011. செய்ந்நன்றி அறிதல் - 03. பயன்தூக்கார்




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதினோராம் அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும், மூன்றாம் திருக்குறள், "இவர்க்கு இந்த உதவியைச் செய்தால், அவர் பின்னர் அந்த உதவியைச் செய்வார் என்று ஆராய்ந்து பார்க்காமல், ஒரு உதவியை ஒருவர் செய்வாராயின், அந்த உதவியால் பெற்ற நன்மையானது கடலை விடவும் பெரியதாய்த் தோன்றும்" என்கின்றது.

     முதல் திருக்குறளில், காரணம் இல்லாமல் செய்த உதவிக்கு ஈடு இல்லை என்றார்.

     இரண்டாம் திருக்குறளில், தக்க காலத்தில் செய்த உதவியானது, உலகை விடப் பெரியது என்றார்.

     இத் திருக்குறளில், பயன் கருதாது செய்த உதவியானது, கடலை விடப் பெரியது என்றார்.

     இவை எல்லாம், தான் பெற்ற உதவியின் பயனை, நன்றி உணர்வோடு எண்ணுபவர்க்கே விளங்கும். அவர்க்கே பல நலங்களும் பெருகும் என்பதால் இவ்வாறு அருளிச் செய்தார் நாயனார்.

திருக்குறளைக் காண்போம்...

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலினும் பெரிது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் --- இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்;

     நன்மை கடலின் பெரிது --- அதன் நன்மை கடலினும் பெரிது ஆம்.

      (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

ஆரியன் அவனை நோக்கி,
     ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்;
     கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், “செய்கை
     ஊதியம் பிடித்தும் என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு
     இயற்றுமோ, வையம்? என்றான்.   ---  கம்பராமாயணம், நாகபாசப் படலம்.

இதன் பதவுரை ---

     ஆரியன் --- இராமபிரான்;  அவனை நோக்கி --- அந்தக்  கருடனைப் பார்த்து;  ஆர் உயிர் உதவி ---  (நாகக் கணையால்  விழுந்து இறந்தவர்களுக்கு) அருமையான உயிரைத் தந்து உதவி;  யாதும் காரியம் இல்லாமல் போனான் --- (நம்மிடத்தில்) எந்தக்  காரியத்தையும் (கைம்மாறாகப்) பெறாமல் போனான்; கருணையோர் கடமை ஈதால் --- அருளுடையவர்களுடைய    செய்கை இதுதான் (போலும்);   பேர் இயலாளர் --- பெருந்தன்மை உடையவர்கள்; செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் --- செய்யும் செயலுக்குப் பயன் பெறுவோம் என்று எண்ணமாட்டார்கள்;   (இஃது எவ்வாறு எனின்) வையம் --- இவ்வுலகில் வாழ்பவர்கள்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ --- மழை (தங்களுக்கு)   உதவுதலை நோக்கி, அதற்குக் கைம்மாறு செய்ய வல்லமை   உடையவர்கள் ஆள்வார்களோ?  என்றான் --- என்று கூறினான்.
 
     கைம்மாறு கருதாது நாகக் கணையால் விழுந்து கிடந்தவர்களை உயிர்ப்பித்துக் காரியம் இல்லான் போன, கருடனது செயல், உலகத்தவர் எவ்வித் கைம்மாறு செய்யாத இடத்தும், அவர்களுக்குப் பெய்து உதவும் மழையின் செயல் போன்றது என்றார். பயன் கருதாது செய்த உதவியின் தன்மை பற்றிச் சொல்லப்பட்டது.


கைம்மாறு உகவாமல், கற்று அறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம்செய்வர், - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.   --- நன்னெறி.

இதன் பொருள் ---

     முளைக்கின்ற பல்லும் கடினமான உணவுப் பொருள்களை மென்று கொடுத்து,  முன்பே உள்ள நாவிற்கு இனிய சுவையைத் தரும். அதுபோல, கற்றறிந்தோர் கைம்மாறு எதையும் கருதாமல், உடைம்பை வருத்தித் தம்மால் இயன்ற உதவியைத் தாமே பிறருக்குச் செய்வர்.

மக்கள்தம் பொறையைத் தாங்கு
     மகிக்குமன் னாரைக் காக்க
மிக்கநீர் பொழியா நின்ற
     விண்முகி லினுக்குஞ் செய்யத்
தக்க ஓர் எதிர் நன்று உண்டோ?
     சமயத்து ஓர் பயனும் வேண்டாது
ஒக்கவே செய்த நன்றி
     உலகினும் பெரிதா மாதோ.   --- நீதிநூல்.

இதன் பொருள் ---

     மக்கள் முதலிய உயிர்களை எல்லாம் சுமக்கும் நிலத்திற்கும், நீரை வழங்கி நிலைப்பிப்பதாகிய காத்தலைச் செய்யும் மழைக்கும் செய்வதற்கு இயன்ற கைம்மாறு நம்மிடத்து என்ன இருக்கின்றது? ஏதும் இல்லை. உற்றகாலத்து எவ்வகைப் பயனையும் நாடாது மனமொத்துச் செய்த நன்மை `ஞாலத்தினும் மாணப் பெரிதாம்.

     பயன் கருதாது செய்த உதவியின் தன்மை பற்றிச் சொல்லப்பட்டது.

1 comment:

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...