நல்லவரை நண்பராகக் கொள்க

 

 

நல்லவரை நண்பராகக் கொள்

-----

 

     "நட்பு ஆராய்தல்" என்னும்  அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடம் உண்டாகிய குற்றத்துக்கு நாணம் கொள்பவனை, எவ்விதப் பொருளைக் கொடுத்தாவது நண்பனாகக் கொள்ளுதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

 

     நல்ல குடியில் பிறந்தவன் பழிக்கு அஞ்சுவான். பிறர் செய்யும் பழிச் செயல்களையும் பொறுத்துக் கொள்ளுவான். இரண்டு நற்குணங்களையும் உடைய ஒருவனை என்ன விலை கொடுத்தாயினும் நண்பனாகப் பெறவேண்டும்.

 

     நல்ல குடி என்றது, சாதியைக் குறித்தது அல்ல. நல்ல குணங்களும், நல்ல பண்புகளும் பொருந்திய குடியைக் குறிக்கும்.

 

 

"குடிப் பிறந்து, தன்கண் பழிநாணுவானை,

கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு".       

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தேசுபெறு மார்த்தாண்டன் செல்வன்முடி சூடி,இலங்

கேசனை வென்றான், இரங்கேசா! - மாசில்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.         

 

இதன் பொருள் --- 

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! தேசு பெறு மார்த்தாண்டன் செல்வன் --- ஒளி பொருந்திய சூரிய பகவானுடைய மகனாகிய சுக்கிரீவன், முடி சூடி --- (இராமபிரானோடு நட்புக்கொண்டு, தன் தமையனைக் கொல்வித்து, கிஷ்கிந்தைக்கு அரசனாய்) முடி சூடி,  இலங்கேசனை வென்றான் --- பின்பு இராவணனைக் கொல்வதற்கு உடந்தையாய் இருந்து வெற்றி பெற்றான், (ஆகையால், இது) மாசில் குடிப் பிறந்து பழி நாணுவானை --- குற்றம் அற்ற உயர்குடியில் பிறந்து, (தன் மேல் உலகோர் சொல்லும் பழிக்கு) அஞ்சுகிறவனை, கொடுத்தும் நட்பு கொளல் வேண்டும் --- சில கொடுத்தாயினும் சிநேகம் கொள்ளுதல் வேண்டும் (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்முடன் கூடுதல் கோடி பெறும்.

 

         விளக்கவுரை --- இடையில் அநுமார் இருந்து கூட்டுவித்ததால் இராமபிராற்கும் சுக்கிரீவற்கும் உண்டான நட்பின் விசேடம் எல்லார்க்கும் தெரியும். இந்தச் சுக்கிரீவன் உயர்குடியில் பிறந்த, பழி நாணுவானாய் இருந்தபடியால், இரகுநாயகர் இவனுடைய பகைவனாகிய வாலியைக் கொன்று, இவனுக்கு முடி சூட்டிக் கிட்கிந்தைக்கு அரசனாக்கினார். இப்படி சுக்கிரீவனுக்கு நன்மை கொடுத்து,  அவனுடைய நட்பை விரும்பிக் கொண்டார் இராமபிரான். அதற்குத் தக்கபடி அவனும், எழுபது வெள்ளம் சேனையுடன், இராமபிரானோடு சென்று, கடலில் பாலம் கட்டி, இலங்கையைச் சேர்ந்து, இராவண சம்மாரம் செய்து, சீதாபிராட்டியை மீட்டுக் கொடுத்துப் பிறகு அயோத்திக்குத் திரும்பி வந்து, இராம பட்டாபிஷேக தரிசனம் செய்து, அவருடனே பதினாயிர வருஷம் வாழ்ந்திருந்து பரமபதம் சென்றான்.

 

     ஆகையால், மாசில்லாத குடியில் பிறந்து, பழிக்கு அஞ்சுபவனாக இருந்த சுக்கிரீவனைப் போன்றவனோடு, சில கொடுத்தும் நட்புக்கொண்ட இராமபிரான் செய்கை சிறந்ததாயினமை காண்க.

                                   

     பழமொழி நானூறு என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூலில் வரும் இந்தப் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க...

 

தம்தீமை இல்லாதார் நட்டவர் தீமையையும்

எம்தீமை என்றே உணர்பதாம், --- அந்தண்

பொருதிரை வந்துலாம் பொங்குநீர்ச் சேர்ப்ப!

ஒருவர் பொறையிருவர் நட்பு.  

 

இதன் பொருள் ---

 

     அம் தண் பொருதிரை வந்து உலா(வு)ம் பொங்கு நீர் சேர்ப்ப --- அழகிய குளிர்ந்த கரைகளில் மோதுகின்ற அலைகள் மேன்மேல் வந்து வீசுகின்ற மிகுந்த நீரை உடைய கடல்நாடனே!, ஒருவர் பொறை இருவர் நட்பு --- ஒருவர் பொறுக்கும் பொறுமையால் இருவரது நட்பும் நிலைபெறும் ஆதலால், தம் தீமை இல்லாதார் --- நண்பராகக் கொள்ளப்படவர்க்குத் தம்மால் எவ்வித தீமையும் விளையவில்லை என்றாலும், நட்டவர் தீமையையும் --- நண்பர் தமக்குச் செய்த தீமையையும், எம் தீமை என்றே உணர்ப --- எம்மால் செய்யப்பட்ட தீமையே என்று நினைத்துப் பொறுப்பார்கள்.

 

         நட்புப் பூண்டொழுகும் இருவருள் ஒருவராவது பொறுமை மேற்கொண்டொழுகுதல் அவர்கள் நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும். இருவரும் பொறுமையில்லாதவராக இருப்பின், அவர்கள் நட்பு நீடித்து நிற்காது. இருவருள் ஒருவராவது பொறுமை பூண்டிருத்தல் இன்றியமையாதது.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...