உன்னைத் திருத்திப் பிறரைத் திருத்த முயலுக

 

 

உன்னைத் திருத்திப் பிறரைத் திருத்த முயல்க

----

 

     திருக்குறளில் "புறங்கூறாமை" என்று ஓர் அதிகாரம். ஒருவரைக் காணாத இடத்து அவரைப் பழித்துப் பேசுதல் கூடாது என்கின்றது.

 

     பிறரைக் காணாத இடத்தில், அவரை இகழ்ந்து பேசுவது புறம்பேசுதல் ஆகும். பொறாமை காரணமாகப் பிறர் பொருளைக் கவர விருப்பம் கொள்ளுதல் மனத்தின் குற்றம் ஆகும். புறம் பேசுதல் என்பது மனத்தின் குற்றத்தை அடுத்து, வாக்கின் குற்றமாக வருவது.

  

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "புறங்கூறுவதை இயல்பாக உடையவன், அது செய்தற்கு, அயலாரது குற்றத்தைக் காண்பது போல, தனது குற்றத்தையும் காண வல்லவனானால், உலக உயிர்களுக்குத் தீது உண்டாகாது" என்கின்றது.

 

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்,

தீது உண்டோ மன்னும் உயிர்க்கு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 

தம்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்

எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும்

வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல்.       --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     தம் குற்றம் நீக்கிலர் ஆகி --- (அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி, பிறர் குற்றம் தீர்த்தற்கு எங்கேனும் இடைப் புகுதல் --- பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல், வியன் உலகில் எங்கும் --- அகன்ற உலகின்கண் எவ்விடத்தும், வெள்ளாடு தன் வளி தீராது அயல் வளி தீர்த்துவிடல் --- வெள்ளாடு தனது வாதத்தால் உண்டான நோயைத் தீர்க்காது, பிற உயிர்களுக்கு வாதத்தால் வரும் நோயைத் தீர்த்து விடுதலோடு ஒக்கும்.

 

         ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றம் களைய முற்படுதல் வேண்டும்.

 

         மழைக்காலங்களில் வீசும் சாரல் காற்றுக்கு ஆற்றாது, ஆடுகள் நோய்வாய்ப் புகுதலின், சாரல் காற்றால் உண்டாகும் நோய் தன்வளி எனப்பட்டது.

 

 

கணமலை நன்னாட! கண்ணின் றொருவர்

குணனேயுங் கூறற் கரிதால், குணனழுங்கக்

குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்

கெற்றா லியன்றதோ நா.       ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கண மலை நல் நாட --- கூட்டமான மலைகளை உடைய உயர்ந்த நாடனே!. கண் இன்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிது --- புறத்தில் ஒருவரது நல்லியல்பினையும் பேசுதற்கு அருமையாய் இருக்கும் என்பர்;  குணன் அழுங்கக் குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ நா --- ஆனால், அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாத குற்றங்களை அவர் எதிரிலிருந்து செய்ததாகக் கூறும் மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால் உருவானதோ, அறிகிலேம்.

 

         புறத்தில் குறை கூறாது குணங்கூறுதல் தகும் என்றாலும், அதனையும் காரணம் இல்லாமல் கூறச் சான்றோர் கூசுவர். அப்படி இருக்க, காரணமின்றியே, அதுவும் குற்றத்தை, இல்லாத குற்றத்தை, எதிரிலேயே புனைந்து உரைத்துப் பழிப்பதாயின் அதனை என்ன என்பது?

 

 

ஊர்த்திருத்தம், உற்றார் உயர் திருத்தம், உற்றுநின்ற

பேர்திருத்தம் என்று ஏன் பிதற்றுகின்றாய்? --- கூர்த்திடும்உன்

உள்ளம் திருந்தின், உலகம் எல்லாம் உன் உறவு

கொள்ளத் திருந்தும் குழைந்து.              --- தருமதீபிகை.

 

இதன் பொருள் ---

 

     ஊராரைத் திருத்துதல், உறவினரைத் திருத்துதல், தேசத்தாரைத் திருத்துதல் எனப் பலவகைத் திருத்தங்களையே பன்னிப் பன்னிப் பேசி, நீ வீணே ஏன் திரிகின்றாய்? உனது உள்ளத்தை முதலில் திருத்துவாய். அதனால், உலகம் முழுவதும் உடனே திருந்தி, உனது உறவை விரும்பி வரும்.

 

திருத்தல் --- ஒழுங்குபடுத்துதல். கோணல் மாணலாக உள்ளதைச் செம்மைப் படுத்துதல் திருத்தம் ஆகும்.

 

     சீர்திருத்தங்களைப் பற்றி வாயாரப் பேசுவாரைக் குறித்துச் சொன்னது இது.

 

     சாதிகளிலும், சமயங்களிலும், சமுதாயத்திலும், கால வேற்றுமையால் சில மாறுபாடுகள் புகுந்து விடுதல் இயல்பு. அந்த வேறுபாடுகளைக் களைந்து சீரும் சிறப்பும் அமையத் திருத்துவதே சீர்திருத்தம். அத்தகைய திருத்தங்களைச் செய்ய விரும்பி, அது குறித்துப் பேசுபவர், முதலில் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டது. தான் திருந்தாமல் பிறரைத் திருத்த முயல்வது பேதைமையாய் முடியும்.

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...