011. செய்ந்நன்றி அறிதல் - 04. தினைத்துணை





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "தமக்குத் தினை அளவாகிய உபகாரத்தினை ஒருவன் செய்தான், ஆயினும், அதன் பயனைத் தினை அளவு என்று கொள்ளாமல், பனை அளவினதாக எண்ணுவர் அதன் பயனை அறிந்தவர்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---
        
     தினைத்துணை நன்றி செயினும் --- தமக்குத் தினை அளவிற்று ஆய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்;
    
     பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் --- அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனை அளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.

      ('தினை', 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)

      இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல் காணலாம்...

எள்ளளவு காணாது எலி செய்த நன்றிக்கா,
வள்ளல் உலகு ஆள வைத்து அருளும், ---  நல்லாய்
தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்.                    

         தற்போது வேதாரணியம் என்று வழங்கப்படுகின்ற திருமறைக்காட்டில் உள்ள திருக்கோயிலில் மங்கும் நிலையில் இருந்த திருவிளக்கை, ஓர் எலி தூண்டி ஒளிரச் செய்த நன்றிக்காகச் சிவபெருமான் அவ் எலிக்கு, மறுபிறவியில் அரச பதவியை வழங்கினார் என்பது வரலாறு. அவ் அரசரே பலிச் சக்கரவர்த்தி ஆவார்.

     எலியானது விளக்கில் உள்ள எண்ணெயை அருந்தத்தான் வந்தது. விளக்கின் தீயானது எலியின் மூக்கைச் சுடவும், அதனால் உண்டான அதிர்ச்சியில், விளக்குத் திரியானது தூண்டப்பட்டு, விளக்கு சுடர் விட்டு எரியத் தொடங்கியது. அபுத்தி பூர்வமாக எலி செய்த அந்தச் செயலுக்கே, மறுபிறவியில் சக்கரவர்த்தி பதத்தைக் கொடுத்தார் இறைவர்.

நிறைமறைக் காடுதன்னில் நீண்டு எரி தீபம் தன்னைக்
கறைநிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட,
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவு அறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்ட னாரே.
                                                                                                  
என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தை ஓதுக.

இதன் பொழிப்புரை ---

     மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக் காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத் தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்
சொன்னாளே ஔவை முன்பு, சோமேசா! - மன்னாத்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்
கொள்வர் பயன்தெரி வார்.

         செய்ந்நன்றியறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்தியில் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாம். அதனைப் பாதுகாத்துக் கடிதல் வேண்டுவதாம்.

இதன்பொருள்---

         சோமேசா! மன்னா --- நிலைபேறில்லாத, தினை துணை நன்றி செயினும் --- தினை அளவிற்று ஆகிய உபகாரத்தை ஒருவன் தமக்குச் செய்தானாயினும், பனை துணை ஆ கொள்வர் --- அவ் உபகாரத்தைத் தினையளவு சிறியது என்று கருதி ஒதுக்காமல், பனையவ்வளவு பெரியதாகக் கொண்டு மதித்து ஒழுகுவார்,  பயன் தெரிவார் --- அத்தினையளவு உபகாரத்தால் தமக்கு விளையும் பெரும் பயனை ஆராய்ந்து உணரும் அறிவுடையார்... 

         முன்பு --- முற்காலத்தில், ஔவை --- ஔவைப் பிராட்டியார். பன்னும் --- யாவரானும் இவன் என்ன சிறப்புடையான் எனக் கருதப்படும்,  அசதி நன்றி பாராட்டி --- அசதி என்னும் ஆட்டிடையன் ஒருவன் தமக்குச் செய்து உபகாரத்தைப் பெரிதென மதித்து, கோவை நூல் சொன்னாள் ஏ --- கோவை என்னும் பிரபந்தம் ஒன்றை அவன் மீது பாடினாள் ஆகலான் என்றவாறு.

         ஔவைப் பிராட்டியார் ஒருகால் தென்பாண்டி நாட்டில் ஒரு காட்டுவழியாகச் செல்லும்போது பசியால் மிக வருந்தி ஆட்டு இடையன் ஒருவனைக் கண்டு அடைந்து, ஏதேனும் உணவு தருக என, அவன் மறாது தனக்கென வைத்திருந்த ஆட்டுப்பால் கலந்த கூழைக் கொடுத்து உபசரிக்க, அதனைப் பெரிதும் பாராட்டிய பிராட்டியார் அவன் புகழை உலகின்கண் நிலைநிறுத்த நினைந்து அவன் பெயரை வினவ, அதை அவன் மறந்தமையால், 'அசதி' என்ன, பின் ஊரை வினவ அதையும் மறந்து, 'ஊரில் ஐந்து வேலுண்டு' என்ன, கவிதொறும் 'ஐவேலசதி' என்றமைத்து, 'அசதிக்கோவை' என்னும் நூலைப் பாடினார். அசதியை அரசன் என்பாரும் உளர். இது புலவர் புராணத்து உள்ளது.

     அடுத்து, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமாள் மீது பாடப்பட்ட "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாம அமைந்த ஒரு பாடல்.... 
உள்ளு தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் எனலால் இக் குவலயத்தில்
விள்ளொரு போது ஒரு போது எடுத்தேத்த மிக எனக்கொண்டு
அள்ளல் அம்போருகன் மேற்பதம் புல்லை அரிநல்குமே.

     மனத்தில் கொள்ள வேண்டி, தினை அளவு உபகாரத்தினை ஒருவர் தமக்குச் செய்தாலும், அதன் பயனை அறிந்தவர், அந்த உபகாரத்தினை பனை அளவாக மதிப்பர் என்று (திருவள்ளுவ நாயனாரால்) சொல்லப்பட்டு உள்ளதால், ஒருவேளை, ஒரு மலரையாவது இட்டுத் தன்னை வழிபட, அவருக்கு பிரமனுக்கு மேலான பதத்தை, திருப்புல்லாணியில் எழுந்தருளி உள்ள திருமால் அருளுவார்.

விள் - சொல்லப்படுகிற. ஒருபோது - ஒருமலர். ஒருபோது - ஒரே வேளை. அள்ளல் அம்போருகன் - சேற்றில் மலர்ந்த தாமரை மலரில் எழுந்தருளிய நான்முகன். புல்லை அரி - புல்லைத் திருமால்.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...


துப்பி இட்ட ஆலம்விதை சிறிது எனினும்,
     பெரிது ஆகும் தோற்றம் போல,
செப்பிட்ட தினையளவு செய்த நன்றி
     பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்;
கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார்
     வளநாட்டில் கொஞ்சம் ஏனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
     நினைக்கும் இந்த உலகம் தானே!
                                    ---  தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

     கொப்பு இட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டில் --- கொப்பு எனும் காதணியை அணிந்த  உமையம்மையை  இடப்பாகத்தில் கொண்ட திருத்தண்டலை நீள்நெறி நாதரின் வளம் பொருந்திய நாட்டில், துப்பி இட்ட ஆலம் விதை சிறிது எனினும் பெரிது ஆகும் தோற்றம் போல --- துப்பி விட்ட ஆலமரத்தின் விதையானது  சிறியதாக இருந்தாலும், பின்னர் அது முளைத்துப்  பெரிய  மரம்  ஆகும்  காட்சியைப்  போல,
செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி பனை அளவாய்ச் சிறந்து தோன்றும் --- கூறப்பட்ட தினையின் அளவாக ஒருவர் செய்த நன்மையானது, ஏற்கும் இடத்தால், பின்னர் பனையின் அளவாகச் சிறப்புடன் காணப்படும்,  இந்த உலகம் கொஞ்சமேனும் உப்பிட்ட  பேர்கள் தமை  உளவரையும்  நினைக்கும் --- இந்த  உலகத்தில் உள்ளோர்கள் சிறிதளவு  உப்பு  இட்டவரையும்,  உயிருள்ள  வரையும்  நினைத்துப் பார்ப்பர்..

     "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
   கொள்வர் பயன் தெரி வார்.'

என்பது திருக்குறள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பது
பழமொழி.
     உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பதால், உள்ளத்தால் உயர்ந்தோர், தமக்கு ஒருவர் செய்த நன்றி சிறியது ஆயினும், அதனால் அப்போது விளைந்த பயனை எண்ணி, அதனைப் பனை அளவாக மதித்துப் போற்றுவர் என்றார்.  கீழோருக்கு அது இராது.

தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் ;- பனையனைத்
தென்றுஞ் செயினும் இலங்கருவி நன்னாட.
நன்றில நன்றறியார் மாட்டு.   ---  நாலடியார்.

இதன் பொருள் ---

     தினையனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால் பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் --- தினை அளவினதே ஆயினும் செய்த உதவி முன் இருக்குமானால் அதனைப் பனை அளவினதாகக் கருதிக் கனிந்திருப்பர் மேலோர்; பனையனைத்து என்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட நன்று இல நன்று அறியார் மாட்டு --- நாளும் பனையளவு உதவி செயினும், விளங்குகின்ற அருவிகளையுடைய உயர்ந்த மலைநாடனே, நன்மையறியாக் கீழோரிடத்தில் அவை சிறிதளவும் நன்றி பாராட்டுதல் இல்லாதனவாகும்.

         கீழ்மை, நன்றி மறக்கும் இயல்புடையது.

2 comments:

  1. சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்.

    தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

    தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

    உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

    நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

    இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

    ஒரே பார்வையில் எமது தளங்கள்:
    1. வலை ஓலை
    2. எழுத்தாணி
    3. சொல்

    முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

    அனைவருக்கும் நன்றி!

    -வலை ஓலை

    ReplyDelete
  2. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM(https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...