015. பிறனில் விழையாமை - 02. அறன்கடை





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 15 - பிறனில் விழையாமை

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், "காமம் காரணமாக, பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும், பிறனுடைய மனையாளை விரும்பி, அந்த வீட்டின் வாயிலில் போய் நின்றவரைப் போல மூடர் இல்லை" என்கின்றது.

     பரத்தையர், இழிந்த குலத்தைச் சேர்ந்த மகளிர் ஆகியவரோடு கூடி இன்பம் அனுபவிப்பவர் பொருளையும் இழந்து, அறத்தின் பயனையும் இழப்பர். பிறன் மனையாளிடத்து விருப்பம் கொண்டு செல்பவர் அறத்தையும் பொருளையும் இழந்து நிற்பதோடு, அச்சத்தில் தாம் விரும்பிய இன்பத்தையும் இழந்து நிற்பர். எனவே, இவர் பேதையர் உள்ளும் பேதையர் ஆவர்.

திருக்குறளைக் காண்போம்...

அறன்கடை நின்றார் உள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.                      

         'அறன்கடை' நின்றாருள் எல்லாம் - காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும்; பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்- பிறன் இல்லாளைக் காதலித்து, அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையார் இல்லை.    

         (அறத்தின் நீக்கப்பட்டமையின் அறன்கடை என்றார். அறன்கடை நின்ற பெண்வழிச் செல்வாரும், வரைவின் மகளிரோடும் இழிகுல மகளிரோடும் கூடி இன்பம் நுகர்வாரும் போல அறமும் பொருளும் இழத்தலே அன்றிப், பிறன்கடை நின்றார் அச்சத்தால் தாம் கருதிய இன்பமும் இழக்கின்றார் ஆகலின், 'பேதையார் இல்' என்றார், எனவே இன்பமும் இல்லை என்பது பெறப்பட்டது.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....


ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்,
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     அறம் முதலிய நான்கினுக்கும் உறுதுணையாய் அமைந்த மனைவி தன் இல்லத்தில் இருக்க, அவளை விடுத்துப் பிறன் தனது இல்லத்துள் வைத்துப் பாதுகாக்கின்ற மனைவியைக் கூடுதற்கு விரும்புகின்ற, எருதுபோலும் மாந்தரது தன்மை, தனது தோட்டத்தில் காய்த்துக் கனிந்துள்ள பலாப் பழத்தை உண்ண விரும்பாமல், அயலான் புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழத்தை உண்பதற்குக் களவினை மேற்கொண்டு துன்புறுந்தன்மை போல்வதாம்.

         குறிப்புரை : ஆத்தம் - துணையாக நம்புதற்கு உரிய தகுதி. இஃது, `ஆப்தம்` என்னும் வடசொல்லின் திரிபு. இனி இதனை, `யாத்த` என்பதன் மரூஉவாகக் கொண்டு, `கட்டிய மனைவி` என்று உரைப்பாரும் உளர். பிறன்மனை நயத்தல், காமத்தோடு, `களவு` என்னும் குற்றமுமாம் என்றற்கு, ``காத்த மனையாள்`` என்றார். இவற்றால் மக்கட்குரிய நெறிமுறை இலராதல் பற்றிப் பிறன்மனை நயக்கும் பேதையரை `எருது போல்பவர்` என இழித்துக் கூறினார். காய்ச்ச, `காய்த்த` என்பதன் போலி `இயற்கையாய்ப் பழுத்த பழம்` என்றற்கு, `கனிந்த` என்னாது ``காய்த்த`` என்றார். இயற்கையானன்றி இடையே பறித்துச் செயற்கையாற் பழுக்க வைக்கும் பழம் சுவையுடைத்தாகாமை அறிக. `உண்ணமாட்டாமை, மடமையான் ஆயது` என்க. `பேதைமையாவது, ஏதம் கொண்டு ஊதியம் போக விடலே` (திருக்குறள் 831) ஆதல் உணர்க.

         தனது தோட்டத்தில் உள்ள பலாப்பழம் அச்சமும், இளி வரவும் இன்றி நாவாரவும், வயிறாரவும் உண்ணப்படுமாகலின் அதனை, அத்தன்மையளாய தனது மனையாட்கும், பிறனது புழைக்கடையில் உள்ள ஈச்சம்பழம் முள்ளுடைதாய அம் மரத்து இயல்பானும், பிறனுடையதாகலானும் அச்சமும், இளிவரவும் தருவதாய் உண்ணப் போதாத சிற்றுணவாம் ஆதலின், அதனை, அத்தன்மையளாய பிறன் மனையாட்கும் உவமை கூறினார்.

         அதனானே, பிறன்மனை நயப்பார் அறத்தையேயன்றித் தாம் கருதிய இன்பமும் பெறாமை பெறப்பட்டது.

புக்க இடத்து அச்சம், போதரும் போது அச்சம்,
துய்க்கும் இடத்து அச்சம், தோன்றாமல் காப்பு அச்சம்,
எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்?.      ---  நாலடியார்.             

இதன் பதவுரை ---

     புக்க இடத்து அச்சம் --- புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் --- திரும்பி வரும்போது அச்சம் ; துய்க்கும் இடத்து அச்சம் --- நுகரும்போது அச்சம், தோன்றாமல் காப்பு அச்சம் --- பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் --- இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும் ; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் --- ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்?

     பிறன் மனைவியை விரும்பி ஒழுகுதலில் முழுதும் அச்சமே அல்லாமல் இன்பம் இல்லையே.


அச்சம் பெரிதால், அதற்கு இன்பம் சிற்றளவால்,
நிச்சம் நினையுங்கால் கோக் கொலையால், --- நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாண் உடையார்.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிது ஆதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் --- அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவே, ஆதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் --- நாடோறும் நினைக்கும் இடத்து அதற்கு ஏற்ற தண்டனை உண்மையாக அரசனது கொலைக் கட்டளை ஆதலாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் --- நாடோறும் அழல்வாய் நரகுக்கே உருவாகிய வினையைச் செயலாதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாணுடையார் --- பழிபாவங்கட்கு அஞ்சுதல் உடையார் பிறன் மனைவியை விரும்பாமல் இருப்பாராக !

         பிறன் மனைவியை விரும்பி ஒழுகுவார்க்கு எந்நாளும் இருமையிலும் துன்பமேயாகும்.


காணின் குடிப்பழியாம், கைஉறின் கால்குறையும்
ஆணின்மை செய்யும்கால் அச்சமாம், – நீள்நிரயத்
துன்பம் பயக்குமால், துச்சாரி, நீ கண்ட
இன்பம் எனக்கு எனைத்தால் கூறு.      --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     காணின் குடிப்பழியாம் --- பிறர் கண்டு விட்டால் குடிக்குப் பழி வந்து சேரும்; கையுறின் கால் குறையும் --- கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் --- ஆண்மை இல்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் --- நெடுங்காலம் நரகத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி --- தீயொழுக்கம் உடையவனே!    நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு --- நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல்.

         பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலும் இன்றி இன்பம் சிறிதும் இல்லை.

கொல்யானைக்கு ஓடும் குணம் இலியும், ல்லில்
பிறன்கடை நின்று ஒழுகுவானும், - மறந்தெரியாது
ஆடும்பாம்பு ஆட்டும் அறிவிலியும், இம்மூவர்
நாடுங்கால் தூங்கு பவர்.       ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     கொல் யானைக்கு ஓடும் குணம் இலியும் --- கொலை செய்வதாகிய (மத) யானைக்கு (பின்வாங்கி) ஓடுகின்ற குணம் இல்லாத வீரனும்; எல்லில் பிறன் கடை நின்று ஒழுகுவானும் --- இரவிலே  பிறன் வீட்டு வாயிலில் (அவன் மனையாளை விரும்பி) (தனக்கு வாய்ப்பான சமயம் பார்த்து) நடப்பானும்; ஆடும் பாம்பு மறம் தெரியாது ஆட்டும் அறிவிலியும் - ஆடும் தொழில் உள்ள பாம்பை, அது தனக்கு நன்றி செய்தார்க்கும் தீமையைச் செய்கிற கொடுமையைத் தெரியாமல், ஆட்டுகின்ற அறிவில்லாதவனும்; இ மூவர் நாடுங்கால் தூங்குபவர் --- இம் மூவரும்  ஆராயுமிடத்து (பழி முதலியவற்றினின்றும்) விரைவில் கெடுபவரே.


தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தாள்ஊன்றி, - எய்த்தும்
அறங்கடையில் செல்லார், பிறன்பொருளும் வெஃகார்,
புறங்கடையது ஆகும் பொருள்.   ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே --- தத்தமக்குரிய நிலைமையிலும் குலவொழுக்கத்திலும் வழுவாது, ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி --- இயைந்த முறையில் முயற்சி செய்து, எய்த்தும் அறம் கடையில் செல்லார் --- மறந்தும் பாவநெறியில் செல்லாமல், பிறன் பொருளும் வெஃகார் --- பிறனுடைய பொருளையும் விரும்பாதவருடைய, புறங்கடையதாகும் பொருள் --- தலைவாயிலிடத்தே பொருள் தானே வந்து கைகூடும்.


அறனும், அறன் அறிந்த செய்கையும், சான்றோர்
திறன் உடையன் என்று உரைக்கும் தேசும், --- பிறனில்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்
இழுக்காம் ஒருங்கே இவை. ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறன் இல் பிழைத்தான் என --- அயலான் மனைவியை விரும்பினான் என்று, பிறரால் பேசப்படுமேல் --- மற்றவர்களால் ஒருவன் பேசப்படுவனாயின், அறனும் --- அவன் மேற்கொண்ட அறமும், அறன் அறிந்த செய்கையும் --- அவ்வறத்தினுக்கு ஏற்ற செய்கையும், சான்றோர் திறன் உடையன் என்று உரைக்கும் தேசும் --- பெரியோர் பலரும் நெறியுடையன் என்று சொல்லும் புகழும் ஆகிய, இவை ஒருங்கே --- இவை முழுவதும், இழுக்கு ஆம் --- பழியாம்.


'நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார், நடை அல்லா
வாரம் கொண்டார், மற்று ஒருவற்காய் மனை வாழும்
தாரம் கொண்டார், என்ற இவர்தம்மைத் தருமம்தான்
ஈரும் கண்டாய்; கண்டகர் உய்ந்தார் எவர்? ஐயா!
                                              ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     'நாரம் கொண்டார் --- அன்பு பூண்டாரது; நாடு கவர்ந்தார் --- நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும்; நடை அல்லா --- நீதி நெறிக்குப் பொருந்தாத; வாரம் கொண்டார் --- வரிப் பொருளை(க் குடிமக்களை வருத்திப்) பெற்றவர்களும்; மற்றொருவற்காய் --- பிறர் ஒருவருக்கு உரிமையாய்; மனை வாழும் தாரம் கொண்டார் --- அவர் இல்லத்திலே வாழும் மனைவியை வசப்படுத்திக் கொண்டவரும்; என்று இவர் தம்மை --- எனப்படும் இவர்களை; தருமம் தான் --- அறக் கடவுள்தானே; ஈரும் கண்டாய் --- (சின்னா பின்னமாக்கி) அழித்து விடுவான் என அறிவாய்; ஐயா-- - தலைவனே; கண்டகர் உய்ந்தார் எவர் --- கொடியவருள் எவர்
தப்பிப் பிழைத்துள்ளார்?' (எவரும் இல்லை).

     பிறன் மனை விழைவோர். அன்புடையோரின் நாடு கவர்ந்தோர், கொடிய வரி வாங்குவோர் மூவரையும் கண்டகர் என ஓரினப்படுத்தினான். கண்டகர் - முள் போல் பிறரைத் துன்புறுத்துவோர்.

'அந்தரம் உற்றான், அகலிகை பொற்பால் அழிவுற்றான்,
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார்?
செந்திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்;
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய்; மதி அற்றாய்.
                                           ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப்படலம்.

இதன் பதவுரை ---

     அந்தரம் உற்றான் --- வானுலகுக்கு உரிய இந்திரன்; அகலிகை பொற்பால் அழிவுற்றான் --- அகலிகை அழகினால் பெருமை அழிந்தான்; இந்திரன் ஒப்பார் --- அவ்விந்திரனுக்கு ஒப்பானவர்கள்; எத்தனையோர் தாம் --- எத்தனையோ பேர்கள்; இழிவுற்றார் --- (பிறன் மனை நயத்தலால்) தீமையுற்றவர்கள்; மதி அற்றாய் --- அறிவு இழந்தவனே; செந்திரு ஒப்பார் --- திருமகளுக்கு நிகரானவர்கள்; எத்தனையோர் நின்திரு உண்பார் --- எத்தனையோ பெண்கள் (விரும்பி) உன் செல்வத்தை
அனுபவிக்கின்றார்கள்; (அவ்வாறிருக்க); மந்திரம் அற்றார் ---அறிவுரை கூறும் நல்லமைச்சரைப் பெறாதார்; உற்றது உரைத்தாய் --- பேசத்தக்க ஒன்றை (நீயும்) பேசுகின்றனையே.

     இந்திரன் அகலிகை கதை பால காண்டத்துள் அகலிகைப் படலத்தில் எடுத்துரைத்தார். உன்னை விரும்புவோர் பலரிருக்க, அழிவும் இழிவும் தருமாறு பிறன் மனை நயத்தல் ஏன் என மாரீசன் வினவினான். நல்லுரை கூறும் அமைச்சர் உனக்கு வாய்க்கவில்லையா? அன்றி அமைச்சர்களின் அறிவுரையை நீ மதிக்கவில்லையோ என்று கேளாமல் கேட்கிறான் மாமன்
மாரீசன்.
             
'ஓவியம் அமைந்த நகர் தீ உண, உளைந்தாய்,
"கோ-இயல் அழிந்தது" என; வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து, சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?
                                 ---  கம்பராமாயணம், இராவணன் மந்திரப்படலம்.

இதன் பதவுரை ---

     கோ இயல் அழிந்தது என --- நமது  ஆட்சியின் தன்மை அழிந்து விட்டது என்று; ஓவியம் அமைந்த நகர் ---  சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட இலங்கை  மாநகரத்தை; தீ  உண உளைந்தாய் --- (அனுமன்  வைத்த) தீ உண்டமைக்கு  மனம் வருந்தினாய்; வேறு ஒரு குலத்தோன் --- அரக்கர் இனம் அல்லாத வேறு ஒரு குலத்தவனான இராமனுக்கு உரிய; தேவியை நயந்து ---  மனைவியான சீதையை விரும்பி; சிறை   வைத்த செயல் நன்றோ --- (கவர்ந்து வந்து) சிறையில் வைத்த உனது செயல் நல்லதோ? பாவியர் உறும் பழி --- பாவம் செய்தவர் அடையும் பழிகளிலே; இதின்  பழியும் உண்டோ ---  இதை விடவும் கொடிய பழி வேறு  உள்ளதோ?

'ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம கொற்றம்!
                                     ---  கம்பராமாயணம், இராவணன் மந்திரப்படலம்.

இதன் பதவுரை ---

     ஆசு இல் பரதாரம் அவை --- ஒரு குற்றமும் இல்லாத வேறு ஒருவன் மனைவியை; அஞ்சிறை  அடைப்பேம் ---  அழகிய சிறையிலே அடைத்து  வைப்போம்; மாசு இல் புகழ்   காதல் உறுவேம் ---  குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்; வளமை கூர --- பெருமை மிக; பேசுவது மானம் --- பேசுவதோ வீர உரைகள்; இடைபேணுவது காமம் --- அதற்கிடையிலே  விரும்புவது  காமம்; கூசுவது மானுடரை --- அஞ்சுவது மானிடர்களைப் பார்த்து; நம் கொற்றம் நன்று --- நமது
வெற்றி நன்றாய் இருக்கிறது.

அறம்கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்,
பிறன்கடைநின்றவன், பிறரைச் சீறினோன்,
மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன். 
                                              ---  கம்பராமாயணம், பள்ளிபடை படலம்.

 இதன் பதவுரை ---

      அறம் கெட முயன்றவன் --- (பிறர் செய்த) அறச் செயல் கெடும் படி முயற்சி செய்தவன்; அருள் இல் நெஞ்சினன் --- இரக்கம் அற்ற மனம் உடையவன்;  பிறன் கடை நின்றவன் --- தொழில் செய்து  பொருள் தேடாது அயலார் வீட்டு வாயிற்படியில் எளிவரவாய் நின்றவன்; பிறரைச் சீறினோன் --- (ஒரு காரணமும் இல்லாமல்) பிறரைக் கோபித்துக் கெடுதி செய்தவன்; மறம் கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் --- இரக்கமற்ற மறக் கொடுமை கொண்டு நிலைத்த உயிர்களைக் கொன்று அதனால் தன் வாழ்க்கை நடத்தியவன்; துறந்த மாதவர்க்கு அருந்துயரம் சூழ்ந்துளோன் --- துறவிகளாய பெரிய முனிவர்களுக்குப் பொறுத்தற்கரிய துயரத்தை வேண்டுமென்றே செய்தவன்......

     பிறன்கடை நின்றவன் - பிறன் மனைவியை நயந்து அந்த வீட்டு வாயிலின் அருகே சென்று நின்றவன் எனவும் உரைக்கலாம். அறன் கடைநின்றாருள் எல்லாம் பிறள்கடை, நின்றாரிற் பேதையார்இல் (குறள். 142) என்னும் குறளையும் கருதுக.


அறங்கடை நின்றார் உள்ளும்
         ஆற்றவும் கடையன் ஆகிப்
புறங்கடை நின்றான் செய்த
         புலைமைதன் பதிக்குந் தேற்றாள்;
மறந்தவிர் கற்பினள் தன்
         மனம்பொதிந்து உயிர்கள் தோறும்
நிறைந்த நான் மாடக் கூடல்
         நிமலனை நினைந்து நொந்தாள்.  ---  தி.வி. புராணம், அங்கம் வெட்டின படலம்.

இதன் பதவுரை ---

     அறங்கடை நின்றாருள்ளும் ஆற்றவும் கடையனாகி --- பாவ நெறியில் நின்றார் எல்லாருள்ளும் மிகவுங் கடையனாகி, புறங்கடை நின்றான் செய்த புலைமை --- மனையின் வாயிற் புறத்தே வந்து நின்ற அக் கொடியோன் செய்த புலைத் தன்மையை, தன் பதிக்கும் தேற்றாள் --- தன் நாயகனுக்குந் தெரிவியாது, மறம் தவிர் கற்பினாள் --- மறம் நீங்கிய கற்பினையுடையாள், மனம் பொதிந்து --- தன் மனத்தின் கண்ணே மூடி வைத்து, உயிர்கள் தோறும் நிறைந்த நான்மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள் --- உயிர்கள் தோறும் நிறைந்துள்ள கூடலம்பதியில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளை நினைந்து வருந்தினாள்.

     அறங்கடை - பாவம்;

"அறங்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்"

என்னும் வாயுறை வாழ்த்து இங்கு நோக்கற்பாலது. புலைமை - கீழ்மை. மறந்தவிர் கற்பினாள் - அறக்கற்புடையாள். அறக் கற்பினளாகலின் பதிக்கும் தெரிவியாது கூடல் நிமலனை நினைந்து நொந்தாள் என்க.                     


தாதகம் நிறைந்த கொன்றைச்
         சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்குங் கூடல்
         பகவன் எவ் வுயிர்க்குந் தானே
போதகன் ஆகித் தோற்றும்
         புண்ணியன் புலைஞன் செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம்
         செய்வதற்கு உள்ளம் கொண்டான்.  ---  தி.வி. புராணம், அங்கம் வெட்டின படலம்.

இதன் பதவுரை ---

     அகம் தாது நிறைந்த கொன்றைச் சடையவன் --- உள்ளே மகரந்த நிறைந்தத கொன்றை மலர் மாலையை அணிந்த சடையை உடையவனும், புறம்பு செய்த பாதகம் அறுக்கும் கூடல் பகவன் --- வேற்று நாட்டிற் செய்த மாபாதகத்தையும் போக்கும் மதுரைப் பிரானும், எவ்வுயிர்க்கும் தானே போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் --- எவ்வகை உயிர்களுக்குந் தானே உணர்த்துவோனாகி அறிவிக்கும் அறவடிவினனும் ஆகிய சோமசுந்தரக் கடவுள், புலைஞன் செய்த தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான் --- நீசனாகிய சித்தன் செய்த தீங்கினை மனத்தினுணர்ந்து அவனைத் தண்டிப்பதற்குத் திருவுள்ளங் கொண்டருளினான்.


 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...