010. இனியவை கூறல் - 07. நயன் ஈன்று நன்றி





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தில், ஏழாவதாக வரும் திருக்குறள், "நல்ல பயனைத் தந்து, அன்பு என்னும் பண்பில் சிறிதும் நீங்காத சொல்லானது, இனிமை தந்து நல்லன செய்யும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்.....

நயன் ஈன்று நன்றி பயக்கும், பயன் ஈன்று
பண்பின் தலைப் பிரியார் சொல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நயன் ஈன்று நன்றி பயக்கும் --- ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்:

     பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.

     (நீதி: உலகத்தோடு பொருந்துதல்.'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் என்பார் பாடிய, நீதிசூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா"வில் இருந்து ஒரு பாடல்...
  
வன்சமர்நட் பால்வென்று மாநிலம் ஆளத்தருமன்
இன்சொல்லால் பெற்றான், இரங்கேசா! - பொன்செய்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பிற் றலைப்பிரியாச் சொல்.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!

     தருமன் --- தருமராசன், வன் சமர் --- வலிய பாரதப் போரை, நட்பால் வென்று --- பல்லரசர்களோடும் செய்திருந்த நேசத்தால் வென்று, இன் சொல்லால் --- அவர்களோடும் பேசிய இன்சொற்களால், மாநிலம் ஆளப் பெற்றான் --- இப் பரத கண்டத்தை அரசாட்சி செய்யும் பேறு பெற்றான், (ஆகையால் இது,) பயன் ஈன்று --- பிறர்க்குப் பிரயோசனம் செய்து, பண்பின் தலைப் பிரியாத சொல் --- அந் நற்பிரயோசனமாகிய குணத்தினின்றும் வேறாகாத வார்த்தை, பொன் செய் --- செல்வத்தைத் தருகின்ற, நயன் ஈன்று --- இலாபத்தைத் தந்து, நன்றி பயக்கும் --- மற்று எல்லா நன்மைகளையும் உண்டாக்கும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை ---  பையச் சென்றால் வையம் தாங்கும்.

         விளக்கவுரை ---  தருமராசன் இந்திரப் பிரத்தத்தில் இருந்து நாடாண்ட பொழுதும், சூதில் நாடிழந்து, காடாண்ட பொழுதும், ஓரே குணமாய் ஏறுமாறு இன்றி நலவசனம் பேசி, முற்றத் துறந்த முனிவர், வேதியர், வேந்தர் முதலியவர்களோடு நட்புப் பாராட்டி, அவர்களை விருந்தேற்று உபசரித்துப் பொறுமையோடு இருந்தார். ஆகையால், அவர், இந் நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத துரியோதனனைப் பாரதப் போரில் வெகு சுளுவில் கொன்று வென்று இப் பரத கண்டத்தைப் புகழோடு ஆண்டார். 

     இத் திருக்குறளுக்கு ஒப்புமையாகப் பின்வரும் பாடல்கள் அமைந்திருத்தலைக் காண்க....
                                                                                
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை, கிளைக்குழாம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம், வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள், இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து.  --- நான்மணிக் கடிகை.     

இதன் பதவுரை ---

     வண்மை வளப்பாத்தியுள் வளரும் --- ‘ஈகை' என்னும் பயிரானது செல்வமென்னும் பாத்தியுள் விளையும்; கிளைக் குழாம் இன்சொல் குழியுள் எழூஉம் --- உறவினர் கூட்டம் இன்சொலென்னும் பாத்தியுள் செழுமையாய் வளரும்; வன்சொல் கரவு கண் இல் குழியுள் எழூஉம் --- வன்சொல்லோடு கூடிய வஞ்சனை என்னும் பயிர், - கண்ணோட்டமின்மை என்னும் பாத்தியுள் வளரா நிற்கும்; இரவு இன்மைக் குழியுள் விரைந்து எழூஉம் - ‘இரத்தல் என்னும் பயிர், வறுமையாகிய பாத்தியுள் விரைந்து வளரும்.

         ஈகையானது செல்வத்தால் உண்டாகும்; உறவினர்க்கு மகிழ்ச்சி இன்சொல்லால் உண்டாகும்; வன்சொல்லும் வஞ்சனையுள் கண்ணோடாமையால் உண்டாகும்; இரத்தல் வறுமையால் உண்டாகும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...