013. அடக்கம் உடைமை - 01. அடக்கம் அமரருள்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பதின்மூன்றாம் அதிகாரம் - அடக்கம் உடைமை

     இந்த அதிகாரம், மனம், மொழி, மெய்களால் தீயவழியில் சொல்லாமல் அடக்கம் உடையவனாய் இருத்தல் பற்றிக் கூறியது.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "அடக்கம் ஆகிய அறமானது ஒருவனை தேவர் உலகத்தில் கொண்டு போய் விடும்; அவ்வாறு அடங்காமையாகிய பாவமானது, நிறைந்த இருள் உலகமாகிய நரகத்தில் செலுத்தி விடும்" என்கின்றது.

நரகத்தை இருள் என்றதற்குப் பிரமாணம்....

     நரகமும் மயக்கமும் கருமையும் இருள் எனல் --- பிங்கலந்தை.

     நரக லோகத்தை இருள் என்றதால், தேவலோகத்தை ஒளி உலகம் என்று கொள்ளலாம்.

திருக்குறளைக் காண்போம்...

அடக்கம் அமரர் உள் உய்க்கும், அடங்காமை
ஆர் இருள் உய்த்து விடும்.                    

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அடக்கம் அமரருள் உய்க்கும் --- ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ;

     அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.
        
       ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "திருப்புலாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்.--

கமலமின் வாழ்வு உடையோர் புல்லை மாநகரீர்! அடக்கம்
அமரருள் உய்க்கும், அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும்,
உமது அடி பெற்று அடங்குற்றோர் அமரருள் உய்ப்பர், மைக்கூற்று
எமதடி பெற்று அடங்கார் இருள் சேர்வர்எனச் சொல்வனே.

     தாமரை மலரில் எழுந்தருளி உள்ள திருமகளின் அருளைப் பெற்றுள்ள திருப்புல்லாணி என்னும் மாநகரில் வாழ்வாகிய பெருமாளே! மனம், மொழி, மெய்களால் அடங்கி இருத்தல் தேவர் உலகை அடைவிக்கும். அவ்வாறு அடங்காமை நரகமாகிய இருள் உலகில் கொண்டு சேர்க்கும் என்பதால், உமது திருவடி இன்பத்தைப் பெற்றவர் ஒளி உலகத்தைச் செர்ந்து இன்புற்று இருப்பர். எமது திருவடியைப் பெற்று அடங்காதவர், கரிய நிறம் உடைய இருள் உலகத்தைச் சேர்வர்.

கமலமின் --- தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள்.  அடங்குற்றோர் --- அடங்கினோர். மைகூற்று --- கரிய நிறத்தை உடைய.  இருள் சேர்வர் --- இருள் பொருந்திய நிரயத்தை அடைவர்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடல்கள் அமைந்திருத்தலைக் காணலாம்....

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து,
இடங்காண் பரானந்தத்தே என்னை இட்டு,
நடந்தான் செயும் நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான் செய் உள்ளுள் படிந்து இருந்தானே. ---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---
  
பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான நடனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.

இம்மை அடக்கத்தைச் செய்து, புகழ்ஆக்கி,
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால், –-  மெய்ம்மையே
பட்டாங்கு அறம் உரைக்கும் பண்பு உடையாளரே,
நட்டார் எனப்படு வார்.              --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     இம்மை அடக்கத்தைச் செய்து --- இப் பிறப்பில், மனம் மொழி மெய்களால் அடங்குமாறு செய்து, புகழ் ஆக்கி --- புகழினைப் பெருக்கி, உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் --- மறுபிறப்பில் வீடுபேற்றை அடைவித்தலால், பட்டாங்கு ---இயல்பாகவே, மெய்ம்மை அறம் உரைக்கும் பண்புடையாளரே --- அத்தகைய உண்மை அறத்தினை உரைக்கும், குணம் உடையவர்களே, நட்டார் எனப்படுவார் --- நட்பினர் என்று கூறப்படுதற்கு உரியராவார்.

கல்லில் பிறக்கும் கதிர்மணி, காதலி
சொல்லில் பிறக்கும் உயர்மதம், - மெல்என்று
அருளில் பிறக்கும் அறநெறி, எல்லாம்
பொருளில் பிறந்து விடும்.    --  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     கதிர்மணி  கல்லில் பிறக்கும் --- ஒளியுள்ள மணிகள் மலையில் உண்டாகும்;  உயர் மதம் காதலி சொல்லில் பிறக்கும் --- மிக்க களிப்பானது காதலியினது இன்சொல்லினால் தோன்றும்அறநெறி மெல் என்ற அருளில் பிறக்கும் --- அறவழிகள் மென்மை பொருந்திய அருளினிடம் உண்டாகும் எல்லாம் பொருளில் பிறந்துவிடும் --- அவ்வறத்தோடு ஏனைய இன்பம் முதலிய எல்லாமும் செல்வத்தினால் உண்டாய்விடும்.

         மணிகள் மலையிலும், இன்பம் காதலியின் சொல்லிலும், அறநெறி அருளிலும், அவ்வறமும் இன்பமும் முதலான ஏனைய எல்லாப் பேறுகளும் செல்வத்திலும் உண்டாகும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...