காக்கை விரும்புவது வேப்பம் பழத்தையே



காக்கை விரும்புவது வேப்பம் பழத்தையே

-----

 

     மானுட வாழ்க்கை குறைகளை உடையது. குறைகள் இல்லாதவன் மனிதன் அல்ல. இறைவன் ஒருவனே குறைவில்லாத நிறைவாக உள்ளவன். ஆயினும் மனித வாழ்க்கையானது குறைகளே உடையதும் அல்ல. குறைகளும் உண்டுநிறைகளும் உண்டு. குறைவிலா நிறைவுடையது பரம்பொருள் ஒன்றே. "குறைவிலா நிறைவே"என்று மணிவாசகர் போற்றுகின்றார். நன்றுடையான் தீயதிலான்” என்று பாராட்டுகின்றார் திருஞானசம்பந்தர். குறையின் விளைவு தீமைதுன்பம். நிறையின் விளைவு நன்மைஇன்பம். 

 

     குறைகளும்நிறைகளும் கலந்ததே மனித வாழ்க்கை! அதனாலேயே குறைகள் இயல்பானவை என்றும்சரியானவை என்றும் நியாயப்படுத்துதல் கூடாது. குறைகளில் இருந்து விடுதலை பெறவே இந்த வாழ்க்கைஅதற்கானவையே  கல்விகேள்வி,அறிவு,சமய வாழ்க்கைஇல்லற வாழ்க்கை,துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும்.

 

     அறிவறிந்த ஆள்வினை,பொருள் ஈட்டுதல்ஈட்டிய பொருளைத் துய்த்தல் ஆகிய அனைத்துமே மனித உயிர் வாழ்க்கை குறைகளில் இருந்து நீங்கிநிறை பெறுவதற்குரிய நிலைகளே. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு. குறைகளையும்நிறைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து மிகுதி நோக்கிப் பாராட்ட வேண்டும்போற்ற வேண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்"

 

என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     குறைகளைத் திருத்துவதற்கு வழி குறைகளைத் தூற்றுதல் அல்ல. ஒருவரிடமுள்ள குறைகளை எடுத்துத் தூற்றுவது "சிறுமை" ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்                --- திருக்குறள்.

 

     பெருமைக்கு உரிய சான்றோர்பிறரிடத்து உள்ள குறைகளை மறைத்துப் பேசுவர். சிறுமை உடைய கீழ்மக்கள்தான் பிறரிடத்து உள்ள குணங்களை மறைத்தும்குறைகளைத் தூற்றியும் திரிவர்.

 

"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்"           --- திருக்குறள்.

 

     பிறர் நன்றாக உடுப்பதையும்உண்பதையும் காண நேர்ந்தால்அத்தகையவர் மீது பொறாமை கொண்டுகுற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் கீழ்மக்கள்.

 

     அப்படியானால்பிறரது குற்றங்களை எடுத்துக் காட்டித் திருத்தாமல்அவர்களிடத்து உள்ள குற்றங்களுக்கும் உடந்தையாக இருக்கவேண்டும் என்பது கருத்து அல்ல. குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தால் குறை நீக்கம் உண்டாகாது. மாறாகப் பெருகவே செய்யும். பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு குற்றத்தை எடுத்துக் காட்டுதலும்பழிதூற்றும் எண்ணத்தோடுகுற்றத்தை எடுத்துக் கூறுதலும் தவறு.

 

     மாறாக அவரிடமுள்ள குணங்களைப் பாராட்டிமனம் நிறைந்த உறவினைப் பெற்றுஅவர் நம் மீது கொள்ளும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு,தோழமை உணர்வில் சிறிதும் குறையாமல்சிறுகச் சிறுகக் குற்றங்களில் இருந்து விலக்கிநிறைகளைப் பெறத் துணை செய்யவேண்டும்.

 

     இறைவன் கூட அறியாமை நிறைந்துள்ள உயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருத்துகின்றான். "பையவே கொடுபோந்து பாசம் என்னும் தாழ் உருவி" என்று இறைவன் திருவருளைப் போற்றுகின்றார் மணிவாசகர். "திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து உன்னை அடைந்தார் விளைகள் அகல அருளாயே" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

 

     உடலில் உண்டான கட்டி குற்றம் உடையது. துன்பம் தருவது. குற்றம் உடைய எதுவும் துன்பத்தையே தரும். ஆனாலும், உடலில் உண்டான கட்டியையும் மெல்லத் தடவிக் கொடுத்து, அது பழுத்தற்கு உரிய உபாயத்தைச் செய்து, பழுத்த பிறகு வலி இல்லாமலும்இரத்தம் சிந்தாமலும் அறுத்து அகற்றும் முறையே மருத்துவமுறை. ஈரும் பேனும் உள்ள தலையானாலும் எண்ணெய் தடவிச் சீவித்தான் அகற்ற வேண்டும். எனவே, குற்றங்களைத் திருத்தும் முறை இனிய முறையாக இருக்க, அன்பு கலந்த முறையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உயிர்கள் மகிழ்ந்து குற்றங்களில் இருந்து எளிதில் விடுதலை பெறும். இதுவே இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையும் ஆகும்.

 

     உயிர்கள் ஆணவத் தொடர்பால் அறியாமை வழிப்பட்டு வேட்கை கொள்கின்றன. இறைவன் "இது தீது" "அது தீது என்று எடுத்த எடுப்பில் உபதேசம் செய்வதில்லை. உயிர்களின் வேட்கையை அறிந்துகொண்டு பொன்னும்மெய்ப்பொருளும் தந்துபோகமும்,திருவும் வழங்கிஉயிர்கள் செல்லுகின்ற வழியிலேயே தானும் சென்று, புறம் புறம் திரிந்துதுய்ப்பில் உயிருக்கு உண்டான வேட்கை தணியும் வரை காத்திருந்து, அறிவினைப் புகட்டி ஆட்கொண்டு அருளுகின்றான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் வலராற்றை நன்கு உணர வேண்டும்.

 

     உயிரில் இயல்பாகவே உண்டாகியுள்ள குற்றங்களை அன்பின் வழியில் அகற்ற முயல்வோர் சான்றோர். இத்தகு சான்றோர் இன்று நாட்டில் அருகிவிட்டனர்.  பிறர் குற்றத்தைக் தூற்றுவதே தொழிலாக வளர்ந்து வருகிறது. "நீ ஏன் இந்தத் தவறு செய்தாய்" என்று கேட்டால், "இதற்கு முன் அவன் தவறு செய்யவில்லையா?" என்று கேட்பதும், தான் செய்த தவறை நியாயப்படுத்துவதும் காணப்படுகின்றது. இது நெறியும் அல்ல. முறையும் அல்ல. "ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கின், பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு" என்னும் திருக்குறள் சொல்லளவிலேயே உள்ளது. 

 

     ஆனால்இன்று மக்களிடையில் குற்றமே காணும் இயல்பு பெருகி வளர்கிறது. இங்கும் அங்குமாகவுள்ள குறைகளைத் தூற்றுவதையே தொழிலாகக் கொண்ட தாள்களும்மேடைகளும் வளர்ந்துவிட்டன.

 

     ஒரு சார்பு உடையவர்கள், பகைமை உணர்ச்சி உடையவர்கள் குற்றங்களைப் பார்க்கிறார்கள். குணங்களை எடுத்துக் கொள்ளத் தவறுகிறார்கள் குணங்களை எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். சிலர் இகழ்வதை ஒரு பொருளாகக் கருதத் தொடங்கினால், நம்மால் வாழவே முடியாது. ஒருசிலர் இகழ்வதைப் பொருளெனக் கொள்ள வேண்டாம் என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

     தூற்றுவதாலேயே குற்றம் உண்மையாகி விடாது. காக்கை வேப்பம் பழத்தையே விரும்புகிறது. அதனால் வேப்பம்பழம் இனிமை உடையதாகி விடாது. காக்கை விரும்பாத மாம்பழம் சுவையில்லாததாகவும் ஆகிவிடாது. காக்கைகளைப் போல கருமை மனம் உடையோர் ஒருவரிடத்தில் உள்ள நல்ல குணங்களைப் பார்க்க மறுப்பர். அதை எண்ணிக் கவலை கொள்ளுதல் கூடாது.

 

     குறையே நோக்கி இகழ்பவர்களும்நிறைகளைக் கண்டு பாராட்ட மறுப்பவர்களும் மதிக்கும்படியாக வாழ்வது முடியாது. காரணம் அவர்களுக்கு இகழுதல் என்பது ஒரு தொழில்ஆகவிட்டது. பிறரிடத்தில் குற்றம் குறைகளைக் காணுகின்றவர்கள் யாருக்கும் தன்னிடத்தில் உள்ள குற்றம் குறைகள் தோன்றாமல் இருக்காது. தன்னிடத்தில் உள்ள குற்றம் குறைகளைப் பிறர் அறியாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவேபிறரிடத்து உள்ள குறைகளை மட்டுமே எப்போதும் தூற்றிப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவ்வாறு செய்வதால் தமது குற்றங்கள்குறைகள் மறைக்கப்படும்மறக்கப்படும் என்பதாக அவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டு இருப்பர். அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளுதல் வேண்டாம்.

 

     நம்மிடத்து உள்ள குறைகளையும்நிறைகளையும் நாமே ஆராய்வோம். குறைகளைக் களைய முயல்வோம். நிறைகளைப் பெருக்கவளர்க்க முயல்வோம். பிறர் தூற்றுவதறகு அஞ்சி அல்ல. பிறர் பாராட்டுவதை விரும்பி அல்ல. நெறிமுறையான வாழ்க்கையை வாழ்ந்துநிறைநலம் அனைத்தும் பெறவேண்டும் என்பதற்காக.

 

உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்

கொண்டு புகல்வது அவர் குற்றமே, --- வண்டு மலர்ச்

சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ

காக்கை விரும்பும் கனி          

 

என்பது சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய "நன்னெறி".

 

இதன் பொருள் ---

 

     செழுமையாக உள்ள சோலையிலே உள்ள மலர்களிடத்திலே வண்டுகள் தேனை விரும்பிச் செல்லும். அச்சோலையில் பல நல்ல கனிகள் இருந்தாலும்காக்கையானது வேப்பம் பழத்தையே விரும்பும். அதுபோலஒருவனுக்குப் பல நல்ல குணங்கள் இருந்தாலும்கீழ்மக்கள் எடுத்துப் பேசுவது குற்றங்களை மட்டுமே. (குணங்களைப் பாராட்ட மாட்டார் என்பது கருத்து).

 

     குணம் --- நல்லகுணம். கீழ் --- கீழ்மக்கள்.

 

     தன்னிடத்தில் குற்றம் உள்ளவர், பிறரிட்டத்தில் உள்ள குற்றங்களையே பார்ப்பர், தூற்றுவர். குற்றமற்ற நல்லோர், பிறரிடத்தில் குற்றம் இருந்தாலும், தூற்றாமல், அவரிடத்தில் உள்ள நன்மைகளை எடுத்துப் பேசி, கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள். இவர்களையே உலகம் போற்றும்.

 

     பிறரால் மதிக்கப்படுதல் வேண்டும் என்னும்படியாக ஒழுகுபவர்கள் இதைத் தான் செய்வார்கள் என்கின்றார் குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில்.

 

"பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்

மறவாமே நோற்பது ஒன்று உண்டு, --- பிறர்பிறர்

சீர் எல்லாந் தூற்றி, சிறுமை புறங்காத்து

யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்".

 

இதன் பொருள் ---

 

     மற்றவர்களால் நன்கு மதிக்கப்பட வேண்டும் என்பதை விரும்பும் ஒருவன், எப்பொழுதும் மறவாமல் பின்பற்ற வேண்டுவது ஒன்று உண்டு. அது என்னவென்றால், மற்றவர்களிடத்து உள்ள பெருமைகளை எல்லாம் ஒளியாமல் வெளியில் பரவச் செய்து, அவர்களிடத்தில் உள்ள தீய ஒழுக்கங்களை எல்லாம் வெளியில் பரப்பாமல் காத்து, எல்லோரிடத்தும் பணிவான சொற்களையே பேசி வருதல் ஆகும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...