015. பிறனில் விழையாமை - 01. பிறன் பொருளாள்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "பிறன் ஒருவனுக்கு உரிமையானவளை இச்சித்து நடக்கின்ற அறிவின்மையானது, இந்த உலகத்தில், அறநூலும், பொருள் நூலும் ஆகிய இரண்டையும் ஆராய்ந்து அறிந்தவர் இடத்து இல்லை" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை, ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல்.            

இதற்குப் பரிமேழகர் உரை ---

     பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை --- பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை,

     ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் --- ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
        
       (பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார்.எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடல்கள் அமைந்திருத்தலைக் காணலாம்....

கொல்லான், கொலைபுரியான், பொய்யான், பிறர்மனைமேல்
செல்லான், சிறியார் இனம்சேரான், --- சொல்லும்
மறையில் செவிஇலன், தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை.  --- ஏலாதி.

இதன் கதவுரை ---

     கொல்லான் --- ஓருயிரையும் கொலை செய்யான், கொலை புரியான் --- பிறர் கொலை செய்தலையும் விரும்பான், பொய்யான் --- பொய் சொல்லான், பிறர் மனைமேல் செல்லான் --- பிறர்க்குரிய மனைவி மேல் தனக்கு உரிமை விரும்பான், சிறியார் இனம் சேரான் --- கீழ்மக்கள் கூட்டத்தை இணங்கான், சொல்லும் மறையில் செவி இலன் --- மறைவாய்ச் சொல்லப்படுகின்ற, - மறை பொருள்களில் செவி கொடான், தீச்சொற்கண் மூங்கை --- தீய சொற்களைப் பேசுதலில் ஊமை, இவை --- ஆகிய இவ்வியல்புகள், இறையில் --- பெருந் தன்மையில், பெரியாற்கு --- பெரியவனுக்கு (உரியவாம்)

பிறன்மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;
மறம் இலா மன்னர் செருப்புகுதல் இன்னா;
வெறும்புறம் வெம்புரவி ஏற்று இன்னா; இன்னா
திறன்இலான் செய்யும் வினை.      ---  இன்னா நாற்பது.

இதன் பதவுரை ---

     பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா --- பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் தொடரக் கருதும். - அறிவின்மை துன்பமாம்; மறம் இலா மன்னர் செரு புகுதல் இன்னா --- வீரமில்லாத அரசர் போர்க்களத்திற்குச் செல்லுதல், துன்பமாம்; வெம் புரவி வெறும் புறம் ஏற்று இன்னா --- விரைந்த செலவினை உடைய குதிரையினது கல்லணை இல்லாத முதுகில் ஏறுதல் துன்பமாம்; திறன் இலான் செய்யும் வினை இன்னா  --- செய்யும் கூறுபாடு அறியாதவன் செய்யுங் காரியம், துன்பமாம்.

தன் மனையாளைத் தனிமனை இருத்திப்
பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே.  --- நறுந்தொகை.

         தன் மனையாளைத் தனி மனை இருத்தி --- தன் மனைவியைத் தனியே வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே --- பிறர் வீட்டுக்கு செல்லுகின்ற, அறிவில்லாதவனும் பதரே ஆவன்.

     தன் மனைவியை வீட்டில் தனியே இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்குச் செல்லும் அறிவில்லாதவன் பதர் போன்றவன்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...