தேடிப் போகவேண்டாம் - தானே வருவான்.

 


தேடிப் போவேண்டாம்

-----

 

     துணையொடு கூடி வாழ்வதே நல்ல வாழ்க்கை. அன்பு நலமானது கனிந்த வாழ்க்கை. அதுவே அற வாழ்க்கை. உலகியலில் ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கையில், ஒவ்வொரு நிலையிலும் பலவேறு துணைவர்கள் கிடைக்கின்றார்கள். கொஞ்சநாள் கூடி வாழ்கின்றார்கள். பின்னர் பிரிந்து விடுகின்றார்கள். சிலர் காரணத்துடன் பிரிவார்கள். சிலர் காரணம் இல்லாமலேயே பிரிவார்கள். அப்படிப் பிரிந்து விட்டு, சிலர் தமது பிரிவுக்குக் கற்பனையாகக் காரணம் காட்டுவார்கள். வினைப் பயன்.

 

     இவ்வுலக வாழ்க்கையில்நமக்குக் கிடைத்த துணைவர்களில் பலர் பிரிந்துவிடுகிறார்கள். தன்னலங்களையும் தடைகளையும் கடந்து பாசத்தோடும் பரிவோடும் துணையாகத் தொடர்ந்து வாழ்ந்தவர்கள் இயற்கை நியதியில், மரணத்தால் பிரிக்கப்படுகின்றனர். இந்தப் பிரிவினைகளையும் கடந்து, உயிரை ஒட்டிச் சென்றுமறுமையிலும் உறவு கொள்ளுகின்றவர்களும் உண்டு. அத்தகையோர் கோடியில் ஒருவரே. அத்தகு துணை உலகியலில் கிடைப்பது அருமையிலும் அருமை. எனவேதான், உலகியல் துணைகளைவிட இறைவனைத் துணையாகக் கொள்ளுதல் சாலச் சிறந்தது என்பர் சான்றோர். இறைவனைத் துணையாகக் கொண்டால், அவன் எப்பொழுதும் எக்காலத்தும் எக்காரணத்தாலும் நம்மை விட்டுப் பிரிவதில்லை.

 

     இப்பிறப்பில் அல்லாமல், மறு பிறப்பிலும், எடுக்கின்ற எந்தப் பிறவியிலும் தொடர்ந்து துணையாக இருப்பவன் இறைவன் ஒருவனே. காரணம், அவன் தனக்கென்று எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதவன். தன்னலம் கருதாதவன், கருணையே அவனுக்கு வடிவம். எனவே, மணிவாசகப் பெருமான், இறைவனை, "தனித்துணை" என்றார். உயிரானது நிலையான துணை ஏதும் இல்லாதது என்பதைக் காட்ட,"தனியனேன்" என்றார்.

 

     தனித்துணை ஆகிய இறைவனைப் பெறுவது எப்படிதட்டினால் கதவு திறக்கப்படும் என்று சொல்லாலம். தட்டின பிறகு கதவு திறப்பதில் என்ன பெருமை இருக்கிறதுஅதைக் கருணை என்று கூற முடியுமா? ஒருவர் படுகின்ற துன்பத்தைக் கண்டு வலிய வந்து உதவி செய்வதே உயர் பண்பு. கேட்ட பின்பு வந்து உதவி செய்வது அதற்குப் பின்புதான் வைத்து எண்ணப்படும். இறைவன் ஒருவனே நம்மைப் பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து வாழவைப்பவன். நமக்கு வேண்டிய நலங்களைப் புரியவில்லை என்று தமது அஞ்ஞானத்தால் இறைவனைப் பற்றி அறியாமல், அவனைத் திட்டுபவர்களையும் கூட வாழவைப்பவன் இறைவன். அதனால் அன்றோ, "வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்று அருளினார் அருணகிரிநாதப் பெருமான். "பித்தா" என்றும், "வாழ்ந்து போதிரே" என்று வைத சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அருள் புரிய,தமது திருவடிகள் நிலத்தில் பதியதிருவாரூர் வீதிகளில், தொண்டர்க்குத் தூதனாக நடந்தவர் சிவபெருமான். "இதுவோ எம்மை ஆளுமாறு, ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உமது இன்னருள்" என்று பாடிய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஆயிரம் பொற்காசுகளை வழங்கியவர் சிவபெருமான். குழந்தை ஒன்று அறியாமையால், தம்மைத் திட்டினாலும், அன்பு காட்டுவது தாய்தந்தை அன்பு. உயிர்களுக்குத் தாயும் தந்தையுமாக இருப்பவன் இறைவன். எனவேதான், உயிர்கள் அறியாமையால் திட்டினாலும், அவர்களுக்குத் தமது கருணையைப் பொழிகின்றான்.

 

     இறைவன் உயிர்களுக்கு அருள் நலத்தை எப்போதும் வாரி வாரி வரையாது வழங்கிக் கொண்டு இருக்கின்றான் என்பதைக் காட்ட,"பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான், வந்து முந்துமினே" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் திருவருள் வழங்குகின்ற தன்மையைப் "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து"’ என்கிறார். அழுதபின் ஊட்டும் தாய் சிறப்புடையவள் அல்ல. அழுவதற்கு முன்பாகவே, காலத்தையும் பசியையும் கருத்தில் கொண்டு, குழந்தைக்குப் பசிக்குமே என்று நினைந்து ஊட்டுகின்ற தாய் சிறப்பானவள். இறைவனாகிய தாயும்இத்தகைய தாயையும் விடச் சிறந்த முறையில் அருள் வழங்குகின்றான்.

 

     இறைவனின் திருவருளின்பத்தை நாமாகப் பெற்றுவிட முடியாது. திருவருளைப் பெறுவதற்கு அவனை வணங்கி நிற்க வேண்டும். அதுவும் அவன் அருளால்தான் முடியும் என்பதால், "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றார். இறைவன் அருள் நாம் பெறுவதல்ல, அவன் வழங்குவது. 

 

     பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தேடி வந்து இறைவன் ஆட்கொள்ளுகின்றான். "வான்பழித்துஇம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்" என்கின்றார் மணிவாசகப் பெருமான். "தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின், நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொளவர்" என்கின்றார் அப்பர் பெருமான். "தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே" என்கின்றார் மணிவாசகப் பெருமான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே, அங்ஙனே நின்று வாழும் மயில்வீரனே! செந்தில் வாழ்கின்ற பெருமாளே" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     அவனுடைய திருவருளினாலேயே நாம் ஆட்கொள்ளப் பெறுகின்றோம். அவன் நம்மை ஆட்கொள்வதற்காகவே பல கோலங்களைத் தாங்குகின்றான். ஆயிரம் திருநாமங்களைப் பெறுகின்றான். எனவேஇறைவனை நாம் தேடிப் பெறுவதில்லை. அவனே நம்மை நோக்கி ஓடி வருகிறான். அவன் ஓடி வரும்போது நாம் அவனை இழக்காமல் பற்றிக் கொள்ளவேண்டும். மழையை நோக்கி மனிதன் போவதில்லை. மேகமானது வானிலே பரவி வான வீதியில் வருகிறது. மேகத்தைத் தீண்டி நீர்த் துளிகளாக மாற்றி மழையாகப் பெற மண்ணகத்தே குளிர் காற்றுத் தேவை. குளிர்ந்த காற்றுள்ள இடத்தில் மழை நிறையப் பெய்கிறது. மண் வளம் செழிக்கிறது. மழையை, இறைவன் திருவருள் என்று காட்டி, "மாமழை போற்றுதும்" என்றும் சொல்லப்பட்டது. மழை எங்கும் பொழிவது போலவே இறைவனுடைய திருவருள் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள நம்முடைய நெஞ்சத்தை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாமாகத் தேடிப் போனாலும் அவனைக் கண்டுகொள்ள முடியாது. அவனை வந்து அருள் புரிந்தால்தான் உண்டு. 

 

     மனித மனம் ஒரு புரியாத புதிர். அது செல்லக்கூடிய வேகம்மின் அணு அலைகள் செல்லும் வேகத்தைவிட அதிகமானது. அது எங்கும், எப்போதும் செல்லும். சிறகடித்துப் பறந்து செல்லும். இங்கிருந்து அமெரிக்காவிற்குச் செல்லவேண்டுமானால் பல மணிநேரம் வானவூர்தியில் பயணிக்கவேண்டும். அதற்கு முன்னதாகப் பல மணி நேரம் செலவிட்டு, ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். எந்த ஏற்பாடும் இல்லாமல், பயணத்தையும் மேற்கொள்ளமால், கண் இமைக்கும் நேரத்தில் அமெரிக்காவில் இருக்கும் ஆற்றல் படைத்தது நம்முடைய மனம். அது பட்டிமாடு போல், கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் உலவும். எனவே, "பட்டி மாடான நான்" என்றார் அருணகிரிநாதப் பெருமான். இப்படி உலவுவது நன்மை தராது.  தோட்டத்தில் மேயும் மாடு பட்டிக்குப் போகிறது. உலக வாழ்வில் உலாவி மேயும் மனத்தை எந்தப் பட்டிக்கு அனுப்புவதுமாட்டை அடைக்க ஒரு பட்டி வேண்டும். மனத்தை அடக்க பக்தி வேண்டும். பட்டியில் அடைக்கப்பட்டுக் கிடந்த மாடு வேறு வழியாக வெளியே போய்விட்டால் பட்டியால் பயனில்லை. இறைவனிடத்தில் பக்தி வைத்து இருந்தும், மனமானது உலக வாழ்வில் மேய்ந்தால், அந்த பக்தியால் பயனில்லை. 

 

     எனவே, பட்டிமாடு போல் இங்கும் அங்குமாக அலைகின்ற மனத்தைப் பத்தி என்னும் திண்மையான கயிற்றினால் கட்டி வைக்கவேண்டும். அதற்கும் இறையருள் வேண்டும். "சித்தம் என்னும் திண் கயிற்றால், திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார்" என்கின்றார் மணிவாசகப் பெருமான். நமது சித்தம் எனப்படும் திண்மையான,வலிய கயிற்றினைக் கொண்டு, தமது திருவடியையே கட்டிப் போடுகின்றவன் இறைவன். என்ன அதிசயம். தானே வந்து விலையில் விழுகின்றவனாக இறைவன் இருக்கின்றானே. அவனைப் பற்றிக் கொள்ளுகின்ற வழியில் நாம் ஒழுகவேண்டாமா? அவனை வந்து பற்றிக் கொள்ளுகின்ற வழி எது? அவன் அருள் தானே வெளிப்படுகின்ற நிலை எது? அதற்கு எங்கே செல்லவேண்டும்? இவ்வாறு வினாக்கள் எழலாம். இவ்வினாக்களுக்கு விடை பகருகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வாழ வேண்டுமென்பது இறைவன் கருணை. எழுபாரும் உய்ய வைவேல் விடும் கோன் அவன். சூரனும் (ஆணவமும்) கிரெளஞ்சமும் (மாயையும்) அழிந்தால்அகங்காரமும் மமகாரமும் ஒழிந்தால்உலகம் மேன்மையை அடையும். இதற்காகத் தன்னுடைய வேலைச் செலுத்தினான் முருகன். அந்த வேல் கூர்மையானது.  இவ்வாறு கூர்மையான வேலை விட்ட முருகனுடைய அருள் வந்து தானே உமக்கு வெளிப்படும். மனத்தைத் தடுத்துகோபத்தை அழித்துவிட்டு, ஈட்டி வைத்திருக்கின்ற பொருள்களைத் தானம் செய்துநீங்கள் இருந்தபடி இருங்கள் என்பது அருணகிரிநாதர் நமக்குச் செய்கின்ற உபதேசம்.

 

"தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம்என்றும்

 இடுங்கோள், இருந்தபடி இருங்கோள், எழு பாரும்உய்யக் 

கொடுங்கோபச் சூருடன்குன்றம் திறக்கத் துளைக்கவைவேல் 

விடுங்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே".

 

என்பது கந்தர் அலங்கரத்தில் வரும் ஒரு பாடல்.

 

     மனத்தை அதன் போக்கிலே விடாமல் தடுங்கள்.  கோபத்தை விட்டு விடுங்கள், என்றும் தானம் இடுங்கள். அந்த நிலையில் இருந்தபடியே இருங்கள். அப்போதுஏழுலகமும் உய்யும்படியாககொடுமையான கோபத்தைக் கொண்ட சூரனோடு கிரெளஞ்சம் என்னும் மலை திறக்ககூர்மையான வேலை விடும் இறைவனாகிய முருகனது அருள் தானே வந்து உமக்கு வெளிப்படும் என்கின்றார் இந்தப் பாடலின் வழி.

 

     "தடுங்கோள் மனத்தை"என்று முதலில் சொன்னார். கண்டபடி மேய்கின்ற மாட்டைக் கட்டிப் போட்டால், அது பொறுமையாக இருக்காது. ஆத்திரப்பட்டு, கட்டினை அறுத்துக் கொண்டு போக முயற்சிக்கும். தடுத்து நிறுத்தப்போனால் கோபத்தோடு முட்டும். விரைந்து வேகமாகச் செல்லும் மனத்தைத் தடுத்து நிறுத்தி வாழாது போனால், கோபம் வந்து வாழ்க்கையை வெருட்டும். ஆதலால்தான், இரண்டாவதாக "விடுங்கோள் வெகுளியைஎன்று உபதேசிக்கின்றார். தன்னலச் சார்பினை விட்டு, பொதுநலத்தைக் கருதி வாழ்ந்தால், மனத்தின் வேகம் தடுத்து நிறுத்தப்படும். அதுவும் அவன் அருளால்தான் முடியும். எனவே, "வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன்" என்று இறைவனைக் காட்டினார் மணிவாசகப் பெருமான். மனத்தின் வேகம் கட்டுப்பட்டுப் போகுமானால், வெகுளி வராது. தன்னல நோக்கம் அற்றுச் செய்யப்படுவதே தானம். இங்கேதான் பிறக்கிறது தானம். இன்றைய வழக்கில் தானம் என்பது, பாவக் கழுவாய்க்காக வணிகக் கண்ணோட்டத்தோடு இன்னாருக்கு இப்படிக் கொடுப்பது என்ற வரையறையோடு இருந்து வருகிறது. பயன் கருதாது செய்யப்படுவதே தானம் என்பதால், அதனை என்றுமே செய்து வரல் வேண்டும் என்று அறிவுறுத்தும் விதமாக,"தானம் என்றும் இடுங்கோள்என்று உபதேசித்தார். இவ்வளவும் இருந்தாலும் சிலர் பரபரப்பாகவே திரிவார்கள். அமைதியாக எதையும் பார்ப்பதும் அனுபவிப்பதும் இருக்காது. அவசரத்தில் தாமும் மாறுவார்கள். பிறரையும் வழி மாற்ற முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் தாமே தாங்குவது போல எண்ணிக் கவலைப்படுவார்கள். ஆன்ம வளர்ச்சிக்கு இந்தப் போக்கு துணை செய்யாது என்பதால், "இருந்தபடி இருங்கோள்" என்றார். இருந்தபடி இருப்பது என்றால், ஏதும் செய்யாமல் சோம்பி இருப்பது அல்ல. மனத்ததை ஒருநிலைப் படுத்தி, இறைச் சிந்தனையோடு இருப்பதே "இருந்தபடி இருப்பது" ஆகும். "சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால், அத்தன் அருள் பெறல் ஆமோ" என்கின்றார் அப்பர் பெருமான். இப்படி இருந்தால், முருகனைத் தேடிச் செல்லவேண்டாம். அவன் திருவருளைத் தேடி அலைய வேண்டாம். முருகனின் திருவருள் வலியத் தானே வந்து வெளிப்படும் என்பதால், "அருள் வந்து தானே உமக்கு வெளிப்படுமே" என்றார். 

 

     அருணகிரிநாதர் செய்தருளிய உபதேசத்தின்படி வாழ்வோம். இறையருளைத் தேடிப் போகவேண்டாம். "பள்ளமும் மேடும் பரந்து திரிய வேண்டாம்". அவனருள் தானே வந்து வெளிப்படும். அவனே தேடி வந்து நம்மை ஆட்கொண்டு அருள்புரிவான். சுந்தரமூர்த்தி நாயனாரைத் தேடி வந்து தடுத்து ஆட்கொண்டான். மணிவாசகரைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள்புரிந்தான்.

 

 

 

 

No comments:

Post a Comment

50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...