010. இனியவை கூறல் - 08. சிறுமையுள் நீங்கிய






திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

பத்தாம் அதிகாரம் - இனியவை கூறல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏட்டாம் திருக்குறள், "பிறர்க்குத் துன்பத்தைத் தராத இனிய சொல்லானது, இன்னமை இன்பத்தையும், மறுமை இன்பத்தையும் தரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     சிறுமையுள் நீங்கிய இன்சொல் --- பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்;

     மறுமையும் இம்மையும் இன்பம் தரும் --- ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.

       (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல்.)

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்....

பொய்குறளை வௌவ லழுக்கா றிவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித் தருநிரயத் துய்த்திடுந்
தெய்வமுஞ் செற்று விடும்.        --- நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     ஐயம் தீர் காட்சியார் --- சந்தேகம் தீர்ந்த அறிவினை உடையவர், பொய் --- பொய் பேசுதலும், குறளை --- கோள் சொல்லுதலும், வௌவல் --- பிறர் பொருளைக் கைக்கொள்ளுதலும், அழுக்காறு --- பொறாமை கொள்ளுதலும். இவை நான்கும் --- என இவை நான்கினையுனையும், சிந்தியார் --- நினையார்; சிந்திப்பின் --- நினைப்பாராயின், ஐயம் புகுவித்து --- இம்மையில் பிச்சை எடுக்கும்படி வறுமையினை அடையச் செய்து, அரு நிரயத்து --- மறுமையில் அருமையான நரகத்திலும், உய்த்திடும் --- செலுத்தி விடும், தெய்வமும் செற்றுவிடும் --- தெய்வமும் அழித்துவிடும்.

         பொய்யும் குறளையும் பிறர் பொருளை வௌவுதலும் பிறர் ஆக்கத்தின்கண் பொறாமையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் நினையார்;
நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத்தின்கண்ணேயும் புகுவிக்கும். தெய்வமும் கெடுத்துவிடும்.


இன்சொலால் ஆகும் கிழமை, இனிப்புஇலா
வன்சொலால் ஆகும் வசைமனம், - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம், அம்மனத்தால்
வீவிலா வீடாய் விடும்.              ---  நான்மணிக் கடிகை.

இதன் பதவுரை ---

     இன் சொலால் கிழமை ஆகும் --- இன்சொல்லால்  ஒருவற்கு நட்புரிமை உண்டாகும்; இனிப்பு இலா வன் சொலான் வசை மனம் ஆகும் --- இன்பமில்லாத வன்சொல்லினால் கெட்ட கருத்து உண்டாகும்; மென்சொலின் நாவினால் அருள்மனம் ஆகும் --- நயமான சொல்லை உடைய நாக்கினால் இரக்க எண்ணம் உண்டாகும்;
அம் மனத்தால் வீவு இலா வீடு ஆய்விடும் --- அவ்வருள் நெஞ்சத்தால் அழிவில்லாத வீடு பேறு உண்டாகும்.

         இன்சொல்லால் நட்புரிமை யுண்டாகும்; வன்சொல்லாற் கெடுநினைவு உண்டாகும்; நயமான சொற்களால் அருள் நெஞ்சம் உண்டாகும்; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறு உண்டாகும்.

         இன்சொல்லால் நல்லோர் நட்பும், அந் நட்புரிமையால் நல்லெண்ணமும், அவ்வெண்ணத்தால் அருள் நெஞ்சமும், அதனால் வீடுபேறும் உண்டாகும் என்பது.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...