009. விருந்தோம்பல் - 04. அகனமர்ந்து செய்யாள்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்

     அறத்துப்பாலில்,  "விருந்தோம்பல்" என்னும் இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "இன்முகத்தோடு விருந்தினரை உபசரிப்பவனுடைய இல்லத்தில் திருமகள் நீங்காமல் இருந்து வாழ்வாள்" என்கின்றது.

திருக்குறளைக் கா ண்போம்....

அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல். 

இதற்குப் பரிமேலழகர் உரை ---     

     செய்யாள் அகன் அமர்ந்து உறையும் --- திருமகள் மனம் மகிழ்ந்து வாழா நிற்கும்;

     முகன் அமர்ந்து நல் விருந்து ஓம்புவான் இல் --- முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.

     தன்னால் வழங்கபட்ட செல்வமானது நல்வழியில் பயன்படுத்தப்படுவதால், திருமகள் மனம் மகிழ்வாள் என்றார்.

     நல் விருந்து --- விருந்தினர்க்குத் தகுதி: ஞானத்தினாலும் ஒழுக்கத்தினாலும் உயர்தல்.

     இதனால் பொருள் வளர்வதற்குக் காரணம் கூறப்பட்டது.

     இதனை வலியுறுத்தும் திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரப் பாடல் ஒன்றினைக் காண்போம்..

மொய் ஆர் முதுகுன்றில் ஐயா என வல்லார்
பொய்யார் இரவோர்க்கு, செய்யாள் அணியாளே.  ---  திருஞானசம்பந்தர்.

இப் பாடலின் பொழிப்புரை ---

      அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின், இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.

பின்வரும் கம்பராமாயணப் பாடலையும் காணலாம்....

"பெருந் தடங்கண் பிறை துலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்த வந்தவர்க்கு ஈதலும், வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே."   ---  கம்பராமாயணம், காட்சிப் படலம்.

இதன் பொருள் ---

     மிக அகன்ற விழிகளையும், பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும் உடைய அந்நாட்டுப் பெண்கள் அனைவருக்கும், நிலைபெற்ற செல்வமும், நீங்காத கல்வியும் நிரம்ப இருந்தன. ஆதலால், வறுமைத் துன்பத்தால் தம்மை வந்து அடைந்தவர்களுக்குக் கொடை வழங்குவதும், வந்த விருந்தினரை உபசரிப்பதும் ஆகிய செயல்கள் அல்லாமல், நாள்தோறும் அவர்கள் செய்கின்ற செயல்கள் வேறு எவையும் இல்லை.

     பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் நிறைந்து உள்ளதால், தம்மிடத்து உள்ள பொருளை, இல்லை என்று வந்தோர்க்கு உதவிட வேண்டும் என்னும் சிந்தை இருப்பது இயல்பே. அவ்வாறு உதவி புரிவதால், அவர்கள் செல்வமானது நாளும் வளர்வதும் இயல்பே

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...