005. இல்வாழ்க்கை - 05. அன்பும் அறனும்




திருக்குறள்
அறத்துப்பால்
                                   
இல்லறவியல்

ஐந்தாம் அதிகாரம் - இல்வாழ்க்கை.

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், அன்பு செலுத்துவதையே பண்பாகவும், அறச்செயலைச் செய்வதையே பயனாகவும் கொண்டு விளங்குவதே இல்வாழ்க்கை ஆகும் என்கின்றது.

திருக்குறளைக் காண்போம் ---

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை,
பண்பும் பயனும் அது.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

       இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் --- ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்;

     அது பண்பும் பயனும் --- அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்.

      (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)

     பெரியபுராணத்தில், கணநாத நாயனார் புராணத்தில் காணும், பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளது காணலாம்.

இனையபல் திருப்பணிகளில்
         அணைந்தவர்க்கு ஏற்ற திருத்தொண்டின்
வினை விளங்கிட வேண்டிய குறைஎலாம்
         முடித்து மேவிடச் செய்தே
அனைய அத்திறம் புரிதலின் தொண்டரை
         ஆக்கி அன்பு உறு வாய்மை
மனைஅறம் புரிந்து அடியவர்க்கு இன்புற
         வழிபடும் தொழில் மிக்கார்.          --- பெரியபுராணம்.

இதன் பொழிப்புரை ---

     இத்தகைய பல திருப்பணிகளைச் செய்தற்கு, விரும்பி வரும் அன்பர்களுக்கு, அவரவர்க்கேற்ற அவ்வத் திருத்தொண்டின் செயல்கள் விளங்கும் படியாகக் கூறி, அவர் வேண்டிய குறைகளை எல்லாம் நீக்கி நிறைவாக்கி, அவற்றில் ஈடுபடுமாறு செய்து, அத்தகைய நற்றிறங்களால் தொண்டர்களைப் பெருகும்படி செய்து, அன்பு பொருந்திய வாய்மையுடைய இல்லறத்தை நடத்தி, வாழ்ந்து, சிவனடியார்களுக்கு இன்பம் பெருகுமாறு செய்யும் தொழிலில் சிறந்து விளங்கினார்.

     அன்போடு இயைந்த இல்வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள, நமது தெய்வப் புலவரின் வாழ்க்கையே விளக்கும். திருவள்ளுவ நாயனாரிடம் ஒரு பெரியார் வந்து, "இல்லறம் பெரிதோ? துறுவறம் பெரிதோ?" என்று வினவினார். அதைக் கேட்ட நமது தெய்வப் புலவர் ஒன்றும் கூறாது வாளா இருந்தனர். ஆயினும், அந்தப் பெரியவர், பதில் கிடைக்கும் வரையில் அவ்விடத்தை விட்டு நீங்காது இருந்தார். நிற்க, ஒரு நாள் தமது மனைவி வாசுகி அம்மையார் கிணற்றில் நீர் முகந்துகொண்டு இருக்கும் காலத்தில், திருவள்ளுவ நாயனார் அழைத்தார். அழைக்கவும் அம்மையார் தமது கையில் உள்ள கயிற்றை விட்டுவிட்டு ஓடோடி வந்தார். அம்மையார் விட்டு வந்த கயிறும் தோண்டியும் கிணற்றில் விழாது அந்தரத்தில் நின்றதாம். மற்றோர் நாள் பட்டப்பகலில் தாம் நெய்துகொண்டு இருந்த குழல் ஊசி, கையில் இருந்து கீழே விழுந்து விட்டது. அதைத் தேடி எடுக்க விளக்கு வேண்டும் என்று நாயனார் சொல்லவும், அம்மையார், பட்டப்பகலில் விளக்கு எதற்கு என்று கேளாது, விளக்கினை எடுத்து வந்தார். வேறு ஓரு நாள், தாம் உண்ணுகின்ற பழைய சோறு சுடுகின்றது, அதற்கு விசிறி வேண்டும் என்று நாயனார் சொல்லவும், அம்மையார் யாதொன்றும் கூறாமல், சொன்னபடியே செய்தார். இந்த அற்புதங்களைக் கண்ட அந்தப் பெரியவர், "மனைவி தக்கவள் ஆயின் இல்லறம் தக்கது. அன்றேல் துறுவறமே தக்கது" எனத் தாமே தெரிந்துகொண்டு சென்றார் என்று ஒரு கதை வழங்கப்படுகின்றது. மேலும், வாசுகி அம்மையார் தமது அந்தியக் காலத்தில், உயிர் போகாது நாயனாரைப் பார்த்தபடியே இருந்தார் என்றும், அக் குறிப்பை உணர்ந்த நாயனார் "எது கருதி இவ்வாறு இருப்பது" என்று வினவுதலும், அவ்வம்மையார் தமது நாயகரை நோக்கி, "தாங்கள் தினமும் உண்ணும்போது நத்தங்குடுக்கையில் தண்ணீரும் ஊசியும், தாங்கள் கட்டளை இட்டபடியே வைத்தேன். அதன் காரணம் இதுவரையில் எனக்கு விளங்கவில்லை" என்றார். நாயனார், "மங்கையர்க்கரசியே! உண்பதற்குச் சோற்றை இலையில் இடும்போது, அது சிதறுமாயின், அதை ஊசியால் குத்தி, தண்ணீரால் கழுவவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வைக்கச் சொன்னேன். ஆனாலும், ஒரு பருக்கையும் சிந்தாமல் சோறு படைத்து வந்தமையால், அதற்கு வேலை இல்லாமல் ஆனது. தமது மனைவியின் சிறந்த குணத்தையும், அன்பினையும் விளக்கி, அம்மையார் இறந்தபின், தமது ஆற்றாமையை வெளியிடுவது போல்,

"அடிசிற்கு இனியாளே! அன்பு உடையாளே!
படிசொல் தவறாத பாவாய்! --- அடிவருடிப்
பின் தூங்கி முன் எழுந்த பேதாய்! போதியோ,
என் தூங்கும் என் கண் இரா"

அன்போடு கூடிய இல்வாழ்க்கை இதுவே என அறிவிக்கும் இந்த வரலாறு.

அல்லாமலும், மன ஒற்றுமை இல்லாத மனைவி ஒருவனுக்கு வாய்ப்பாள் ஆயின், அவனது இல்லறம் சரியாக நடவாது, நற்பயன்கள் எய்தாது, பல தீமைகளையே அனுபவிக்க நேரிடும் என்பதைப் பல புலவர்களும் அனுபவ வாயிலாகப் பாடிய பின்வரும் பாடல்களே நன்கு விளக்கும்...

"இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி,
விருந்து வந்தது என்று விளம்ப --- வருந்தி, மிக
ஆடினாள், பாடினாள், ஆடிப் பழமுறத்தால்
சாடினாள், ஓடினாள் தான்"

"காணக் கண் கூசுதே, கை எடுக்க நாணுதே,
மாண் ஒக்க வாய் திறக்க மாட்டாதே --- வீணுக்கு என்
என்பெலாம் பற்றி எரிகின்றது, ஐயையோ!
அன்பு இலாள் இட்ட அமுது"

"சண்டாளி, சூர்ப்பநகை, தாடகை போல் வடிவு
கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே! --- தொண்டர்
செருப்படி தான் செல்லா உன் செல்வம் என்ன செல்வம்,
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்"

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்,
எத்தாலும் கூடி இருக்கலாம், --- சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளே ஆம் ஆயின்,
கூறாமல் சந்நியாசம் கொள்"

ஏசி இடலின் இடாமையே நன்று, எதிரில்
பேசும் மனையாளில் பேய் நன்று --- நேசம் இலா
வங்கணத்தில் நன்று வலியபகை, வாழ்வுஇல்லாச்
சங்கடத்தில் சாதலே நன்று"

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...