015. பிறனில் விழையாமை - 08. பிறன்மனை நோக்காத





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "பிறனுடைய மனையாளைத் தனது மனத்தாலும் கொள்ளாத, பெரிய ஆண் தன்மையானது, பல நல்ல குணங்களாலும் நிறைந்த சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்" என்கின்றது.

     புறப்பகையை அடக்குகின்ற வல்லமை உள்ளவர்களுக்கும், உட்பகை ஆகிய காமத்தை அடக்குவது அரிது. உட்பகையை அடக்குபவரே சிறந்த ஆண்மை உள்ளவர் ஆவார். அது பேராண்மை எனப்பட்டது. பிறன் மனைவியை விரும்பாமையே, சிறந்த அறமும், செயற்கு அரும் செய்கையும் ஆகும்.

திருக்குறளைக் காண்போம்...

பிறன்மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை,

     சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.

      (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பல வாண முனிவர் பாடி அருளிய "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


எந்தை பலிக்கு என்று இயங்கும் நாள், பின்தொடர்ந்த
மென் தொடியார் தேத்தும் விழைந்திலார் ---  என்ப
பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு.              

         எந்தை --- சிவபெருமான். பின்தொடர்ந்த மென் தொடியார் தேத்தும் --- தாமாகப் பின் தொடர்ந்து வந்த தாருகாவனத்து முனிவருடைய பத்தினிமாரிடத்திலும்,  விழைந்திலர் ---  விருப்பத்தைச் செய்திலர். ஒரு காலத்தில் தாருகா வனத்தில் நடந்த வரலாற்றை இது குறிக்கும். தாருகாவனத்தில் இருந்த முனிபத்தினிகள், சிவபெருமான் மீது இச்சைகொண்டு தொடர்ந்த போதும், அவர் விருப்பம் கொள்ளவில்லை.
        
         அறன் ஒன்றோ, ஆன்ற ஒழுக்கு --- அறமும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.  

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

அம்பிகையை நோக்கி அளகேசன் கண்ணிழந்தான்,
இம்பர் பரவும், இரங்கேசா! - நம்பிப்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற வொழுக்கு.  

இதன் பதவுரை --- 

     இம்பர் பரவும் இரங்கேசா --- இவ் உலகோர் போற்றும் திருவரங்கநாதக் கடவுளே!

     அம்பிகையை நோக்கி --- பாரவதி தேவியைக் கூர்ந்து பார்த்ததனால், அளகேசன் --- குபேரன், கண் இழந்தான் --- குருடன் ஆனான், (ஆகையால் இது) பிறன் மனை --- அன்னியன் மனைவியை, நம்பி --- சேரலாம் என்று நிச்சயித்து, நோக்காத --- பார்க்காத, பேர் ஆண்மை --- பெரிய உறுதியானது, சான்றோர்க்கு --- பெரியோர்க்கு, அறன் ஒன்றோ --- தருமம் ஒன்றுதானா, ஆன்ற ஒழுக்கு(ம் ஆகும்) --- மிகுந்த நல்லொழுக்கமும் ஆகும் (என்பதை விளக்குகின்றது).   

         திருக் கயிலாய மலையில் பார்வதி தேவியை வேறு எண்ணத்தோடு விவேகமின்றிப் பார்த்ததனால் குபேரன் குருடன் ஆனான். ஆகையால், 'அம்பிகையை நோக்கி அளகேசன் கண்ணிழந்தான்' என்றார். 'நாம் அவள்மீது இச்சை வைத்தது போலவே இவளும் நம்மீது இச்சை வைப்பாள் என்று ஒருவன் எண்ணிப் பிறன் மனைவியை நம்பி' என்று பொருள் விரித்துக் கொள்க. சாதாரண இல்லற தருமம் ஒன்று மட்டுமன்று. பிறன்மனை புகாத பேராண்மை நல்லொழுக்கங்களிள் சாலச் சிறந்ததுமாகும். இவ் ஆண்மையில் குறைந்து ஒழுகிய இராவணன் பட்டபாடு யாவரும் அறிவர்.

     இந்தச் செய்யுளின் முதல் ஈரடிக்கு 'அந்தகன் தேவிதனை அக்கினி தான் அணைந்தே, இந்தில் இழிவுற்றான் இரங்கேசா' என்றும் பாடபேதம் உண்டு.

     இதற்கு, அந்தகன் --- இயமனுடைய, தேவிதனை --- மனைவியை, அக்கினிதான் --- அக்கினி தேவன், அணைந்து - சேர்ந்து, இந்தில் --- இவ் உலகத்தில், இழிவுற்றான் --- மற்ற தேவரால் அவமானம் அடைந்தான்' என்பது பதவுரை.

இந்த வரலாறு

     சுவாகாதேவி என்பவள் மிக்க அழகு உடையவளாக இருந்தாள். ஆகவே, எமன் அவள் மீது காதல் கொண்டு, அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுடைய அழகை விரும்பி, அவளை யாராவது கொண்டு போய் விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய எமன், அவளைச் சிறிய எலுமிச்சம்பழம் ஆக்கி உள்ளே விழுங்கி வைத்து இருந்தான். தனக்கு அவள் மீது விருப்பம் உண்டான போது மட்டும் எலுமிச்சம்பழத்தைக் கக்கி, பெண்ணாக்கி இன்பம் அனுபவித்து இருப்பது வழக்கம். இந்திரவனம் என்னும் இடத்திற்குச் சென்று, எமன் தன் மனைவியாகிய எலுமிச்சம்பழத்தைக் கக்கிப் பெண்ணாக்கி அவளோடு இன்பம் அனுபவித்து, இனிது மகிழ்ந்து விளையாடிக் கொண்டு இருந்தான். பிறகு களைப்பால் மறந்து, தன் மனைவியை எலுமிச்சம் பழமாக்கி விழுங்காமலே விட்டு விட்டு உறங்கிவிட்டான். அப்பொழுது அந்த இடத்திற்குத் தீக் கடவுள் வந்தான். எமன் சுவாகாதேவி மீது காதல் கொண்டு இருந்தானே அல்லாமல், சுவாகாதேவிக்கு எமன் மீது காதல் சிறிதும் கிடையாது. ஆகவே, அவள் தீக் கடவுளைக் கண்டவுடன், அவன் மீது காதல் கொண்டு அவனைச் சேர்ந்தாள். எமன் விழிப்பதற்குள், தீக் கடவுளை ஒரு எலுமிச்சம்பழமாக்கி உள்ளே வைத்து இருந்தாள். எமன் விழித்ததும், மனைவியை எலுமிச்சம்பழமாக்கி விழுங்கி வைத்துக் கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்குப் போய்விட்டான். பிறகு தேவர்களும் முனிவர்களும் தீக் கடவுளைத் தேடத் தொடங்கினார்கள். பல இடங்களிலும் தேடியும் அவனைப் பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லை. திருமால் இடத்திலே சென்று முறையிட்டார்கள். அவர் தனது மெய்யறிவுப் பார்வையினால், தீக் கடவுள் இருக்கும் இடத்தைப் பார்த்து அறிந்தார். எமனை அழைத்து, அவன் வயிற்றில் இருந்து சுவாகாதேவியைக் கக்குவித்தார். பிறகு அவளுடைய வயிற்றிலே இருந்து தீக் கடவுளைக் கக்குவித்தார். தீக் கடவுள் வெளிப்பட்டதும், எமனுக்குத் தன்னுடைய ஒருதலைக் காமத்தின் உண்மை தெரிந்தது. சுவாகாதேவிக்குத் தன் மீது சிறிதும் காதல் இல்லை என்பதே அறிந்து அவளை விட்டுவிட்டான். ஒருதலைக் காமத்தால் நன்மை ஏதும் இல்லை என்பது எமனிடத்தில் விளங்கியது.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அறனும், அறன் அறிந்த செய்கையும், சான்றோர்
திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பிறன்இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்
இழுக்குஆம் ஒருங்கே இவை.           ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறன் இல் பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல் --- அயலான் மனைவியை விரும்பினான் என்று, மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும் --- அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும் --- அவ்வறத்தினுக்கேற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே --- இவை முழுவதும், இழுக்கு ஆம் --- பழியாம்.


பொருளும், காமமும் என்று இவை போக்கி, வேறு
இருள் உண்டாம் என எண்ணலர், ஈதலும்
அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஒர்
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.
              ---  கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

இதன் பதவுரை ---

     சீரியோர் --- அறவொழுக்கங்களில் சிறந்த மேலோர்; பொருளும் காமமும் என்று இவை போக்கி --- செல்வத்தில் ஆசையும், சிற்றின்பமான காமத்தில் ஆசையும் ஆகிய இவற்றைத் தவிர்த்து; வேறு இருள் உண்டு ஆம் என எண்ணலர் --- வேறே இருள் ஒன்று (உலகத்தில்) உள்ளது என்று நினையார்; ஈதலும், அருளும் --- வறியோர்க்குக் கொடுத்தலும், யாரிடத்தும் கருணை காட்டலும்; காதலின் தீர்தலும் அல்லது --- அப்பொருளினிடத்தும் சிற்றின்பத்தினிடத்தும் பற்று விட்டு நீங்குதலும் ஆகிய இவையே அல்லாமல்; ஓர் தெருள் உண்டு ஆம் என எண்ணலர் --- வேறு ஒரு நல்லறிவு உள்ளது என்று நினையார்.

     பொருளும் காமமும் இருள்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும் தெளிவு தருவன.                                            

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகையுற நாண் இலன்,
பச்சை மேனி புலர்ந்து பழிப்படூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ. ---  கம்பராமாயணம், பிணிவீட்டு படலம்.

இதன் பதவுரை ---

     இச்சைத் தன்மையினில் --- ஆசையின் இயல்பினால்; பிறர் இல்லினை நச்சி நாளும் நகை உற --- அயலார் மனைவியை விரும்பி (அதனால்) எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்க; நாண் இலன் பச்சை மேனி புலர்ந்து --- வெட்கமற்றவனாய் பசுமையான உடம்பு (காம தாபத்தால்) உலரப் பெற்று; பழிபடூ உம் கொச்சை ஆண்மையும் --- பழிப்பை அடைகின்ற இழிவான இவ்வகை ஆண் தன்மையும்; சீர்மையின் கூடுமோ? --- சிறந்த குணங்களில் ஒன்றாகச் சேருமா? (சேராது என்றபடி).

     பிறன்மனை நயத்தலின் இழிவு கூறப்பட்டது. 'எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி' என்ற திருக்குறளின் கருத்தை அடியொற்றியது. 

பெண் எலாம் நீரே ஆக்கி, பேர் எலாம் உமதே ஆக்கி,
கண் எலாம் நும் கண் ஆக்கி, காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கணை அரியத் தக்க
புண் எலாம் எனக்கே ஆக்கி, விபரீதம் புணர்த்து விட்டீர்.
                                                       --- கம்பராமாயணம், மாயாசனகப் படலம்.

இதன் பதவுரை ---

     பெண் எலாம் நீரே ஆக்கி --- நான் விரும்பும் பெண் எலாம் நீரே என்று ஆக்கி;  பேர் எலாம் உமதே ஆக்கி --- யான் விரும்பி அழைக்கிற பெயர் எல்லாம் உம்முடைய பெயரே என்று ஆக்கி;  கண் எலாம் நும் கண் ஆக்கி --- என் இருபது கண்களும் உம்மை மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி;  காமவேள் என்னும்  நாமத்து அண்ணல் எய்வானும் ஆக்கி --- காமவேள் என்று பெயர் கொண்ட தலைமையில் சிறந்தவனை என் மீது மலரம்புகளைத்  தொடுப்பவன் என்று செய்து; ஐங்கணை அரியத்தக்க புண் எலாம் எனக்கே ஆக்கி --- அக் காமனின் ஐந்து வகை அம்புகள் எல்லாம் எனக்கு உண்டாக்கக் கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு செய்து;  விபரீதம் புணர்த்து விட்டீர் --- என்னிடம்  மாறுபாடான நிலை தோன்றுமாறு செய்து விட்டீர்.

     ஐங்கணை -  தாமரை.  அசோகு,  மா, முல்லை, நீலம் ஆகிய ஐந்து மலர் அம்புகள். விபரீதம் - மாறுபாடு.


'அறம் என நின்ற நம்பற்கு
     அடிமை பெற்று, அவன்தனாலே
மறம் என நின்ற மூன்றும்
     மருங்கு அற மாற்றி, மற்றும்,
திறம் என நின்ற தீமை
     இம்மையே தீர்ந்த செல்வ!
பிறர் மனை நோக்குவேமை
     உறவு எனப் பெறுதி போலாம்?
                                  ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     அறம் என நின்ற நம்பற்கு --- அறத்தின் மூர்த்தி எனச் சொல்லுமாறு நின்ற தலைவனுக்கு;  அடிமை பெற்று --- அடிமையாகப் பெற்று; அவன் தனாலே --- அவனது கருணை வள்ளல் தன்மையாலே; மறம் என  நின்ற மூன்றும் ---  பாவத்துக்குக் காரணம் என்னுமாறு நின்ற காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும்; மருங்கு அற மாற்றி --- முழுதும்  இல்லாமல் போக்கி; மற்றும் --- மேலும்; திறம் என நின்ற தீமை --- வலிமையுடையதாக இருந்த பிற தீய பண்புகளையும்; இம்மையே தீர்ந்த செல்வ --- இப்பிறவியிலேயே போக்கிய செல்வனே; பிறர் மனை நோக்குவேமை --- அயலவரது மனைவியை அறம் துறந்து நோக்கும் எங்களை; உறவு எனப் பெறுதி போலாம் --- உறவு என இனிமேலும் கொள்வாய் போலும் என்றவாறு.

     மறம் என நின்ற மூன்றும் --- அறியாமை,  திரிபு உணர்ச்சி, ஐய உணர்வு எனினும் ஆம். இப்பிறவியில்  பெறவரும் பதம்  பெற்ற நீ, அதை விட்டு இங்கு மீண்டு வந்தது என்னையோ என்றவாறு. பிறர் மனை நோக்குவேமை, என்றது இராவணனுக்குத் துணையாய் நின்று போருக்கு வந்தமையால் உளப்படுத்திக் கூறியதாம்.
 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...