006. வாழ்க்கைத் துணைநலம் - 07. சிறைகாக்கும்




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

ஆறாம் அதிகாரம் - வாழ்க்கைத் துணைநலம்
  
     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், பெண்டிரைச் சிறையினால் பாதுகாக்கும் காலவலானது பயனைத் தராது, அவர் தமது நிறையால் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் காவலே சிறப்பு உடையது என்கின்றது.

     "மாதர்கள் தங்களைத் தாங்களே காத்தல் வேண்டும்.  அதுவே அவர்களுக்குச் சிறந்த காவல் ஆகும். சிறந்த காவலரை வைத்துப் புறத்தே போக விடாது வீட்டிலேயே நன்றாகக் காத்தாலும், அதனால் அவர்கள் காக்கப்படுவது இல்லை என்கிறது" மனுதரும சாத்திரம்.

     சிறை என்று சொல்லப்படுவது, ஒருவன் தான் நினைத்தவாறு ஒழுகாமல், பிறர் நினைத்தவாறு ஒழுகும்படி காத்தல் ஆகும்.

     நிறை எனப்படுவது, காப்பன காத்து, கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் ஆகிய கற்பு எனப்படும்.

     மனதைக் கற்பின் வழியிலே நிறுத்தல் இல்லாத போது, மதில் காவல், வாயில் காவல் முதலானவற்றால் காப்பது பயனற்றது. எனவே, சிறைக் காவலை விடவும், நிறைக் காவலே சிறந்தது என்றார் நாயனார்.

இனி, திருக்குறளைக் காண்போம் ---

சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?  மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை. 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் --- மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்?

     நிறை காக்கும் காப்பே தலை --- அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல்.

      (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தல் சிறப்புக் கூறப்பட்டது.

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய எழுந்த நூல்களுள், தருமபுர ஆதீனம் கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்பதும் ஒன்று. அதில் வரும் பாடல் ஒன்று இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காண்போம்.

அறவோன் அகத்து இருந்தாள் அன்பு கண்டேம்,கண்டேம்
இறையோடு இறந்தாள் இயல்பு, --- முறையுள்
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும், மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.                

         அறவோன் அகத்து இருந்தாள் --- கௌதம முனிவருடன் வாழ்ந்த அவர் மனைவி அகலிகை. அகலிகையின் அன்பினைக் கண்டேம் என்றது, அகலிகை இந்திரனுடன் கலந்து மகிழ்ந்து, கௌதம முனிவருக்குத் துரோகம் செய்ததைக் குறிக்கும்.

     இறையோடு இறந்தாள் --- திருநாவுக்கரசு நாயனாரின் தாயாராகிய மாதினியார். தம் கணவனார் புகழனார் இறந்ததும், உயிர் நீத்தார் என்று பெரியபுராணம் பின் வருமாறு கூறும்...

"ஆயநாளிடை இப்பால் அணங்கு அனையாள் தனைப்பயந்த
தூயகுலப் புகழனார், தொன்று தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே, இவ்உலகை விட்டு அகலத்
தீயஅரும் பிணி உழந்து, விண்உலகில் சென்று அடைந்தார்".

"மற்று அவர்தாம் உயிர் நீப்ப, மனைவியார் மாதினியார்,
சுற்றமுடன் மக்களையும் துகள் ஆகவே நீத்துப்
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனாருடன் சென்றார்."

எனவரும் பெரியபுராணப் பாடல்களை இங்கு ஓதி உணர்க.
                                                              

சிறை காக்கும் காப்புப் பயன் தராது......

நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ!
வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல்.    ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     வருந்த வலிதினின் யாப்பினும் --- வருந்துமாறு வலிபெறக் கட்டினாலும், நாய்வால் திருந்துதல் என்றுமோ இல் --- நாயின் வால் வளைவினின்றும் நீங்கித்திருந்துதல் என்றும் இல்லை; (அதுபோல நிறையான் மிகுகல்லா நேரிழையாரை --- மனத்தை அடக்கும் வலிமை மிக்கிராத அழகினை உடைய கலன் அணிந்திருக்கும் மகளிரை, சிறையான் அகப்படுத்தல் ஆகா --- காவலால் தீய செயலினின்றும் நீக்கி அகப்படுத்தல் முடியாது, அறையோ --- முடியும் என்பார் உளராயின் அவரை அறைகூவி அழைக்கின்றேன்.

         மகளிர்க்குச் சிறைகாப்பினும் நிறைகாப்பே சிறந்ததாம்.


நிறை காக்கும் காப்பே பயன் தரும்....

கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன்உறு கணவன் சாவுறின் காவலும்   
நிறையின் காத்துப் பிறர்பிறர்க் காணாது    
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்
                         --- மணிமேகலை, உதயகுமாரன் அம்பலம் புக்க காதை.

இதன் பதவுரை ---

     கன்னிக் காவலும் கடியிற் காவலும் --- கன்னிப் பருவத்திற் காவலும் மணத்தின் பிற்காவலும், தன் உறு கணவன் சாவுறில் காவலும் --- தன்னை அடைந்த கணவன் இறப்பிற் காவலும் ஆகிய இவற்றை, நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது --- உளத்தைக் கற்பு நெறியில் நிறுத்தலாற் காத்து அயலாரை நோக்காமல், கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் --- கணவனையன்றித் தெய்வத்தையும் தொழாத குலமகளிர்...

பருஞ் சிறை இன்னன பன்னி உன்னுவான்,
'அருஞ் சிறை உற்றனள் ஆம்' எனா, மனம்;
'பொரும் சிறை அற்றதேல், பூவை கற்பு எனும்
இருஞ் சிறை அறாது' என, இடரின் நீங்கினான்.
                              ---  கம்பராமாயணம், சடாயு உயிர் நீத்த படலம்.

இதன் பதவுரை ---

     பருஞ்சிறை --- பெரிய சிறகுகளை உடைய சடாயு; இன்னன பன்னி --- இத்தகைய சொற்களைச் சொல்லி; அருஞ்சிறை உற்றனள் ஆம் எனா மனம் உன்னுவான் --- (சீதை) நீங்குதற்கு அரிய (இராவணனது) சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என்று மனத்தில் நினைத்து; பொரும் சிறை அற்றதேல் --- போர் செய்கிற (என்) சிறகுகள் அழிவடைந்தது எனினும்; பூவை கற்பு எனும் இருஞ்சிறை அறாது என --- நாகண வாய்ப்புள் போன்ற (இனிய மொழி பேசும்) சீதையினுடைய கற்பு என்கிற பெரிய சிறகு அழியாது என்று எண்ணி; இடரின் நீங்கினான் --- துன்பம்
நீங்கியவனானான்.

     பலவாறு எண்ணிய சடாயு சீதை இராவணனது நீங்குதற்கு அரிய சிறைச் சாலையை அடைந்தாள் போலும் என எண்ணி, அவ்வாறெனினும் என் சிறகுகள் போலச் சீதையின் கற்பெனும் சிறகு அழியாது என எண்ணி வருத்தம் நீங்கினான்.

     பருஞ்சிறை --- பெரிய சிறகுகள்; இங்கு ஆகுபெயராய்ச் சடாயுவைக் குறித்தது. பூவை --- நாகண வாய்ப்புள் (இனிய மொழி) குறித்தது. சிறையுற்றாலும் கற்பெனும் இருஞ்சிறை அறாது என்றதன் நயம் காண்க.

    
தருமமே காத்ததோ ? சனகன் நல் வினைக்
கருமமேகாத்ததோ? கற்பின் காவலோ ?
அருமையோ !அருமையே ! யார் இது ஆற்றுவார் ?
ஒருமையே, எம்மனோர்க்கு, உரைக்கற்பாலதோ ?
                                          ---  கம்பராமாயணம், காட்சிப் படலம்.

இதன் பதவுரை ---

     (பிராட்டியின் தவத்தை) தருமமே காத்ததோ --- தருமமே பாதுகாத்ததோ ? சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ --- சனகனுடைய நல்லூழால் செய்யப்பெற்ற செயல் பாதுகாத்ததோ ? கற்பின் காவலோ --- கற்பினுடைய பாதுகாப்பா? (இத்தவம்) அருமையே அருமையே --- அருமையானது அருமையானது; இது --- இப்படிப்பட்ட தவத்தை; யார் ஆற்றுவார் --- எவர்கள் செய்வார்கள் ?(இத்தவம்);  ஒருமையே --- ஒப்பற்ற சிறப்புடையது; எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ --- எம் போன்றவர்கள் சொல்லும் தன்மை உடையதோ. 


வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின், இழுக்கெனைத்துஞ்
செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.  ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம் பெறுவராயின் --- சோர்வு சிறிதும் இல்லாத வாளின் காவலில் இருந்தும் மகளிர் ஒழுக்கந் தவறுதலைத் தாம் உறுவராயின், இழுக்கு எனைத்தும் செய்குறாப் பாணி சிறிதே அச் சின்மொழியார் கையுறாப் பாணி பெரிது --- குளிர்ந்த மொழிகளைப் பேசும் அம்மகளிர் தமது வாழ்நாளிற் குற்றம் சிறிதுஞ் செய்யாத காலம் சிறிதே; மற்றுத் தம் கணவர்க்கு வயப்பட்டொழுகாக் காலம் பெரிதென்க.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...