004. அறன் வலியுறுத்தல் - 08. வீழ்நாள் படாஅமை





திருக்குறள்
அறத்துப்பால்
நான்காம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல்

     இந்த அதிகாரத்தில் எட்டாம் திருக்குறள், பயன் இன்றிக் கழியும் நாள் அமையாமல், நல்ல செயல்களை முயற்சி வலிமையோடு செய்வது, பிறவிக்கான வழியை மூடும் தடைக் கல் ஆகும் என்கிறது.

     வாழ் நாள் என்பது, அவிச்சை, அகங்காரம், அவா, விருப்பு, வெறுப்பு என்னும் ஐந்து வகையாகின்ற குற்றங்களால் ஒருவன் செய்கின்ற இருவகை வினைகள் உள்ள வரையில், உயிரானது உடம்பை எடுத்து வினைகளை நுகருகின்ற காலம் ஆகும்.  இருவகை வினைகள் என்பது நல்வினை, தீவினை ஆகும். உதனால் வருவன இன்பமும் துன்பமும்.

     அவிச்சை என்பது அவித்தை என்றும் சொல்லப்படும். அது அறியாமையைக் குறித்தது. வித்தை --- அறிவு. அவித்தை --- அறிவின்மை. நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் பகுத்து அறியும் அறிவு இன்மையைக் குறிக்கும்.

     அகங்காரம் என்பது, அந்த அவிச்சை என்னும் அறியாமை காரணமாக வரும், யான் எனது என்னும் செருக்கு, அல்லது ஆணவம். "யான் எனது என்னும் செருக்கு" என்பதற்கு, தான் அல்லாத உடம்பை நான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருள்களை எனது என்றும் மயங்கி அறிந்து, அவற்றோடு பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கம் என்று பரிமேலழகர் பொருள் கண்டு இருப்பதை ஆங்கே காண்க.

     அறம் செய்வது, பிறவிக்கான வழியை அடைக்கும் என்றதால், வீடுபேறு வாய்க்கும் என்பதும், நல்லறமும் பயன் கருதாது செய்வதே அதற்கு வாயில் என்பதும் பெறப்படும்.

     பயன் கருதிச் செய்யும் நல்வினையானது, அப் பயனை அனுபவிக்க ஒரு பிறவியைத் தரும் எனவே, அவுவாறு பயன் கருதிச் செய்யப்படும் அறமானது, வாழ்நாள் வழி அடைக்கும் கல் ஆகாது என்பது தெளியப்படும்.

திருக்குறளைக் காண்போம் ---

வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் --- செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;

     அஃது, ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் --- அச்செயல், அவன் யாக்கையோடு கூடும் நாள் வரும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாம்.

         (ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. குற்றங்கள் ஐந்து ஆவன : அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

     பெரிய புராணத்திலே வரும் திருத்தொண்டர்கள், தொண்டு செய்வதையே தமது வாழ்நாளின் பயனாகப் கொண்டு, அதிலேயே தலை நின்றவர்கள். எடுத்துக் கொண்ட தொண்டினை எக்காலத்தும் எதனாலும் முட்டுப்படாமல், எந்தப் பயனையும் கருதாமல் செய்து வந்தவர்கள். தாம் செய்து வரும் தொண்டிற்கு முட்டுப்பாடு நேரும் காலத்து, தம் உயிரையும் துறக்கத் துணிந்தவர்கள்.

அவர்கள்,

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்,
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்,
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி,
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

     கூடும் அன்பினால் இறைவனையும் உயிர்களையும் தொழுது, பயன் கருதாப் பணி செய்வதே வீட்டினும் சிறந்தது என்பதால் வீடும் வேண்டா விறலின் விளங்கியவர்கள் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் தெளிவு படுத்தினார்.

     எல்லா உயிர்களிலும் தன்னிலும் உறைவது ஒரு பொருள் என்பதை உணர்ந்து, எல்லா உயிரையும் தன்னைப் போல் கருதிப் பணி புரிவதும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமையும், அந் நிலை மாறாதார் அறியாமையால் தீங்கு செய்யினும் அதனை அன்புடன் பொறுத்துக் கொள்வதும், அறிந்தே தீங்கு செய்வாரை ஒறுப்பதும் திருத்தொண்டர்களின் பாங்கு.

     அதனால் திருத்தொண்டர்களின் வாழ்நாள் வீண் நாளாக ஆனதும் இல்லை.

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியார், தாம் இயற்றிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், முருக நாயனார் வரலாற்றை வைத்து, பின் வரும் பாடலைப் பாடி உள்ளார். 
  
மட்டார்தார் கண்ணி வகைசிவபூ சைக்குஒருநாள்
முட்டாது செய்தார் முருகனார் - விட்டாரோ
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.               

         சோழநாட்டிலே உள்ள திருப்புகலூரிலே சிவபெருமானுக்கு உரியனவாம் எனச் சிவாகமகங்களிலே விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பலவகைப்பட்ட மாலைகளைச் செய்து, சிவபெருமான் திருவடிகளுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், பஞ்சாக்கரம் செபித்தலும் வழுவாது செய்து சிறப்புற்றவர் முருகநாயனார்.

     இந்த நிலையிலே மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும் இயற்றிய சிவபுண்ணியப் பேற்றால் பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்குத் தோழர் ஆகும் பெரும்பேறு பெற்றார். அவரால் திருப்புகலூர்த் தேவாரத்திலே வைத்துப் புகழப் பெற்றார். பின்பு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமண காலத்தில் சிவபெருமானுடைய திருவடி நிழலை அடைந்தார். 

         அரிய மனித உடம்பினை எடுத்தோர் பெரும் பேறாகிய தவத்தையே செய்து, அவத்திலே பொழுது கழியாமல் வாழ்நாளைக் கழிப்பாராயின், அது அவருக்கு மேல் வரக்கடவதாகிய பிறப்பு இறப்புக்களை ஒழிக்கும் பரம உபாயம் ஆகும் எனத் திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.
  
மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆன்இடத்து ஐந்தும் ஆடும் அரன் பணிக்காக அன்றோ?
வான் இடத்தவரும் மண்மேல் வந்து அரன் தனை அர்ச்சிப்பர்,
ஊன் எடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ. 

என்னும் சிவஞான சித்தியார் பாடல் காண்க.
  
நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
         நித்தலும்எம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகுஇட்டு மெழுக்கும் இட்டுப்
         பூமாலை புனைந்துஏத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
         சங்கரா சயபோற்றி போற்றி என்றும்
அலைபுனல்சேர் செஞ்சடைஎம் ஆதீ என்றும்
         ஆரூரா என்றென்றே அலறா நில்லே. --- அப்பர்.

பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்
நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
காக்கைக் கேஇரை ஆகிக் கழிவரே.       --- அப்பர்.

முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா!
         மொட்டு அறா மலர் பறித்து இறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
         பரகதி கொடுத்து அருள் செய்யும்
சித்தனே! செல்வத் திருப்பெருந் துறையில்
         செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால்
         அதெந்துவே என்று அருளாயே.       ---  திருவாசகம்.

என்னும் அருட்பாடல்களால் இதனை உணர்க.

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண், கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.

ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட--திருவாளா!
வீணாள் படாமைநீ துன்னம்பொய் யேயாக
வாணாள் படுவ தறி.                  ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

ஒருபால் திருத்த --- ஒருபுறம் தைக்க, ஒருபால் கிழியும் --- மற்றொருபுறம் கிழிகின்ற, பெறுவாழ்க்கை முத்தாடை --- பெரிய வாழ்க்கையாகிய விலையுயர்ந்த உடலாகிய ஆடையை, கொண்ட திருவாளா --- உடுத்த செல்வமுடையவனே! நீ துன்னம் பொய்யே ஆக --- நீ தைத்தல் பயனின்றி, வாணாள் படுவது --- ஆயுள் நாள் அழிவதை, வீணாள் படாமை அறி --- நாள்கள் வீணாக கழியும் முன் அறிக. (அறிந்து பயன் உள்ள செயல்களைச் செய்க)

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...