013. அடக்கம் உடைமை - 05. எல்லார்க்கும் நன்றாம்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பெருமிதம் கொள்ளாமல் அடங்கி இருத்தல் எல்லோர்க்கும் நன்மையைத் தரும்; அவர் எல்லாருள்ளும் செல்வம் உடைவர்களுக்கு, அந்தப் பணிவானது, வேறு ஒரு செல்வமாகத் தோன்றும் சிறப்பினைத் தரும்" என்கின்றது.

     கல்வி உடையார், குடிப்பிறப்பு உடையார், செல்வம் உடையார் என்னும் மூவகையினருக்கும் அடக்கம் என்னும் குணம் பொதுவானது என்றாலும், பொருள் உடையார் இடத்தில் செருக்கு மிகுந்து இருக்கும். அவரிடத்திலும் அடக்கம் இருக்குமானால், அது கல்வி உடையாரின் அடக்கத்திலும், குடிப்பிறப்பு உடையாரின் அடக்கத்திலும் மேம்பட்டு விளங்கும்.

திருக்குறளைக் காண்போம்....

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பணிதல் எல்லார்க்கும் நன்றாம் --- பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்;

     அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து --- அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து.

      (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்,

ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியைக்கண்டு,
ஏனை அரன் அன்பர் என்றால் என்படுமோ, --- மாநிலத்துள்
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இதன் பொருள் ---

அரசு --- சேரமான் பெருமாள் நாயனார்.
போலியைக் கண்டு --- முழுநீறு பூசிய சிவனடியார் போல் தோன்றிய வண்ணானைக்      கண்டு. 
இறைஞ்சும் --- வணங்குவார்.

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு

     சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேல் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினால் சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்து உடையர் ஆயினார். தமக்கு உரிய அரசியல் தொழிலை விரும்பாமல் திரு அஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வாழ்வதை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்ந்த அப்பெருந்தகையார், நாள்தோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறு அணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுக்கும் இட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து, இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்வதற்காகக் கானகம் சென்றான்.

    இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள், சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திரு அஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திரு அஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி "இச்சேர நாட்டின் ஆட்சி உரிமை தங்களுக்கு உரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்" என வேண்டினர். பெருமாக்கோதையார் "மென்மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவதொண்டுக்கு இடையூறான ஆட்சி ரிமையை ஏற்றுக்கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள். இச் சிவத்தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தை உணர்ந்து நடப்பேன்" எனத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத் திருக்கோயிலில் புகுந்து இறைவன் திருமுன்னர் பணிந்து நின்றார். இறைவனது திருவருளால், தமக்குரிய அரசுரிமையில் வழுவாது ஆட்சிபுரிந்த இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடும் இயல்பும், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்து உணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத வலிமையும், கைம்மாறு கருதாது இரவலர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும், உயர் திணை மக்களும் கழறிய (மிருகங்களின்) சொற்பொருளை உய்த்துணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்கு "கழறிற்றறிவார்" என்பது காரணப்பெயர் ஆயிற்று.

    உலகுயிர்கள் கழறுச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர்மண் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால், உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து "அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்" என்றான். அதுகேட்ட சேரர்பிரான் "அடியேன் அடிச்சேரன், காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக" என அவனுக்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சர் அனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து, பெரியபுராணத்தில் வரும் குலச்சிறை நாயனாரின் வரலாற்றினை வைத்துப் பாடிய பாடல்...                   

நலச்சிறைநீர் வேணியர் நல்லடியார் யார்க்கும்
குலச்சிறையார் தாம்பணிதல் குன்றார் - இலர்க்குஇகழார்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.             

இதன் பொருள் ---

     பாண்டிய நாட்டிலே மணமேற்குடியிலே குலச்சிறை நாயனார் என்பவர் அவதரித்தார். விபூதி உருத்திராக்கம் தரித்தவர்களும் திரு ஐந்தெழுத்தை இடையறாது ஓதுகின்றவர்களும் ஆகிய சிவனடியார்களை வணங்கித் துதித்து அவர்க்கு வேண்டும் உதவிகளை எல்லாம் செய்யும் பணி பூண்டவர். குணம் இலராயினும் அவரை இகழ்ச்சி செய்யாதவர்.  பாண்டிய அரசராகிய நின்றசீர்நெடுமாறனுக்கு முதல் மந்திரியாக இருந்து அரசு புரிவித்தார். பரசமய கோளரியாகிய ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தரை வணங்கிப் போற்றி, அவரால் தேவாரத் திருப்பதிகத்திலே வைத்துப் பாராட்டப் பெற்ற சிறப்பினையும் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையிலே "பெரு நம்பி" என்று வியந்து உரைக்கப்பட்டார். 

நலம்இலர் ஆக நலம் அதுஉண் டாக
         நாடவர் நாடுஅறி கின்ற
குலம்இலர் ஆகக் குலம் அதுஉண் டாகத்
         தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூஇலை வேலன்
         கரிஉரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல்
         ஆலவாய் ஆவதும் இதுவே. --- திருஞானசம்பந்தர்.

         பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவ் எல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாம் சிறப்பினை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.

         நலம் --- அழகு. நீர் என்றது கங்காநதியினை. வேணி --- சடை. இலர்க்கு --- குணம் முதலியன இல்லாதவர்களையும்.  பணிதல் --- அடங்குதல். தகைத்து --- சிறப்பினை உடைத்து.
                                                              
     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...


நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்
    செவிடரா, நோய் இல்லாத
வாக்கு இருந்தும் மூகையரா, மதி இருந்தும்
    இல்லாரா, வளருங் கைகால்
போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்
    இல்லாத பூட்சியாரா
ஆக்கும் இந்தத் தனம் அதனை, ஆக்கம்என
    நினைத்தனை நீ அகக் குரங்கே.      ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

     நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க், குற்றமற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்களிருந்தும் முடவராய், உயிரிருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீய பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைத்தனை.

         நோக்கு --- கண். அந்தகர் --- குருடர். மூகை --- ஊமை. பூட்சி --- உடல். அகம் --- மனம்; செருக்கு; நெஞ்சம்.


அறிவு மிகப்பெருக்கி, ஆங்காரம் நீக்கி,
பொறிஐந்தும் வெல்லும்வாய் போற்றி,--செறிவினால்
மன்னுயிர் ஓம்பும் தகைத்தே காண், நன்ஞானம்
தன்னை உயக் கொள்வது.   --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     நன்ஞானம் தன்னை உயக்கொள்வது --- நன்ஞானம் தன்னை உடையவனுக்கு உய்யும் நெறியை அருளுவதாவது, அறிவு மிகப் பெருக்கி --- அறிவினை மிகப் பெருகுமாறு செய்து, ஆங்காரம் நீக்கி --- ஆங்காரத்தினைப் போக்கி, பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி --- ஐம்பொறிகளையும் வெல்லும் வழியினை வளர்த்து, செறிவினான் --- அடக்கத்தோடு,மன்னுயிர் ஓம்பும் தகைத்து --- நிலைபெற்ற உயிர்களைத் துன்பம் அணுகா வகை காக்கும் தன்மையை உடையவன் ஆக்குவதேயாகும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...