈரம் அளைஇ` (குறள், 91) என வருவதும் காண்க. இரண்டாவது மென்மையாக இருத்தல் வேண்டும். மூன்றாவது இனிமையை யுடையவாக இருத்தல் வேண்டும். இதுவே ``ஈரமென் மதுரப்பதம்`` எனப்படும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1092. கொலையிலே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கொலையிலே மெத்த (பொது) முருகா!   போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய். தனதனா தத்த தனதனா தத்த ...