007. மக்கள் பேறு - 07. தந்தை மகற்கு




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஏழாம் அதிகாரம் - மக்கள் பேறு

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "தந்தையானவன் தம் மக்களுக்குச் செய்யவேச்ணிய நன்மையானது, கற்றோர் அவையில் முதன்மை பெற்று வீற்றிருக்கும்படி சிறந்தோன் ஆக்குதலே" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவை அத்து
முந்தி இருப்பச் செயல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      தந்தை மகற்கு ஆற்றும் நன்றி --- தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;

     அவையத்து முந்தி இருப்பச் செயல் --- கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.

         (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.)

இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல்கள் பின் வருபவை----

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன
விச்சைமற் றல்ல பிற;                  ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     வைப்புழிக் கோட்படா --- வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவில் கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை --- நன் மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்க நேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் --- தம்மினும் மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும் கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன விச்சை மற்று அல்லபிற --- ஆதலால்; வைப்பு என ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத் தக்கவை கல்வியே, பிற அல்ல.

         கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம்.


எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச்
செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி
மான்சேர்ந்த நோக்கினாய் ஆங்க வணங்காகும்
தான்செய்த பாவை தனக்கு.     ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     மான் சேர்ந்த நோக்கினாய் --- மானை ஒத்த பார்வையை உடையவளே!, இறைவன் தன் மக்களை --- தந்தை தன் குழந்தைகளை, எந் நெறியானும் --- எல்லாவற்றானும், செம்மை நெறிமேல் நிற்க செயல் வேண்டும் --- செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவு கொளுத்துதல் வேண்டும்; தான் செய்த பாவை தனக்கு அணங்காகும் --- தன்னால் நிலைநிறுத்தப் பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும், அந்நெறி --- செந்நெறியில் நிற்பச்செய்தல், ஆங்க --- தெய்வமாந் தகுதியைப் போலாம் ஆதலான்.

         மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தையின் கடனாம்.



No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...