011. செய்ந்நன்றி அறிதல் - 08. நன்றி மறப்பது




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

          இந்த அதிகாரத்தில் வரும், எட்டாம் திருக்குறள், "ஒருவன் தனக்கு முன் செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது. அவன் செய்த தீமையை, செய்தபொழுதே மறந்துவிடுவது அறம் ஆகும்" என்கின்றது.

     நன்மையை மறவாது இருப்பதும் நல்லது. தீமையை அப்பொழுதே மறந்து விடுவதும் நல்லது.

திருக்குறளைக் காண்போம்...

நன்றி மறப்பது நன்று அன்று, நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நன்றி மறப்பது நன்று அன்று --- ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று;

     நன்று அல்லது அன்றே மறப்பது நன்று --- அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.

     (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகிர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,  
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்..   --- கலித்தொகை.

இதன் பொருள் ---

     கல்வி கற்பித்தவன் நெஞ்சம் வருந்துமாறு உணவுப் பொருள்களை ஆசிரியனுக்கு வழங்காதவன் தானே தேய்ந்து போவான். கற்ற வித்தையைச் சொல்லித்தரும் ஒருவன் தப்புத் தப்பாகக் கற்பித்துவிட்டு மாணவனிடம் பெற்ற செல்வம் தானே தேய்ந்துபோகும். வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப  உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.

உதவி செய்தோர்க்கு உதவார் ஆயினும்
மறவி இன்மை மாண்புடைத்து.      --- பெருங்கதை.

     தனக்கு உதவிய ஒருவருக்கு, உதவமுடியவில்லை, ஆயினும், அவர் செய்த உதவியை மறவாமல் இருப்பது பெருமைக்கு உரியது.

ஒன்றொரு பயனை உதவினோர் மனம்
கன்றிட ஒரு வினை கருதிச் செய்வரேல்
புன்தொழில் அவருக்கு முன் செய்த நன்றியே
கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ...  ---  கந்தபுராணம்.

     ஒரு உதவியை ஒரு காலத்தில் தமக்குச் செய்தவருடைய  மனம் வருந்தும்படியான ஒரு செயலை எண்ணி ஒருவன் செய்வானானால், அந்தக் கேடு கெட்டவனை, அவனுக்கு ஏற்கெனவே செய்யப்பட்ட உதவியே கொன்று விடும். எமன் தேவையில்லை.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...