விலக்கிய தொழில்களைச் செய்யாதே

 

 

 

விலக்கிய தொழில்களைச் செய்யாதீர்

----

 

     செய்யக் கூடாது என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களை, தாமும் விலக்கி ஒழியாது, சிறுபொருளையும், சிற்றின்பத்தையும் விரும்பிச் செய்தவர்க்கு, அந்த இழி தொழிலானது ஒருவழியாக முடிந்தாலும், பின்னர் துன்பத்தையே தரும்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

 

"கடிந்த கடிந்து ஒரார், செய்தார்க்கு, அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     கள் குடித்தல் கூடாது என்று பெரியோர் விலக்கினர். குடித்துத்தான் ஆகவேண்டும் என்று முயன்று, அரிய பொருளையும் இழந்து, குடித்து மகிழ்பவர் பலர் உண்டு. சான்றோர்கள் விலக்கிய குடிப்பழக்கத்தை மேற்கொள்ளும் போது இன்பமாகத்தான் இருக்கும். ஆனாலும், அது பின்னாளில், பொருள் இழப்பு, நோய் இருப்பு, போன்ற பெருந்துன்பத்தைத் தருகின்றதை அறிவோம்.

 

     இதுபோலவே, சான்றோர் அறிவுரையை மதியாது, அவர்களால் விலக்கப்பட்ட செயல்களைச் செய்வது, அப்போதைக்கு இன்பமாக முடிந்தாலும், பின்னர் தீமையே உண்டாகும் என்பதை அறியலாம்.

 

     திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்ய வந்த பரம்பெரும் நூல்கள் சில உள்ளன. அவற்றுள், பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில், மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த ஒரு பாடல்.

 

தன்மகிணன் தோற்றாள், தரணிமுழுதும் கைகை

என்மகற்கு நல்கென்று, இரங்கேசா! - நன்மை

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.                     

 

இதன் பொருள் --- 

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! கைகை --- கைகேசியானவள், தரணி முழுதும் --- உலக ஆட்சி முழுவதையும், என் மகற்கு நல்கு என்று --- என்னுடைய பிள்ளையாகிய பரதனுக்குக் கொடு என்று கேட்டு, தன் மகிணன் தோற்றாள் --- தன்னுடைய கணவனாகிய தசரதனை இழந்து கைம்பெண் ஆனாள், (ஆகையால், இது) நன்மை கடிந்த --- நன்மையைத் தள்ளின தீய தொழில்களை, கடிந்து ஒரார் --- தள்ளாதவர்களாகி,  செய்தார்க்கு --- செய்தவர்களுக்கு, அவை தாம் --- அத் தீய காரியங்கள் தாம், முடிந்தாலும் --- நிறைவேறினாலும், பீழை தரும் --- துன்பம் தருவனவாம் (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- தீமையை விதைத்தால், தீமையே விளையும்.

 

         விளக்கவுரை --- தசரதன் தனக்குத் தருவதாகச் சொல்லி இருந்த இரு வரங்களைக் கொண்டு, இரண்டு பெரிய தீய காரியங்களைச் செய்யத் துணிந்தாள் கைகேயி. அவைகளில் ஒன்று - இராமன் காடாள்வதும், மற்றொன்று - பரதன் நாடாள்வதும் என்பது எல்லாரும் அறிந்ததே.

 

     நீதிக்கு மட்டுமல்ல, மனிதத் தன்மைக்கும் புறம்பாகிய இந்த வரங்களை, மந்தரையின் துர்ப்போதனையில் மயங்கி, அறிவு இழந்து, கைகேயி கேட்டாள். இந்தத் தீய காரியங்கள் ஒருவாறு முடிந்தன. ஆனாலும், அவைகள் பெரும் பீழைகளாகிய தசரதன் சாவையும், கைகேயியின் கைம்மையையும் பலனாகத் தந்தன. நன்மை கடிந்த கடிந்தொராள் செய்தாளாகிய கைகேசிக்கு, அவைதாம் முடிந்தும் பீழை தந்தமை காண்க.

 

     ஆகையால், தீய காரியங்களைத் தள்ளி, தூய காரியங்கள் செய்து, வினைத்தூய்மைக்கு இடம் பண்ணவேண்டும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...