007. மக்கள் பேறு - 02. எழுபிறப்பும்





திருக்குறள்
அறத்துப்பால்
ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு.

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள்,  ஒருவன் பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்களைப் பெறுவானானால், அவனை, அவன் வினை வசத்தினால் பிறக்கும் பிறப்பு ஏழிலும், துன்பங்கள் தீண்டா என்கின்றது.

     தீவினையானது பெருகாமல் குறைவதற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் மக்களைப் பெறவேண்டும் என்பது இதன் கருத்து.

     பிறப்பு ஏழு என்பது ஏழு வகையான பிறப்புக்களைக் குறிக்கும்.

     தோற்றம் நான்காக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

"பார் இடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆர் உயிர் அமைக்கும் அருட்பெருஞ் சோதி

ஓவுஉறா எழுவகை உயிர் முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருட்பெருஞ் சோதி

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ் சோதி

தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்த அருட்பெருஞ் சோதி

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
அட்டமே காத்து அருள் அருட்பெருஞ் சோதி

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்து அருள் அருட்பெருஞ் சோதி

வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்து அருள் அருட்பெருஞ் சோதி"

என்பார் வள்ளல் பெருமான்.

     நான்கு வகைத் தோற்றம் - அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பன நால் வகைத் தோற்றம். 

         அண்டசம் -- முட்டையில் தோன்றுவன. (அண்டம் - முட்டை, சம் - பிறந்தது) அவை பறவை, பல்லி, பாம்பு, மீன், தவளை முதலியன. 

         சுவேதசம் --- வேர்வையில் தோன்றுவன. (சுவேதம் - வியர்வை)  அவை பேன், கிருமி, கீடம், விட்டில் முதலியன. 

         உற்பிச்சம் --- வித்து.  வேர், கிழங்கு முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து)  அவை மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.

         சராயுசம் --- கருப்பையிலே தோன்றுவன (சராயு - கருப்பாசயப்பை) இவை தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள் முதலியன.

         எழு பிறப்பு -- தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு.  இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல்பொருள்.  (இயங்குதிணை, சங்கமம், சரம்) எனவும்,  இறுதியில் நின்ற ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள், தாவரம், அசரம்) எனவும் பெயர் பெறும்.

     எழுபிறப்பு என்பது எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்களை உடையது. "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் திருவீழிமிழலைத் தேவாரம்.

 யோனி - கருவேறுபாடுகள். 

         தேவர் -      14 இலட்சம்,
         மக்கள் -     9 இலட்சம்,
         விலங்கு -    10 இலட்சம், 
         பறவை -     10 இலட்சம்,
         ஊர்வன -     11 இலட்சம், 
         நீர்வாழ்வன – 10 இலட்சம், 
         தாவரம் -     20 இலட்சம்,
        
ஆக, 84 இலட்சம் பேதம் ஆகும், இதனை,

         ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
         நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் - சீரிய
         பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
         அந்தமில் தாவரம் நால்ஐந்து.

என்னும் பழம் பாடலால் அறியலாம்.

     ஒரு புதல்வனை ஈன்று புறம் தந்து, தீவினை என்பதைக் கருதாது, நல்வினையையே பயிலுபவனாக அவனை ஆளாக்கி விட்டு விட்டால், அந்தப் புண்ணியமே, அப்படிப் பெற்றவனை, அவன் எடுக்கப் போகும் பிறவிகளில் துன்பம் வராமல் காக்கும் என்பது கருத்தாக அமைகின்றது.

இனி, திருக்குறளைக் காண்போம்....

எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ----

       எழு பிறப்பும் தீயவை தீண்டா ---- வினை வயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்று அடையா;

     பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் --- பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.
        
          ('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின் மேல் நின்றது.)

     முந்தைய திருக்குறளில் பரிமேலழகர், "மக்கள் என்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது" என்றார்.

     அக் கருத்தை மறுத்து, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில், கமலை வெள்ளியம்பலவாண முனிவர், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

பெண் பெறினும் என்ன பிழையோ? தடாதகைபோல்
எண்பொருளும் ஈசனும் வந்து எய்துமே, --- கொண்ட
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்.                  

         ஆண் மகவைப் பெறுதலே சிறப்பு என்பார் கொள்கையை மறுத்துக் கூறுவந்த வெள்ளியம்பல வாண முனிவர்,  "பெண் பெறினும்" என்று உம்மை கொடுத்துக் கூறினார். 

     "பெண் பெற்றாயோ, புண் பெற்றாயோ" என்னும் பழமொழியை இவர் மறுத்தார்.

     தடாதகைப் பிராட்டியார் மலயத்துவச பாண்டினுக்கு உமாதேவியாரின் அமிசமாகப் பிறந்த பெண் குழந்தை. இக் குழந்தையை, பின்னர் சோமசுந்தரக் கடவுள் மணந்தார். தடாதகைப் பிராட்டியாரால், மலயத்துவசன் சோமசுந்தரப் பெருமானை மருமகனாகப் பெற்றதால், எண்ணிய பொருள்களை எல்லாம் பெற்றதுடன், வீடுபேற்றையும் எளிதில் பெற்றான்.

         எண்பொருள் --- 1. மனத்தில் எண்ணும் பொருள்,  2. மதிப்புடை பொருள்கள்,  3. அஷ்ட ஐசுவரியம்.

     "நல்ல ஆண் பிள்ளயைப் பெறுக" என்று வாழ்த்துக் கூறுபவர்கள் நாணும்படியாக, இமயமலைக்கு அரசனாகிய இமவான், உமாதேவியாரைப் பெண்ணாகப் பெற்று பேறு பெற்றான் என்னும் பொருள் படும் பின்வரும் பாடல் கருத்தையும் எண்ணும்போது, நல்ல ஆண்மகனைத் தான் பெறவேண்டும் என்பது இல்லை. நல்ல பெண்ணாகப் பிறந்தாலும் பயன் உண்டு என்பது தெளிவாகும்.

"கற்றார் அறிகுவர் மக்கள்தம் பேறுஎனக் கட்டுரைத்த
சொல்தான் ஒருபெண் ஒழித்தது, என்பானொடுதொல்உலகில்
நற்று ஆண் மகப்பெறுக என்று ஆசி சொல்பவர் நாண, உனைப்
பெற்றான் மலையரையன், குன்றை வாழும் பெரியம்மையே".

என்பது சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பெரியநாயகி அம்மை கலித்துறை.

     "இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப் பிறவிக் கொடும் சூழல் பிழைக்கும் நெறி தமக்கு உதவப் பெண்கொடியைப் பெற்று எடுத்தார்" என்று மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றில், தெய்வச் சேக்கிழார் காட்டும் அருமை எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களுள், "இரங்கேச வெண்பா" என்பதும் ஒன்று. அதில் வரும் ஒரு பாடலைக் காண்போம்....
                                                              

வேதம் புகழ்நதியை மேதினியில் தந்து,குலத்து
ஏதம் கெடுத்தான், இரங்கேசா! - ஓதும்
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.                          

         இப் பாடலின் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! வேதம் புகழ் நதியை --- வேதங்கள் சிறப்பித்துச் சொல்லுகின்ற ஆகாய கங்கையை, மேதினியில் தந்து --- தன்னுடைய முன்னோர்க்கு நேரிட்ட நரகானுபவத்தைப் பகீரதன் தீர்த்தான்,  (இது) பழி பிறங்கா பண்புடை மக்கள் பெறின் --- பழிக்கு ஆளாகாத நற்குணமுள்ள மக்களைப் பெற்றால், எழு பிறப்பும் தீயவை தீண்டா --- எழு பிறவிகளிலும் பாவங்கள் அணுகா (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை ---  ஏவா மக்கள் மூவா மருந்து.

         விளக்கவுரை --- கங்கையின் பரிசுத்தம் நோக்கி, "வேதம் புகழ் நதி" என்றார். சூரியகுலத்துச் சகர சக்கரவர்த்தி தமது அறுபதினாயிர மைந்தரின் உதவியால், அசுவமேதம் செய்து குதிரையை வெளியில் விட்டபோது, இந்திரன் அதைக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் தவம் செய்துகொண்டு இருந்த கபில முனிவர் தவச் சாலையில் கட்டி வைத்தான். அது தெரியாத சகர குமாரர்கள் குதிரையைப் பூமியில் எங்கும் தேடிக் காணாமல், பூமியைத் தோண்டிப் பாதாளத்தில் சென்று கபில ஆச்சிரமத்தில் மேய்ந்து கொண்டிருந்த குதிரையைக் கண்டு, அம் முனிவரே அதைக் கொண்டு சென்றார் என்று எண்ணி, அவரை அவமதித்து வைதார்கள். உடனே முனிவர் கோபித்துக் கண் திறந்து பார்த்ததனால் அறுபதினாயிரம் பேரும் சாம்பலாகிப் போனார்கள். பிறகு இவர்கள் குலத்தில் பிறந்த பகீரதன் என்னும் உத்தம மைந்தன், தன் மூதாதையார் ஆகிய சகரர், கபில முனிவர் சாபத்தால் சாம்பராகி நரகானுபவம் பண்ணுவதை உணர்ந்து பல்லாண்டு பல்லாண்டாய் பிரமனையும் கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து ஆகாய கங்கையை பூமியில் இறக்கிக் கொண்டு வந்தான். சன்னு முனிவர் அதை உட்கொண்டு விட்டார். அவரை வேண்டி வரம் கிடந்து, மறுபடியும் அதை அவர் காது வழியாக அவன் விடுவித்துக் கொண்ட போய்ப் பாதாளத்தில் சாம்பாராயிருந்த தனது மூதாதையர் எலும்புச் சாம்பர் மேல் பாய்ச்சி அவர்களை நரகத்தினின்றும் விடுவித்து மோட்சத்திற்குச் செலுத்தினான். இதுவே வேதம் புகழ் நதியை மேதினியில் தந்து குலத்து ஏதம் கெடுத்த கதை.

     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்ய வந்த நூல்களுள் மற்றும் ஒன்று "சிவசிவ வெண்பா".  அதில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடப்பெற்ற பாடல் ஒன்று.  அதைக் காண்போம்....
                                                                        
மறலி செயல் மாற்றி, வயது அரனால் பெற்ற
திறல் மகப் பேறுஆம், சிவசிவா! - பெறு பேறு
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.                     

இதன் பொருள் ---

     வாழ்நாள் பதினாறு என வரையறுக்கபட்டபோதும், இறைவனையே கதி என்று எண்ணி வழிபட்டுக் கொண்டிருந்த மார்க்கண்டேயரின், உயிரை வவ்வ வந்த மறலியைத் தன் காலால் உதைத்து, என்றும் பதினாறாக வாழும் பேற்றை அளித்தவர் சிவபெருமான். பழி பிறங்காப் பண்புடை மகனாக மார்க்கண்டேயர் விளங்கினார். அத்தகைய மகனைப் பெறுவதே ஒருவன் தன் வாழ்க்கையில் பெரும் பேறு.

மார்க்கண்டேயர் சிவனை வழிபட்டுப் பேறு பெற்றதைத் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடியுள்ளார்..

"நின்அடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்அடியான் உயிரை வவ்வேல் என்று அடற்கூற்று உதைத்த
பொன்அடியே பரவி பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்அடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே".

பின்வரும் பெரிய புராணப் பாடல் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.
                                                              
பொருஇல் பெருமைப் புத்திரன் மெய்த்
         தன்மை அளித்தான் எனப் பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர்
         மனைவியாரும், கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான்
         என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை
         எய்தி அரிய வினை செய்தார்.

இதன் பொருள் ---

     அத்தந்தையார், (சிறுத்தொண்டர்) `ஒப்பில்லாத பெருமை மிகுந்த மகன், மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான்' என்று பொருந்திய மகிழ்ச்சியடைய, அவருடைய மனைவியாரான அம்மையாரும், `கணவனாரின் அரிய உயிரை எனக்கு இம்மைந்தன் அளித்தான்' என்று மிகவும் மனம் மகிழ, இங்ஙனம் இருவருள்ளமும் பெருமகிழ்ச்சி பொருந்த இவ்வரிய செயலைச் செய்தனர்.

பின்வரும் பாடல்களை ஒப்புமையாக எண்ணலாம் -----

உரிமை மைந்தரைப் பெறுகின்றது,
     உறு துயர் நீங்கி,
இருமையும் பெறற்கு என்பது
     பெரியவர் இயற்கை ;
தருமம் அன்ன நின்-தந்த யான்,
     தளர்வது தகவோ?
கருமம் என்வயின் செய்யின், என்
     கட்டுரை கோடி.   --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.

  இதன் பதவுரை ---

     உரிமை மைந்தரைப் பெறுகின்றது --- எல்லா உரிமைகளையும் உடைய பிள்ளையை ஒருவர் பெறுவது ;  உறு துயர் நீங்கி --- மிக்க துயரத்தினின்றும் விலகி ;  இருமையும் பெறற்கு என்பது --- இம்மை மறுமை இன்பங்களை அடைவதற்காகும் என்பது ;  பெரியவர் இயற்கை ---  பெரியோரது இயல்பாக உள்ளது;  தருமம் அன்ன நின் தந்த யான் --- அறமே போன்ற நின்னை மகனாகப் பெற்ற நான்;  தளர்வது தகவோ -- மனத் தளர்ச்சியடைதல் தக்கதோ? (அன்று);  என்வயின் கருமம் செய்யின் --- (ஆதலால்) என்மீது செய்தற்குரியது செய்ய விரும்பினால்;  என் கட்டுரை கோடி --- என் பயனுள்ள சொல்லைக் கொள்வாய்.

     உரிமை மைந்தர் --- அறநூல்கள் புத்திரர்களின் வகைகள் சில கூறுகின்றன. அவர்களுள் சிலர்க்குச் சில உரிமையே உண்டு. ஒருவனுக்கு முறைப்படி பிறந்த மகனுக்கே எல்லா உரிமைகளும் உண்டு. அத்தகைய மைந்தர் என்றவாறு. மைந்தனைப் பெறுவதன் பயன் துயரம் நீங்கிநன்மை அடைவதாகும்.

மன்னர் ஆனவர் அல்லர் ;
     மேல் வானவர்க்கு அரசு ஆம்
பொன்னின் வார் கழல்
     புரந்தரன் போலியர் அல்லர் ;
பின்னும், மா தவம் தொடங்கி,
     நோன்பு இழைத்தவர் அல்லர் ;
சொல் மறா மகப் பெற்றவர்
     அருந்துயர் துறந்தார்.  --- கம்பராமாயணம். மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     அருந் துயர் துறந்தார் --- இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள்;  மன்னர் ஆனவர் அல்லவர் --- அரசர்களாக வாழ்கின்றவர்கள் அல்லர்;  மேல் --- மேலுலகில் உள்ள;  வானவர்க்கு அரசு ஆம் --- தேவர்களுக்கு அரசனாகிய;  பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியன் அல்லர் --- பொன்னாலான நீண்ட வீரக்கழல் அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர்;  பின்னும் --- அன்றியும்; மா தவம் தொடங்கி -- பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி; நோன்பு இழத்தவர் அல்லர் --- பல விரதங்களைச் செய்தவரும் அல்லர்;  சொல் மறா மகப் பெற்றவர் --- (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத் தட்டாத மக்களைப் பெற்றவரே ஆவர்.

     நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கியவர் என்பது கருத்து.ஏவா மக்கள் மூவா மருந்து என்பது ஈண்டு நினைத்தற்குரியது.  

"ஆளும் நல் நெறிக்கு
     அமைவரும் அமைதி இன்றாக
நாளும் நம் குல நாயகன்
     நறை விரி கமலத்
தாளின் நல்கிய கங்கையைத்
     தந்து, தந்தையரை
மீள்வு இலா உலகு ஏற்றினான்
     ஒருமகன், மேல்நாள்".     ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     மேல்நாள் --- முற்காலத்தில்; ஒருமகன் --- ஒப்பற்றவனாகிய பகீரதன்; ஆளும் நல்நெறிக்கு --- தாம் நுகரக்கூடிய (வீட்டுக்குரிய) நல்ல வழிக்கு; அமைவரும் அமைதி இன்றாக --- பொருந்தும் தன்மை தன் முன்னோர்களுக்கு இல்லாமற் போனதால் ;  நாளும் --- (அவர்கள் உய்வின் பொருட்டு) எந்நாளும் ;  நம்குலம் நாயகன் --- நமக்குக் குல தெய்வமாகிய திருமாலின் ;  நறை விரி கமலத் தாளின் --- தேன் நிறைந்த தாமரை போலும் திருவடிகளினின்றும்;  நல்கிய கங்கையைத் தந்து --- வெளிப்படுத்திய கங்கையாற்றை இவ்வுலகில் கொண்டு வந்து ;  தந்தையரை மீள்வு இலா உலகு --- தன் முன்னோர்களை (சகர புத்திரர்களை) மீண்டு வாராத வீட்டுலகத்தில் ;  ஏற்றினான் ---ஏறச் செய்தான்.

     மக்கட் பேற்றின் பயனை விளக்க ஓர் எடுத்துக்காட்டாகப் பகீரதன் வரலாற்றினை எடுத்துக் காட்டுகிறான். நம்குலம் - இக்குவாகு குலம்.
                      

"பெருமிதம் உனக்கு ஏன்? பிள்ளைப்
         பேறு அற்ற பாவி நீ, ன்
அருமைநன் மகனால் அன்றோ
         இருமையும் அடைவாய் என்னப்
பெரிதுநாண் அடைந்து மேலைக்கு
         ஆயினும் பிள்ளைப் பேறு
தருதவம் புரிவேன் என்னாத்
         தனபதி தவமேல் செல்வான்".    --- தி.வி.புராணம். மாமனாக வந்து...

இதன் பதவுரை ---

     பிள்ளைப் பேறு அற்ற பாவி உனக்குப் பெருமிதம் ஏன் --- மகப்பேறு அற்ற பாவியாகிய உனக்குப் பெருமிதம் எதற்கு, என் அருமை நன் மகனால் அன்றோ --- எனது அருமைப் புதல்வனால் அல்லவா, நீ இருமையும் அடைவாய் என்ன --- நீ இம்மைப் பேற்றினையும் மறுமைப் பேற்றினையும் அடைவாய் என்று கூற, பெரிதும் நாண் அடைந்து --- மிகவும் வெட்கமுற்று, மேலைக்கு ஆயினும் பிள்ளைப் பேறு தருதவம் புரிவேன் என்னா --- மறு பிறப்பிலாயினும் மகப் பேற்றினைத் தருதற்குரிய தவத்தினைச் செய்வேனென்று, தனபதி தவமேல் செல்வான் --- தனபதி தவம் புரிதல் பொருட்டுச் செல்வானாயினன்.


 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...