அறிவற்றவர்க்கு உதவுவது ஆபத்தில் முடியும்

 


 

அறிவற்றவர்க்கு உதவுவது ஆபத்தில் முடியும்

-----

 

     பிறருக்கு உதவுவது என்பது மிக உயர்ந்த பண்பு. பிறருக்கு உதவுபவர்களை உலகம் போற்றும். 

 

     அன்பின் அடிப்படையாகத் தோன்றும் கருணை இருந்தால்,பிறர்க்கு ற்றவர் கேட்காத முன்னரே தாமாக வந்து உதவத் தோன்றும். உண்மை அறிவு எங்கே இருக்கிறதோ, அங்கே கருணை இருக்கும். அறிவின் பயன்அன்புகருணைஇரக்கம். அன்பு, கருணை, இரக்கம் ஆகிய பண்புகள் விளங்காத அறிவு வெற்றறிவு ஆகும். அந்த வெற்று அறிவால், ஏட்டுக் கல்வியால் பயன் இல்லை.

 

"அறிவினால் ஆகுவது உண்டோ?பிறிதின்நோய்

தன் நோய்போல் போற்றாக் கடை".

 

என்பது திருக்குறள்.

 

     "பிறருக்கு வரும் துன்பத்தைத் தனது துன்பமாக ஒருவன் எண்ணவில்லையானால்அவனுக்கு உள்ள அறிவினால் என்ன பயன் விளையும்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     எனவே இரக்கம் என்பது உண்மை அறிவு உள்ளவர்களுக்கு வரும். அறிவில்லா முரடர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் எல்லா இடத்திலேயும் இரக்கம் காட்டுவதும் அறிவுடைமை ஆகாது.

 

     Misplaced sympathy is harmful.  "அவரவருடைய பண்புகளை அறிந்து உதவி செய்ய வேண்டும். பண்பில்லாதோருக்கு உதவி செய்வது தவறாகவே முடியும்" என்கின்றது பின்வரும் திருக்குறள்,

 

"நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டுஅவரவர்

பண்பு அறிந்து ஆற்றாகை கடை"

 

இது குறித்து சிந்திப்போம்....

 

     விடத்தை நீக்குவதில் சிறந்த மருத்தவர் ஒருவர்,ஒருநாள் காட்டு வழியே மூலிகைகளைத் தேடிப் போய்க்கொண்டு இருந்தார். ஒரு புலி குற்றுயிராக விழுந்து கிடந்ததைப் பார்த்தார். சிறிது தூரத்தில் நாகப்பாம்பு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. நாகப்பாம்பு அந்தப் புலியைக் கடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தது என்றும் அதனால் அந்தப் புலி விஷம் ஏறி விழுந்து கிடக்கிறது என்றும் புரிந்து கொண்டார்.

 

     புலியின் நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்டார் மருத்துவர். அவருக்கு புலிக்கு உதவ வேண்டும் என்னும் இரக்கமே மேலிட்டு இருந்தது.  புலி நலம் பெற்று எழுந்தால் என்ன ஆகும் என்பதைச் சற்றும் சிந்திக்காமல்,புலிக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.  புலி பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை வந்தவுடன்மருத்துவர்மூலிகைகளைத் தேடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் நலம் பெற்று எழுந்த புலிக்கு அடங்காப் பசி ஏற்பட்டது. புலியின் பார்வையில் மூலிகையைத் தேடிக் கொண்டிருந்த மருத்துவர் பட்டார். கொடிய மிருக சாதியான புலிக்கு நன்றி உணர்வு இருக்க வாய்ப்பு சிறிதும் இல்லை. (மனிதர்களிலும் நன்றி உணர்வு இல்லாத விலங்குகள் உண்டு) புலி மருத்துவர் மீது பாய்ந்து கடித்தது. விடத்தைத் தீர்த்து வைத்த வைத்தியர் தீர்ந்து போய்,புலிக்கு ஆகாரம் ஆனார்.

 

     கருணை காட்டி உதவ வேண்டியதுதான். அறிவில்லாத தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவினால் தீமைதான் பலனாகக் கிடைக்கும். அறிவில்லாத தீயவர்களுக்கு இரக்கம் காட்டி உதவுவதுஉதவியவருக்கே தீமையாக முடியும் என்பது நடைமுறை உண்மை. தீயவர்களிடம் இருப்பது தீமைக் குணம் தான். அதைத் தான் அவர்கள் கைம்மாறாகத் தருவர்.

 

      இதை மேலும் வலியுறுத்துவதற்கு"கல்லின் மேல் இட்ட கலம்"என்னும் உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது. கலம் என்பது பாத்திரத்தைக் குறிக்கும். இங்கே அது மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தைக் குறிக்கிறது.

 

     மண்ணால் செய்யப்பட்ட பாத்திரம் கல்லில் விழுந்தால் எப்படி உடைந்து பயன் இல்லாமல் போகுமோ அதைப் போலதீயவர்களுக்குச் செய்த உதவியும் பயன் இல்லாமல் போகும். மண் பாத்திரம் எவ்வாறு உடைந்து போகுமோ அதைப் போன்றுதீயவர்களுக்கு உதவி செய்தவர்களும் துன்பம் அடைவார்கள். அறிவில்லாத கீழ்மக்களுக்கு உதவி செய்வது மண்கலத்தைக் கல்லின் மேல் போட்டு உடைப்பதற்குச் சமம்.

 

     இந்த இரண்டு உண்மைகளை வைத்துஔவையார் பாடிய "மூதுரை"என்னும் நூலில் வரும் பாடல் உணர்த்துகின்றது.

 

பாடலைப் பார்ப்போம்....

 

"வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல்,---பாங்குஅறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின்மேல் இட்ட கலம்".   

 

இதன் பொருள் ---

 

     வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி --- வரிகளையுடைய வேங்கைப் புலியின் விடநோயைப் போக்கியவிட மருத்துவன்ஆங்கு --- அப்பொழுதேஅதனுக்கு ஆகாரம் ஆனால்போல் --- அப் புலிக்கு இரையானால் போலபாங்கு அறியா --- நன்றியறிவு இல்லாதபுல் அறிவாளர்க்கு --- அற்ப அறிவினருக்குசெய்த உபகாரம் --- செய்யப்பட்ட உதவிகல்லின் மேல் இட்ட கலம் --- கல்லின்மேலே போடப்பட்ட மண்கலம்போல (அழிந்துசெய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.) 

 

     அறிவற்ற தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும் என்பது கருத்து.

 

      விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேல் இட்டகலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம் என்று பொருள்.

                       

No comments:

Post a Comment

திருவொற்றியூர்

  "ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யும் திருவொற்றியூர் உடைய...