இரண்டு கைகளை உடைய யானை

 


இரு கைகளை உடைய யானை

-----

 

     உறவினர்கள் மட்டும் அல்லாமல்நண்பர்களும் நமது வாழ்வில் பெரிய பங்கு வகிக்கிறார்கள். நம் வாழ்வின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர்கள். அது நல்ல வழியிலும் இருக்கலாம்அல்லாத வழியிலும் இருக்கலாம்.

 

     உறவினர்கள் நமது வினைப்பயனுக்கு ஏற்பத் தாமாகவே வந்து அமைந்து விடுபவர்கள். "கேளாதே வந்து கிளைகளாய் இல் தோன்றி" என்பது நாலடியார். ஆனால்நண்பர்கள் நாமாகத் தேர்ந்து கொள்பவர்கள். நம்மை விடகல்விசெல்வம்அதிகாரம்புகழ் ஆகியவற்றில் உயர்ந்தவர்களையே நட்பாகக் கொள்ள விரும்புவோம்.

 

     யாரை நண்பராகக் கொள்ளவேண்டும் என்பது குறித்து "நாலடியார்" ஓர் அறிவுரையைத் தருகின்றது. கல்விசெல்வம்அதிகாரம்புகழ் படைத்தவர்கள்உண்மையாகவே நண்பர்களாக இருந்தாலும்சில நேரங்களில் தங்களுடைய சுயநலத்துக்காக நம்மை பயன்படுத்திக் கொள்வார்கள். பயன்படாதது போல் தோன்றினால் விட்டு விலகவும்விலக்கவும் செய்வார்கள். கல்விசெல்வம்அதிகாரம்புகழ் ஆகியவற்றால் வலிமை அற்ற சிலர் நண்பர்களாக வாய்த்துவிட்டால்நாம் தவறே செய்திருந்தாலும் நம்மை மன்னித்துநம் மீது தொடர்ந்து அன்பு செலுத்துவார்கள். நாம் துன்பப்படும் காலத்தில்,  "உடுக்கை இழந்தவன் கை போல" தாமாகவே முன் வந்து நமது துன்பத்தைக் களைவார்கள். அப்படிப்பட்டவர்களை நாம் கொள்ள வேண்டும் என்று "நாலடியார்" அறிவுறுத்துகின்றது.

 

     யானை உருவத்தில் பெரியதுவலிமை மிக்கது. கம்பீரமான. இருந்தாலும் சில சமயம் தன்னை பழக்கிய பாகனையே அது மிதித்துக் கொன்று விடுகிறது. நாய் இருக்கிறதே,அது சாதாரண விலங்குதான். நாம் அதை எட்டி உதைத்தாலும்திட்டினாலும்அது நம் மீது தொடர்ந்து அன்பு காட்டும். நாம் அதன் மீது வேலை எறிந்தாலும்அந்த வேல் உடலில் தைத்து இருந்து வேதனை தந்தாலும்அதையும் மறந்து அந்த நாய் நம் மீது அன்பு செலுத்தும். அது போலநமது பிழைகளைப் பொறுத்துநம் மீது அன்பு கொள்பவர்களை நாம் நட்பாகக் கொள்ள வேண்டும்.

 

"யானை அனையவர் நண்பு ஒரீஇநாய் அனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;யானை

அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய்".         --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     யானையைப் போன்றவர்கள் நட்பை விட்டுவிட வேண்டும். நாயைப் போன்றவர்களிடமே நட்புக் கொள்ளுதல் வேண்டும். யானை நன்கு தெரிந்த பாகனைக் கூமதம் பிடித்த வேளையில் கொன்றுவிடும். ஆனால்நாயோ தன்னை வளர்த்துச் சோறு இட்டவர் தம் மீது வேலை எடுத்து வீசினாலும்அதற்காக வருந்தாமல் வாலாட்டி நன்றி பாராட்டும்.

 

     அறிவும்செல்வமும்அதிகாரமும் நட்புக்கு அடிப்படை அல்ல. சொல்லப் போனால் அது சில சமயம் அதுவே ஆபத்தாகக் கூட முடியலாம். அன்புதான் நட்புக்கு அடிப்படை. நன்றி உணர்வுதான் நட்புக்கு அடிப்படை.

 

     யானை பெரிய விலங்கு. உடலால் பெரிய விலங்கு. நான்கு கால்களை உடைய விலங்குகளில்கையால் எடுத்து உண்பது யானை ஒன்றுதான். யானைக்கு மட்டுமே தும்பிக்கை என்னும் ஒரு உண்டு. அது தனது தும்பிக்கை என்னும்பெரிய கையால் உண்கிறது. ஒரே நேரத்தில் தும்பிக்கையிலும் வாயிலும் உணவு வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக உண்டு ஊனைப் பெருக்குவது யானை. யானைக்கு உணவு இட்டு மாளாது.

 

     மனிதன் யார்இந்த வினாவிற்கு விடை பகருகின்றார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்.  “Man is by nature a social animal; an individual who is unsocial naturally and not accidentally is either beneath our notice or more than human. Society is something that precedes the individual. மிருகத்தில் மனிதன்மனிதனில் மிருகம்மனிதனில் மனிதன் என்ற படிநிலைகள் உண்டு! இந்த வரிசையில் மனிதன் தன்னை யார் என்று அறியாத நிலையில் வளர்ச்சி இல்லை. 

 

     யானைக்கு எப்படி தன்னையோதன் உடலையோ அறிய முடியாத நிலையோ,அது போலவே மனிதனுக்கும் தன்னை அறிய முடியாத நிலை இருக்கின்றது. தன்னை அறிந்தால் கேடு இல்லை. தன்னை அறியாமல் தானே கெடுபவன் மனிதன்.

 

"தன்னை அறியத் தனக்கு ஓரு கேடு இல்லை,

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்,

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே". 

 

என்கின்றார் திருமூல நாயனார்.

 

     யானைதனது தும்பிக்கையால்உண்டு ஊனைப் பெருக்கி வளர்த்துக் கொள்கிறது! இன்றைய மனிதனின் நிலை என்னஎங்குப் பார்த்தாலும் உணவுச் சாலைகள்! இரை தேடி அலைகிறான். இரையைத் தேடுவதோடு இறையையும் தேடவேண்டும் என்னும் உணர்வு இல்லை. "உண்பதற்கே பொய்த் தொண்டு" பேசுகின்றான். மனிதனின் நிலையை அறிந்துதிருக்கோயில்களும் கூடபிரசாதம் என்னும் பெயரில்உணவு விற்கும் சாலைகளாக மாற்றிவிட்டன. விதவிதமாக உண்டுஊனினைப் பெருக்கி வளர்கிறான். இதன் விளைவே நீரிழிவு நோய்,உடல் பெருத்தல். இதயப் பாதிப்பு. மூட்டு வலிகள். ஊடல் எடை குறையவேண்டும்! ஊன் உருகினால்உள்ளொளி பெருகும். உலப்பு இல்லா ஆனந்தம் என்னும் தேன் சொரியும். "ஊனினை உருக்கிஉள்ளொளி பெருக்கிஉலப்பு இல்லா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே" என்பார் மணிவாசகப் பெருமான். எனவேயானையை விடப் பெரியவன் மனிதன்.

 

     யானைதன் தலையில் தானே புழுதியை அள்ளிப் போட்டுக் கொள்ளும்! அதுபோல ஆன்மா தன்னுடைய துன்பத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறது. இன்பமே உலகத்து இயற்கை! துன்பம் எல்லாம் மனிதனால் படைத்துக் கொள்ளப்பட்டதே. நோய்கள் எல்லாம் மனிதனால் உருவாக்கிக் கொள்ளப்பட்டவையே. அறியாமையின் காரணமாக மனிதன் தனக்குத் தானே துன்பம் செய்து கொள்கிறான்! அறியாமை என்றால்ஒன்றும் தெரியாமை அல்ல. ஒன்றைப் பிறிதொன்றாக முறை பிறழ உணர்தலே அறியாமை. எனவேயானையை விடப் பெரியவன் மனிதன்.

 

     "நன்றுடையானை,தீயது இல்லானை" என்று இறைவனைப் புகழ்ந்தார் திருஞானசம்பந்தர். "நன்று உடையான்" என்று உடன்பாடாகச் சொன்னது மட்டுமல்லாமல்எதிர்மறையா, "தீயது இல்லான்" என்றும் சொன்னார். எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் நன்மையாக எது இருக்கிறதோ அதுவே நன்மை. ஒருபொழுது நன்மையாகவும்ஒருபொழுது தீமையாகவும் இருப்பது நன்மை ஆகாது. இன்று மனிதன் நன்மை என்று நினைத்துக் கொண்டிருப்பது தீமை கலந்த நன்மையையே. பழக்க வாசனையால் தீமை கலந்த நன்மையைதீமையாக உள்ளதை நன்மையாகக் கருதுகின்றான். ஆதலால்மனிதன் யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுதல் போலத் தங்களுக்குத் தாங்களே தீமை செய்து கொள்கின்றான். ஆதலால்மனிதனுக்கு வருகின்ற துன்பம்பிறர் தர வருவது அல்ல."தீதும் நன்றும் பிறர்தர வாரா! நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன" என்று புறநானூறு கூறுகின்றது. எல்லாம் அவரவர் செய்து கொள்வதே! யானை தலையில் புழுதி அள்ளிப் போட்டுக் கொண்டது போலத் தான் இதுவும்.எனவேயானையை விடப் பெரியவன் மனிதன்.

 

     யானை தன்னைக் கட்டுவதற்கு உள்ளசங்கிலியைத் தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். அதுபோல மனிதன் தன்னைத் தானே வினைக் கட்டுகளுக்கும்பாசக் கட்டுகளுக்கும் உட்படுத்திக் கொள்கிறான். நமக்கு வந்த பிறப்புகருமேனி கழிக்க வந்த அற்புதமான பிறப்பு. அதன் அருமை அறியாமல்தன்முனைப்பு காரணமாக, "நான்""எனது" என்னும் செருக்குக் கொண்டுபாவம்புண்ணியம் என்னும் இருவினைகளைப் பெருக்கிஅதனால் வரும் இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இன்பம் என்று சொல்லப்படுபவையும் நிரந்தரமான இன்பம் அல்ல. அவையும் துன்ப சொரூபமானவையே. இதனால் தொடர்ந்து பிறவி உண்டாகின்றது. "அல்லல் போம்வல்வினை போம்அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்" என்று துதிப்பது எல்லாம் பொருளற்றதாகி விட்டது. பொருள் உணர்ந்து சொன்னால் நலம் விளையும். எனவேயானையை விடப் பெரியவன் மனிதன்.

 

     யானையை அதன்மேல் பாகன் இருந்து செலுத்துகிறான். அவன் யார்யானையை உணவு ஊட்டி வளர்த்தவன்தான். ஆனாலும்மதம் பிடித்து விட்டால்யானை பாகனின் அருமை அறியாமல் அவனைக் கொல்கின்றது. அதுபோலத்தான் உயிர்களின் உயிருக்குள் உயிராக இருந்து விளங்கிஉயிர்களை இயக்கிடும் கடவுளின் அருமையை மனதின் அறியாமல் இருக்கின்றான். "உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே" என்றார் அப்பர் பெருமான்.

உயிர்க்குக் கருவாகஉயிராக விளங்கி அருள் செய்யும் இறைவனின் அருமையை மனிதன் உணரவில்லை. யானை தன் முதுகில் இருந்து தன்னைச் செலுத்தும் பாகனின் அருமையை உணரவில்லை. ஆன்மை தன்னுள்ளே இருந்து தன்னைச் செலுத்தும் இறைவனை அறிவதில்லை. எனவேயானையை விடப் பெரியவன் மனிதன்.

 

     யானை தன்னை நெறிப்படுத்திச் செலுத்தும் பாகன் தனக்குச் செய்த உதவியை நினைவில் கொள்ளாதுஅவனைத் துன்புறுத்திமதச் செருக்கால் திரிவது போலதனக்கு மூல காரணனாக இருந்துதமக்கு உடம்பைப் படைத்துக் கொடுத்ததோடுநுகர்ச்சிக்கு உரிய உலகத்தையும்உலகப் பொருள்களையும் படைத்து அளித்துப் பேருதவி புரிகின்ற இறைவனுடைய அருளை எண்ணிப் பாராட்டாமல்அவன் குடி கொள்ளுவதற்கு இடமாக வாய்த்த  உள்ளத்தைப் புலன்களில் வழியில் செலுத்தித் திரிகின்றான். எனவேயானையை விடப் பெரியவன் மனிதன்.

 

     எனவேமனிதனை இரண்டு கைகளை உடையதொரு யானையாக உருவகப்படுத்தினார் மணிவாசகப் பெருமான். இரண்டு கைகளை உடைய யானையாகத் தான் இருப்பதாக மணிவாசகப் பெருமான் தன்னையே கூறிக் கொண்டார். விலங்குகள் கால்நடைகள். அவை சிந்திக்கும் இயல்பு இல்லாதவை. மனிதனும் காலால்தான் நடக்கின்றான். அதனால் அவனைக் "கால்நடை" என்று கூற முடியுமா விலங்குகள் கால்களால் மட்டுமே நடக்கும் இயல்பினை உடையவை. மனிதன் கால்களால் நடப்பதற்கு முன்போக வேண்டிய இடத்தைஅடைய வேண்டிய இடத்தைச் சிந்தித்துகருத்தில் இருத்திபின்னர் கால்களால் நடையைத் தொடங்குகின்றான்.

 

     கால்நடைகளை அவைகளுக்குப் பயன்தரும் விதத்தில்பயன் தருகின்ற இடத்தில் மேய்த்துக் காப்பவன் மேய்ப்பான் எனப்படுவான். மனிதனுள்ளும் ஒரு மேய்ப்பான் இருக்கின்றான். அவன் வழி காட்டுகின்றான். அவன் காட்டும் வழியில் செல்லாதுஅறிவை மறைக்கின்ற ஆணவத்தின் வழியே சென்று துன்பத்தை அனுபவிக்கின்றான் மனிதன். எனவேமனிதன் இரண்டு கைகளை உடைய யானைதானே.

 

"இருகை யானையை ஒத்து இருந்து,என்உளக்

கருணை யான் கண்டிலேன்கண்டது எவ்வமே;

வருக’ என்று பணித்தனை,வானுளோர்க்கு

ஒருவனே! கிற்றிலேன் கிற்பன் உண்ணவே!"

 

என்பது மணிவாசகர் அருளிய திருவாசகம்.

 

இதன் பதவுரை ---

 

     வான் உளோர்க்கு ஒருவனே --- வானுலகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவன் ஆகிய ஒப்பற்ற முழுமுதலே! யான் இருகை யானையை ஒத்து இருந்து --- நான் இரண்டு கைகளை உடைய யானைக்கு ஒப்பாக உயிர் வாழ்ந்து இருந்துஎன் உள்ளக் கருவைக் கண்டிலேன் --- என் உள்ளத்தின் உள்ளே விளங்குகின்ற மூலப் பொருளாகிய உன்னை உணராது இருக்கின்றேன். கண்டது எவ்வமே --- நான் கண்டது எல்லாம் துன்பத்தையே. வருக என்று பணித்தனை --- அப்படி இருக்கவும்என் மீதும் கருணைகொண்டுதிருபெருந்துறையில் திருவடிக் காட்சி தந்து 'வருவாயாகஎன்று கட்டளை இட்டு அருளினாய். கிற்றிலேன் --- அந்த அருட்கட்டளையின்படிக்கு உன்னை வந்து சேர்வதற்கும்உனது அருளுக்குக் கைம்மாறு கொடுக்கவும் ஆற்றல் இல்லாதவனாக நான் ஆனேன். உண்ணக் கிற்பன் --- மீண்டும் மீண்டும் ஐம்புலன் நுகர்ச்சியில் தலைப்படுவதற்கு மட்டுமே ஆற்றல் உடையவனாக இருக்கின்றேன்.

 

     இறைவன் விண்ணுலகம்மண்ணுலகம்பாதாளலோகம் ஆகிய மூன்றினும் உள்ளவர்க்கு எல்லாம் ஒப்பற்ற தலைவன். விண்ணுலகத்தில் உள்ளவர்க்கு புண்ணியப் பயனைத் தருபவன். மண்ணுலகத்தில் உள்ளோர்க்கு புண்ணிய பாவங்களின் பயனைத் தருபவன். பாதாள லோகத்தில் உள்ளோர்க்குப் பாவப் பயனைத் தருபவன். இந்தக் குறிப்பு தோன்ற, "வானுளோர்க்கு ஒருவனே" என்றார். "விண்ணோர் முழுமுதல்பாதாளத்தார் வித்துமண்ணோர் மருந்து" எனவும் திருவாசகத்தில் பிறிதோரிடத்தில் குறிப்பிட்டார். புண்ணியத்தின் பயனை அருளியது இறைவன்தான் என்பதை தேவர்கள் உணரவில்லை. எனவே, "தேவர்கோ அறியாத தேவதேவன்" என்றார். தேவர்களை இறைவனது தன்மையை அறியாதபோதுமனிதர்களாகிய நாம் எப்படிநாம்தான் இரண்டு கைகளை உடைய யானையாக இருக்கின்றோமே.

 

     இல்லாத ஒரு பொருளை உவமையாகக் காட்டுவது நூல்மரபு. தண்ணீர் இல்லாமல் வற்றிப் போய் இருக்கின்ற பாலைவனத்தில்பட்டுப் போன மரம் எப்படியும் துளிர்விட வாய்ப்பே இல்லை. பாலைவனத்தில் இப்படி ஒரு நிலையைக் காணவே முடியாது. ஆனால்காணமுடியாத ஒன்றைக் காட்டிஅதைப் போன்றது உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழுகின்ற இந்த உயிர் வாழ்க்கை என்பதை உணர வைக்கின்றார் திருவள்ளுவ நாயனார். இது இல்பொருள் உவமை அணி எனப்படும். இந்த அணியில் வருவது, "அன்பு அகத்து இல்லா உயிர்வாழ்க்கைவன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று" என்பது திருக்குறள். அதுபோலவேநம்மால் எப்போதும் காணமுடியாதது இரண்டு கைகளை உடையதொரு யானை.

 

     யானையை விடப் பெரியவனாக மனிதன் உள்ள நிலையை மேலே கண்டோம். "பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றாமல்நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவிலாமல்ஆக்கைக்கே இரை தேடி அலமந்துகாக்கைக்கே இரை ஆகிக் கழிகின்ற மனிதன்" நிச்சயமாக யானையை விடப் பெரியவன்தான்.

 

     "உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே" என்பார் அப்பர் பெருமான். நமது உள்ளத்தின் கருப் பொருளாக உள்ளவன் இறைவன். அவனை உணர்ந்தால் துன்பமில்லை. உணராமையால் துன்பமே விஞ்சி நின்றதாகக் கொண்டு, "என் உள்ளக் கருவை யான் கண்டிலேன்கண்டது எவ்வமே" என்றார். எவ்வம் என்றால் துன்பம். யானையானது தன்னை நன்னெறிப்படுத்தும் பாகன் தனக்குச் செய்கின்ற உதவியை நினைவில் கொள்ளாதுமதச் செருக்கால் அவனைத் துன்புறுத்திபுலன் நுகர்ச்சியில் தலைப்படுதல் போலதனக்கு உடம்பை படைத்து அருளிஉலகப் பொருள்களையும் படைத்து அருளிப் பேருதவி புரிகின்ற இறைவனின் அருள் திறத்தை நினைவில் கொள்ளாதுஅவன் இருப்பதற்கு இடமாக அமையவேண்டிய உள்ளத்தைப் புலன் வழியில் போகவிட்டுஇன்பம் போன்று காட்டிதுன்பமாக முடிகின்ற புலன் நுகர்ச்சிகளில் தலைப்பட்டு இருப்பதால்மனிதன் நிச்சயாக இரண்டு கைகளை உடைய யானைதான் என்பதில் ஐயம் இருக்க வாய்ப்பு இல்லை.

 

     யானை மதம் கொண்டு துன்புறுத்தித் திரிந்தாலும்அதை அடக்கிமீண்டும் நல்வழிப் படுத்துகின்ற பாகனைப் போலபுலன் வழி ஓடித் திரிகின்றான் என்பதற்காக இறைவன் மனிதனை வெறுப்பது இல்லை. உள்ளத்தைத் தீயவழிகளில் செலுத்தும் கொடியவன் என்னும் நமது இயல்பை அறிந்தும்வெறுப்புக் கொள்ளாதுஇன்பமயமாக உள்ள தன்னை அறிந்து கொள்ளும்படியாகஞானாசிரியனாகத் திருமேனி தாங்கி எழுந்தருளி ஆட்கொள்ளுவான் இறைவன் என்பதை உணர்த்த, "வருக என்ற பணித்தனை" என்றார். அவன் பணித்ததையும் அறியாமல் அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடக்கின்றோம். அறிவில் சிறியவர்கள் தவறு செய்தாலும்அவர்களை நல்வழிபடுத்த எண்ணுகின்றவர்கள் அறிவில் பெரியவர்கள். பெரியவர்களிலும் பெரியவன் இறைவன். மனிதன் சிறியவர்களிலும் சிறியவன். பெரிய விலங்கு ஆகிய யானையிலும் பெரியவன்.

 

     உள்ளத்தின் உள்ளே நின்ற கருவாகிய இறைவனைக் கண்டுஅந்தக் கருவின் வழி நின்றுஅழியாத இன்பத்தை நுகரத் தலைப்படுவது வேண்டும் என்று அறிவுறுத்தினார். எனவேஇரண்டு கைகளை உடைய யானையாக இருப்பதை எண்ணித் தவிர்ப்போம். திருவாசகத்தைப் பொருள் உணர்ந்து ஓதுதல் வேண்டும் என்பது இதனால் விளங்கும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...