007. மக்கள் பேறு - 01. பெறும் அவற்றுள்





திருக்குறள்
அறத்துப்பால்
இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - புதல்வரைப் பெறுதல்

         [அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.]

     இருபிறப்பாளர் மூவர் என்பது, "இயல்பு உடைய மூவர்க்கும்" என்று முந்தைய திருக்குறளின் விசேட உரையில் கூறியது காண்க. அவராவார்,

     ஆசாரியன் இடத்து விதம் ஓதுதலும் விரதம் காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கம் உடையவன்.

     வீட்டை விட்டுத் தீயுடன் காட்டின் இடத்துப் போய், மனையாள் தொண்டு செய்யத் தவம் செய்கின்ற வானப் பிரஸ்தன்.

     எல்லாப் பற்றுக்களையும் விட்டு, சமாதி புரிபவன் ஆகிய சந்நியாசி.

     இவர்கள் மூவரும் ஆசாரியனால் வேதம் ஓதுதற்கு உரிமை உடையவர். அது உபநயனம் என்னும் சடங்கால் நிறைவேற்றப்படும். எனவே, முதல் பிறப்புத் தாயாலும், இரண்டாம் பிறப்பு உபநயன சடங்காலும் உண்டாகப் பெற்ற அந்தணர், அரசர், வைசியர் என்னும் இம் மூவர் ஆவார். இவரை துவிஜர் என்றும் கூறுவர்.  உபநயனம் இரண்டாம் பிறப்பு என்பது, "திருமார்பின் மலர் மடந்தை திருக்கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல் பெருமார்பில் வந்துஒளிர, பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்" என்னும் கலிங்கத்துப் பரணிப் பாடலால் விளங்கும்.


அந்தணர் அரசர் நாய்கர் இருபிறப்பாளர் வேத
மந்திரக்கு உரியோர், நான்கு வகைநிலை இவர்கட்கு என்ப,
நிந்தைஇல் பிரமசாரி நிலை,உயர் மனையின் வாழ்க்கை,
சுந்தர வனத்தின் வாழ்க்கை, துறவறம் அந்நான்கு ஆமால்.

என்று காஞ்சிப் புராணம் கூறும்.     
     அந்தணரும், அரசரும், வைசியரும், ஆகிய இவர் மூவரும் இருபிறப்பாளர். இவர்கள் வேத மந்திரங்கட்கு உரிமையுடையவர். இவர்கட்கு நால்வகை நிலைகள் கூறுவர். அந்நான் காவன; நிந்தை இல்லாத பிரமசரியம், உயர்வான கிருகத்தம், அழகான வானப்பிரத்தம், சந்நியாசம் என்பன.

கருநிலைக்கு எட்டாம் ஆயுள் பதினொன்று கருது ஈராறாம்
வருடத்தின் மறையோர் ஆதி மூவர்க்கும் மறையின் ஆசான்
தெருள்உப நயனம் செய்வன், முனிவர்தம் கடன்தீர்த்தற்குப்
பொருவிலா மறைகள் அங்கம் ஓதுதற் பொருட்டு மன்னோ.

என்று காஞ்சிப் புராணம் மேலும் கூறுவதையும் காண்க.

     முனிவர் கடனைச் செய்து முடித்தற்கு ஒப்பில்லாத வேதங்களும், ஆறங்கங்களுமாகிய இவைகளைக் கற்றோதுதற்கு ஆசிரியன், கருவில் நின்ற காலத்திற்கு எட்டாமாண்டில் அந்தணர்க்கும், பதினோராம் ஆண்டில் அரசர்க்கும், பன்னிரண்டாம் ஆண்டில் வைசியர்க்கும் வேதவழி ஞானம் பெற உபநயனம் செய்து முடிப்பான். எனவே, பிறப்பிற்கு ஏழாம் ஆண்டு முதலாகக் கொள்க.

ஆங்கு அதன் பின்னர், காமம் அறம்பொருள் பேற்றி னோடும்,
ஓங்குசீர்ப் பிதிரர் வானோர் கடன்களின் ஒழிவும் வேண்டி,
மாங்குயில் கிளவி மென்தோள் மனைவியை மணப்பர், பின்னர்த்
தாங்கஅரும் வனத்துச் செல்வர் தவம்மிகக் கிடைத்தல் வேண்டி.    

     என்று மேலும் கூறும் காஞ்சிப் புராணம்.
     பிரமசரிய நிலை முற்றுப்பெற்ற பின்னர், முனிவர் கடனை முடித்த பின்பு, அறம், பொருள் இன்பங்களைப் பெறலோடும் புகழ் மிகுந்த பிதிரர், தேவர் ஆகிய இவ்விருவகையர் கடன்களை ஒழித்தலுமாகிய இவற்றை விரும்பி மாமரத்திலுள்ள குயிலிசை போலும் சொல்லையும் மெல்லிய தோளையும் உடைய வாழ்க்கைத் துணைவியைக் கொள்வர். பின்னர்ப் பொறுத்தற்கு அரிய தவம் மிகவும் நிரம்ப மனைவியொடும் வனம் புகுவர்.
     இங்கே கூறப்படுவன யாவும் மிருதி நூல் வழக்கு என அறிக.
     இந்த அதிகாரத்தின் பொருளாகப் பரிமேலழகர் கூறுவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படூஉம் கடன் மூன்றனுள், முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன், வேள்வியானும், பிதிரர் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப் படாமையின், அக்கடன் இறுத்தல் பொருட்டு நன்மக்களைப் பெறல்.

     "மூன்று கடன் கழித்த பார்ப்பானும்" என்று திரிகடுகம் கூறும்.


     மூன்று கடன் என்பது,  தேவர் முனிவர் பிதிரர் இவர்கட்குச் செய்யும் கடன். இவற்றில் தேவர் கடன் வேள்வியாலும், முனிவர் கடன் வேதம் ஓதலாலும், பிதிர்க்கடன் மகப் பெறுதலாலும் தீர்க்கப்படும்.
     மனு தரும சாத்திரம் மூன்றாம் அத்தியாயத்தில், "வேத அத்தியயனத்தினாலே ரிஷிகளையும், ஓமத்தினாலே தேவர்களையும், சிரார்த்தத்தினாலே பிதிர்க்களையும் திருப்தி செய்வித்தல் வேண்டும்" என்று கூறுவதனாலும் விளங்கும்.

இனி திருக்குறளைக் காண்போம்.....

பெறும் அவற்றுள் யாம்அறிவது இல்லை, அறிவுஅறிந்த
மக்கள் பேறு அல்ல பிற.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      பெறும் அவற்றுள் --- ஒருவன் பெறும் பேறுகளுள்;

     அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற --- அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை;

     யாம் அறிவது இல்லை ---- யாம் மதிப்பது இல்லை.

         ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனால், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)

"நுண்ணறிவு உடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவு என்பது பெரும் பேதைமைத்தே" என்றும் "பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்" எனவும் வருவது காண்க.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்களுள் "திருத்தொண்டர் மாலை" என்பது ஒன்று. அதில் வரும்ஒரு பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது காண்க.

ஆம்பற்றி னால்சடையர் ஆலால சுந்தரரைத்
தாம்பெற்ற பேறே தவப்பேறே - ஓம்பிப்
பெறும்அவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவுஅறிந்த
மக்கட்பே றுஅல்ல பிற.                             

         திருநாவலூரிலே ஆதிசைவ குலத்திலே தோன்றியவர் சடைய நாயனார். ஆன்மாக்கள் சைவ சமயமே சற்சமயம் என்று உணர்ந்து அதன்வழி ஒழுகி உய்யும்பொருட்டு ஆலாலசுந்தரர் திருவவதாரம் செய்தற்கு, முன்னைப் பல பிறவிகளில் ஈட்டிய சிவபுண்ணியமே ஓர் உருக் கொண்டால் ஒத்தவர் அவர்.

மாதுஒரு பாக னார்க்கு

     வழிவழி அடிமை செய்யும்

வேதியர் குலத்துள் தோன்றி

     மேம்படு சடைய னாருக்கு

ஏதம்இல் கற்பின் வாழ்க்கை

     மனைஇசை ஞானி யார்பால்

தீதுஅகன் றுஉலகம் உய்யத்

     திருஅவ தாரம் செய்தார்.       ---  பெரியபுராணம்.

         ஒருவன் பெறும் பேறுகளுள் அறியவேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிறபேறுகளை யாம் மதிப்பதில்லை எனக் கூறியருளினர் திருவள்ளுவ நாயனார்.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த நூல்களுள் மற்றுமொன்று, "முருகேசர் முதுநெறி வெண்பா". இதில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த ஒரு பாடலைக் காண்போம்.
                                                                       

துற்றுநரகு உற்றோர் சசிவன்னன் சூழ்நெறியான்
முற்றினர் சொர்க்காதி, முருகேசா! - உற்றுப்
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.                             

இதன் பதவுரை ---

         முருகேசா - முருகப் பெருமானே, சசிவன்னன் சூழ்நெறியால் --- சசிவன்னன் என்பவன் தான் மேற்கொண்ட நடத்தையினாலே, துற்று நரகு உற்றோர் --- பொருந்திய நரகத்தை அடைந்தவர்கள், சொர்க்காதி முற்றினர் --- பிறகு அவன் நன்னெறியில் ஒழுகியபடியினால் விண்ணுலகம் முதலிய நற்கதியை அடைந்தனர். 

ஆகவே,

     பெறுமவற்றுள் --- பெறத் தகுந்த பேறுகளில், அறிவு அறிந்த --- அறிய வேண்டியவைகளை எல்லாம் நன்கு கற்றறிந்த, மக்கட்பேறு அல்ல பிற --- மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை, யாம் அறிவது இல்லை --- நாம் ஒருபொருளாக மதிப்பதில்லை.

         சசிவன்னன் செய்த தீவினையால் நரகம் அடைந்தவர்கள், பிறகு அவன் நல்வினை புரிந்த படியினால், நல்ல கதியை அடைந்தார்கள்.  அறிய வேண்டியவைகளை எல்லாம் அறிந்த அறிவுடைய மக்கட் பேற்றைத் தவிர மற்றைப் பேறுகள் சிறப்புடையன அல்ல என்பதாம்.  துன்று எனற்பாலது துற்று என வலித்தல் விகாரம் பெற்றது. துன்றுதல் --- பொருந்துதல்.

                                    சசிவன்னன் கதை

         முன்னாளிலே பாகவெக்கியன் என்னும் பெயரையுடைய அந்தணன் ஒருவனுக்குச் சசிவன்னன் என்னும் பெயருடைய மைந்தன் ஒருவன் தோன்றினான். அவன் கள் குடித்தல், காமத்தில் ஈடுபடல், ஊன் உண்டல் முதலிய கொடிய தீமைகளை எல்லாம் செய்தான். அவன் செய்த தீவினையினால் அவனுடைய குலத்தினர் நரகத்தில் வீழ்ந்து மிகுந்த துன்பத்தை அடைந்து வருந்தினார்கள். பாகவெக்கியன் தன்னுடைய மகனுடைய செய்கைகளைப் பார்த்து உள்ளம் வருந்தினான்.  மாநந்திபராயணர் என்னும் மெய்யறிவாளர் ஒருவரிடம் சசிவன்னனைக் கொண்டுபோய் விட்டு அவன் செய்துள்ள தீமைகளை எல்லாம் கூறினான். மாநந்திபராயணர் சசிவன்னனிடத்தில் அன்பு கொண்டார். தம்முடைய அருட்பார்வையை அவன்மீது செலுத்தினார். மெய்யறிவு பிறக்குமாறு அறிவு நூலின் முடிந்த பொருளை அவனுக்குப் போதித்தார். இதனால் சிசவன்னன் மெய்யறிவு பெற்றுத் தீவினையிலிருந்து நீங்கி வீடுபெற்றான்.  நிரயத்தில் வீழ்ந்து வருந்திய அவனுடைய குலத்தினரும் நற்கதியை அடைந்து மகிழ்ந்தார்கள்.

     இத் திருக்குளுக்கு ஒப்புமையாம அமைந்த பாடல்கள் சில.....
                                                     

"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
         குலமுழுதும் நன்மை உண்டாம்,
அன்றி, அறிவு  இல்லாத பிள்ளை ஒரு
         நூறுபெற்றும் ஆவது உண்டோ?
மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா
         ரே! சொன்னேன் வருடந் தோறும்
பன்றிபல ஈன்றும் என்ன, குஞ்சரம் ஒன்று
         ஈன்றதனால் பலன் உண் டாமே".                ---  தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

     மன்றில்  நடம்  புரிவாரே --- திருச்சிற்றம்பலத்திம் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளும்  பெருமானே!,

     தண்டலையாரே! --- திருத்தண்டலை என்னும்திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவவரே!,

     பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளைப் பெற்றெடுத்தாலும் பயன் என்ன?,

     குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் --- யானையானது ஒரு கன்றை பெற்றாலும் மிக்க பயன் உண்டாகும்.


     (அது போலவே),

     நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் --- நலம் தரும் பிள்ளை ஒருவனைப் பெற்றாலும் அவனது மரபுக்கு எல்லாம் நலம் உண்டாகும்,

     அன்றி --- அல்லாமல்,

     அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ --- அறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை விளையுமா? (இல்லை).

      கருத்து --- குலம் முழுதும் நன்மை உண்டாகும் என்றார். "எழு பிறப்பும் தீயவை தீண்டா, பழி பிறங்காப் பண்பு உடை மக்கள் பெறின்" என்னும் திருவள்ளுவ நாயானர் அருள் வாக்கின்படி, குற்றமற்ற நல்ல மகன் ஒருவன் பிறந்துவிட்டால், எழுகின்ற பிறவி எல்லாம் தீயவை தாக்கமாட்டாது.


"பொற்பு அறிவு இல்லாத பலபுத்திரரைப் பெறலின்,ஓர்
நற்புதல்வனைப் பெறுதல் நன்று ஆமே, ---  பொற்கொடியே!
பன்றிபல குட்டி பயந்ததனால் ஏது பயன்
ஒன்று அமையாதோ கரிக் கன்று ஓது".  ---  நீதிவெண்பா

இதன் பொருள் ---  

     பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ? நீ சொல். அதனால், நல்ல அறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும், நல்ல அறிவுள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் நலமாகும்.

(பொற்பு அறிவு - அழகிய அறிவு.  பயத்தல் - ஈனுதல்.  கரி - யானை.)


"நீர்ஆரும் சடைமுடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர்தமக்கு, பெருகு திரு மனைஅறத்தின்
வேர்ஆகி விளங்க, திருவெண்காட்டு நங்கைபால்
சீராள தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்".  பெரியபுராணம்.

இதன் பொருள் ---

     கங்கைநீர் பொருந்திய சடையையுடைய சிவபெரு மானின் திருவருளால், நிறைந்த தவத்தையுடைய அவருக்குப் பெருகும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கையாரின் மணிவயிற்றில் `சீராள தேவர்\' என்னும் திருமகனார் தோன்றினார்.


ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
மக்கட் பேற்றில் பெறும் பேறு இல்லை. ---  முதுமொழிக் காஞ்சி.

இதன் பதவுரை ---

     ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் --- கடல் சூழ்ந்த உலகத்தில் மனிதர் எல்லாருக்கும், மக்கள் பேற்றின் பெறும்பேறு இல்லை --- புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும் பெறத்தக்க பாக்கியம் வேறில்லை.

         மக்கட்பேறு --- புத்திர பாக்கியம். மக்கட்பேற்றின் --- புத்திரபாக்கியம் போல என்றும் பொருள்படும். "பெரும்பேறு" என்று பாடங் கொண்டால், பெரிய பாக்கியம் என்பதுபொருள்.


"குறியறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா
தறியறியான் நீரின்கட் பாய்ந்தாடல் இன்னா
அறிவறியா மக்கட் பெறல் இன்னா, இன்னா
செறிவிலான் கேட்ட மறை".    ---  இன்னா நாற்பது

இதன் பதவுரை ---

     குறி அறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா --- (பாம்பினை ஆட்டுதற்கு உரிய மந்திர முதலியவற்றின்) முறைகளை அறியாதவன் பெரிய பாம்பினை ஆடச்செய்தல், - துன்பமாம்;

     தறி அறியான் நீரின்கண் பாய்ந்து ஆடல் இன்னா --- உள்ளிருக்கும் குற்றியை அறியாமல் நீரில் குதித்து விளையாடுதல் துன்பமாம்.

     அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா - அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம்;

     செறிவு இலான் கேட்ட மறை இன்னா --- அடக்கம் இல்லாதவன் கேட்ட இரகசியம் துன்பமாம்.


அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று. ---  நறுந்தொகை.

இதன் பொருள் --

     கல்வி கற்று, வாழ்க்கை உணர்ந்து, தவறு செய்ய அச்சமும், அறிவும் அகத்துள்ளே இல்லாத ஒன்றுக்கும் உதவாத மக்களைப் பெறுவதை விட வாரிசு இல்லாமல் ஒரு குடி அழிவதே மேல்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...