கெடுவது காட்டும் குறி

 


😥கெடுவது காட்டும் குறிகள்😥

----

 

"நட்புப் பிரித்தல்பகைநட்டல்ஒற்று இகழ்தல்,

பக்கத்தார் யாரையும் ஐயுறுதல், - தக்கார்

நெடுமொழி கோறல்குணம்பிறிது ஆதல்,

கெடுவது காட்டும் குறி". 

 

            ஒருவன்பின்னாளில் கெட்டுப் போவான் என்பதை முன்னரே அறிவிக்கும் ஆறு வகையான அடையாளங்கள் பற்றிகுமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில்மேல் குறித்த பாட்டில் கூறி அருளுகின்றார்.

 

இதன் பொருள் ---

 

            (1) நட்புப் பிரித்தல் --- பழமையான நண்பரைப் பிரியும்படி செய்துபகைவர் ஆக்கிக் கொள்ளுதல், (நண்பர்களாக இருப்பவரைப் பிரித்துஅவர்க்குள் பகைமை உண்டாக்குதல்)

 

            (2) பகை நட்டல் --- (நெடுங்காலம்) பகைவராக உள்ளவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுதல்,

 

            (3) ஒற்று இகழ்தல் --- (பகைவர்அயலவர்நட்பினர் ஆகிய மூவரிடத்தும் நிகழும்) நன்மை தீமைகளை அறிந்து சொல்லுகின்ற நல்லோரை இகழ்தல்.

 

            (4) பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- தன் பக்கத்தில் உள்ளவர் யாரையும் சந்தேகத்தோடு பார்த்தல்அணுகுதல்.

 

            (5) தக்கார் நெடுமொழி கோறல் --- தக்க சான்றோர் கூறும் அறிவுரைகளை இகழ்ந்துகேளாது ஒழிதல்மீறுதல்அலட்சியம் பண்ணுதல்.

 

            (6) குணம் பிறிது ஆதல் --- தனது இயல்பான நல்ல குணத்தில் மாறுபடுதல்.

 

            (ஆகிய இந்த ஆறு குணங்களும்ஒருவன்) கெடுவது காட்டும் குறி --- இனிக் கெட்டு அழியப் போவதைக் காட்டுகின்ற குறிகள் (அடையாளங்கள்) ஆகும்.

 

விளக்கம் ---

 

            "நட்பிடைக் குய்யம் வைத்தான்" என்று பின்னால் வரும் பாடலில் அடிகளார் குறிப்பிடுவார். நண்பர்களிடையே (குய்யம்) வஞ்சகம் கொள்ளுதல் தவறு. ஒருவருக்கொருவர் நன்மை கருதி வாழ்தல்தவறு கண்டபோது இடித்துக் கூறித் திருத்துதல்துன்பத்தில் பங்கு கொள்ளுதல் என்பவை நட்புக்கு இலக்கணம். சிரித்துப் பேசிப் பழகிநன்மை வந்தபோதெல்லாம் உடன் இருந்துகொஞ்சிக் குலாவிஇடுக்கண் வந்தபோது நீங்குகின்றவர் நண்பர் ஆகார். நண்பர்களாக இருப்பவரைப் பிரித்துஅவர்களுக்குள் பகைமையை உண்டாக்குதலும் கூடாது. நண்பராகப் பழகிய ஒருவரைப் பகைவர் ஆக்கிக் கொள்ளவும் கூடாது. பிடிக்கவில்லையானால்சொல்லாமல்,கொள்ளாமல்ஒதுங்கிப் போய்விட வேண்டும். நன்றாகப் பழகிக் கொண்டு இருக்கும் நண்பர்களிடத்தில் பொறாமை கொண்டு "நட்புப் பிரித்தல்" கூடாது. அதுகேட்டினைத் தரும் என்றார்.

 

            "சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வோர் புல்லர்" என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல். கீழோரின் துற்புத்தியைக் கேட்டுஆராயமல்,நெடுநாள் நட்பை இகழ்பவர்கள் அற்பர்கள் ஆவர். இவர்களைக் "குண்டர்கள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். "தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள்" என்பார் வல்லக்கோட்டைத் திருப்புகழில். 

 

             குண்டன் என்னும் சொல்லுக்குகணவனைப் பிழைத்துசோர நாயகனுக்குப் பிறந்தவன் என்று பொருள். மனத்தினால் பிழைத்த ஒருத்தியின் வயிற்றில் பிறந்தவனுக்கு நற்குணங்கள் அமையாது. ஒருவனிடம் நட்புக் கொண்டுபழகிய பின்னர்அந்த நண்பனுக்குத் தீங்கு செய்தல் கூடாது. மித்திரத் துரோகம் மிகப் பொல்லாதது.

 

             சலம் --- வஞ்சகம்துரோகம்.சலத் (வஞ்சகத்) தன்மை உள்ளத்தில் இல்லாதவர்கள்அடியவர்கள் என்று காட்ட, "சல நீர்மை இல்லாதார்தக்கோர்" என்றார் திருஞானசம்பந்தர். 

 

            அறியாமையால்ஏதோ ஒரு காரணம் கருதிநல்லோரைப் பகைத்துக் கொள்பவர்களும் உண்டு. அது மிக்க தீமையைத் தரும். "பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க. மேலோராகிய சான்றோரின் தொடர்பை விடுவதானதுபலருடைய பகையைக் கொள்வதைக் காட்டிலும்பத்து மடங்கு தீமையை உடையது என்கின்றார் நாயனார்.

 

            ஏதோ ஒரு நன்மை கருதி,  நெடுங்காலம் பகைவராக உள்ளவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுதலும் கூடாது. "இவ்வளவு காலம் பகைமை பாராட்டியவன்இப்பொழுது ஏன் நட்பு பாராட்டுகின்றான்" என்று எண்ணிகாலம் வரும்போதுதனது பழைய பகைமையைத் தீர்த்துக் கொள்ள அது வழிவகுக்கும். எனவே, "பகை நட்டல்" என்பது கேட்டினைத் தரும் என்றார். "பகை நட்பாம் காலம் வருங்கால்முகம் நட்டு,அகம் நட்பு ஒரீஇ விடல்" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது காணபகைவனாக இருந்த ஒருவன்தம்மிடம் நட்புக் கொள்ளும் சமயம் வரும்போதுமுகத்தால் நேசித்துஉள்ளத்தால் கொள்ளும் நட்பினை நீக்கி விடுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

 

            ஒற்று இகழ்தல் என்பது பெரும்பாலும் அரசர்க்குக் கூறியது ஆகும். என்றாலும்,  நம்மிடத்தில் அன்பு பூண்ட ஒருவர்நமது நலம் விரும்பியாக உள்ள ஒருவர்நமக்கு நண்பராக உள்ளவர்அயலவர்பகைவர் ஆகிய மூவரிடத்திலும் உண்டாகும் நன்மை தீமைகளை அவ்வபோது நமக்கு எடுத்துக் கூறி நல்வழிப் படுத்துகின்றது உண்டு. அத்தகைய நலம் விரும்பிகள் கூறும் மொழிகளை இகழ்வதால் கேடு உண்டாகும். உண்மை எப்போதும் கசப்பாகத் தான் இருக்கும். கசப்பான உண்மையைச் சொல்பவரை விலக்கிஇனிப்பான பொய் பேசுவோரையும்இச்சகம் பேசுவோரையும் விரும்புதல் உலக இயல்பு. 

 

            பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- தமது பக்கத்தில் உள்ள எல்லோரையும் எல்லாக் காலத்திலும் சந்தேகிக்கக் கூடாது. "தேரான் தெளிவும்,தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆராயாமல் ஒருவனிடத்துத் தெளிவு கொள்ளுதலும்,தெளிந்த ஒருவனிடத்தில் ஆராயாமல் ஐயம் கொள்ளுதலும்தீராத துன்பத்தையே தரும்.

 

            தக்கார் நெடுமொழி கோறல் --- கோறல் என்னும் சொல்லுக்குஇகழ்தல்கேளாது ஒழிதல்மீறுதல்அலட்சியம் பண்ணுதல் எனப் பல பொருள் உண்டு. தக்கார் என்றது தகுதி உள்ள சான்றோரை. சான்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது போலஅவரோடு வஞ்சகமாகப் பழகி இருந்துஅவரால் உண்டாகும் நன்மைகளைத் துய்த்துவிட்டுதமது எண்ணம் முடிந்த பின் அவரோடு மாறுபாடு கொண்டுபிறர் முன்னிலையில் இகழ்ந்து பேசுதல். இது இக்காலத்தில் வாலாயமாகக் காணப்படுவது. தக்கோராக இருந்தாலும்தனக்கு ஏற்றது போல்தனது கருத்துக்கு இசைவாக ஏதும் கூறாமல் மாறுபட்டால்அவரைத் தூக்கி ஏறிந்துதூற்றுவது அனுபவத்தால் அறியப்படும். இது பெரியாரைப் பிழைத்தல் ஆகும். "எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம்உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்" என்று திருவள்ளுவ நாயனார் கூறுகின்றார். நெருப்பினால் சுடப்பட்டாலும் கூட ஒருவகையில் உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால்,பெரியார் ஒருவரிடத்தல் பிழை செய்தவன் தப்பிப் பிழைக்கமாட்டான் என்கின்றார் நாயனார்.

 

            குணம் பிறிது ஆதல் --- தீய எண்ணங்கள் மனதில் உதிக்க உதிக்கஅதுவரை கொண்டிருந்த நற்குணங்கள் சிறிது சிறிதாக நீங்கிதீய குணங்கள் தொற்றிக் கொள்ளும். இதுவரையில் அந்நியமாக இருந்த துர்க்குணங்களைக் கொள்ளும் நிலை உண்டாகும். சூதாடுதல்கள்ளுண்ணல்துரோகம்,பொறாமைநன்றி மறத்தல்இன்ன பிற விரும்பத் தகாத குணங்களைக் கைக்கொள்ளுதல். சுருங்கச் சொன்னால்அறநெறிக்கு மாறாக நடத்தல்.

 

            "கேடு வரும் பின்னேமதி கெட்டு வரும் முன்னே" என்னும் முதுமொழியை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

 

            மேலே குறித்த ஆறு குணங்களும் ஒருவனிடத்தில் பொருந்தி இருக்குமாயின்அவன் நிச்சயம் கெட்டுப் போவான் என்பதைமகாபாரதத்தில் துரியோதனனைக் கொண்டு அறியலாம். அவனது செயல்கள்இந்தப் பாட்டில் அடிகளார் கூறியுள்ளதற்கு இலக்கியமாக அமைந்துள்ளன. அவன் பாண்டவரைப் பகைத்துக் கொண்டான். சகுனி முதலான தீயவரோடு நட்புப் பூண்டு இருந்தான். அசுவத்தாமன் முதலானோரை ஐயப்பட்டான். பீஷ்மர்விதுரர்கண்ணன்தருமன் முதலானோர் கூறிய உறுதிமொழிகளைக் கேளாது ஒழிந்தான். நல்லோர் யாரும் விரும்பத் தகாத தீய குணங்களில் அவன் தலை நின்றான். பாஞ்சாலியை அரசவையில் மானபங்கம் செய்தான். அவனது இச்செயல்கள் யாவும்அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்தன.

 

     அழிவுக்குக் காரணமாகிய இந்த குறிகள் ஒருவரிடத்தில் உண்டாவது பிறருக்குத் தெரிய சிலகாலம் ஆகும். தக்கோர் நெடுமொழியைக் கொள்ளாத நிலை உள்ளதால்நலம் விரும்பிகள் சொல்வதையும் இகழ்ந்து போக்கும் நிலை இருக்கும். ஆனால்தமது எண்ணங்கள்தம்மால் செய்யப்படும் காரியங்கள் தீமையைத் தருவதாக அமையும் என்பது அவரவர் மனசாட்சிக்குத் தெளிவாகவே தெரியும். "பேதை தான் கொண்டதை விடமாட்டான்" என்னும் பொருளில், "கொடிறும் பேதையும் கொண்டது விடாது" என்பார் மணிவாசகர். நம்மிடத்திலே உள்ள பேதைமை என்னும் அறியாமை அல்லது அஞ்ஞானம்மனசாட்சியையும் புறக்கணிக்கச் செய்யும். அந்த சமயத்தில் தானத்தில் சிறந்ததாகிய "நிதானம்" வேண்டும். நமது எண்ணங்களால்சொற்களால்செயல்களால் உண்டாகக் கூடிய நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்துதக்கவரைத் துணையாகக் கொண்டுதீயவற்றை விலக்கிநன்மை தருவனவற்றைக் கைக்கொள்ளுதல் வேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...