போலி வேடம் --- உண்மை வேடம்

 

 

போலி வேடம் -- உண்மை வேடம்

----

 

     இறை அடியார்கள் போல பொய் வேடம் பூண்டு கொண்டு திரிகின்றவர்களால் உண்டாகும் கேட்டினை எண்ணி, உண்மை வேடம் கொண்டு, வேடநெறியில் நிற்கின்ற உண்மை அடியார்களையும், நம்பமுடியாத நிலை உலகத்தில் உள்ளது.

 

     அகத்தே நல்லொழுக்கம் இல்லாமல், அன்பு இல்லாமல், அவை எல்லாம் உள்ளது போலப் புறத்தே ஆடம்பரமான வேடங்களை இட்டுக் காட்டி, வீணே பிலுக்குவதோடு, பிறரை மயக்கி, அச்சுறுத்தி பொருள் பறிக்கின்றவர் உலகில் உண்டு. அவர்கள் வெற்று வேடதாரிகள் என்பதை அவரது செயல் என்றாவது ஒரு நாள் வெளிப்படுத்தி விடும்.

 

     பொருள் இன்மை காரணமாக, யாரும் காணாதவாறு, திருட்டுத் தொழிலை மேற்கொள்ளுகின்ற திருடர்களை விட, நல்லவராக வேடமிட்டுக் கொண்டு திரிபவரே திருடர் ஆவார். திருட்டுத் தொழில் செய்பவர்களை "நல்ல திருடர்" என்றும் போலி வேடதாரிகளை, "பொல்லாத கள்ளர்" என்றும், பொல்லாத கள்ளர் ஐந்து வகையினர் என்றும் வகைப்படுத்துகின்றது "தண்டலையார் சதகம்".

 

"செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

     நெறியாரே! திருடிக் கொண்டே

எழும் கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத

     கள்ளர் இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்,

     திருநீறு குழைக்கும் கள்ளர்,

அழும் கள்ளர், தொழும் கள்ளர் ஆசாரக்

     கள்ளர் இவர் ஐவர் தாமே".

 

இதன் பொருள் ---

 

     செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே --- வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள நீள்நெறி நாதர் ஆகிய சிவபெருமானே! திருடிக் கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் --- (பிறர் உடமைகளை அவர் சோர்ந்து இருக்கும் காலம் பார்த்துத்) திருடிக் கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே. இனி பொல்லாத கள்ளர் யாரோ என்றால் --- எனில்,  தீய கள்ளர் யார் என வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் --- செல்வத்தால் கொழுத்து இருந்தும், இல்லாதவரைப் போல் நடிக்கின்ற, நல்லவர் போல் வேடமிட்டு நடிக்கின்ற  கள்ளருடன் கூடிக் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் --- திருநீறு குழைத்து, அங்கமெல்லாம் அழகுபடப் பூசுகன்ற கள்ளரும், அழும் கள்ளர் --- (இறைவனிடத்தில் அன்பு உள்ளவர் போல்) அழுகின்ற கள்ளரும், தொழும் கள்ளர் --- தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் --- ஒழுக்கத்திலே  மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளராகிய, இவர் ஐவர் தாமே --- இந்த ஐவரும் ஆவர்.

 

      "ஆசாரக் கள்ளர்"  ஒழுக்கம் உடையார்போல  நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றுவதால் இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடைய நன்மக்களடு திருவேடத்தைக் கண்டும் மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே,  வெளிப்படையாகத் திருட்டுத் தொழிலை மேற்கொள்வோர் "நல்ல கள்ளர்" எனவும், போலிவேடதாரிகள் "தீயவர்" ஆகவும் கொள்ளப்பட்டனர்.

 

     போலி வேடதாரிகளைக் கழுதைகள் எனவும், சான்றோரைக் குதிரை எனவும் வைத்து, "தருமதீபிகை" என்னும் நூலில் காட்டப்பட்டது.

 

"கத்தும் கழுதை கலினம் இட்டு நின்றாலும்,

தத்து பரி போல் உயர்வு சாருமோ? --- இத்தரையில்

மூடர் அறிந்தவர்போல் முன்னி நிமிர்ந்தாலும்

பீடு பெறுவரோ பின்".

 

என்பது தருமதீபிகையில் வரும் ஒரு பாடல்.

 

இதன் பொருள் ---

 

     கத்துகின்ற கழுதைக்கு கடிவாளத்தைப் பூட்டி விடுத்தாலும், அது உத்தமக் குதிரை ஆகாது. அதுபோல, இவ்வுலகில், ஈன மூடர்கள், ஞானசீலர்களைப் போல் வேடமிட்டுக் கொண்டு இறுமாந்துகொண்டு நிமிர்ந்து நின்றாலும் அவருக்கு மேன்மை உண்டாகாது.

 

     கழுதை கத்துவதும், அதனுடைய நடையுமே அதன் உண்மைத் தன்மையை வெளிக் காட்டிவிடும். கழுதையால் குதிரையைக் போல் கனைக்க முடியாது. குதிரையைப் போல் அதிவேகமாகவும், அழகாகவும் கழுதையால் ஓட முடியாது.

 

     எனவே, கழுதைக்கு, குதிரைக்கு இடுகின்ற கடிவாளமும், சேணம் முதலானவைகளும் பயனற்றதாகிப் போகும். அதுபோலவே, போலிகள் போடுகின்ற வேடமும் கலைந்து, அவரது உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி விடும்.

 

     அறிவு நூல்களைப் பயின்று அறிவு உடையவராய் உயர்ந்து நிற்கவேண்டும். போலி வேடத்தைப் போட்டு உலகத்தை வஞ்சிக்கக் கூடாது. அது முடிவில் வெளிப்பட்டுக் கேட்டினைத் தரும்.

 

     "கற்றதனால் அய பயன், வாலறிவன் நல் தாளைத் தொழுவதே" ஆகும் எனத் திருவள்ளுவ நாயனார் அருளியவாற்றால், போலி வேடம் இட்டு உலகவரை ஏமாற்றாமல், வேடத்திற்கு ஏற்ற நெறியிலே நின்று இறைவனைத் தொழுது உய்தி பெறவேண்டும் என்பதை, நமது கருமூலம் அறுக்க வந்து அவதரித்த திருமூல நாயனார் அருளிய "திருமந்திரம்" வலியுறுத்தும்.

 

"ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!

ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்

தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே".

 

இதன் பொருள் ---

 

     உழைப்பும், முயற்சியும் இல்லாது வயிறு வளர்த்து, ஆடம்பரமாக வாழ்வதையே பயனகாகக் கருதி, தவசீலர்களைப் போல் பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகளே! வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீங்கள், போட்டுக் கொண்ட வேடத்திற்கு ஏற், உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று ஒழுகி, சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள். அதுவே பயன் உடையதாகும்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...