008. அன்புடைமை - 06. அறத்திற்கே அன்பு





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

எட்டாம் அதிகாரம் - அன்புடைமை

     இந்த அதிகாரத்தில் வரும்,  ஆறாம் திருக்குறள், "அன்பு என்னும் பண்பு அறத்திற்கு மட்டுமே துணையாக நிற்கும் என்பர் அறியாதவர். ஆனால் பகையை நீக்குவதற்கும் அதுவே துணையாக விளங்கி நிற்கும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்.....

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்,
மறத்திற்கும் அஃதே துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் --- அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்;

     மறத்திற்கும் அஃதே துணை --- ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

      (ஒருவன் செய்த பகைமை பற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின், மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

     இத் திருக்குறள் கருத்தைப் பின்வரும் பாடல்கள் விளக்கி நிற்பது காணலாம்....

தந்தையாய் பெற்ற தத்தம்
         புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின் உறுக்கி
         வளாரினால் அடித்து தீய
பந்தமும் இடுவர்; எல்லாம்
         பார்த்திடின் பரிவே ஆகும்;
இந்த நீர் முறைமை யன்றோ-
         ஈசனார் முனிவும் என்றும்? --- சிவஞானசித்தியார்.

இதன் பொருள் ---

     தந்தையும் தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள் தம் சொல்படி நடக்கவில்லை எனின் அம்மக்களைச் சொல்லால் கடிந்தும், வளாரினால் அடித்தும், அதற்கும் பணியாத போது கட்டி வைத்து அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப்பார்வைக்குச் சினத்தால் ஒறுப்பது போல் தோன்றினாலும் ஆய்ந்து பார்க்கும் போது தாய்தந்தையர்களின் இச் செயல்கள்யாவும் தம் மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை ஒறுப்பது என்றென்றும் அவன் அருளால் விளைந்ததே.


மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப
ஆயிரம் காக்கைக்கோர் கல்.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     மறுமனத்தன் அல்லாத --- குற்றமுடைய மனத்தனல்லாத மனதையும், மா நலத்த --- சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய, வேந்தன் --- அரசன், உறுமனத்தன் ஆகி ஒழுகின் --- யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின், செறும் மனத்தார் --- வெல்லும் மனதுடைய அரசர்கள், பாயிரம் கூறி படை தொக்கால் --- வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால், என் செய்ப --- அப்படைகள் என்ன செய்யும்?, ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் --- ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல அவர் தோன்றிய துணையானே பறந்து செல்வர்.

      அரசர்கள் அன்பு ஒன்றே கொண்டு மறத்தை வெல்லலாம்.

     'அறத்திற்கே அன்புசார்பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை' என்பதே இது.

      'ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்' என்பது பழமொழி.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...