013. அடக்கம் உடைமை - 09. தீயினால் சுட்டபுண்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "நெருப்பினால் சுட்ட புண்ணானது, உடம்பில் இருந்தாலும் அது அப்போதே ஆறிப் போகும்; ஆனால், தீய சொற்களைக் கொண்டு நாக்கினால் சுட்ட வடுவானது, மனத்தில் இருந்து எப்போதும் ஆறாது" என்கின்றது.

     ஆறிப் போவதால், தீயினால் சுட்டதைப் "புண்" என்றார். ஆறாது உள்ளத்தில் இருந்து வருத்துவதால், தீய சொல்லை "வடு" என்றார். ஆறாது இருத்தலால், தீய சொல்லானது தீயினும் கொடுமை உடையது என்றார்.

திருக்குறளைக் காண்போம்....

தீயினால் சுட்டபுண் உள் ஆறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     தீயினால் சுட்டபுண் உள் ஆறும் --- ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்;

     நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

      (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

காவாது ஒருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாது தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.   --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் ---  அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லிய சினச்சொல், ஓவாது தன்னைச் சுடுதலால் --- என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் --- இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தை உடையவர்கள், எஞ்ஞான்றும் --- எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து --- மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

         சினம் கொள்வது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.


எள்ளிப் பிறர்உறைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும் – மெள்ள
ஆறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின்,
பிறிது எனினும் வேண்டா தவம்.    --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல் --- தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல். கொள்ளி வைத்தாற் போல் ---நெருப்பினாற் சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும் ---தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால் --- அறிவாகிய நீரால், மெள்ள --- அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின் --- அத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும் --- வேறு தவம் ஒன்றும், வேண்டா --- செய்ய வேண்டுவதில்லை.


தீயினால் சுட்ட செம்புண் ஆறும், அத் தீயில் தீய
வாயினாற் சுட்ட மாற்றம் ஆறுமோ? வடுவே அன்றோ?
பேயினால் புடையுண்டாரோ, மறப்பரோ பெரியோர் என்றான்
வீயினால் தொடுத்த தண்தார்வேந்தர்க்கு வேந்தன் மாமன்.
                                                ---  வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

இதன் பதவுரை ---

     தீயினால் சுட்ட செம் புண் ஆறும் --- நெருப்பினால் சுட்டதனால் ஆகிய செந்நிறமான புண்ணானது ஆறிப்போய் வடுத் தீர்ந்து விடும்; த் தீயின் தீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ --- அத்தீயைக் காட்டிலும் கொடிய வாயினாற் சுடுவது போன்ற கொடுஞ்சொற்கள் மறைந்துவிடுமோ? வடுவே அன்றோ --- ஒருபொழுதும் மறையாத வடுவாகவே ருக்குமன்றோ? பேயினால் புடையுண்டாரோ --- (நீங்கள் செய்த தவறுகளை எல்லாம் மறப்பதற்குப் பாண்டவர்கள்) பேயினால் புடைக்கப்பட்டுத் தம் வசம் இழந்து இருப்பவர்களோ? பெரியோர் மறப்பரோ --- (நீங்கள் செய்த) பெரும்பிழைகளைப்) பெருமை பெற்ற பாண்டவர்கள் மறந்துவிடுவார்களோ?' என்றான் --- என்று கூறினான்: (யாவன் எனில்,) வீயினால் தொடுத்த தண் தார் --- (நந்தியாவர்த்த) மலர்களால் தொடுக்கப் பட்ட குளிர்ந்த மாலையை அணிந்த, வேந்தர்க்கு வேந்தன் --- மன்னர்மன்னனான துரியோதனனது, மாமன் --- மாமனாகிய சகுனி.

      'நீங்கள் பாண்டவர்கள் திறத்தில் கூறிய தீச்சொல்லோ மிகவும் கொடியது: ஒருநாளும் மறக்கற்பாலதன்று; இத்தகைய கொடுஞ்சொல்லை மனத்திற்கொள்ளாது மறக்கவேண்டும் என்றால், தம் வசம் தப்பிய பேயர்க்கு அன்றி நல்லறிவு உடையார்க்கு இயலாது; பாண்டவர்கள் பெருந்தன்மையராதலால், மனத்தில் கொள்ளார் என்று நினைத்தற்கும் வழியில்லை; "சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பெரியோரப்பிழை பொறுத்தலும் அரிதே" யன்றோ! ஆகவே, இப்பொழுது நீங்களே உங்கட்குக் கேட்டினைத் தேடிக் கொண்டவர்களாய் விட்டீர்களே!' என, இரக்கம் தோன்றுமாறு சகுனி கூறினன். 

     "தீயினாற் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு" என்ற திருக்குறள் இங்கு உணரத்தக்கது.

     தீயினாற் சுட்ட செம்புண்ணாகிற உபமானத்தினும் வாயினாற் சுட்ட மாற்றமாகிற உபமேயத்துக்கு ஆறாமல் வடுவாய் இருத்தலாகிற சிறப்பைக் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...