014. ஒழுக்கம் உடைமை - 06. ஒழுக்கத்தின் ஒல்கார்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 14 - ஒழுக்கம் உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறள், "ஒழுக்க நெறியில் இருந்து தவறுவதால் உண்டாகும் குற்றத்தை அறிந்து, மன வலிமை உடையோர் தமது ஆசாரத்தில் இருந்து தவறமாட்டார்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் --- செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்;
    
     இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து --- அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.

       (ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடியருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

வேதநெறி பேணாத் துராசாரன் மிக்குஅயர்ந்தான்
மோதுஅலகை பற்ற, முருகேசா! - தீதில்
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம்படு பாக்கு அறிந்து.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே,

     வேதநெறி பேணாத் துராசாரன் --- வேத ஒழுக்கு நெறிகளைப் போற்றாதவனாகிய துராசாரன் என்னும் பெயரினை உடைய அந்தணன், மோது அலகை பற்ற மிக்கு அயர்ந்தான் --- வருத்துதலைச் செய்கிற பேயானது பீடிக்க மிகுந்த தளர்ச்சியை அடைந்தான். தீதில் --- குற்றமற்ற, உரவோர் --- அறிவாளர்கள், இழுக்கத்தின் --- நல்லொழுக்க நெறியில் தவறுதலால், ஏதம் படுபாக்கு அறிந்து --- குற்றம் உண்டாதலை உணர்ந்து, ஒழுக்கத்தின் ஒல்கார் --- நல்லொழுக்கத்திலே சிறிதும் குறைவுபட மாட்டார்கள்.

         துராசாரன் என்பவன் மறைநெறிப்படி ஒழுகாதபடியினால், பேயினால் பீடிக்கப்பட்டு வருந்தினான். குற்றமற்ற அறிவுடையோர் நல்லொழுக்க நெறியில் தவறுதலால் குற்றம் உண்டாதலை உணர்ந்து நல்லொழுக்கத்தில் சிறிதும் தவறமாட்டார்கள் என்பதாம். 

     மோது அலகை --- தாக்குதலைச் செய்கின்ற பேய்.  படுபாக்கு ---- உண்டாதல்,

                                             துராசாரன் கதை

         கௌதமி ஆற்றுக் கரையில் ஓர் அந்தணன் இருந்தான்.  இவன் நல்லொழுக்கத்தை விட்டுத் தீயொழுக்கத்தை மேற்கொண்டபடியினால் துராசாரன் என்னும் பெயரினை அடைந்தான். இவன் எல்லா வகையான தீவினைகளையும் செய்துகொண்டு திரிந்தபடியினால், இவனைப் பேய் பற்றி வருத்தத் தொடங்கியது. அதனால் இவன் மிகுந்த வருத்தம் அடைந்து தளர்ந்தான். அந்தணனாகப் பிறந்தும் இவன் மறையோர்க்குரிய ஒழுக்கத்தைப் பாதுகாவாது இவ்வாறு துன்புறலானானே என்று பலரும் வருந்தினர். பிறகு இவன் சேதுவுக்குச் சென்று புனித நீராடித் தனக்கு நேர்ந்த அல்லலைப் போக்கிக் கொண்டான்.

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 
மக்கள் உடம்பு பெறற்கு அரிது, பெற்றபின்
மக்கள் அறிவும் அறிவு அரிது, --- மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்,
நெறிதலை நின்று ஒழுகுவார். --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     மக்கள் உடம்பு பெறற்கரிது --- மக்கட் பிறப்பினை அடைதல் அருமை, பெற்ற பின் --- பிறந்தாலும், மக்கள் அறிவும் அறிவு அரிது --- மக்கள் உணர்வாகிய ஆறறிவினையும் அடைதல் அதனினும் அருமை, மக்கள் அறிவது அறிந்தார் ---ஆறறிவினையும் உடையராய்ப் பிறந்து அறியவேண்டியதை அறிந்தவர், அறத்தின் வழுவார் --- அறநெறியில் சிறிதும் வழுவார். நெறிதலை நின்று ஒழுகுவார் --- அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதனுக்கு ஏற்ப நடப்பார்.

     “மக்கள் தாமே ஆறறிவு உயிரே” என்பராகலின், ‘மக்கள்’ என்பதற்கு, ‘ஆறறிவினையும் உடையராய்’ என்று பொருள் உரைக்கப்பட்டுள்ளது.
 

நல்ஆறு ஒழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற்கு ஒருப்படார் - பல்பொறிய
செங்கண் புலிஏறு அறப்பசித்தும் தின்னாவாம்
பைங்கண் புனத்தபைங் கூழ்.        --- நீதிநெறி விளக்கம். 


இதன் பதவுரை ---

     பல்பொறிய செம்கண் புலி ஏறு --- பல புள்ளிகளையுடைய சிவந்த கண்களையுடைய ஆண்புலியானது, அறப் பசித்தும் --- மிகுந்த பசிகொண்டும்,பைங்கண் புனத்த --- பசுமையான இடமாகிய கொல்லைகளிலுள்ள, பைங்கூழ் --- பசிய பயிர்களை, தின்னா ஆம் --- தின்ன மாட்டா (அதுபோல்), நல் ஆறு ஒழுக்கின் தலை நின்றார் --- நன்னெறி ஒழுகுதலில் உறுதியாக நின்றவர்கள், நல்கூர்ந்தும் --- வறுமையுற்றும், அல்லன செய்தற்கு ஒருப்படார் --- முறையல்லாதவற்றைச் செய்ய மனங்கொள்ளமாட்டார்.


ஒற்கம் தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர்
நிற்பவே நின்ற நிலையின்மேல், - வற்பத்தால்
தன்மேல் நலியும் பசிபெரி(து) ஆயினும்
புன்மேயா தாகும் புலி.     --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     வற்பத்தால் --- பஞ்சத்தால், புலி தன்மேல் நலியும் பசி பெரிது ஆயினும் --- புலியானது, தன்னிடத்து வருத்தும் பசி மிக்கு வருந்தியதானாலும், புல் மேயாது ஆகும் --- புல்லினை மேயாது ஒழியும், (அதுபோல) உயர்ந்தவர் ஒற்கம் தாம் உற்ற இடத்தும் --- அறிஞர்கள் வறுமையைத் தாம் அடைந்த இடத்தும், நின்ற நிலையின்மேல் நிற்ப --- தாம் முன்பு இருந்த நிலையிலேயே நிற்பார்கள்.


உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும்,
குடிப் பிறப்பாளர் தம் கொள்கையிற் குன்றார்;
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப் புல் கறிக்குமோ மற்று.      ---  நாலடியார்.

இதன் பதவுரை ---
    
     இடுக்கண் தலை வந்தக்கண்ணும் அரிமா கொடிப் புல் கறிக்குமோ --- பசித் துன்பம் மிகுந்து நின்ற போதும் சிங்கம் படர் புல்வைத் தின்னுமோ? அதுபோல்; உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும் குடிப்பிறப்பாளர் தம்கொள்கையின் குன்றார் -- உடை பொலிவழிந்து உடல் மெலிவடைந்த காலத்திலும் உயர்குடிப் பிறந்தோர் தமக்குரிய ஒழுகலாற்றில் குறைவுபடார்.

     உயர்குடிப் பிறந்தோராயின், இயல்பாகவே நல்லொழுக்கத்தினின்றும் வழுவார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...