009. விருந்தோம்பல் - 07. இனைத்துணைத்து




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஒன்பதாம் அதிகாரம் - விருந்தோம்பல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "விருந்து ஓம்பல் ஆகிய வேள்வியின் பயன் இந்த அளவினது என்பதாக இல்லை; விருந்தினரது தகுதியின் அளவே அந்த அளவு ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ...

இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை, விருந்தின்
துணைத் துணை வேள்விப் பயன்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வேள்விப் பயன் இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை --- விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று;

     விருந்தின் துணைத்துணை --- அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.

      (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)

     விருந்து ஓம்பல் என்பதை ஒரு சிறந்த வேள்வியாக நாயனார் இங்கு காட்டினார். விருந்தினரின் தகுதியைப் பொறுத்து அதன் பயன் அமையும். தக்கவராக இருந்து விட்டால், அவர்க்குச் செய்யும் விருந்து அல்லது உதவியானது, மிகப் பெரும்பயனை நல்கும் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறியலாம்...

உறக்கும் துணையதோர் ஆலம் வித்து ஈண்டி
இறப்ப நிழல் பயந்தாங்கு --- அறப்பயனும்
தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான் சிறிதாப் போர்த்து விடும்.          --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து --- சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, ஈண்டி --- தழைத்து, இறப்ப நிழல் பயந்தாங்கு --- மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப்பயனும் --- அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தரும் பொருளும், தான் சிறிதாயினும் --- தான் அளவில் சிறியதேயானாலும், தக்கார் கைப்பட்டக்கால் --- தகுதியுடைய பெரியோர் கையிற் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்துவிடும் --- வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

         சான்றோர்க்குச் செய்யும் உதவி மிகச் சிறியதாயினும், அது பெரும்பயன் தரும்.


உறவியைப் பெரிதும் ஓம்பி
     ஒழுக்கத்தை நிறுத்தி உள்ளம்
பொறிவழிப் படர்ச்சி நீக்கிப்
     பிறர்க்கு நன்று ஆற்றிப் பொய்தீர்
நெறியினைத் தாங்கி நீங்கா
     வீட்டின்பம் விழைதல் செய்யும்
உறுதவர்க்கு ஈந்த செல்வம்
     உத்தம தானம் ஆமே.          --- மேருமந்தர புராணம்.

இதன் பதவுரை ---

     உறவியை --- ஜீவன்களை, பெரிதும் --- மிகவும், ஓம்பி --- பாதுகாத்து,  ஒழுக்கத்தை --- ஸாமாயிகாதி சாரித்திரத்த,  நிறுத்தி - தன்னிடத்திலிருத்தி, உள்ளம் --- மனமானது, பொறி வழி --- பஞ்சேந்திரிய வழிகளில்,  படர்ச்சி --- செல்வத்தை,  நீக்கி --- செல்ல ஒட்டாமல் பரிகரித்து, பிறர்க்கு --- அன்னியர்களுக்கு,  நன்றாற்றி --- நன்மையையே செய்து, பொய்தீர் --- குற்றந்தீர்ந்த,  நெறியினை  --- சன்மார்க்கமாகிற இரத்தினத் திரயத்தை,  தாங்கி --- தரித்து,  நீங்கா --- ஒருகாலும் நீங்குதலில்லாத, வீட்டின்பம் --- மோக்ஷ சௌக்கியத்தை, விழைதல் செய்யும் --- இச்சிக்கும், உறு --- பெரிதாகிய,  தவர்க்கு --- தவசையுடைய மகா முனிவரர்களுக்கு,  ஈந்த எல்லாம் --- கொடுக்கப்பட்டவைகள் எல்லாம், உத்தம தானமாம் --- உத்தம தானமாகும், எ-று.


மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என,
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன, தழைத்தது - நீத்தமே.  ---  கம்பராமாயணம், ஆற்றுப் படலம்.

இதன் பதவுரை ---

     மானம் நேர்ந்தது --- மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி --- தருமநெறி கருதி;  மனுநெறி போன --- மனுநீதிப்படி நடக்கும் தண்குடை வேந்தன் புகழ் என --- குளிர்ந்த குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்;  ஞானம் முன்னிய --- ஞான வழியை நாடுகின்ற;  நான்மறையாளர் கைத் தானம் என்ன --- நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது --- சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.

     தன் நிலையில் தாழாமையும், தெய்வத்தான் தாழ்வு வந்து உயிர் வாழாமையும் ஆம் என மானத்திற்கு விளக்கம் தந்தார் பரிமேலழகர். மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க்   குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும்,   ஓயாது தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன்  ஓங்கும்;  இவை போலச் சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓங்கும்.

     ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று.   துன்புறும் உயிர்க்குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம். ஆதலின், ‘தண் குடை என்றார். 

     நான்மறையாளர்,   வெறுமே வேதமுழக்கம் செய்வதால்   மட்டுமே தக்காராகி விடமாட்டார் என்பதை ஞானம் முன்னிய' என்ற முன் ஒட்டு விளக்கி நின்றது.அத்தகு தகுதிப்பாடு உடையாரின் கைப்பட்ட அறத்தின் பயன் நந்தாது நாளும் ஓங்கும். இதனை,  அறப்பயனுன் தான் சிறிதாயினும் தக்கார் கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்துவிடும் என விளக்குவர். (நாலடி 38).


கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்.
பயந்தவர்களும் இகழ் குறளன். பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள. விசும்பின் ஓங்கினான்
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. --- கம்பராமாயணம், பாலகாண்டம்.

இதன் பதவுரை ---

     கயம் தரு நறும் புனல் --- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்; கையில்  தீண்டலும் --- தனது கைகளில் தீண்டபப்பட்ட வுடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் --- பெற்றவரும்    இகழும்படியான குறுகிய வடிவுகொண்ட வாமனமூர்த்தி; எதிர் பார்த்து வியந்தவர் --- எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள --- அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப --- அறிவு ஒழுக்கங்களில்    சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவது போல;  விசும்பின் ஓங்கினான் --- வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.

     "உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்ற திருக்குறட் கருத்துத் தோன்ற. உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல வாமனமூர்த்தி வானுற ஓங்கி. வளர்ந்து நின்றான் என்பது கருத்து.


பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல,
வாங்குகை வருந்த மன்னுயிர்க்கு அளித்துத்
தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி...
                                       ---  மணிமேகலை, உலக அறவி புக்க காதை.

இதன் பதவுரை ---

     பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற --- கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாளால் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற, பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை --- அமுதசுரபியிலுள்ள பெரிய சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் --- அறநெறியினால் ஈட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல --- அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து --- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி --- தான் குறைவுபடாத் தன்மையைக் கண்டு ;


அருந்தியோர்க்கு எல்லாம் ஆர்உயிர் மருந்தாய்ப்
பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்   
நீரும் நிலமும் காலமும் கருவியும்
சீர்பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியது என்னப் பெருவளம் சுரப்ப
வசித்தொழில் உதவி வளம்தந் ததுஎனப்
பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லுங் காலை, -தாயர் தம்முடன் ....
                                 ---  மணிமேகலை, கச்சிமாநகர் புக்க காதை. 
       
இதன் பதவுரை ---

     அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய் --- உண்போர் அனைவருக்கும் அரிய உயிரை வளர்க்கும் மருந்தாய், பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் --- பெரியோர் கையிலிட்ட அறத்தின் பயனும், நீரு நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளையும் --- நீர் நிலம் பொழுது கருவி ஆகிய யாவும் செவ்வே அமைந்த விடத்து விதைக்கப்பட்ட விதையாலுண்டாகிய விளைபயனும், பெருகியது என்ன --- பெருகியவாறு போல ; பெருவளம் சுரப்ப --- மிக்க வளத்தினை அப் பாத்திரம் சுரந்து கொடுக்க; வசித்தொழில் உதவி வளந்தந்தது என --- மழை பெயலைச் செய்து உலகிற்கு வளத்தைத் தந்தது போல உணவு தந்து ; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலை --- தமது பசி நோயை நீக்கிய பாவைபோலும் மணிமேகலையை வணங்கி வாழ்த்திக் கொண்டு அவரனைவரும் திரும்பிச் செல்லுங் காலத்தில் ;

         தக்கார்க்குச் செய்த அறம் சிறதாயினும் பெரும்பயன் விளைப்பது போலச் சுரபியிலிட்ட சிறுசோறு கொடுக்கக் குறைபடாது மிக்குப்பெருகிற் றென்றற்குப், ''பெருந்தவர்கைபெய் பிச்சையின்பய'' னை உவமங் காட்டினார்.  ''பெருந்தவர் கைபெய் பிச்சை பெருகுதலைப் பிறரும், ''அறப் பயனும், தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்'' (நாலடி: 38) என்பது காண்க. 



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...