012. நடுவு நிலைமை - 03. நன்றே தரினும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "நன்மையையே தருமாயினும், நடுவுநிலையில் இருந்து நீங்குவதால் உண்டாகின்ற செல்வத்தை அப்போதே விட்டு ஒழிக்கவேண்டும்" என்கின்றது.

     நடுவுநிலைமை தவறியதனால் உண்டாகின்ற செல்வமானது, அப்போது நன்மையைத் தருவது போலத் தோன்றினாலும், அனுபவத்தில் தீமையைத் தருவதே ஆகும் என்பதால் அதனை விட்டுவிட வேண்டும் என்றார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

நன்றே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நன்றே தரினும் --- தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்;

     நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் --- நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.

      (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடிய நீதிசூடாமணி என்கிற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வேதவிதி வீமா விலங்கிற்கு உடற்பாதி
ஈதல்அழகு என்றான், இரங்கேசா! - ஒதுங்கால்
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! 

     வீமா --- பீமசேனனே, விலங்கிற்கு --- புருஷா மிருகத்திற்கு, உடல் பாதி --- உன்னுடைய உடலில் பாதி பாகத்தை, ஈதல் --- தருதல், வேதவிதி --- வேத சம்மதம், அழகு அதுவே என்றான் --- நியாயம் அதுவே என்று தருமராசன் சொன்னான் ஆகையால் இது ஓதுங்கால் --- சொல்லுமிடத்தில்,  நன்றே தரினும் ---  நல்ல இலாபத்தையே தருவதாக இருந்தாலும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை --- நடுவு நிலைமை தப்புவதால் உண்டாகும் செல்வத்தை, அன்றே ஒழிய விடல் --- அப்பொழுதே நீக்கிவிடக் கடவை என்பதை விளக்குகின்றது.

         கருத்துரை ---  நடுவு நிலைமை தவறுவதால் கொள்ளைச் செல்வம் வந்தாலும், கொள்ளக் கூடாது.

         விளக்கவுரை --- இராஜசூய யாகம் பண்ண விரும்பின தருமர் புருஷாமிருகத்தை அழைத்துக் கொண்டுவர வீமசேனனை ஏவினார். அவன் போய் அதை அழைத்தபோது, அது அவனை நோக்கி, "உன் பின்னாலேயே நான் வருவேன், ஆயினும் உனக்கும் எனக்கும் இடையில் நான்கு காத வழித் தூரம் இருத்தல் வேண்டும், இந்தத் தூரம் குரறைந்தால், நான் உன்னை நெருங்கிப் பிடித்துக் கொள்வேன்" என்றது. "அப்படியே ஆகட்டும்" என்று வீமன் முன் சென்றான். அவன் நாற்காத தூரம் சென்றது உணர்ந்து மிருகம் அவனைத் தொடர்ந்தது. அது சென்ற வேகத்தால், பீமன் மறுபடியும் நாற்காதம் போவதற்குள் நெருங்கிவிட்டது. அது தெரிந்த வீமன் ஒரு கல் எறிந்தான். அது ஒரு சிவலிங்கமும் தடாகமும் ஆயிற்று. புருஷாமிருகம் சிவபத்தியின் முதிர்ச்சியால் அங்குத் தங்கி நீராடிச் சிவபூசை முடித்துப் புறப்படுவதற்குள் வீமசேனன் நெடுந்தூரம் போய்விட்டான். மறுபடியும் புருஷாமிருகம் நெருங்கிற்று.  மறுபடியும் வீமன் கல் எறிந்தான். இப்படி வீமன் தந்திரம் செய்தும் பலிக்காமையால், புருஷாமிருகம் கடைசியாகத் தன் எல்லையில் ஒருகாலும், அவன் எல்லையில் ஒருகாலுமாய் இருந்த வீமசேனனைப் பிடித்துக் கொண்டது. வீமன், "என் எல்லையில் என்னைப் பிடித்தது ஞாய விரோதம்" என்றான்.  இருவரும் தருமரிடத்தில் முறையிட்டுக் கொண்டார்கள் அது கேட்ட தருமர், நடுவு நிலைமை தவறாமல், வீமசேனனை நோக்கி, "தம்பி, ஈரெல்லையிலும் நீ இருந்தமையால், உன் உடலை இரு கூறு ஆக்கி, ஒரு கூறை இம் மிருகத்துக்குத் தந்துவிட வேண்டும்" என்று நியாயம் தீர்த்தார். தம்பி என்று எண்ணி ஓரம் சொல்லாமல், நடுவுநிலைமையாய்த் தீர்த்த தருமன் செய்கை வியக்கற்பாலது.
                                                              

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...