005. இல்வாழ்க்கை - 02. துறந்தார்க்கும்





திருக்குறள்
அறத்துப்பால்
                                   
இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை.

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறள், இல்வாழ்வான் என்பவன், கைவிடப்பட்டவர்க்கும், வறியவர்க்கும், திக்கு அற்றவர்க்கும் துணை ஆவான் என்கின்றது.
  
துறந்தார்க்கும், துவ்வாதார்க்கும், இறந்தார்க்கும்,
இல்வாழ்வான் என்பான் துணை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       துறந்தார்க்கும் --- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்;

     துவ்வாதவர்க்கும் --- நல்கூர்ந்தார்க்கும்;

     இறந்தார்க்கும் --- ஒருவருமன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும்;

     இல்வாழ்வான் என்பான் துணை --- இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை.

         (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை
இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்த பாடல்களைக் காண்போம்......

உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத் தான்இனிது நன்கு.---  இனியவை நாற்பது.

இதன் பொருள் ---

     உடையான் வழக்கு இனிது --- பொருளுடையான், பிறருக்கு அதை வழங்கல் இனிது.

      ஒப்ப முடிந்தால் மனை வாழ்க்கை முன் இனிது --- மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் மாறுபாடின்றி ஒன்றுபடக் கூடுமாயின். இல்வாழ்க்கையானது, மிக இனிது;

     மாணாதாம் ஆயின் --- (அங்ஙனம்) மாட்சிமைப்படாது எனின்,

     நிலையாமை நோக்கி --- (யாக்கை முதலியன) நில்லாமையை ஆராய்ந்து,

     நெடியார் துறத்தல் தலையாக நன்கு இனிது --- தாமதியாதவராய், -அகம் புறமாகிய இருவகைப் பற்றுகளையும் விடுதல் தலைப்பட மிக இனிது.

"காதல் மனையாளுங் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டு மொன்றுமதி யென்முகத்தாய் நோக்கல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்"      --- நன்னெறி

இதன் பொருள் ---

     சொல்லப்படுகின்ற பதினாறு கலைகளும் நிரம்பப் பெற்ற முழு நிலவு போலும் முகத்தை உடையவளே, கண்கள் இரண்டாயினும் பார்க்கும்போது ஒரு பொருளையே நோக்கும்.  அதுபோல, அன்புடைய கணவனும் மனைவியும் தம் மனத்தில் மாறுபாடு அல்லாமல் ஒத்து, குற்றம் இல்லாத ஒரு செயலையே செய்வார்கள்.

         ஓதுகலை எண்ணிரண்டும் ஒன்றும் மதி - சொல்லப்பட்ட பதினாறு கலைகளும் நிரம்பப் பெற்ற திங்கள். நோக்கல் - பார்த்தல். எண்ணிரண்டு கலையும் எனக்கூட்டுக.

     கணவனும் மனைவியும் ஒரு வேலையை ஒத்துச் செய்யவேண்டும்.


"மருவிய காதல் மனையாளுந் தானும்
இருவரும் பூண்டுய்ப்பி னல்லான் - ஒருவரான்
இல்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடஞ்
செல்லாது தெற்றிற்று நின்று"       ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும் --- ஒத்த அன்பினை உடைய மனைவியும் கணவனுமாகிய இருவரும், பூண்டு உய்ப்பின் அல்லால் --- மேற்கொண்டு நடத்தினாலன்றி, ஒருவரால் --- அவ்விருவருள் ஒருவரால், இல்வாழ்க்கை என்னும் இயல்பு உடைய வான் சகடம் --- இல்வாழ்க்கையாகிய அழகிய உயர்ந்த வண்டி செலுத்தப்படின், தெற்றிற்று நின்று செல்லாது ---செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிடும்.
  
துறந்தவர்கள் வேண்டியதொர் துப்புரவு நல்கி,
இறந்தவர்கள் காமுறும் இருங்கடன் இயற்றி,
அறம்பலவும் ஆற்றி, விருந்தோம்பும் முறை அல்லால்
பிறந்த நெறியால் உளதொர் பேருதவி யாதோ.
                                         --- கந்தபுராணம், மார்க்கண்டேயப் படலம்.

இதன் பொருள் --- துறவி நிலையை மேற்கொண்டவர்க்கு, அவர்க்கு வேண்டும் பொருளை அனுபவிக்கக் கொடுத்து, இறந்தவர்களுக்குச் செய்யத்தக்க கடன்களையும் ஆற்றி, அறச் செயல்கள் பவற்றையும் புரிந்து, விருந்தோம்புதலை மேற்கொள்ளவில்லையானால், பிறந்த பிறவிக்கு பேருதவியாக வருவது வேறு என்னவாக இருக்கும்? ஏதும் இல்லை. (பிறவியால் பெறக்கூடிய மயன் வேறு இல்லை என்றது).

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...