014. ஒழுக்கம் உடைமை - 03. ஒழுக்கம் உடைமை




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "எல்லார்க்கும் ஒழுக்கம் உடைமை என்பது அவரவர் குலத்திற்கு ஏற்ற ஆசாரத்தை உடையது; அந்த ஆசாரத்தில் இருந்து தவறுதல், குலத்தில் இழிந்த குலம் ஆகிவிடும்" என்கின்றது.

     பிறந்த சாதியால் இழிந்த குலத்தவரானாலும், ஒழுக்கம் உடையவர் உயர்ந்த குலத்தினராக மதிக்கப்படுவார். உயர்ந்த குலத்தில் பிறந்தவரானாலும், அந்தக் குலத்திற்கு உரிய ஆசாரத்தில் தவறி ஒழுகினால், அவர் தாழ்ந்த குலத்தவராகவே கருதப்படுவார். ஆசாரம் உள்ள இடத்தில் குணம் உண்டாகும். ஆசாரம் இல்லாத இடத்தில் குற்றம் உண்டாகும்.

திருக்குறளைக் காண்போம்.....

ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒழுக்கம் உடைமை குடிமை --- எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலன் உடைமையாம் ,    இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.

          (பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, பிறைசை சாந்தக் கவிராயர் பாடிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வேட வான்மீகர் பின்பு வேதியரின் மேலானார்,
ஏடவிழ்தார் சூடும், இரங்கேசா! - நாடில்
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

இதன் பதவுரை --- 

     ஏடு அவிழ் தார் சூடும் இரங்கேசா --- இதழ் விரிந்த மலர்மாலைகளைத் தரித்த திருவரங்கநாதக் கடவுளே!

     நாடில் --- ஆராயுமிடத்து,  வேட வான்மீகர் --- வேடர் குலத்திற் சேர்ந்த வான்மீகர்,  பின்பு --- மாமுனிவரான பின்பு,  வேதியரின் மேல் ஆனார் --- பிராமணரிலும் சிறந்தவரானார்.  (ஆகையால், இது) ஒழுக்கம் உடைமை குடிமை --- ஆசாரம் கெடாமல் இருக்கப் பெறுதலால் (தாழ்ந்த குலமேனும்) உயர்ந்த குலமாகும்,  இழுக்கம் --- ஆசாரம் கெடுதலால், இழிந்த பிறப்பு ஆய்விடும் --- உயர்ந்த குலமேனும் தாழ்ந்த குலமாகும் (என்பதை விளக்குகின்றது).

         விளக்கவுரை --- வான்மீக முனிவர் ஆதியில் அந்தணராய்ப் பிறந்தும், பிறப்பொழுக்கம் கெட்டு வேடர் குலத்தில் சேர்ந்து வழிமறி கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தார். ஆகையால், இழிந்த பிறப்பினறாய் எண்ணப்பட்டிருந்தார். இதனால், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பது விளங்குகிறது. அவரே பிறகு வழியே சென்ற எழுமுனிவரையும் (சத்த ரிஷிகள்) வழிமறித்துக் கொள்ளை அடிக்கத் தொடங்குகையில், அவர்கள் அவர்மேல் மனம் இரங்கி, "அந்தணணா இப்படிக் கேடுகெடுவான், இவனை ஈடேற்ற வேண்டும்" என்று எண்ணி, ஸ்ரீராம மந்திரத்தை உபதேசித்தார்கள். அதனால் அவர் ஆசாரம் சிறந்து தவமேற்கொண்டு,, ஸ்ரீராம காதையைக் காவியமாகப் பாடி, வேதிய முனிவராய் விளங்கினார். இது 'ஒழுக்கமுடைமை குடிமை' என்பதை விளக்குகின்றது.

     'வேட வான்மீகர்' என்பதற்கு, 'வேதியராய்ப் பிறந்தும் வேடகுலத்திற் சேர்ந்து ஒழுக்கம் தவறின வான்மீகர்' என்பது பொருள்.

அடிமையில் குடிமை இல்லா
         அயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடமைப் பட்ட
         குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
         மொய்கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
         அரங்கமா நகரு ளானே.

பழுதிலா ஒழுக லாற்றுப்
         பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும்
         எம்அடி யார்கள் ஆகில்
தொழுமின் நீர் கொடுமின் கொள்மின்
         என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போன்ம்
         மதிள்திரு அரங்கத் தானே.
                 
எனவரும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருப்பாசுரங்களைக் கண்டு தெளிக.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.  --- இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன் இனிது - கூடிய மட்டும், தருமஞ் செய்தல் மிக இனிது; பால்பட்டார் கூறும் பயம் மொழி மாண்பு இனிது --- நன்னெறிப் பட்டார் சொல்லும்  பயனுடைய சொல்லின் மாட்சிமை இனிது; வாய்ப்பு உடையர் ஆகி வலவைகள் அல்லாரை காப்பு அடைய கோடல் இனிது --- (கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய நலம் யாவும்) பொருந்துதல் உடையவராய் நாண் இலிகள் அல்லாதவரை காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல் இனிது.

         அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும், நல்லன செய்தலுமாம். ஆற்றுந்துணையாவது பொருள் அளவிற்கேற்பச் செய்தல். தமது தன்மையை விடாதார் பகைவராயினும், நொதுமலராயினும், நண்பராயினும் பயனுடைய மொழிகளையே பகர்தலின் ‘பாற்பட்டார் கூறும் பயமொழி ' என்றார். கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் ஒருவனிடத்தில் நாணம் ஒன்று இல்லையாயின அவன், தன்னை அடைந்தாரைக் கைவிடுவன் என்பது, ‘வாய்ப்புடையர் ஆகி வலகைள் அல்லாரைக், காப்படையக் கோடல் இனிது 'என்பதன் கருத்தென்க.

பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.    ---  சிலப்பதிகாரம், வரந்தரு காதை.

இதன் பொருள் ---
        
1. பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின் பிறர்க்குக் கவலையும் துன்பமும் விளைத்தலை முறைமையால் விட்டொழிமின்,

2. தெய்வம் தெளிமின் - கடவுள் உண்டென வுணர்மின்,

3. தெளிந்தோர்ப் பேணுமின் - அங்ஙனம் கடவுளை யுணர்ந்தோரை விரும்புமின்,

4. பொய்யுரை அஞ்சுமின் - பொய்கூறற்கு அஞ்சுமின்,

5. புறஞ்சொல் போற்றுமின் - புறங்கூறுதலைப் பரிகரிமின்,  ---  (போற்றுதல் - உண்டாகாது பாதுகாத்தல்.)

6. ஊன் ஊண் துறமின் - ஊன் உண்ணுதலை விலக்குமின்,

7.உயிர்க்கொலை நீங்குமின் - உயிர்களைக் கொலை செய்தலை ஒழிமின்,

8. தானம் செய்ம்மின் - தானத்தினை மேற்கொண்டு செய்ம்மின்,

9. தவம் பல தாங்குமின் - தவம் பலவற்றையும் மேற்கொண்மின்,

10. செய்ந்நன்றி கொல்லன்மின் - பிறர் செய்த உதவியை மறவன்மின்,

11. தீ நட்பு இகழ்மின் - தீயோரது தொடர்பினை எள்ளி ஒதுக்குமின்,  ---  தீ நட்பு - தீயோர் நட்பு.

12. பொய்க் கரி போகன்மின் - பொய்ச் சான்று கூறும் நெறியிற் செல்லன்மின்,

13. பொருள் மொழி நீங்கன்மின் - உண்மை மொழியினை விட்டு நீங்கன்மின், --- பொருண் மொழி - முனிவர் கூறும் பயனுள்ள மொழியுமாம்.

14. அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் - அறநெறிச் செல்லும் சான்றோர் அவையினை நீங்காது அடைமின்,

15. பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் - மறநெறிச் செல்லுந் தீயோர் அவைக்களத்தினின்றுந் தப்பி நீங்குமின்,

16. பிறர்மனை அஞ்சுமின் - பிறர்மனைவியை விரும்புதலை அஞ்சுமின்,

17. பிழை உயிர் ஓம்புமின் - துன்பமுற்ற உயிர்களைக் காமின்,  --- பிழைஉயிர் - மரிக்கிற உயிரென்பர் அரும்பதவுரையாசிரியர்.

18. அறமனை காமின் - இல்லறத்தைப் போற்றுமின், --- அறமனை - மனையறம்.

19. அல்லவை கடிமின் - பாவச் செயலை நீக்குமின்,

20. கள்ளும் களவும் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் - கள்ளும் களவும் காமமும் பொய்யும் பயனில சொல்லும் கூட்டமும் என்னும் இவற்றை ஒழிக்கும் உபாயத்தால் ஒழித்திடுமின், --- விரகு - சூழ்ச்சி ; சதுரப்பாடுமாம்.

இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா - இளமை பொருள் உடல் இவை மூன்றும் நிலையற்றன,

உளநாள் வரையாது - அறுதியிட்டுள்ள வாழ்நாள் சென்று கழிதலைக் கைவிடாது.

ஒல்லுவது ஒழியாது - சாரக்கடவதாய துன்பம் சாராது நீங்காது ஆகலான்,

செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின் - இறந்த பின் செல்லும் மறுமை உலகிற்கு உற்ற துணையாகிய அறத்தினைத் தேடுமின்,

மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் - வளமிக்க இப்பெரிய வுலகத்து வாழும் மக்களை யென்றாரென்க.


கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம் குடிக்கு எலாம்.
                       --- கம்பராமாயணம், நாட்டுப் படலம்.

இதன் பதவுரை ---

     குடிக்கு  எலாம் --- கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும் --- செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா  நிறைவளம் சுரக்கும் --- நன்செயும்  புன்செயும் ஆகிய நிலங்கள் அளவற்ற நிறைவளத்தைக்  கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும் --- சுரங்கங்கள் நல்ல  இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுதற்கு அரிய
தம் குலம் ஒழுக்கம் சுரக்கும் --- பெறுவதற்கு அரியதாகிய  குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்.


நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல்அளவு அல்லால் பொருள்இல்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி, ஆள்வினை
என்று இவற்றான் ஆகும் குலம்.     ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     நல்ல குலமென்றும் தீயகுலமென்றும் சொல் அளவு அல்லால் பொருள் இல்லை --- நல்ல குலம் என்றும் கெட்ட குலம் என்றும் உலகத்தில் பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறுஞ் சொல்லளவே அல்லால், அதற்குப் பொருளில்லை. தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை என்று இவற்றான் ஆகும் குலம் --- குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினை உடைய செல்வத்தால் மட்டுமன்று, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மால் எல்லாம் உண்டாவதாகும்.

         தவம் கல்வி ஆள்வினை முதலியவற்றில் முயற்சியுடையாரே பிறரால் நேயம் கொள்ளுதற்குரிய உயர் குலத்தோராவர்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...