012. நடுவு நிலைமை - 08. சமன்செய்து




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பன்னிரண்டாம் அதிகாரம் - நடுவு நிலைமை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறள், "முன்னே தான் சமனாக நின்று, பின்னே தன்னிடத்தில் வைத்த பாரத்தை அளவு செய்யும் துலாக் கோல் போல், இலக்கணங்களால் நிறைந்து, ஒரு பக்கம் சாயாமல் இருத்தல் அறிவால் நிறைந்த சான்றோருக்கு அழகு ஆகும்" என்கின்றது.

     "இலக்கணம்" என்னும் சொல் வடமொழியில், "இலக்ஷணம்" எனப்படும்.

'துலாக்கோல் இயல்பே தூக்கும் காலை
மிகினும் குறையினும் நில்லாது ஆகலும்,
ஐயம் தீர்த்தலும், நடுவு நிலைமையோடு
எய்தக் கூறுப இயல்பு உணர்ந்தோரே. --- தொல்காப்பியம்.

ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே.--- நன்னூல்.

திருக்குறளைக் காண்போம்....


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் - முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல;

     அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி - இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

      (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒருபாடல்...

பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால், அப்பருக்கு
நல்ல படிக்காசு நல்குமால், --- எல்லாம்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

         பிள்ளை --- திருஞானசம்பந்தப் பெருமான்.

அவம்பெருக்கும் புல்அறிவின்
         அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
         பாழ்படநல் ஊழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
         தாஇல்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
         திருஅவதா ரஞ்செய்தார்.

யாவருக்குந் தந்தைதாய்
         எனும் இவர் இப்படி அளித்தார்,
ஆவதனால் ஆளுடைய
         பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவருக்கும்
         தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
         சம்பந்தர் ஆயினார்.

எனவரும் பெரியபுராணப் பாடல்களின்படி, திருஞானசம்பந்தப் பெருமானை, "பிள்ளையார்" என்றும் "ஆளுடைய பிள்ளையார்" என்றும் வழங்குவது சைவமரபு.

கைத்தொண்டு ---  கையினால் செய்யும் உழவாரப்பணி. அப்பர் பெருமான் உழவாரப் படை கொண்டு திருத்தொண்டு புரிந்தார்.

         திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு பெருமானும் திருவீழிமிழலையில் இருந்தபொழுது, பஞ்சகாலம் வர, இருபெருமக்களும் சிவபிரானிடம் பொற்காசு பெற்று அடியார்களை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார்கள்.  அப்போது, சிலநாள் திருஞானசம்பந்தப் பெருமானார் மாற்றுக் குறைந்த காசு பெற்று வந்தார். அதனால் அதனை மாற்றி உணவுப் பொருள்களை வாங்குவதில் நேரம் வீணாயிற்று.  அதற்குள் அடியவர்கள் அப்பர் பெருமானாரின் திருமடத்திலேயே உணவு அருந்திச் சென்றனர். "வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தப் பெருமானார் வாசியில்லாக் காசு பெற்றார்.  திருஞானசம்பந்தப் பெருமானைத் தம் புதல்வர் என்று எண்ணி, சிவபெருமான் நடுவுநிலை பிறழாமை இங்கே கருதத் தக்கது.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வேதியன் ஆள்ஆமோஎன்று எள்ளாது வெண்ணெய்நல்லூர்ச்
சோதி வழக்கே புகழ்ந்தார், சோமேசா! --- ஓதில்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

         நடுவு நிலைமையாவது பகை அயல் நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை.

இதன் பதவுரை ---

         சோமேசா!

     ஓதில் --- சொல்லுமிடத்து,  சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் --- முன்னே தான் சமனாக நின்று, பின்பு தன்னிடத்து வைத்த பாரத்தைத் தெளிவாக வரையறை செய்யும் துலாக்கோல் போல, அமைந்து --- நல்லிலக்கணங்களால் அமையப் பெற்று, ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி --- ஒருபக்கத்துச் சாயாமை கல்வி அறிவு ஒழுக்கங்களால் சிறந்த பெரியோர்கட்கு அழகாகும், 

         வேதியன் ஆள் அமோ என்று எள்ளாது --- அந்தணன் (பிறருக்கு) அடிமை ஆவானோ என்று இகழ்ந்து கூறாது, வெண்ணெய் நல்லூர்ச் சோதி --- திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானது, வழக்கே புகழ்ந்தார் --- வழக்கினையே திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அவையத்து அந்தணர் புகழ்ந்து பேசினர் ஆகலான் என்றவாறு.

         உவமை அடையாகிய சமன் செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும், பொருள் அடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது, தடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும்,  ஒருபால் கோடாமையாவது அவ் உள்ளவாற்றை மறையாது பகை அயல் நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க.  இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.

         திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில், ஆதிசைவ மரபில் சடையனார்க்கும் இசைஞானியார்க்கும் திருக்குமாரராய் அவதரித்த சுந்தரமூர்த்தி நாயனார், நரசிங்கமுனையர் என்னும் அரசற்குக் காதல் பிள்ளையாய் அந்தணர் ஒழுக்கமும் அரசர் திருவும் பொருந்தி யௌவனப் பருவம் அடைந்தார். அது நோக்கிப் பெற்றோரும் மற்றோரும் புத்தூர்ச் சடங்கவி என்னும் ஆதிசைவர் மகளை மணம் பேசி முடித்து, மூகூர்த்த நாளில் நாயனாரைக் குதிரை மீது ஏற்றி மிக்க ஆடம்பரத்துடன் புத்தூர் அழைத்துச் சென்றார்கள். நாயனார் சடங்கவி மனை புகுந்து மணப்பந்தரின் எழுந்தருளினவுடன் சிவபெருமான் திருக்கயிலையில் திருவாக்கு அளித்தபடி அவரைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டி ஒரு கிழவேதியராகத் திருவுருக்கொண்டு வந்து மணப்பந்தர் புகுந்து, "ஒரு வழக்குண்டு; அதை முடித்தே மணம் புரிதல் வேண்டும்; மணச் சடங்குகளை நிறுத்துக" என்றார்.  நாயனார் யாது கூறுவாரோ என்று விநயமாய், "அப்படியே, தங்கள் வழக்கைத் தீர்த்தன்றி மணம் புரியேன்" என, கிழவேதியர் சபையோரை நோக்கி, "அந்தணீர்! இந்த மணமகன் எனக்கு வழியடிமை" என்றார். அது கேட்ட நாயனார் நகைக்கவே, கிழவர் வெகுண்டு "உன் பாட்டன் எழுதித் தந்த அடிமையோலை இது.  நகைத்தது என்?" என்றார். நாயனார் நகை ஒழிந்து, "ஐயரே! அந்தணர் அடிமையாதல் உண்டோ? நீர் பித்தரோ? அடிமை ஓலை உளதாயில் காட்டுக" என்றார், கிழவர், "நீ அடிமை, அதைக் காணுதற்கு நீ அருகன் அல்லன்" என்று கூறிச் சபையோர்களுக்கு அதைக் காட்டவே, நாயனார் வெகுண்டு சீறி அவ் ஓலையைப் பற்றிக் கிழித்து எறிந்தார். கிழவர் நாயனாருடைய கையை இறுகப் பற்றி விடாது இழுத்து, "இது தகுமோ? இது முறையோ? இது தருமந்தானோ?" என்று அந்தணர்களை நோக்கிக் கூச்சல் இடவே, அவ் அந்தணர், "நீர் எங்குளீர்" என வினவ, "யான் திருவெண்ணெய்நல்லூர் உளன்" என இறுக்க, "அங்ஙனமாயின் உமது வழக்கை அங்குச் சென்று தீர்த்துக் கொள்க" என்று யாவரும் உரைப்ப, கிழவர் அதற்கு இசைந்து நாயனாரைப் பற்றிக் கொண்டு திருவெண்ணெய் நல்லூர் சென்று அங்கு அந்தணர் அவையத்தார் முன்பு நாயனாரை விட்டுத் தமது வழக்கைத் தெரிவிக்க, அவ் அவையத்தார், அந்தணர் அடிமையாதல் இல்லை என அறிந்து வைத்தும் கிழவர் தம்மிடத்து உண்டு எனத் தந்த மூல ஓலையைக் கொண்டு நாயனார் பாட்டன் கையெழுத்தோடு ஒப்பு நோக்கிச் சிறிதும் வேறுபாடு இன்மை கண்டு "நீர் அவ் அந்தணருக்கு அடிமையே" என்று தீர்ப்பு அளித்தனர்.  இது திருத்தொண்டர் புராணத்து உள்ளது.

     அடுத்து, குமார பாரதி என்பார் தாம் பாடிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில், பெரியபுராணத்துள் வரும் அமர்நீதி நாயனாரின் வரலாற்றினை வைத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடிய பாடல் ஒன்று..

நிரம்புபொருள் சேயொடமர் நீதிமனை யாளோடு
அரன்கோ வணத்தட்டு அதன்நேர் - இருந்தார்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

இதன் பொருள் ---  

     அடியார்களுடைய பெருமையை உலகத்துக்கு அறிவித்து ஆன்மாக்களை உய்விக்கும்படி திருவுளம் கொண்டு, திருநல்லூரிலே சிவனடியார்களுக்கு அமுதூட்டிக் கோவணம் முதலியவற்றைக் கொடுத்தலாகிய அருமையான சிவப்பணியை வழுவாமல் கடைப்பிடித்து வந்த அமர்நீதி நாயனார்பால், சிவபெருமான் அடியார்போல் வேடம்கொண்டு சென்று ஓர் கோவணத்தை வைத்திருக்கும்படி கொடுத்து, அதனை மறைத்து, அதற்கு ஈடாக அவருடைய நிறைந்த செல்வத்தையும் மக்களையும் மனைவியாரையும் வைத்தும் தட்டு நேர்படாமல் தாமே ஏறியிருக்கத் தட்டு நேர்பட்டவுடன் இறைவர் காட்சியளித்துத் திருவடியில் சேர்த்து அருளினார். 

         முன்னே தாம் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல் போல இலக்கணங்களான் அமைந்து ஒருபக்கத்துக் கொடாமை சான்றோர்க்கு அழகாம் என்றவாறு.

     அடுத்து, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடிய பாடல்....

நங்கைஉமை சொல்லால் நடுவுஇகந்த மால்வெருவு
செங்கண்அரவு ஆனான், சிவசிவா! - எங்கும்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க் குஅணி.      

         பார்வதி பரமேசுரன் ஆடிய சூதாட்டத்தில் திருமால் நடுவு நிலைமை தவறினான். பார்வதி திருமாலைப் பாம்பாகுக எனச் சீறி அருளினாள். இவ்வாறு கந்தபுராணம் கூறும். நடுவு நிலைமை தவறியவர் இழிந்த பிறப்பெடுப்பர். சான்றோர்க்கு அழகு நடுவுநிலை மாறாமல் இருத்தலே ஆகும்.       
                                                                                
     அடுத்து, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமாள் மீது, பெரியார் ஒருவரால் பாடப்பட்டுள்ள, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல் ஒன்று...


தேடாது புல்லையில் வந்தாய்என் சிந்தையில் சேர்ந்துவிளை
யாடாய், சமன்செய்து சீர்தூக்குங்கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி எனலான், நடுக் கூறி நின் தாள்
வாடா மலரின்கண் நீடூழி யான் புக்கு வாழ்வதற்கே.

இதன் பொருள் ---

     முன்னே தான் சமனாக நின்று, பின் தன்னிடத்து வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாக்கோல் போல இலக்கணங்களால் அமைந்து, ஒருபக்கத்துக் கொடாமை சான்றோர்க்கு அழகு என்று சொல்லப்பட்டு இருத்தலால், யாரும் வருந்தி அலையமல் படிக்கு, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில், ஆதி ஜெகந்நாதப் பெருமாளாக எழுந்தருளியவனே! உனது திருவடியாகிய வாடாமலரின்கண் நான் சேர்ந்து, நெடுங்காலம் என்னை வாழச் செய்ய, எனது சிந்தையில் எழுந்தருளி வந்து விளையாடுவாயாக.

தேடாது - வருந்தி அலையாமல். நின்றாள் வாடா மலரின்கண் - நினது திருவடியாகிய வாடா மலரிடத்தே.  நீடூழி - நீண்ட காலம்.  யான் புக்கு - யான் புகுந்து.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....

 
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட் கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதாகும், உவப்பதன்கட்
குற்றமும் தோன்றா கெடும்.   --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாதாகும் --- வெறுப்புத் தோன்றும் போது பொருளில் உள்ள குணம் ஆராய்வானுக்குத் தோன்றாது;

     உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும் --- விருப்பம் உண்டாகும் போது, பொருளில் உள்ள குற்றமும் தோன்றாது மறையும் (ஆதலால்);

      காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் - வெறுப்பு விருப்பு இல்லாமல் ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்து அறிதல்,

     அறிவுடையோர் கண்ணதே --- அறிவுடையார் செயலாகும்.


ஆவலித்து அழுத கள்வர்
     வஞ்சரை வெகுண்டு நோக்கிக்
காவலன் செங்கோல் நுண்ணூல்
     கட்டிய தருமத் தட்டில்
நாஎனும் துலைநா இட்டுஎம்
     வழக்கையும் நமராய் வந்த
மேவலர் வழக்கும் தூக்கித்
     தெரிக என விதந்து சொன்னார்.   --- தி.வி.புராணம். மாமனாக வந்து....

இதன் பதவுரை ---

     ஆவலித்து அழுத கள்வர் --- இங்ஙனம் அவலங் கொட்டி அழுத பொய் வேடமுடைய இறைவர், வஞ்சரை வெகுண்டு நோக்கி --- கொடியராகிய ஞாதிகளைச் சினந்து பார்த்து(ப்பின்), காவலன் செங்கோல் நுண்நூல் கட்டிய தருமத் தட்டில் --- புரவலனது செங்கோலாகிய நுண்ணிய நூலினால் யாத்த அறமாகிய தட்டின்கண், நா எனும் துலைநா இட்டு --- உங்கள் நாவாகிய துலைநாவை இட்டு, எம் வழக்கையும் --- எமது
வழக்கையும், நமராய் வந்த மேவலர் வழக்கும் --- எமது பங்காளிகளாய் வந்த இப்பகைவர்களின் வழக்கையும், தூக்கித் தெரிக என --- தூக்கி அறிவீர் என்று, விதந்து சொன்னார் --- (நூலோரை நோக்கித்) தெளிவுபடக் கூறியருளினார்.

     ஆவலித்தல் --- வாய் புடைத்து ஆர்த்தல். அரசன் செங்கோலுக்கும் அறத்திற்கும் பழுது உண்டாகாமல் நடுவு நிலையுடன் ஆராய்ந்து கூறுக என்பார், இங்ஙனம் உருவகப்படுத்திக் கூறினார்;


தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்க, மனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தத்தமக்குக் கொண்ட குறி தவம் அல்ல --- தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவம் ஆகா; செத்துக --- வாளாற் செத்துக, சாந்து படுக்க --- அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக, மனன் ஒத்து --- மனம் பொருந்தி, நுகத்துப் பகல் ஆணி போன்று --- நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப, சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பே தவம் --- ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

         காய்தல் உவத்தல் இன்றி ஒழுகும் அமைதியே தவமாம்.

         'தத்தமக்குக் கொண்ட குறி' என்றது மழித்தல், நீட்டல், மயிற்பீலி கொள்ளல் முதலியனவாம்.

முறைதெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்
இறைதிரியான், நேர் ஒக்க வேண்டும், - முறைதிரிந்து
நேர் ஒழுகான் ஆயின் அதுவாம் ஒருபக்கம்
நீர் ஒழுகிப் பால்ஒழுகு மாறு.  ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     முறை தெரிந்து --- கூறும் முறைமையை ஆராய்ந்து அறிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் --- செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும், இறை --- அரசன், திரியான் --- செல்வம் வறுமை நோக்கி நடுநிலையினின்றும் திரியாதவனாய், நேர் ஒக்க வேண்டும் --- இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும், முறை திரிந்து --- கூறும் முறையினின்றும் வழுவி, நேர் ஒழுகானாயின் --- நடுவுநிலையாக ஒழுகாது ஒழிவானாயின், அது --- அங்ஙனம் ஒழுகாத தன்மை, ஒரு பக்கம் நீரொழுகி --- தாயின் தனங்களை உண்ணுங் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீரொழுகி; பால் ஒழுகும் ஆறு --- மற்றொரு பக்கம் பாலும் ஒழுகுமாற்றை ஒக்கும்.

         அரசன் செல்வம், நல்குரவு நோக்காது முறையறிந்து நீதி கூறுதல் வேண்டும்.

         தாய் தன் குழந்தைகளுக்குள், நல்ல குழந்தை இது, தீய குழந்தை இது என்று அறிந்து பாலும் நீரும் அளித்தல் இல்லாமைபோல் அரசனும் செல்வம், வறுமை நோக்கி ஒருவற்கு நன்மையும் மற்றவற்குத் தீமையும் வர நீதி கூறலாகாது என்பதாம்.

     தாய் தனது குழந்தைகளுக்குப் பால் தரும்போது, ஒரு பக்கம் பாலும், ஒரு பக்கம் நீரும் வருவது இல்லை. தாய் ஒன்றாய் மதித்தல் போல வேறுபாடின்றி நீதி கூறல் வேண்டும். வழக்குற்றார் இருவருள் வென்றவர் மகிழ்தல் இயல்பே. தோற்றார் வருந்துதல் இயல்பே. இருவர்க்கும் ஒப்ப ஒழுகுமாறு என்னை எனின் தோற்றார்க்குத், தான் 'நடுவு நிலைமையை உடையான் என்பதும்' தோற்றதால் வருந் துன்பத்தினை 'யாவர்க்கும் தோல்வி வெற்றி உண்டு அதற்காக வருந்தாது ஒத்தல் வேண்டுமென்றும்' இழந்த பொருள்மேல் அவர் கொண்ட விருப்பத்தைப் 'பொருளின் இயல்பு மாறி வருதலே ஆதலின் அதனிடம் பற்று வையாது ஒழிதல் வேண்டும் என்றும்' அரசன் விரித்துக் கூறவே அவரும் அவரை ஒப்ப மகிழ்வெய்துவர். இது இருவருக்கும் ஒப்ப நடந்தவாறாம். 'நேர் ஒக்க வேண்டும்' என்பதும் இது. 'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி' என்பதே இது.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...