007. மக்கள் பேறு - 08. தம்மின்தம் மக்கள்





திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - மக்களை பேறு

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாவது திருக்குறள், "தமது மக்களின் அறிவு உடைமையானது, தம்மை விடவும், இந்த நில உலகத்தில் நிலைபெற்ற உயிர்களுக்கு எல்லாம் இனியதாக இருக்கும்" என்கின்றது.

     அறிவு என்று இங்கு சொல்லப்பட்டது, இயற்கையான அறிவோடு கூடிய கல்வி அறிவை. வெற்றுக் கல்வி அறிவை அது குறிக்காது. நூல் உணர்வு நுண்ணுணர்வாக மாற வேண்டும். மாந்தர் இயல்பு எப்படிப்பட்டது என்பது, "நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்" என்று வேறு ஒரு திருக்குறளில் காட்டப்பட்டது.

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும், என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;- தடங்கண்ணாய்!
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்
கைப்பு அறா பேய்ச்சுரையின் காய்.

என்பது நாலடியார் கூறும் உண்மை.

     எவ்வளவு தான் விரிவாக நிறைய ஞான நூல்களைக் கற்றாலும், மனம் அடங்கி நில்லாதவர்கள் என்றும் மனம் அடங்கி நில்லார். என்னதான் உப்பும், நெய்யும், தயிரும், பெருங்காயமும் இட்டுச் சமைத்தாலும் பேய்ச்சுரைக்காயின் கசப்பபுத் தன்மை நீங்காதது போல.

"சினம் அடங்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும்,
மனம் அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே".

என்பார் தாயுமானார்.

ஒன்றியொன்றி நின்றுநின்றும் என்னை என்னை
     உன்னியுன்னும் பொருளலைநீ உன்பால் அன்பால்
நின்றதன்மைக் கிரங்கும்வயி ராக்கியன் அல்லேன்,
      நிவர்த்தியவை வேண்டும் இந்த நீல னுக்கே
என்றும் என்றும் இந்நெறியோர் குணமும் இல்லை,
     இடுக்குவார் கைப்பிள்ளை, ஏதோ ஏதோ
கன்றுமனத்துடன் ஆடு தழைதின் றாற்போல்
     கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற் றேனே.

என்பதும் தாயுமானார் அருள் வாக்கு.

     வருந்திய மனத்துடன் ஆடு தழைதின்னும் தன்மைபோல் ஒருவரிடத்தே முற்றும் கற்கும் நிலைமையன் அல்லனாய், அரைகுறையாகக் கற்றலும், செவிச் செல்வமாகிய அரும்பெரும் கேள்வியினைக் கேட்டல் இல்லாமையும் ஆகிய குறைபாடு உடையவனாய் மனக்கலக்கத்தை அடைந்தேன் என்கின்றார் தாயுமானார்.

       ஆடு ஒரு செடியிலே தழை நிறைந்து இருந்தாலும் வயிறு நிறைய மேயாமல், செடிதோறும் போய் மேய்தல்" அதன் இயல்பு. இது கடை மாணாக்கர்க்கு ஒப்பு.

          அன்னம் ஆவே, மண்ணொடு கிளியே,
          இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
          அன்னர் தலை இடை கடைமாணாக்கர்.  

என்பது மாணவர்க்கு இலக்கணம் வகுக்கும் நன்னூல் சூத்திரம்.

     அன்னம் பாலையும் நீரையும் வேறு பிரித்துப் பாலை மாத்திரம் குடித்தல் போல, முதல் மாணாக்கர் குணத்தையும் குற்றத்தையும் வேறு பிரித்துக் குணத்தை மாத்திரம் கொள்ளுதலாலும், பசு மிகுந்த புல்லை உடைய இடத்தைக் கண்டால் அப் புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஓரிடத்திற்கு போய் இருந்து சிறிது சிறிதாக வாயில் வருவித்துக் கொண்டு மென்று தின்றல் போல, முதன் மாணாக்கர் மிகுந்த கல்வி உடைய ஆசிரியனைக் கண்டால் அக் கல்வியைத் தன் உள்ளம் நிறையக் கேட்டுக்கொண்டு பின்பு ஓர் இடத்துப் போய் இருந்து சிறிது சிறிதாக நினைவில் கொண்டு வந்து சிந்தித்தலாலும், அவருக்கு அவ் இரண்டும் உவமானம் ஆதல் அறிக.

     மண் உழவர் வருந்திப் பயிர் செய் முயற்சியின் அளவினது ஆகிய விளைவைத் தன்னிடத்தில் காட்டுதல் போல, இடை மாணாக்கர் ஆசிரியன் வருந்திக் கற்பிக்கும் முயற்சி அளவினதாகிய கல்வி அறிவைத் தம்மிடத்தில் காட்டும். கிளி தனக்குக் கற்பித்த சொல்லை அன்றி வேறு ஒன்றையும் சொல்லாது. அது போல  இடைமாணாக்கர் தமக்குக் கற்பித்த நூல் பொருளை அன்றி வேறொரு நூல் பொருளையும் சொல்ல மாட்டாமையாலும், அவருக்கு அவ்விரண்டும் உவமானம் ஆதல் அறிக.

     பொள்ளல் குடம், அதாவது, ஓட்டைக் குடத்தில் நீரை வார்க்கும் தோறும் ஒழுக விடுதல் போலக் கடைமாணக்கர் நூல் பொருளைக் கற்பிக்கும் தோறும் மறந்து விடுவர்.  ஆடு ஒரு செடியிலே தழை நிறைந்து இருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் போய் மேய்தல் போலக் கடைமாணாக்கர் ஒரு ஆசிரியன் இடத்தில் மிகுந்த கல்வி இருந்தாலும், புலமை நிறையக் கற்றுக்கொள்ளாது பலரிடத்தும் போய்ப் பாடம் கேட்பர்.
    
     எருமை குளத்து நீரைக் கலக்கிக் குடித்தல் போலக் கடை மாணாக்கர் ஆசிரியரை வருத்திப் பாடம் கேட்பர். பன்னாடையானது தேன் முதலியவற்றைக் கீழே விட்டு, அவற்றில் உள்ள குற்றங்களைப் பற்றிக் கொள்ளுதல் போலக் கடைமாணாக்கர் நல்ல பொருளை மறந்து விட்டுத், தீய பொருளைச் சிந்தித்துப் பற்றிக் கொள்வர்.

இனி, திருக்குறளைக் காண்போம்....

தம்மின், தம் மக்கள் அறிவு உடைமை, மாநிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       தம் மக்கள் அறிவுடைமை --- தம் மக்களது அறிவுடைமை;

     மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம் தம்மின் இனிது --- பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம்.

         (ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது.)



     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களுள் ஒன்று,  கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்பது. அந்த நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த ஒரு பாடல்....

வேணுபுர நாதர் அருள் மேவுதலும் சம்பந்தர்
தாதையினும், ஏனோரும் தாம் மகிழக் காணுதலால்
தம்மின், தம் மக்கள் அறிவு உடைமை, மாநிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.

         வேணுபுர நாரதர் ---  சீர்காழி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள திருத்தோணிபுர நாதர் என்னும் சிவபெருமான்.

     அருள் மேவுதலும் ---  சிவஞானத்து இன்னமுதம் உண்ணப் பெற்றவுடன். 

     சம்பந்தர் தாதையினும் ---  திருஞானசம்பந்தரின் தந்தையாகிய சிவபாத இருதயரைக் காட்டிலும். 

     ஏனோரும் --- சீர்காழியில் உள்ள அந்தணரும், பிறரும் மிக மகிழ்ந்தார்கள்.

என்பது பின்வரும் பெரியபுராணப் பாடல்களால் விளங்கும்...,

"பேணியஅற்புதம் நீடுஅருள் பெற்ற பிரான் முன்னே
நீள்நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி,
வாள் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள், வாழ்வுஎய்தும்
தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்".

"காழியர் தவமே,கவுணியர் தனமே, கலைஞானத்து
ஆழிய கடலே, அதனிடை அமுதே, அடியார்முன்
வாழிய வந்து இம் மண்மிசை வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன் திருவருள் பெற்றனை என்பார்".

"மறைவளர் திருவே, வைதிக நிலையே, வளர்ஞானப்
பொறை அணி முகிலே, புகலியர் புகலே, பொருபொன்னித்
துறைபெறு மணியே, சுருதியின் ஒளியே, வெளியே வந்து
இறையவன் உமையாளுடன் அருள் தர எய்தினை என்பார்".

பு"ண்ணிய முதலே, புனைமணி அரைஞாணொடு போதும்
கண் நிறை கதிரே, கலைவளர் மதியே, கவின் மேவும்
பண்இயல் கதியே, பருவமது ஒரு மூவருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்".

     இவ்வாறெல்லாம் பலபட வாழ்த்தி சீகாழியிலே உள்ள அந்தணர்களும் பிறரும் திருஞானசம்பந்தரை துதித்து, அவருடைய திருவடிகளை தமது முடிமேல் ஏந்தி நின்றபோது, திருஞானசம்பந்தருடைய தந்தையாராகிய சிவபாத இருதயர், அவரைத் தமது தோளின் மேல் சுமந்து மகிழ்ந்து சென்றார்.

"என்று இனைய பலகூறி,
     இருக்குமொழி அந்தணரும் ஏனையோரும்
நின்றுதுதி செய்து, அவர் தாள்
         முடிக்கண் மேல் ஏந்தி நிரந்தபோது,
சென்று அணைந்த தாதையார்
         சிவபாத இருதயர் தாம், தெய்வஞானத்
கன்றினை முன் புக்கு எடுத்துப்
         பியலின் மேல்கொண்டு களிகூர்ந்து செல்ல". ---  பெரிய புராணம்.

     மாதவச் சிவஞான யோகியாரும், தாம் பாடி அருளிய சோமேசர் முதுமொழி வெண்பாவில், மேற்படி திருக்குறளக்கு, திருஞானசம்பந்தர் வரலாற்றையே காட்டிப் பின்வருமாறு பாடி உள்ளார்.
                                                              
பாடினர் மூவாண்டினில் சம்பந்தர் என யாவோரும்
சூடும் மகிழ்ச்சி மெய்யே, சோமேசா! - நாடிஇடில்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

இதன்பொருள்---

         சோமேசா!  நாடி இடில் --- ஆராய்ந்து பார்க்குமிடத்து, தம் மக்கள் அறிவுடைமை --- தம் மக்களது அறிவுடைமை, மா நிலத்து --- பெரிய நிலவுலகத்து உள்ள, மன் உயிர்க்கு எல்லாம் --- நிலைபெற்ற உயிர்களுக்கு எல்லாம், தம்மின் இனிது --- தம்மை விட இனிமை பயப்பதாம்,  சம்பந்தர் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மூ ஆண்டினில் --- மூன்றாவது வயதில்,  பாடினர் ---- தேவாரத் திருப்பதிகங்கள் பாடி அருளினார், என - என்று,   யாவோரும் சூடும் மகிழ்ச்சி --- உலகத்தார் எல்லோரும் கொள்ளும் உள்ள மகிழ்ச்சி,  மெய்யே --- உண்மையானதே.

         சீகாழியில் சிவபாதஇருதயர் திருக்குமாரராய் அவதரித்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாவது பிராயத்தில் ஒருநாள் தமது தந்தையார் நீராடப் புறப்படுகையில் அழுது பின்தொடர, அவரும் உடன் அழைத்துச் சென்று சிவாலயத்தின்கண் உள்ள பிரமதீர்த்தக் கரையில் பிள்ளையாரை இருத்தி நீராடி, அகமருடண மந்திர செபம் செய்தற்கு நீரில் மூழ்கிச் சிறிது நேரம் இருப்ப, பிள்ளையார் தமது தந்தையைாரைக் காணாது திருக்கோயில் சிகரத்தைப் பார்த்து, "அம்மே! அப்பா!" என்று அழ, கருணைக் கடலாகிய சிவபெருமான் தேவியாரைப் பார்த்துத் திருமுலைப்பால் ஊட்டுமாறு பணிக்க, அம்மையாரும் சிவஞானத்தைக் குழைத்துத் திருமுலைப்பால் ஊட்டச் சிவபெருமான் தாமே அழுகை தீர்த்து அருள் செய்தருளினார். செபம் முடித்துக் கரை ஏறின தந்தையார் பிள்ளையார் வாயில் பால் வடிவது கண்டு, "எச்சில் மயங்கிட உனக்குப் பால் தந்தது யாவர்" எனப் பயமுறுத்துக் கேட்ப, பிள்ளையார் ஒருகை விரலால் சுட்டி ஆகாயத்தில் எழுந்தருளிய பெருமானைக் காட்டித்

"தோடுஉடையசெவி யன்விடை ஏறிஓர் தூவெண் மதிசூடிக்
காடுஉடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளம் கவர் கள்வன்
ஏடுஉடைய மலரான் முனை நாள்பணிந்து ஏத்த அருள்செய்த
பீடுஉடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்அன்றே"

என்று தொடங்கும் திருப்பதிகத்தை ஓதினார். அவ் அற்புதத்தைக் கண்டு விண்ணவர்கள் பூமாரி பொழிந்தார்கள். மண்ணவர்கள் கண்மாரி பொழிந்தார்கள். இது திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்து உள்ளது.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...