008. அன்புடைமை - 08. அன்பு அகத்து




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

எட்டாம் அதிகாரம் - அன்புடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கையானது, வலிய நிலத்தில் உலர்ந்த மரமானது தளிர்த்ததைப் போன்றது ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்.....

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை, வன்பால்கண்
வற்றல் மரம் தளிர்த்து அற்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;

     வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று --- வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும்.

         ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.)

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளை விளக்குவனவாக அமைந்திருக்குமாறு காணலாம்....

அற்ற தலைபோக அறாத தலை நான்கினையும்
பற்றித் திருகிப் பறியேனோ --- வற்றும்
மரம் அனையாட்கு அந்த மகனை வகுத்த
பிரமனை யான் காணப்பெறின்.     --- ஔவையார்.

இதன் பொருள் ---

     பட்ட மரத்தைப் போன்று உள்ளத்தில் அன்பு இல்லாது இருக்கும் இவளுக்கு, இந்த ஆண்மகனைக் கணவனாகத் தலையில் எழுதிய நான்முகனை நான் இப்போது காணப் பெற்றால், சிவபெருமானால் முன்னர் கிள்ளி எறியப்பட்ட அவனது ஒரு தலை போக, எஞ்சி உள்ள நான்கு தலைகளையும் நான் திருகி எறிய மாட்டேனா?

கூடிக் கூடி உன்னடியார்
         குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடி வாடி வழியற்றேன்
         வற்றல் மரம்போல் நிற்பேனோ
ஊடி ஊடி உடையாயொடு
         கலந்துள் ளுருகிப் பெருகிநெக்
காடி ஆடி ஆனந்தம்
         அதுவே யாக அருள்கலந்தே.    --- திருவாசகம்.

இதன் பதவுரை ---

     உன் அடியார் --- உன் அடியார்கள், கூடிக்கூடி --- சேர்ந்து சேர்ந்து, குனிப்பார் --- கூத்தாடுவார், சிரிப்பார் --- நகைப்பார், களிப்பார் ஆ --- களிப்பாராக, வழியற்றேன் --- நெறி கெட்டவனாகிய நான் மட்டும், வாடிவாடி --- வாட்டமுற்று வாட்டமுற்று, வற்றல் மரம்போல் நிற்பேனோ --- பட்ட மரத்தைப் போன்று இருப்பேனோ, ஊடி ஊடி --- பிணங்கிப் பிணங்கி, உடையாயொடு --- உடையவனாகிய உன்னுடன், கலந்து --- சேர்ந்து, உள் உருகி --- மனமுருகி, பெருகி --- பூரித்து, நெக்கு - நெகிழ்ந்து, ஆடி ஆடி --- கூத்தாடிக்கூத்தாடி, ஆனந்தம் அதுவேயாக --- ஆனந்த மயமாகும்படி, கலந்து அருள் --- ஒன்றாய்க் கலந்து அருள் செய்வாயாக.

         கூத்தாடுதலும், நகைத்தலும், உள்ளங்களித்தலும், உள்ளன்பின் காரணமாக இறைவனைக் கூடியதால் உண்டானவை. 'பட்ட மரம் இலை உதிர்ந்து வாடியிருப்பது போன்று ஒளி குன்றி வாடியிருக்கின்றேன்' என்பார், 'வற்றல் மரம்போல் நிற்பேனோ' என்றார். அடியார்கள் போன்று அன்பினைப் பெற்று இறைவனைக் கூடி ஆனந்தமாயிருக்க வேண்டும் என்று வேண்டியபடி.

கண்ணுடைய நுதற்கரும்பே! மன்றில் ஆடும்
     காரண காரியங் கடந்த கடவுளே! நின்
தன்னுடைய மலரடிக்கு ஓர் சிறிதும் அன்பு
     சார்ந்தேனோ? செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்;
பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்,என்
     பேதைமையை என்புகழ்வேன்? பேயனேனைப்
புண்ணுடைய புழுவிரும்பும் புள் என்கேனோ?
     புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலையனேனே. ---  திருவருட்பா.

இதன் பொருள் ---

     கண்பொருந்திய நெற்றியை உடைய கரும்பே!  காரண காரியம் கடந்த கடவுளே! நின் தண்ணிய மலர் போன்ற திருவடிக்கண் சிறிதும் அன்பு கொண்டேனில்லை; செம்மரம் போல் தணிந்த நெஞ்சுடையனாய்; பெண்மயலால் சுழல்கின்றேன்; எனது பேதைமையை என்னென்று மொழிவேன்; புலை விழைந்து நிலை வெறுத்த புலையனாயினமையின், என்னைப் புண்ணிடை நெளியும் புழுவைத் தின்னும் புள்ளென்பேனோ? என்னென்பது.

     வற்றல் மரம் என்று கூறவேண்டியதை, செம்மரம் என்றார். நஞ்சு உடைய பாம்பினை, நல்ல பாம்பு என்று கூறும் வழக்கம் போல். பசுமையும், திழல் தரும் தன்மையும் இல்லாத மரத்தை வற்றல் மரம் என்பர். ஆன்பும் ஆர்வமும் ஆகிய செயல்பாடுகள் இல்லாத நெஞ்சுக்கு, வற்றல் மரம் உவமை ஆயிற்று.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...