யாதும் ஊரே - யாவரும் கேளிர்

 


யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

-----

 

            இன்று அறிவியல் வளர்ந்து  நாடுகளை இணைத்து இருக்கின்றது. நாடுகள் ஒன்றோடொன்று இணைப்பில் இருந்தாலும், தொடர்பில் இருந்தாலும், எனது நாடு, உனது நாடு என்ற வேற்றுமைப் பேச்சுக்கள்எல்லைத் தகராறுகள் ஒழிந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அரசியல், அருளியலை அழுத்திவைத்து, நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையில்ஊருக்கும். ஊருக்கும் இடையில்தெருவுக்கும் தெருவுக்கும் இடையில் சமூகங்களுக்கு இடையில்சமயங்களுக்கு இடையில் வேலிகளை அமைத்துக் கொள்ளச் செய்கின்றது. குறுக்குச் சுவர்கள் எழும்பிய வண்ணமே உள்ளன. இதன் விளைவாகப் படைகள் பெருகுகின்றன. மக்களின் பசியும் பெருகியே வருகின்றது. கவலை பெருகுகின்றது. கண்ணியம் மறைந்து போகின்றது. குற்றங்கள் பெருகுகின்றன. அறச்சாலைகளை விடசிறைச்சாலைகள் மலிந்து வருகின்றன.

 

     கணியன் பூங்குன்றனார் என்னும் புலவர் காட்டுகின்ற வாழ்க்கை முறையினை மேற்கொண்டால் இந்த அவல நிலை முற்றிலும் மாறும் என்பது திண்ணம். எங்கும் ஊர்ப் பாசம், நாட்டுப் பாசம். ஊரின் முன்னேற்றதிற்காகநாட்டின் முன்னேற்றத்திற்காகத் தமது விரலை அசைக்காதவர்கள் கூட, எமது ஊர், எமது நாடு என்று பேசுவது காணலாம். பணி புரிகின்ற இடங்களில் கூடஊர்ப்பற்றும் இனப்பற்றும்  எவ்வளவுக்கு வளர்ந்து இருக்கின்றது என்பதைக் காணலாம். ஊர்க்கார்ர் என்றால் ஒரு சலுகை. தமது இனத்தவர் என்றால் ஒரு சலுகை. 

 

     பண்டைத் தமிழர் வாழ்வில் இத்தகு பாகுபாடுகள் ஏதும் இருக்கவில்லை. "யாதானும் ஊராமால், நாடாமால்" என்றார் திருவள்ளுவ நாயனார். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்றார் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர்.

 

     யாதும் ஊரே என்று கொண்டாடினால் மட்டும் போதாது. பலர் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றனர். வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களால், தேவைக்கு ஏற்ப,பல ஊர்களில் குடியேறி வாழ்பவர்கள் பலர். அது பிழைப்புக் கருதிய குடியேற்றமே. உறவுபண்பாடு அடிப்படையில் தோன்றிய குடியேற்றம் அல்ல. மனித குலத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் இனம்மொழிசமயம்சாதிஅரசியல் வேறுபாடின்றி நேசிக்க வேண்டும். அன்பு கலந்து ஒன்றாகப் பழக வேண்டும். இன்றைய மனித வாழ்க்கை அசுரத் தன்மையை உடையதாக உருப் பெற்று இருக்கின்றது. பலர் பழகுவதும் கூட, அன்பு என்னும் பண்பினை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை. காரிய மயக்கு. காரியம் ஆகவேண்டும் என்றால் அன்பு உள்ளவர் போலக் காட்டிக் கொள்ளும் போலிநிலை.

 

     மனிதன் இயல்பில் கூடி வாழப் பிறந்தவன். தனித்து யாராலும் வாழ்ந்து விட முடியாது. ஆனால்பிரிந்தே வாழ்கின்றான். மேலும் மேலும் பிரிந்துகொண்டே செல்கின்றான். கூடி வாழ்வது போல் இருந்தாலும், உள்ளத்தால் பிரிந்தே வாழ்கின்றான். அறிந்தோ அறியாமலோதெரிந்தோ தெரியாமலோ தன்னலத்தையே நாடுகின்ற பாங்கு மனிதனை அடிமைப்படுத்தி உள்ளது. தனது உடைமைதனது செல்வம்தனது மகிழ்ச்சி ஆகிய இவைகளுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை வெறுக்கிறான். தனது வெறுப்பை நியாயப்படுத்த "ஊர்" என்ற மகுடத்தை வைக்கின்றான். அல்லது சாதிமொழிஇனப் பாகுபாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டு, அதன்  இடுக்குகளில், "தீமையைத் தந்தவர் இவர்,  நன்மையைச் செய்தவர் அவர்"என்று பாகுபாடு செய்து, பிரிவினையை வளர்க்கின்றான். 

 

     நன்மையும் தீமையும் அவரவர் வாழ்வின் வழி, அவரவர் செய்த வினைகளால் விளையும் விளைவுகளே. பிறர் செய்வது போலத் தோன்றினாலும், அவையெல்லாம் வினையின் விளைவுகளே. எப்படி சூரியனைச் சுற்றி உலகம் சுற்றுகிறதோ, அது போலவேஅவரவர் செயல்களைச் சுற்றியே அவரவர் வாழ்வு வட்டமிடுகின்றது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், நமக்குத் தீமை செய்தவர் என்று ஒருவரை வெறுத்து ஒதுக்காமல் நட்புப் பூணும் பழக்கம் வேர் கொள்ளும். 

 

     "யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞானஎரியால் வெதுப்பி நிமிர்த்துத்தான் செவ்வே நின்றிட" வேண்டும் என்கின்றது மெய்கண்ட சாத்திரம்.

தீமை விளைந்த போது, பிறரை நொந்துகொள்வது, அந்தத் தீமையால் விளைந்தது அல்ல. தீமையை அனுபவித்த மனத்தின் போக்குதான் அது. தீமையை நோதல் இல்லாமல், நடுக்கம் கொள்ளாமல்ஏற்று அனுபவித்து, அதனை மாற்றுவதே சிறந்த முயற்சி ஆகும். அவனே சிறந்த பண்பாளன் ஆவான். நொந்து கொள்வதும், பிறகு தணிந்து போவதும் தீமைகளின் விளைவு அல்ல. அது மனிதனின் இயல்பே. 

 

     சிலர் நன்மை தீமைகளின் வழி உணர்ச்சிவசப்படுவர். தமது உணர்ச்சிப் பெருக்கிற்கு ஒரு நியாயத்தையும் காட்டுவர். இவையெல்லாம் சாமார்த்தியமாக இருக்கலாம். ஆனால், அது வாழும் இயல்பு அல்ல. நோதலும் தணிதலும் மனிதன் பெற்ற அடிப்படைப் பண்புகளின் வழி உண்டாவதே ஆகும். இந்தப் பண்பு உள்ளவர்களிடையில், "யாவரும் கேளிர்"என்ற பண்பு விளங்கித் தோன்றும்.

 

     இன்று மனிதனை வருத்துகின்ற மிகப் பெரிய பயம்மரண பயமே ஆகும். அணு அணுவாக வறுமையாலும், நோய்களாலும் நாள்தோறும் நலிந்துகொண்டு இருந்தாலும், மனிதனுக்கு உயிர் வாழ்வதில் உள்ள காதல் அளவில்லாதது. இப்படி நாள்தோறும் துன்பப்படுவதை விட செத்துப் போகலாமே என்று எண்ணுவது இல்லை. துன்பத்தை அளவில்லாமல் அனுபவித்து வந்தாலும், உயிரை விட்டுவிட மனம் வருவதில்லை. உண்மையில் மரணம் என்பது ஒரு முடிவே அல்ல. ஒவ்வொரு மனிதனும் பிறப்பதும், இறப்பதும் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருப்பதுதான். எந்த இடத்திலும், மகப்பேறு மருத்துவ மனை இல்லாமல் இல்லை. சுடுகாடும் இல்லாமல் இல்லை. கணம்தோறும் பிறப்பும் இறப்பும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

 

     இன்று உயிர் வாழும் ஒவ்வொரு மனிதனும் இதற்குமுன் எத்தனை தடவை செத்தானோஇனி எத்தனை தடவை சாவானோ?  இப்படிப் பழகிப் போன சாதலைப் புதியது போலக் கருதி அஞ்சுவதுதான் புரியாத புதிர். சாதல் (மரணம்) புதுமையல்ல (எப்போதும் நிகழ்வதுதான்) என்ற நம்பிக்கைத் தோன்றினால் உயிர் வாழ்க்கையின் மேலுள்ள காதலால் கொலைகள் நிகழாதுஅச்சமும் அடிமைத் தனமும் தோன்றாது. மரணத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்கள், கோழைகளாகச் நாள்தோறும் செத்துக் கொண்டிருப்பவர்களைவிட நல்லவர்கள். அது போலவே வாழ்தலை இனிது என்று நம்பி மகிழ்ந்து மயக்கம் கொள்ளுதலும் இருக்காது. 

 

     "தீதும் நன்றும் பிறர் தர வாரா". அவரவருக்கு அமைந்த ஊழின்படியே தீதும் நன்றும் விளையும். ஊழ் என்பது,  பலர் கருதுவது போல, அது கடவுளின் ஆணை அல்ல. எல்லோருக்கும் நடுவாகபொதுவில் நிற்கும் இறைவன், ஒருவர்க்கு நன்மையும் பிறிதொருவர்க்குத் தீமையும்ஒருவர்க்குச் செல்வத்தையும் பிறிதொருவர்க்கு வறுமையையும்ஒருவர்க்கு உயர்ந்த பதவியையும் பிறிதொருவர்க்கு தளர்ந்து சாரும் கோழைத்தனத்தையும் கொடுப்பானா?  அப்படி அவன் கொடுப்பானானால்அவனுடைய நடுநிலைத் தன்மை மாறி, இறைத் தன்மையும் இல்லாமல் போகும்.  கடவுளுக்கும் நாம் அனுபவிக்கும் ஊழுக்கும் நேரிடையாகச் சம்பந்தம் இல்லை. ஊழ் என்பது அவரவர் சிந்தனையும் செயலுமே ஆகும். நேற்றையத் தீய சிந்தனை, நேற்றையத் தீய செயல் இன்றையத் தீயூழாக உருப்பெற்று அவற்றை உடையவரை வழி நடத்துகிறது அல்லது இழுத்துச் செல்கிறது. அதுபோலவே நேற்றைய நற்சிந்தனைநேற்றைய நற்செயல் இன்றைக்கு நல்லூழாக உருக் கொள்கிறது. அவற்றை உடையவரை அது வழி நடத்துகிறது அல்லது இழுத்துச் செல்கிறது. ஆகஊழ் நல்லவண்ணம் அமைய வேண்டுமானால் ஊழ் தோன்றுதற்குரிய அடிப்படைப் புலனாகிய சிந்தனையைத் திருத்தவேண்டும். நல்லுணர்வை வளர்த்துக் கொண்டு யாருக்கும் நன்மையே செய்துவரல் வேண்டும். 

 

எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது

புண்ணியம் வந்து எய்து போது அல்லால்--- கண் இல்லான்

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே,

ஆங்காலம் ஆகும் அவர்க்கு.            --- நல்வழி.

 

இதன் பொருள்---

 

     எப்படிப்பட்டவர்க்கும் முற்பிறப்பில் செய்த புண்ணியம் வந்து கூடும்பொழுது அல்லாமல், ஒரு செயலை ஆராய்ந்து செய்து முடிக்க முடியாது. அவ்வாறு செய்தால், அந்தச் செயலானது, கண் இல்லாதவன், மாங்காயை அடித்து வீழ்த்துவதற்குத் தனது கையில் உள்ள கோலை எறிந்த்து போல் ஆகும். புண்ணியம் வந்து சேரும்போது, அவருடைய செயல்கள் எளிதாக முடியும்.

 

            புண்ணியம் இல்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன். (மாத்திரை - அளவு.)குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பான்.

 

 "முப்பதும் சென்றால் விடியும் முப்பதும் சென்றால் இருளும்
அப்படியே ஏதும் அறிநெஞ்சே ---  எப்பொழுதும்
ஆம்காலம் எவ்வினையும் ஆகும் அது தொலைந்து
போம்காலம் எவ்வினையும் போம்".  --- சிவபோகசாரம்.

 

இதன் பொருள் ---

 

     இருளைத் தரும் இரவுப் பொழுது முப்பது நாழிகை கழிந்தால் விடிந்து ஒளியைத் தரும். ஒளியைத் தரும் பகல் பொழுதும் முப்பது நாழிகை கழிந்தால், இருளைத் தரும் இரவுப் பொழுதாக மாறும். இவ்வாறு வருவது யாருடைய விருப்பத்தின் பொருட்டும் இல்லை. அதுபோலவே, ஆக்கத்தைத் தரும் நல்வினைகளால் வரும் இன்பமும், கேட்டினைத் தருகின்ற தீவினைகளால் உண்டாகின்ற துன்பங்களும், அவரவர் வினைப் பயனுக்கு ஏற்ப மாறிமாறி வரும். அல்லாமல், அவரவர் விருப்பத்தின்வழி வருவது இல்லை.

 

     பெரியோரை வியத்தல் கூடாது. பெரியோரை மதித்தல் என்பது வேறு. பாராட்டுதல் என்பது வேறு. போற்றுதல் என்பது வேறு. வியத்தல் என்பது இயல்பில்லாத ஒன்றைக் கண்டபொழுது உண்டாகும் ஆச்சரியம். அதற்கு வியப்பு என்று பெயர். பெரியோரிடத்தில் காணப் பெறும் பெருமைக்குரிய இயல்புகள் இயற்கையாகவே அவரிடத்தில் அமைந்தவை. அந்தப் பெருந்தன்மை பிறப்பின் வழிப்பட்டது. ஆதலால்பெரியோரை வியத்தல் கூடாது. பெரியோரை வியந்தாலும் தவறில்லை. ஆனால்சிறியோரை இகழ்தல் ஒருக்காலும் கூடாது. சிறியோரை இகழ்தலால் அவர்கள் ஒரு பொழுதும் திருந்த மாட்டார்கள். இகழ்தலுக்கு மாறாக, அவர்களை மெல்ல அரவணைத்து எடுத்து, திருத்தில்ல,நல்வழியில் கொண்டுவர முயலுதல் வேண்டும். ஒரு சிலர் சிறியோர் ஆனதுவும் ஊழின் வழியே. எனவேயாரை நொந்தும் பயனில்லை. பெரியோரை வியந்து பாராட்டாது, சிறியோரை இகழாது வாழ்ந்தால், பொதுமை எண்ணம் உண்டாகும். 

 

       பொறிபுலன்களை ஆண்டுஅடக்கிஆன்மா தலை தூக்குகின்ற போது இன்பம் உண்டாகும். அந்த நிறையில் இறப்பு பற்றிய அச்சம் அகலும். ஆன்மா தன்னை அறியும் தவநிலை தோன்றும். அந்த நிலையில் "அறம் பாவம் என்ற இரண்டு அச்சம் தவிர்த்துத் தன்னை ஆண்டுகொண்டு, மறந்தேயும் தன்னுடை திருவடியை மறவாத" அருள்நிலையை அருளியவன் இறைவன் என்னும் நிலை உணரப்படும். அந்த ஒருமை நிலையில்தான் ஆன்மா தன்னையே நோக்கி அறிகிறது. நன்றும் தீதும் பிறரால் வருவன அல்ல.தானே படைத்துக் கொண்டவை என்று உணர்கிறது.

 

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி".             --- அறநெறிச்சாரம்.  

 

இதன் பொருள் ---

 

     தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும்,இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்.  பிறர் அல்ல. தனக்கு மறுபிறவியில் உண்டாகக் கூடிய இன்பத்தையும்,இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பத்தையும் செய்து கொள்பவனும் அவனேதான். தான் செய்த வினைகளின் பயனாக,இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்கின்றான். எனவேதான் செய்த வினைகளுக்குச் சான்றாக உள்ளவனும் அவனே தான்.

 

"பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே". --- வெற்றிவேற்கை.

 

இதன் பொருள் ---

 

     உருவத்தால் பெரியவர்வயதில் பெரியவர்செல்வத்தால் பெரியவர்பட்டத்தால் பெரியவர்பதவியால் பெரியவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் பெருமைக்கு உரியவர் ஆகமாட்டார். அவ்வாறேஉருவத்தால் சிறியவர்வயதில் சிறியவர்செல்வத்தால் சிறியவர்பட்டத்தால் சிறியவர்பதவியால் சிறியவர் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் சிறுமைக்கு உரியவர் ஆகமாட்டார்.

 

     ஒருவருக்கு உண்டாகும் மேன்மையும்சிறுமையும்அவரவர் செய்யும் செயல்களால் உண்டாகும்.அறிவினாலும்பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரேபெரியவர். அவரேபெருமை உடையவர்.

 

"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும்தன்னை

நிலைகலக்கிக் கீழ் இடுவானும்,நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும்தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்".     --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும்தனது முன்னைய நிலையையும் குலையச் செய்து,தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும்தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து,மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும்தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.

 

"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே".

 

என்கின்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

 

     தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்து கொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால்,தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.

 

     மேற்குறித்த அறநெறிகளை எல்லாம் வலியுறுத்திபொய்யான உலக வாழ்வை விடுத்துமெய்ந்நெறியில் நின்றுஇறைவன் திருவடியைச் சாருகின்ற வழியில்இனியாவது நில்லுங்கள் என்று நம்மை மேலும் நன்னெறிப் படுத்துகின்றார் மணிவாசகப் பெருமான்.

 

     திருவாசகத்தில், "யாத்திரைப் பத்து" என்னும் பகுதியில் வரும் பின்வரும் பாடலைத் தெளிந்து கொள்ளலாம்... 

 

"தாமே தமக்குச் சுற்றமும்,

            தாமே தமக்கு விதிவகையும்,

யாம் ஆர்?எமது ஆர்?பாசம் ஆர்?

            என்ன மாயம்?இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

            அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

போமாறு அமைமின் பொய்நீக்கி,

            புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

 

இதன் பொருள் ---

 

     ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரேநடைமுறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரேஆதலால்அடியவர்களேநீங்கள்'நாம் யார்எம்முடையது என்பது எதுநம்மைப் பற்றியுள்ள பாசம் என்பது எது?  இவையெல்லாம் என்ன மயக்கங்கள்என்று உணர்ந்துஇவை நம்மை விட்டு நீங்கஇறைவனுடைய பழைய அடியார்களோடும் கூடி,இறைவனது திருவுளக் குறிப்பையே,உறுதியாகப் பற்றிக்கொண்டுபொய் வாழ்வை விட்டுபாம்பினை அணிந்தவனும்எம்மை ஆள்வோனுமாகிய பெருமானதுபொன் போல ஒளிரும் திருவடிக்கீழ்போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

 

     இறைவன் திருக்குறிப்பாவதுஆன்மாக்கள் எல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பதுஇதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும். 

 

     ஆகபுறநானூறுதிருக்குறள்அறநெறிச்சாரம்நறுந்தொகைநாலடியார் ஆகிய நூல்கள் கூறுவது உலகியல் நிலை. திருமந்திரம்திருவாசகம் கூறுவது உலகியல் நிலையில் இருந்து உயரவேண்டிய அருள்நிலை.

 

     இந்தப் பேருணர்வு முழுமையாகும்பொழுது "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" அருளியல் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும்.

 

     கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடல் இதோ....

 

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன,

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்

இன்னாது என்றலும் இலமே; மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கு மல்ல்ல்ல பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது, திறவோர்

காட்சியில் தெளிந்தனம், ஆகலின் மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 

 

ஆன்ம ஒருமைப்பாட்டு உரிமைக்கு வழிகோலுகின்ற அருமையான பாடல் இது.

 

இதன் பொருள் ---

 

     எந்த ஊராக இருந்தாலும், அது நம்முடைய ஊர்தான். யாவராக இருந்தாலும் அவர் எமது உறவினர்தான். நாம் அனுபவிக்கின்ற தீவினையின் பயனும், நல்வினையின் பயனும், தீய விளைவுகளால் மனம் நொந்து கொள்ளுதலும், பின்பு தணிவு பெறுவதும் பிறரால் வருவது அல்ல. நம்மால் விளைவதுதான். சாதல் என்பது இவ்வுலகிலே புதியதாக நிகழ்வது அல்ல. என்றும் உள்ளதுதான். உலக வாழ்க்கையை இனிமையானது என்று மகிழ்ந்து கொள்ளுதலும், அது துன்பமானது என்று வெறுத்து ஒதுக்குதலும் எம்மிடத்தில் இல்லை. வானில் இடி இடித்து, மின்னல் முழங்க,துளித் துளியாய்ப் பெய்யும் குளிர்ந்த மழையானது, மலைச் சரிவுகளில் ஒலி எழுப்பி, அருவியாகப் பாய்ந்து, தலையில் பெரிய ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்போது, அதில் மிதந்து,நீர் செல்லும் வழியே செல்லும் மரக்கட்டையைப் போல, உயிர்க்குலமானது அதற்கு விதித்த விதியின் வழிச் செல்லும் என்னும் உண்மையைக் கற்று அறிந்த பெரியோர்கள் சொல்ல உணர்ந்து உள்ளோம். ஆகையால், நாங்கள் பெருமைக்கு உரிய பெரியவர்களைக் கண்டு அதிசயப்படுவதும் இல்லை. சிறியவர்களைக் கண்டு பழிப்பதும் எம்மிடத்தில் இல்லை.

 

     புநானூற்றுப் பாடல்களிலேயே மிகவும் பொன் போலப் போற்றிப் பின்பற்றி ஒழுக வேண்டிய பாடல் இது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே "உலகம் எல்லாம் எம்முடையதே. அதில் வாழும் மக்கள் யாவரும் எமது உறவினரே" என்று கண்டு, அதன் வழி வாழ்ந்து வந்த பெருமைக்கு உரியவர்கள் சொன்னதைப் பொன் போலப் போற்றி, அவர்கள் காட்டிய வழி நடந்து, உலக மக்கள் யாவரும் ஒருமை நெறியில் உயர்ந்து நிற்க வேண்டுவோம்.

 

     "ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" மனித குலம் ஒன்றுதான். இறைவனும் ஒருவன்தான். வேறுபாடுகளைக் கற்பித்து, வேறுபட்டுப் போகவேண்டாம்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...