005. இல்வாழ்க்கை - 08. ஆற்றின் ஒழுக்கி




திருக்குறள்
அறத்துப்பால்
                                   
இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை

     இந்த அதிகாரத்தில் வரும் எட்டாவது திருக்குறள், தவம் செய்வோரையும் அவரவர்களுடைய வழியிலே நடத்தி, தானும் தனக்கு உரிய அறநெறியில் இருந்து தவறாதவனுடைய இல்லற வாழ்வானது, தவம் செய்பவருடைய நிலையிலும் சிறப்பை உடையது என்கின்றது.

     தவம் செய்வரை அவரவர் வழியில் நடத்தல் என்பது, அவர்க்கு உற்ற பசியைத் தீர்த்தலோடு, அவர் தவம் செய்வதற்கு உரிய உதவிகளையும் செய்தல். தவம் செய்பவரது நிலைமை தனக்கு வந்த பசித் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதல். இல் வாழ்வானது நிலையோ, தனக்கு வந்த பசியைப் போக்கிக் கொள்ளுதல் அல்லாது, தவம் செய்வாருடைய பசியையும் தீர்த்தல். தான் பசித்தாவது, பிறருடைய பசியைப் போக்குவது இல்லறத்தானுடைய நிலைமை. தவம் செய்வார் பிறருடைய பசியைப் போக்கும் நிலைமை இல்லாதவர்.

திருக்குறளைக் காண்போம்....

ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை,
நோற்பாரின் நோன்மை உடைத்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

      ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை --- தவம் செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணி, தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை;
    
     நோற்பாரின் நோன்மை உடைத்து --- அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறை உடைத்து.

         (பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் தாம் இயற்றிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில், பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

இல்வாழ் மருத்தர் போல் ஈசன் அடிக்கு அன்பு செய
வல்லாரேல், நோற்க வருவானேன், ---  எல்லாரும்
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.            

         மருத்தர் என்பவர் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்த ஒரு சிவனடியார். இவர் தினமும் சிவநேசர்களைத் தேடி அவர்களுக்கு உணவு அளித்து வந்தார். தம் வாழைத் தோட்டத்தில் உள்ள வாழைகளை எல்லாம் இலையும் பூவும் காயும் இல்லாமல் எல்லாவற்றையும் அடியாருடைய உணவுக்கே இவர் பயன்படுத்தி வந்தார். அந்த ஊரில் திருத்தங்கி என்பவனும் வாழைத் தோட்டம் ஒன்று வைத்து இருந்தான். உலுத்தனாகிய அவன் ஓர் இலையையும் பறிக்காமல் தோட்டத்தை நன்றாகப் போற்றி வந்தான். 

         ஒரு சமயம் ஔவையார் அவன் வீட்டுக்கு விருந்தினராக வந்தார். அவன், அவரை மருத்தர் வீட்டுக்குப் போகுமாறு வழி காட்டினான். அன்று மருத்தர் வீட்டில் வாழை இலை கிடையாமல் போகவே, திருத்தங்கியின்பால் அவர் வந்து, வாழை இலையைக் கடன் கேட்க, அவன் மறுத்து விட்டான். ஔவையார் இச்செய்தியை அறிந்து வாழை இலை இல்லாமலே சாப்பாட்டை முடித்துக் கொண்டு, மருத்தன் வீட்டு வாழைத் தோட்டத்தில் உள்ள வாழை மரங்களில் உள்ள குருத்து, இலை, பூ, காய் ஆகிய எல்லாமும் அவ்வப்போது வருகின்ற விருந்தினருக்குப் பயன்பட்டு வந்ததால், வாழை மரங்கள் குருத்து, இலை, பூ, காய் ஆகிய எவையும் இல்லாமல் இருந்தன. யாருக்கும் உதவாத, திருத்தங்கி என்பவனுடைய வாழைத் தோட்டத்திலோ எல்லா வாழை மரங்களும் இனிமையான பழங்களோடு விளங்கி நின்றன. ஆனாலும் அவை யாருக்கும் பயன்படவில்லை என்னும் பொருள்பட ஒரு பாடலைப் பாடினார் என்றும், திருத்தங்கியின் வாழைத் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களில் குருத்து, இலை, பூ, காய் எதுவும் இல்லாமல் போனது என்றும் செவிவழிச் செய்தி ஒன்று வழங்குகிறது. பாடல் இதோ....

திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்,
மருத்தன் திருக்குடந்தை வாழை --- குருத்தும்
இலையும் இலை, பூவும் இலை, காயும்இலை என்றும்
உலகில் வருவிருந்தோர் உண்டு.

     அடுத்து, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில், சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

மெய்த்தமிழ் வேதத்து உலகுஉய்வித்து உயர்ந்தார் வள்ளுவனார்
முத்த இல்வாழ்வு உற்று, முருகேசா! - உத்தமமாம்
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 

இதன் பொருள் ----         

         முருகேசா --- முருகப் பெருமானே,

     வள்ளுவனார் --- திருவள்ளுவர்,  முத்த இல்வாழ்வு உற்று --- முதிர்ந்து சிறந்த முறையிலே இல்வாழ்க்கையை நடத்தி, மெய்த் தமிழ் வேதத்து --- மெய்ம்மை பொருந்திய தமிழ் மறையாகிய திருக்குறளினாலே, உலகு உய்வித்து --- உலகத்தினர் கடைத்தேறுமாறு செய்து, உயர்ந்தார் --- தாமும் சிறந்த பெருமையை அடைந்து திகழ்ந்தார். ஆகவே, உத்தமமாம் --- சிறந்ததாகிய, ஆற்றின் --- வழியிலே, ஒழுக்கி --- பிறரும் நடக்குமாறு செய்து, அறன் இழுக்கா இல்வாழ்க்கை --- தானும் அறநெறியிலே வழுவாத இல்லற வாழ்க்கையை மேற்கொண்டிருத்தல், நோற்பாரில் --- தவம் செய்வாரை விட, நோன்மை உடைத்து --- வல்லமையை உடையதாகும்.

         திருவள்ளுவ நாயனார் தாம் இல்வாழ்க்கையை நடத்தவேண்டிய முறைப்படி நடத்திக் காட்டியதன்றித் தமிழ் மறையாகிய திருக்குறளைச் செய்து, உலகத்தையும் வாழ்வித்து அருளினார். இல்வாழ்க்கையை முறைப்படி நடத்துவோர் தவம் செய்வோரைப் பார்க்கினும் சிறந்தவர்களாவர் என்பதாம். முத்தம் என்பதற்கு விருப்பு எனவும் உரை கூறுவர். அவ் உரைக்கு விருப்பத்தோடு இல்வாழ்க்கை என்று பொருள் கொள்க.

திருவள்ளுவர் கதை

         தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், பகவன் என்பவருக்கும் ஆதி என்பவளுக்கும் மகனாகத் தோன்றினார். வாசுகி என்னும் கற்பில் சிறந்த மாதை மணந்து இல்லறத்தை நல்லறமாக இனிது நடத்தினார். திருவள்ளுவ தேவருடைய இல்லறம் எல்லோரும் போற்றத் தக்கதாக இருந்தது. தேவர்கட்கு உண்டாகும் ஐயத்தைக் கூட அகற்றத்தக்க சீரிய நிலையில் திருவள்ளுவருடைய தெய்வத் தன்மை சிறந்து விளங்கியது. ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங் குறளடங்கிய தமிழ் மறையைச் செய்து உலகிற்கு அளித்தார். அம்மறை நான்மறையைப் போன்றே சிறப்புடையதாய் நானிலத்தில் விளங்கிப் பெருமையுறுவதாயிற்று. அம் மறையை நாட்டினர் பரிந்து கற்றுப் பலன் பெற்று உய்யலாயினர்.
                                                     
     அடுத்து, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் என்னும் பெர்யார், தாம் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின் வரும் பாடலைப் பாடிஉள்ளார்.

எய்துசவி பரிக்குஅன்று ஈன்ற மகளாரை மணம்
செய்ய அரச் ஈந்தான், சிவசிவா! - துய்ய தவத்து
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.            

         சவுபரி முனிவர் காட்டிற்குச் சென்று தனிமையில் கடுந்தவம் மேற்கொள்ள எண்ணினார். காட்டில் உள்ள பிற முனிவர்களின் கூட்டு, தான் விரும்பும் தனிமைக்குத் தடையாக இருக்குமென்று எண்ணி, தண்ணீருக்குள் கண்களை மூடித் தவமிருந்தார். ஒருநாள் கண் விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய மீனைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கில் சிறிய மீன்கள் செல்வதைப் பார்த்ததும் அவருக்குச் சபலம் உண்டாயிற்று. தந்தை, தாய், மக்கள் சுற்றம் என்று இந்த மீன்கள் ஆனந்தமாக உலவுவதைக் கண்டு, இல்லறமே பெரிதும் இன்பம் என்று எண்ணி வெளியே வந்தபோது, மனு என்னும் மன்னனைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்கு உள்ள ஐம்பது பெண்களையும் மணக்க விரும்பினார். சுயம்வரத்தில் அவ்வாறே மணம்செய்து கொண்டார் அவர்களுடன் இல்லற இன்பத்தில் திளைத்தார் என்பது பாகவதத்தில் உள்ள வரலாறு.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...