உண்மைத் தொண்டர்

 


உண்மைத் தொண்டர்

-----

 

            உயிர்ஒரு வளம் நிறைந்த விளைநிலம். அறிவார்ந்த விளை நிலம்.ஓயாது தொழிற்படும் தன்மை உடையது. உயிர் அறிவு வடிவானது என்றாலும்அதன் அறிவினை விளங்கவொட்டாமல்விளக்கம் பெற ஒட்டாமல் செய்வது அதனிடத்தில் உண்டான ஆசையேதான். விதைக்காமலே விளைந்து கொண்டு இருப்பது ஆசை ஒன்றுதான். அது பண்பட்ட மனம் என்னும் நிலத்தில் இருந்தால்விளைச்சல் நன்றகவே இருக்கும். பண்படாத மனத்தில் விளையும் ஆசைகள் புதர் மண்டி இருப்பதாக இருக்கும்.மனம் என்னும் நிலமானதுஉணர்வுகளை மையமாகக் கொண்டு வினைகளை விளைவிக்கும் தன்மையை உடையது. அலை கடலில்அலைகள் ஒன்றின் பின் ஒன்றாய் வீசுதலைப் போல ஆசைஅலைகள் வீசுக் கொண்டு இருக்கின்றன. மனமானது ஒன்றை நினைக்கும்அதை அழித்துப் பிறிதொன்றை நினைக்கும். ஓயாத போராட்டம். ஆசை என்னும் வெள்ளம் அப்படிப்பட்டது. "அவா வெள்ளக் கள்வனேன்" என்று திருவாசகம் கூறும். பிறப்பைத் தரத்தக்க ஆற்றல் ஆசைக்கே உண்டு.

 

"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு ஈனும் வித்து"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     எல்லா உயிர்க்கும்எல்லாக் காலத்திலும் ஒழியாத பிறப்பினை உண்டாக்கும் விதை ஆசை. பெருங்காயம் இருந்த குப்பியானதுஅதனுள் இருந்து பெருங்காயத்தை எடுத்துநன்றாகக் கழுவியபோதும்அதனுள் காயத்தின் வாசனை சிறிது காட்டுவது போல்புலன்களின் வழியாகச் சென்ற நினைவும் பிறவிகள்தோறும் விடாது இருப்பதால்மீண்டும் புலன்களில் இச்சை செல்லும். அதனை அறுத்தற்கு மெய்ப்பொருள் உணர்வு வேண்டும். அதனாலேயேமெய்யுணர்வு என்னும் அதிகாரத்திற்குப் பின்னர் அவா அறுத்தல் என்னும் அதிகாரத்தை வைத்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     ஒருவனுக்கு உயிர் உடம்பை விட்டு நீங்கும் காலத்தில்அவ்வுயிரினிடத்து இனி வரப்போகும் வினையும்அவ்வினையினால் உண்டாகும் கதிக்கான நிமித்தங்களும்அக் கதியில் ஆசையும் வந்து முறையே தோன்றவும்தோன்றிய அக்காலத்து நின்று அறிவினை ஆசையானது மறைக்கவும்,அறிவு மறைந்த காலத்தில்அவ்வாசையானது அவ்வுயிரை,வந்து உதித்த கதியினில் கொண்டு செலுத்தும். எனவேஅந்த ஆசையானது பிறப்பினை உண்டாக்கும் விதை போல உள்ளது. ஆகவேபுலன்களின் வழியே மனத்தைச் செலுத்துவதால் உண்டாகும் ஆசையானதுஉண்டாகா வண்ணம் நீக்குதலே பிறப்பை அறுத்தல் ஆகும். இது எல்லாச் சமயங்களுக்கும் ஒத்த கருத்து என்பதால் நூலோர் சொல்லுவர் என்னும் பொருளில், "அவா என்ப" எனக் கூறினார்.

 

     உயிருக்குத் தீராத வறுமை என்னும் பிறவித் துன்பத்தைத் தருவது அதனிடத்து உண்டாகும் ஆசையே காரணம் ஆகும். ஆசை கொஞ்ச நஞ்சமாக இல்லை. கடல் போலப் பரந்து உள்ளது. கடலைக் கையால் நீந்திக் கரை சேர்வது என்பது ஒருவராலும் முடியாத காரியம். ஒரு புணை அல்லது பற்றுகோடு வேண்டும். அதுபோலவேஆசை என்னும் கடலை நீந்தி,முத்தி என்னும் கரையினைச் சேர்வதற்கு இறைவன் திருவடி என்னும் தெப்பம் அல்லது புணை வேண்டும். தீராத அல்லலைத் தருகின்ற ஆசை என்னும் வறுமை நிலையைப் போக்கிமெய்யறிவு என்னும் செல்வத்தைத் தந்து அருளவேண்டும் என்றுஅம்பலவாணப் பெருமானை வேண்டுகின்றார்குமரகுருபர அடிகளார்.

 

அல்கா நல்குரவு அவா எனப் படுமே,

ஐயுணர்வு அடக்கிய மெய்யுணர்வு அல்லதை

உவாக்கடல் சிறுக உலகெலாம் விழுங்கும்,

அவாக்கடல் கடத்தற்கு அரும்புணை இன்றே,அதனால்

இருபிறப்பு இயைந்த ஒருபிறப்பு எய்தும்

நான்மறை முனிவர் மூவாயிரவரும்

ஆகுதி வழங்கும் யாக சாலையில்,

தூஉம் நறும்புகை வான் உற எழுவது

எழுநாப் படைத்த முத்தீக் கடவுள்

கடல் அமிழ்து உமிழ்ந்தாங்கு அவி அமிழ்து உண்ண

வரும்பெருந்தேவரை வானவர் கோனொடும்

விருந்து எதிர் கொள்க என விடுத்தது கடுக்கும்

வலன் உயர் சிறப்பின் புலியூர்க்கிழவ! நின்   

அருள் பெற்று உய்தற்கு உரியன் யான் எனில், 

பல் உயிர்த் தொகுதியும் பவக்கடல் அழுந்த   

அல்லல் செய்யும் அவா எனப்படும்  வ்   

வறுமையினின்றும் வாங்கி   

அறிவின் செல்வம் அளித்து அருள் எனக்கே.   ---  சிதம்பர மும்மணிக் கோவை.

 

இதன் பொருள் ---

 

     ஆசையே குறையாத வறுமை என்பது.  புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகிய அறிவை ஒடுக்கிய மெய்யுணர்வு என்னும் உண்மை ஞானத்தால் அல்லது பௌர்ணமியில் பொங்கும் பெருங்கடலும் சிறுத்துப் போகுமாறு,உலகையேவிழுங்கிக் கொண்டு இருக்கும் அவா என்னும் பெருங்கடலைக் கடத்தற்கு உரிய புணை இல்லை. ஆதலால்,  உபநயனத்திற்கு முன் ஒருபிறப்பும்,அதன் பின்னராகிய ஒரு பிறப்பும்உடைய இருபிறப்பாளர் ஆகியதில்லையில் உள்ள அந்தணர் மூவாயிரவர் புரியும் வேள்வியில் வான் உற எழும் புகையானது அக்கினி தேவன்,அவி உண்ணவரும் தேவர்களை விருந்தாக எதிர்கொள்ள விடுத்தது போல விளங்கும் பெரும்பற்றப்புலியூர் என்னும் திருத்தில்லையில் திருநடம் புரியும் பெருமானே! உனது திருவருள் பெற்று உய்தி பெறுதற்கு உரியவன் அடியேனாக இருப்பின்பல உயிர்களின் கூட்டமும் பிறவியாகிய பெருங்கடலில் அழுந்துமாறு துன்பத்தைப் புரிகின்றஅவா என்னும் வறுமையில் இருந்து என்னு விடுவித்துமெய்யறிவு ஆகிய செல்வத்தை எனக்கு அளித்து அருள்வாயாக.

 

     அவா இல்லையேல் உயிர்கள் செயல்பட முடியாது. அவாவுக்குத் தாய் ஆசை. ஆசை அவாவைத் தூண்ட,அவா செயலைத் துண்ட இன்பம் துன்பம்வசைவாழ்த்துகாய்தல் உவத்தல்பகைநட்புவிருப்பு வெறுப்புஆகிய சுழிகளில் உயிர் கிடந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றது. அலைகடலும் கூட நள்ளிரவில் உறங்கும்அமைதியாக இருக்கும்.ஆனால்அவா என்னும் வெள்ளத்தால் அலைக்கப்பெறும் உயிர்பேய் படுத்து உறங்கும் இரவிலும் கூட உறங்குவதில்லை. மகிழ்ச்சி மேலிட்டிருந்தால் கற்பனை. ஆழ்துயில் கிடைக்காமலிருந்தால் கனவு. மனம்பகைப் புயலில் சிக்கித் தவித்தால் குள்ளநரித்தனச் சதித் திட்டங்கள். இங்ஙனம்சொறியச் சொறிய அரிப்பு எடுக்கும் வினை வழிப்பட்டு உழலும் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற வழி என்னஎன்று கேட்டால்ஓர் அருமையான வழியைக் காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

 

"பண்டு செய்த பழவினை யின்பயன்

கண்டும் கண்டும் களித்திகாண்,நெஞ்சமே!

வண்டு உலாமலர்ச் செஞ்சடை ஏகம்பன்

தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே".

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சமே! நீ முற்பிறவிகளில் செய்த பழவினைகளின் பயனாக பிறவி வாய்ப்பதையும்அதன் விளைவாகத் துன்பத்தை அனுபவிப்பதையும் அறிந்து வைத்து இருந்தும்பிறவியில் உண்டாகின்ற சிற்றின்பங்களில் நாட்டத்தை வைத்துஅதனால்,களிப்புற்றுக் கெடுகின்றாயே. வண்டுகள் உலாவுகின்ற அன்றலர்ந்த மலர்களை அணிந்த செஞ்சடை உடையவனாகிய திருவேகம்பத்துப் பெருமானுக்குத் தொண்டனாகி,உன் துயர்கள் தீரும்பொருட்டுத் திரிவாயாக.

 

     எனவேதொண்டு செய்தால் துயர் தீரும் என்பது தெளிவாகும். தொண்டராக வேண்டும். அதுவேவினை நீக்கத்திற்குரிய வழி. தொண்டர் ஆகிவிட்டால் வினை நீக்கத்திற்கு வழி உண்டாகுமா?  தொண்டிற்குத் தொல்லை உலகத்தில் நிறையவே இருக்கின்றதே. 

தொண்டு செய்வதற்கு என்று பலவிதமான அமைப்புகள் தோன்றுகின்றன. போட்டிச் சங்கங்கள் தோன்றுகின்றன. அருள்நெறி மன்றம் என்று ஒருவர் தொடங்கினால்இன்னொருவரால்தவநெறி மன்றம் தோன்றுகிறது. பேரவை என்று ஒன்று தோன்றினால்அதற்குப் போட்டியாக பணிமன்றம் தோன்றுகின்றது. இவையெல்லாம் தொண்டு கருதித் தொடங்கப் பெற்றவையாக இருப்பது இல்லை! போட்டி மனப்பான்மையோடுசில நலன்களை மையமாகக் கொண்டு உருவானவை. அவற்றில் உறுப்பினராக உள்ளவர்கள் "தொண்டர்கள்" என்ற பெரயால் அழைக்கப்படுகின்றனர்.

 

     தொண்டர் ஆதல் எளிது. ஆனால்உண்மைத் தொண்டு செய்தல் மிக அரிது. ஒருவர் தொண்டு செய்து நற்பெயர் வாங்குகின்றார் என்றால்தானும் அவரோடு இணைந்து கொள்ளுதல் அறிவுடைமை. ஆனால்பொறாமை காரணமாகபோட்டித் தொண்டு உண்டாகின்றது. உண்மைத் தொண்டர்களை மதிப்பது இல்லை. இவ்வாறான தொண்டு குறித்துபட்டினத்து அடிகள் கூறுகின்றார்.

 

"மெய்த்தொண்டர் செல்லும் நெறி அறியேன்

     மிக நற்பணி செய்

கைத்தொண்டர் தம்மிலும் நல்தொண்டு

    உவந்திலன்,உண்பதற்கே

பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே

    உன்னைப் போற்றுகின்ற

இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ?

    கச்சி ஏகம்பனே"!

 

என்றார்.

 

     மெய்த் தொண்டர் என்பவர் பயன் கருதாது பணி செய்து கிடப்பவர். அவர்கள் செல்லுகின்ற நெறியானது, "திருக்கரக் கோயிலான்தன் கடன் அடியேனையும் தாங்குதல்என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் நெறியில்மனத்தாலும்வாக்காலும்உடம்பாலும் தொண்டு செய்வதே தமது பணியாகக் கொண்டது. அவர்கள் செய்யும் தொண்டினை விரும்பிஅவருடன் கூடி இருந்து பணியைச் செய்வதில் விருப்பம் இல்லை. உண்மைத் தொண்டு செய்வதில் விருப்பம் கொள்ளாமல்பொருளாசை கொண்டுவயிறு வளர்த்தல் பொருட்டுதொண்டு செய்வதாகப் பேசிக் கொண்டுவெளியில் மட்டும் உன்னைப் போற்றுகின்ற தொண்டன் ஆகிய நானும் செய்யும் பணிகளையும் ஏற்றுக் கொள்வாயோஎன்கின்றார் பட்டினத்து அடிகள். இத்தகைய தொண்டினை, "பொய்த்தொண்டு" என்றார்.

 

     உண்மைத் தொண்டர் ஆவது என்பது அவ்வளவு எளிது அல்ல. உண்மைத் தொண்டு செய்யப் பழுத்த மனம் வேண்டும். விருப்புவெறுப்பு அறியா நன்னெஞ்சு தேவை. பணி செய்தல் அல்லாதுபயனைக் கணக்கிடும் நோக்கம் கூடவே கூடாது. ஓயாது உழைத்திடும் உயரிய பண்பு தேவை. சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் செழுந்தவம் செய்யும் இயல்பு தேவை. மக்கள் தொண்டுதான் மகேசனுக்குச் செய்யும் தொண்டு.

 

     இத்தகைய உயரிய குணங்களோடுஅன்பில் தாழ்ந்து செய்யும் தொண்டே உண்மைத் தொண்டு. இத்தகைய தொண்டு உயிரை உருகச் செய்யும். உணர்வைப் பழுக்கச் செய்யும். மனத்தில் காயம் இருக்காது. தற்செருக்கு இருக்காது. புலி வேட்டையிலும் கொடுமையான புகழ் வேட்டைக்கு இடம் இருக்காது. மனிதனை மனிதனே விழுங்குகின்ற அவலம் இருக்காது. அடக்கமே அங்கு ஆட்சி செய்யும். பணிவே பண்பாக விளங்கும். உதவி செய்வோர்உதவி பெறுவோர் என்ற வரையறையும் இருக்காது. உண்மைத் தொண்டின் முன்னர் பெரியோர் சிறியோர் என்னும் பாகுபாடு இல்லை. இத்தகைய பண்படுத்தப்பெற்ற பழுத்த மனம் கிடைத்த பிறகு செய்வதே தொண்டு. மற்ற செயல்கள் எல்லாம் தொண்டாகாது. அது ஒரு வகை செயலே. இந்தச் செயல் தீமையையோ நன்மையையோ செய்யும். துன்பத்தையோ இன்பத்தையோ அல்லது இரண்டையுமோ தரும். புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தரும். உலகத்தில் விளையாட ஓர் அனுமதிச் சீட்டாக "தொண்டர்" என்னும் பெயர் பயன்படலாம். 

 

     ஆனால்உய்திபெற வேண்டுமானால் உண்மைத் தொண்டர் ஆவது நன்று. தொண்டராகிச் செய்யும் தொண்டுபிறப்பைத் தராது. இன்ப அன்பு செழிக்கும். தொண்டு நெறியில் உள்ளவர்கள் வினையானது விண்டுபோகும். "தொண்டு உள்ளார் வினை விண்டு போகுமே" என்றார் திருஞானசம்பந்தர். எப்படிப்பட்ட தொண்டுஇறைவனை உள்ளத்தில் எழுந்தருளப் பண்ணிச் செய்யும் தொண்டு. பயன் கருதாதுதொண்டு செய்வதே தமது கடமையாக எண்ணிச் செய்யும் மனப்பாங்கு.

 

"குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்

தொண்டு உளார் வினை விண்டு போகுமே"

 

என்றார் திருஞானசம்பந்தர். 

 

     தொண்டு செய்வதே பிறவியின் பயன் என்று கொண்டு தொண்டு செய்து உய்ந்த பெருமக்கள் திருத்தொண்டர் எனப்பட்டனர். அவர்களது பெருமையை விளக்கத் "திருத்தொண்டத் தொகை" இறைவனே அடியெடுத்துக் கொடுக்க உருவானது. திருத்தொண்டர் புராணம், "உலகெலாம்" என்று இறைவனே அடியெடுத்துக் கொடுக்கதெய்வச் சேக்கிழாரால் பாடப் பெற்றது. திருத்தொண்டர் புராணம் உண்மையிலேயே பெரிய புராணம் என்பதால்எப்படியோஅதன் பெயர் மருவி மக்களால் "பெரிய புராணம்" என்று வழங்கப்படுகின்றது. உண்மைத் தொண்டு செய்தவர்கள் பெரியவர்கள் என்பதால்அது "பெரிய புராணம்" ஆயிற்று போலும்.

 

     தொண்டு செய்தால் துயர் தீரும். தொண்டு செய்தால் வினை இல்லாது போகும். பொய்த் தொண்டு செய்யாமல்உண்மைத் தொண்டுமெய்த்தொண்டு செய்து நலம் சிறக்க வாழ்வோம்.

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...