திருக்குறள்
அறுத்துப்பால்
இல்லற இயல்
ஒன்பதாம் அதிகாரம் -
விருந்தோம்பல்
இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "யாரையும் எதிர்நோக்காது
செல்லும் விருந்தினரைப் (ஞானியரை) போற்றி, வருகின்ற விருந்தினரை
எதிர்பார்த்து இருப்பவன், விண்ணவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்" என்கின்றது.
திருக்குறளகைக்
காண்போம்...
செல்விருந்து
ஓம்பி, வருவிருந்து பார்த்து
இருப்பான்,
நல்விருந்து
வானத்த வர்க்கு.
இதற்குப்
பரிமேலழகர் உரை ---
செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து
இருப்பான் --- தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப்
பார்த்துத் தான், அதனோடு உண்ண
இருப்பான்;
வானத்தவர்க்கு நல் விருந்து ---
மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம்.
('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா
விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த
நூல்களுள், பிறைசைச் சாந்தக் கவிராயர் இயற்றிய, நீதிசூடாமணி
என்னும் "இரங்கேச வெண்பா" ஒன்று ஆகும். அதில் இத்
திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....
தேசுபெறு
மாறன் தெளித்த முளையமுதிட்டு
ஈசனுடன்
போந்தான், இரங்கேசா! -
பேசுங்கால்
செல்விருந்
தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து
வானத் தவர்க்கு.
இதன்
பதவுரை
---
இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே!
தேசு பெறு மாறன் --- புகழ் பெற்ற
இளையான்குடிமாற நாயனார், தெளித்த முளை அமுது
இட்டு --- அன்று விதைத்த நெல்முளையை அமுதாக்கிப் படைத்து, ஈசனுடன் போந்தான் --- சிவபிரானுடன்
சிவலோகம் சென்றார். (ஆகையால், இது) பேசுங்கால் ---
எடுத்துச் சொல்லுமிடத்து, செல் விருந்து ஓம்பி ---
உண்டு செல்லும் விருந்தாளிகளை உபசரித்து விட்டு, வருவிருந்து பார்த்து இருப்பான் --- இனி
வரும் விருந்தாளிகளை எதிர்நோக்கி இருப்பவன், வானத்தவர்க்கு --- சுவர்க்கலோக
வாசிகளாகிய தேவர்களுக்கு, நல் விருந்து ---
இறந்த பிறகு நல்ல விருந்தாளியாவான் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- மருந்தே ஆயினும்
விருந்தோடு உண்.
விளக்கவுரை --- தமிழ்நாட்டில், இளையான்குடி என்னும் ஊரில் வாழ்ந்த
மாறன் என்னும் வேளாளர், தாளாளராய், "தொழுதூண் சுவையின்
உழுதூண் இனிது" என்றபடி
பழுதற உழுது பயிரிட்டுச் செல்வம் பெருக்கி,"தென்புலத்தார்
தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை" என்றபடி
இல்வாழ்க்கையை வாழும் இயல்பினான் வாழ்ந்து வந்தார். இவர் சிவபத்தியில் சிறந்து இருந்தாராகையால், சிவனடியவரை அவன் எனக் கருதி அன்புசெய்து
அமுது ஊட்டுவாராயினார். அதுகண்ட சிவபிரான் அவரது விருந்தோம்பல் திறத்தை அவர்
வாழ்வினன்றித் தாழ்வினும் போற்றுவார் என்று காட்டி உலகத்தவர்க்கு அவருடைய சிவபத்தியின்
சிறப்பை வெளிப்படுத்த அவருடைய செல்வத்தை மாற்றி, அவரை வறியவராக்கினார். அன்றியும், ஒருநாள் அரை இரவில் விடைமழை பொழியும்
இருட்டில், சிவபிரான் தாமொரு
விருத்த சிவனடியவர்போல் வேடம் தாங்கி, மெத்தப்
பசித்தவர் போன்று அவர் வீட்டுக் கதவைத் தட்டினார். வறுமையின் கொடுமையால்
உறக்கமின்றி இருந்த நாயனார், உடனே வந்து கதவைத்
திறந்து, சிவனடியவரை வரவேற்று
உபசரித்து, அங்கொரு புறம் அவரை
எழுந்தருளிவித்து, வீட்டில் ஒன்றும்
இல்லாதிருந்து, அவர்க்கு அன்னமிடும்
ஏற்பாட்டுக்காகத் தம் மனைவியாரோடு யோசித்து, அன்று பகல் விதைத்த நெல்முளையை மிக
வருந்தி வாரிக் கொண்டு வந்து, அவர் கையில்
கொடுத்தார். அதை வாங்கி அவ் அம்மையார், பத்தாவுக்கு
ஏற்ற பதிவிரதை ஆகையால், தக்கபடி பதம்செய்து
அமுதாக்கி அடியவர்க்குப் படைத்தார். பொய்ப் பசி கொண்ட அடியவர், அவர்களுடைய பத்தி வைராக்கிய உண்மை
அன்புக்கு வியந்து, மழவிடைமேல்
அவர்களுக்குக் காட்சி தந்து, அவர்களிருவரையும்
தமது உலகத்துக்கு அழைத்துக் கொண்டு போயினர்.
திருக்குறளின் பெருமையை உலகுக்கு விளக்க வந்த
நூல்களுள், சிதம்பரம்
பச்சைக் கந்தயைர் மடத்து சென்ன மல்லையர் இயற்றிய, "சிவசிவ
வெண்பா" ஒன்று
ஆகும். அதில் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த பாடல்....
அன்னம்இடான்
பொன்நா டுஅடைந்தும் தனதுஉடலைத்
தின்எனவே
தின்றான், சிவசிவா! -
மன்னிஅயல்
செல்விருந்
துஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து
வானத் தவர்க்கு.
தண்டகாரண மகிமையில் சுகேது மன்னன்
இட்டுண்டு வாழாமையில், நரகத்தில் தன் உடலைத்
தின்றான் என்று கூறப்பட்டுள்ளது.
பின்வரும்
பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்....
"திருஇருந்த
தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை
செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்
ஒருவிருந்தா கிலும் இன்றி உண்டபகல்
பகலாமோ, உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரஞ் செய்து அனுப்பி
பெருவிருந்துக்கு உபசாரஞ் செய்து அனுப்பி
இன்னம் எங்கே
பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பு அல்லால், விருந்து இல்லாது
வருவிருந்தோடு உண்பு அல்லால், விருந்து இல்லாது
உணும் சோறு மருந்து
தானே". --- தண்டலையார் சதகம்.
இதன்
பதவுரை ---
திரு இருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர் --- அருச்செல்வத்தோடு பொருட்செல்வமும் பொருந்தி
உள்ள திருத்தண்டலை என்னும் வளம் மிகுந்த நாட்டினில் இல்லறம் நடத்துகின்ற
பெரியோர்கள், ஒரு
விருந்து ஆயினும் இன்றி உண்ட பகல் பகலாமோ --- ஒரு விருந்தினராவது
இல்லாமல் உணவு கொண்ட நாளும் ஒரு நாள் ஆகுமோ? உறவாய் வந்த பெரு விருந்துக்கு உபசாரம்
செய்து அனுப்பி --- உறவு போல அன்புடன் வந்த பெரிய விருந்தினருக்கு முதலில் உணவு
அளித்து, வேண்டிய உபசாரங்களைச்
செய்து அனுப்பிய பின்னரும்,
இன்னும்
பெரியோர் எங்கே என்று - மேலும் விருந்தாக வரக்கூடிய
சான்றோர்கள் எங்கே என்று ( ஆவலோடு
காத்திருந்து) வரு விருந்தோடு
உண்பது அல்லாமல் --- வருகின்ற விருந்தினருடன் உண்பது அல்லமால், விருந்து இல்லாது
உணும் சோறு மருந்து தானே --- விருந்தினர் இல்லாமல் உண்ணுகின்ற சோறு ஆனது மருந்து போலக்
கசப்பாகத் தான் இருக்கும்.
கருத்து --- "செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்து இருப்பான், நல்விருந்து வானத்தவர்க்கு" என்னும் திருவள்ளுவ
நாயனார் கருத்தை இங்கு வைத்து எண்ணுக.
"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்"
என்பது கொன்றைவேந்தன். மருந்து என்னும் சொல் இங்கு அமுதம் என்னும் பொருளில்
வந்தது.
இல்லற வாழ்க்கையின் சிறப்புகளுள் ஒன்று விருந்தோம்பல்
ஆகும். விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உணவு வழங்கும் பண்பு இல்லாதவர்கள் இல்லற
வாழ்வின் சிறப்பைப் பெற இயலாது. இதை, "விருந்து
இலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்" என்றது கொன்றை வேந்தன். விருந்தினரை
அன்புடன் உபசரிக்க வேண்டும் என்னும் பொருள் படவே, "அன்புடைமை"
என்னும் அதிகாரத்தின் பின்னர், விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தை நாயனார் தமது
திருக்குறளில் வைத்தார் என்னும் அருமையை உணர்க.
பிறப்பகத்தே மாண்டு
ஒழிந்த
பிள்ளைகளை நால்வரையும்
இறைப்பொழுதில்
கொணர்ந்து கொடுத்து
ஒருப்படுத்த உறைப்பன் ஊர்;
மறைப் பெருந்தீ
வளர்த்து இருப்பார்,
வருவிருந்தை அளித்து இருப்பார்,
சிறப்பு உடைய மறையவர்
வாழ்
திருவரங்கம் என்பதுவே. --- பெரியாழ்வார் திருமொழி.
இதன் பொருள் ---
பிறத்தற்கு உரிய அறையிலேயே மாயமாய்ப்
போய்விட்ட அந்தணனது நான்கு பிள்ளைகளையும் கொஞ்ச நேரத்திற்குள் பரமபதத்தில் இருந்து
மீட்டுக் கொண்டு வந்து கொடுத்து, தாயுடன் நேர்த்த
வல்லமை உடையவனது வேதத்தில் கூறி உள்ளபடி, அக்கினியை வளர்த்துக் கொண்டு
இருப்பவர்களும்,
வரும்
விருந்தினரை உபசரித்துக் கொண்டு இருப்பவர்களும் மேன்மையை உடைய அந்தணர்கள் வாழுகின்ற
ஊர் திருவரங்கம் ஆகும்.
இல்லா இடத்தும் இயன்ற
அளவினால்
உள்ள இடம்போல் பெரிது
உவந்து --- மெல்லக்
கொடையொடு பட்ட குணன்
உடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக்
கதவு. --- நாலடியார்.
இதன்
பதவுரை ---
இல்லாவிடத்தும் --- பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் --- கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து ---
பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய
மாந்தர்க்கு --- ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய
அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா ---
அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா.
ஈகைக் குணமுடையவர்கள் மறுமை இன்பம்
பெறுவர் என்பது கருத்து.
நட்டார்க்கும்
நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல்
அட்டு உண்டல் --- அட்டது
அடைத்து இருந்து
உண்டு ஒழுகும் ஆவதின் மாக்கட்கு
அடைக்குமாம் ஆண்டைக்
கதவு. ---
நாலடியார்.
இதன்
பதவுரை ---
நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உளவரையால்
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் --- சமைத்து உண்ணுதல் என்பது, தமக்குள்ள பொருள் அளவினால் தம்மிடம்
உறவு கொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும் தாம் சமைத்ததைப் பகுத்து உதவிப்
பின் தாம் உண்ணுதலாகும்; அட்டது அடைத்திருந்து உண்டொழுகும் ஆவது
இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு --- அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது
வீட்டின் கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டு உயிர் வாழ்கின்ற மறுமைப்
பயனற்ற கீழ்மக்கட்கு மேலுலகக் கதவு மூடப்படும்.
இம்மையில் பிறர்க்கு ஒன்று ஈயாதவர்க்கு
மறுமையில் துறக்க உலகின்பம் இல்லை என்றது.
இன்சொல், அளாவல், இடம், இனிது, ஊண்
வன்சொல் களைந்து
வகுப்பானேல் --- மென்சொல்
முருந்து ஏய்க்கும்
முள் எயிற்றினாய், நாளும்
விருந்து ஏற்பர்
விண்ணோர் விரைந்து. --- ஏலாதி.
இதன்
பதவுரை ---
முருந்து ஏய்க்கும் --- மயிலிறகின் அடியை
ஒக்கும், முள் எயிற்றினாய் ---
கூரிய பற்களையுடைய பெண்ணே!, யாவர்க்கும் ---
விருந்தாய் வருவாரெல்லாருக்கும்,
இன்சொல்
--- இன்சொல்லும், அளாவல் ---
உள்ளங்கலந்த உறவும், இடம் ---
தங்குமிடமும், இனிது --- ஆடையணி முதலிய
பொருளும், ஊண் --- உணவும், வன்சொல் களைந்து --- கடுஞ் சொற்களை
நீக்கி, மென்சொல் --- பணிவு
மொழியும், நாளும் வகுப்பானேல் ---
என்றும் முறையே வழங்குவானானால்,
விண்ணோர்
--- தேவர்கள், விரைந்து --- முன்
வந்து, விருந்து ஏற்பர்---
அவனை விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
மிருதுவாகிய சொல்லையும் மயிற்பீலியினது
அடியையும் ஒத்து விளங்கும் கூரிய பல்லையும் உடையவளே! தன் மனை நோக்கி வரும்
விருந்தினர் யாவரிடத்தும் இன்சொல் கூறலும், கலந்து உறவாடலும், இருக்கை உதவலும், அறுசுவை உண்டி அளித்தலும் செய்து, கடுஞ்சொல் ஒழித்து, மென்சொல் வழங்கிச் சிறப்பிப்பான் ஆயின்
எக்காலமும் அவனை வானோர் விருந்தினனாய் ஏற்றுக்கொள்வர்.
ஒன்றாக நல்லது
உயிர்ஓம்பல், ஆங்கு அதன்பின்
நன்றுஆய்ந்து
அடங்கினார்க்கு ஈந்து உண்டல் – என்றுஇரண்டு
குன்றாப்
புகழோன் வருக என்று மேல்உலகம்
நின்றது
வாயில் திறந்து. --- அறநெறிச்சாரம்.
இதன்
பதவுரை ---
ஒன்றாக நல்லது உயிரோம்பல் --- அறங்களுள்
தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து
அடங்கினார்க்கு ஈத்து உண்டல் --- அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி
போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் --- இவ்விரு
செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம்
நின்றது --- வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம்
நிற்கா நின்றது.
வருவிருந்
தோம்பி மனையற முட்டாப்
பெருமனைக்
கிழத்தியர் பெருமகிழ்வு எய்தி
இலங்குபூண்
மார்பில் கணவனை இழந்து
சிலம்பின்
வென்ற சேயிழை நங்கை
கொங்கைப்
பூசல் கொடிதோ அன்றெனப்
பொங்கெரி
வானவன் தொழுதனர் ஏத்தினர்.... --- சிலப்பதிகாரம், அழல்படு காதை.
இதன்
பதவுரை ---
வரு விருந்து ஓம்பி மனைஅறம் முட்டாப்
பெருமனைக் கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி --- தம் இல்லத்து வரும் விருந்தினரைப்
பேணி இல்லற நெறியின் வழுவாத பெரிய மனையறத்திற்குரிய மகளிர் மிக மகிழ்ச்சியுற்று, இலங்கு பூண் மார்பிற் கணவனை இழந்து ---
விளங்கும் பூண் அணிந்த மார்பினையுடைய தன் கொழுநனை இழந்து, சிலம்பின் வென்ற சேயிழை நங்கை கொங்கைப்
பூசல் கொடிதோ அன்று என --- சிலம்பானே பாண்டிய மன்னனை வெற்றி கொண்ட செவ்விய
அணிகலங்களையுடைய மங்கை தன் கொங்கையாற் செய்த பூசல் கொடி தன்று எனக் கூறி, பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் ---
மிக்கு எரியும் தீக் கடவுளை வணங்கித் துதித்தனர் ;
அருந்தினர்
அருந்திச் செல்ல
அருந்துகின்றாரும், ஆங்கே
இருந்து
இனிது அருந்தா நிற்க
இன்னமுது அட்டுப்
பின்னும்
விருந்தினர்
வரவு நோக்கி
வித்து எல்லாம்
வயலில் வீசி
வருந்தி
விண் நோக்கும் ஓர்
ஏர் உழவர்போல் வாடி
நிற்பார். --- தி.வி.புராணம்.
திருநகரச் சிறப்பு.
இதன் பதவுரை ---
அருந்தினர் --- உண்ட விருந்தினர், அருந்திச் செல்ல --- உண்டு
செல்ல, அருந்துகின்றாரும் ---
உண்கின்றவர்களும், ஆங்கே --- முன் உண்டவர் போலவே, இருந்து இனிது அருந்தா நிற்க ---
இருந்து மகிழ்ச்சியுடன் உண்ணா நிற்க, பின்னும்
இன் அமுது அட்டு --- பின்பும் இனிய அமுதைச் சமைத்து, விருந்தினர் வரவு நோக்கி ---
வரக்கடவராகிய விருந்தினர்களின் வருகையை நோக்கி, வித்து எலாம் --- விதை அனைத்தையும், வயலில் வீசி - விளைபுலத்தில் வித்தி, விண் வருந்தி நோக்கும் --- மழையை
வருந்தி எதிர்பார்க்கின்ற, ஓர் ஏர் உழவர் போல் ---
ஒரே ஏரினையுடைய உழவரைப்போல, வாடி நிற்பார் ---
வருந்தி நிற்பார் (அவ் வேளாளர்) எ - று.
No comments:
Post a Comment