சப்தஸ்தானம் --- 0894. மரு உலாவிடும்

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

மரு உலாவிடும் (சப்தஸ்தானம்)

 

முருகா!

விலைமாதர் நினைவை விட்டு,

உனது திருவடித் தாமரையையே மனதில் கொண்டு,

உனது திருப்புகழை ஓதி உய்ய அருள்.

 

 

தனன தானன தான தனத்தன

     தனன தானன தான தனத்தன

          தனன தானன தான தனத்தன ...... தனதான

 

 

மருவு லாவிடு மோதி குலைப்பவர்

     சமர வேலெனு நீடு விழிச்சியர்

          மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர்

 

மதன னோடுறழ் பூச லிடைச்சியர்

     இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்

          மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே

 

சருவி யாரையும் வாவெ னழைப்பவர்

     பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்

          சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே

 

சலச மேவிய பாத நினைத்துமுன்

     அருணை நாடதி லோது திருப்புகழ்

          தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே

 

அரிய கானக மேவு குறத்திதன்

     இதணி லேசில நாளு மனத்துடன்

          அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா

 

அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட

     உழவர் சாகர மோடி யொளித்திட

          அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே

 

திருவின் மாமர மார்ப ழனப்பதி

     அயிலு சோறவை யாளு துறைப்பதி

          திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச்

 

சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி

     பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி

          திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

மரு உலாவிடும் ஓதி குலைப்பவர்,

     சமர வேல் எனும் நீடு விழிச்சியர்,

          மனதிலே கபடு ஊரு பரத்தையர், ...... ரதிகேள்வர்

 

மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர்,

     இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்,

          மதுர மாமொழி பேசு குணத்தியர், ...... தெருமீதே

 

சருவி யாரையும் வா என அழைப்பவர்,

     பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்,

          சகல தோதக மாயை படிப்பரை ...... அணுகாதே,

 

சலச மேவிய பாதம் நினைத்து, முன்

     அருணை நாடு அதில் ஓது திருப்புகழ்

          தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் ...... புரிவாயே.

 

அரிய கானக மேவு குறத்தி தன்

     இதணிலே சில நாளும் மனத்துடன்

          அடவி தோறுமெ வாழ் இயல்பத்தினி ...... மணவாளா!

 

அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட,

     உழவர் சாகரம் ஓடி ஒளித்திட,

          அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட, ...... நினைவோனே!

 

திருவின் மாமரம் ஆர் பழனப்பதி,

     அயிலு சோறு அவை ஆளு துறைப்பதி,

          திசையில் நான்மறை தேடிய முற்குடி, ...... விதி ஆதிச்

 

சிரமும் மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி,

     பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி,

          திருவையாறு உடன் ஏழு திருப்பதி ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

         அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சிலநாளு(ம்) மனத்துடன் --- அருமையான வள்ளிமலைக் காட்டில், தனக்காக அமைக்கப்பட்டிருந்த பரண் மீது இருந்த வள்ளிநாயகியின் மீது மனம் வைத்து,

 

     அடவி தோறுமெ வாழ்இயல் பத்தினி மணவாளா --- அந்த மலையில் இருந்து பல காடுகள் தோறும் வாழ்ந்திருந்த பத்தினியாகிய வள்ளியநாயகியைத் திருமணம் புணர்ந்தவரே!

 

         அசுரர் வீடுகள் நூறு பொடிப் பட --- அரக்கர்கள் வாழ்ந்திருந்த இடம் யாவும் அழிந்து பொடியாகிப் போக,

 

     உழவர் சாகரம் ஓடி ஒளித்திட --- அரக்கர் கூட்டமானது கடலிலை ஓடி ஒளிந்திட,

 

     அமரர் நாடு பொன்மாரி மிகுந்திட நினைவோனே ---

தேவர்களின் பொன்னுலகத்தில் பொன்மழை மிகப் பொழிய நினைந்து உதவியவரே!

 

         திருவின் மாமரம் ஆர் பழனப்பதி --- இலக்குமிகரம் பொருந்திய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் என்னும் திருப்பதி,

 

     அயிலும் சோறவை ஆளு(ம்) துறைப்பதி ---

உண்பதற்குரிய சோற்றுக்குத் துறையாக உள்ள திருச்சோற்றுத்துறை என்னும் திருப்பதி,

         திசையில் நான்மறை தேடிய முன்குடி --- திசைகள் தோறும் நான்கு வேதங்களும் ஈசனைத் தேடிப் பூசித்த பழம்பதியாகிய திருவேதிக்குடி,

 

         விதி ஆதிச் சிரமும் மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி ---  பிரமனுடைய முதல் உச்சித்தலை பெரிய பூமியில் சிவபரம்பொருளால் கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் என்ற திருப்பதி,

 

பதும நாயகன் வாழ்பதி --- தாமரைக்கு நாயகன் ஆகிய சூரியன் பூசித்திருந்து திருப்பதியாகிய திருப்பூந்துருத்தி,

 

நெய்ப் பதி --- திருநெய்த்தானம் என்னும் திருப்பதி.

 

திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே --- (ஆகிய இந்த ஆறு திருப்பதிகளுடன் கூடி, திருவையாறு என்னும் திருப்பதியும் கூட்டி, ஏழூர்களில் (சப்தத் தானம்) எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் --- நறுமணம் உலவுகின்ற, முடித்துள்ள கூந்தலை வேண்டுமென்றே அவிழ்த்துக் குலைப்பவர்கள்,

 

         சமரவேல் எனு(ம்) நீடு விழிச்சியர் --- போருக்கு உரிய வேல் என்று சொல்லும்படியான நீண்ட கண்களை உடையவர்கள்,

 

         மனதிலே கபடு ஊரு பரத்தையர் --- உள்ளத்தில் வஞ்சனை வளர்கின்ற வேசியர்கள்,

 

         ரதிகேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் --- இரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும், காமப் போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள்,

 

         இளைஞர் ஆர் உயிர் வாழும் முலைச்சியர் --- இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற முலைகளை உடையவர்கள்,

 

         மதுர மாமொழி பேசு குணத்தியர் --- இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள்,

 

         தெரு மீதே சருவி --- தெருவிலேயே கொஞ்சிக் குலாவி,

 

     யாரையும் வா என அழைப்பவர் --- (பொருள் உள்ள) யாரையும் (தமது வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள்,  

 

         பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் --- பொருள் பெறுவதிலேயே வெகுவாக ஆசை பரந்துள்ள மனத்தினை உடையவர்கள்,

 

         சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே --- எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய இவர்களை நான் நெருங்காமல்,

 

         சலசம் மேவிய பாத(ம்) நினைத்து --- தாமரையை ஒத்த திருவடிகளையே மனதால் நினைத்து,

 

     முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் --- முன்னம் திருவண்ணமாலை என்னும் திருப்பதியில் ஓதிய திருப்புகழையே,

 

     தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே --- உள்ளம் குளிர, மகிழ்ச்சியுடன் எப்போதும் ஓதும்படியாக அடியேனுக்குத் திருவருள் புரிவாயாக.

 

 

பொழிப்புரை

 

     அருமையான வள்ளிமலைக் காட்டில், தனக்காக அமைக்கப்பட்டிருந்த பரண் மீது இருந்த வள்ளிநாயகியின் மீது மனம் வைத்து, அந்த மலையில் இருந்து பல காடுகள் தோறும் வாழ்ந்திருந்த பத்தினியாகிய வள்ளியநாயகியைத் திருமணம் புணர்ந்தவரே!

 

         அரக்கர்கள் வாழ்ந்திருந்த இடம் யாவும் அழிந்து பொடியாகிப் போக, அரக்கர் கூட்டமானது கடலிலை ஓடி ஒளிந்திட, தேவர்களின் பொன்னுலகத்தில் பொன்மழை மிகப் பொழிய நினைந்து உதவியவரே!

 

         இலக்குமிகரம் பொருந்திய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் என்னும் திருப்பதி, உண்பதற்குரிய சோற்றுக்குத் துறையாக உள்ள திருச்சோற்றுத்துறை என்னும் திருப்பதி,
திசைகள் தோறும் நான்கு வேதங்களும் ஈசனைத் தேடிப் பூசித்த பழம்பதியாகிய திருவேதிக்குடி, பிரமனுடைய முதல் உச்சித்தலை பெரிய பூமியில் சிவபரம்பொருளால் கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் என்ற திருப்பதி, தாமரைக்கு நாயகன் ஆகிய சூரியன் பூசித்திருந்து திருப்பதியாகிய திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என்னும் திருப்பதி ஆகிய இந்த ஆறு திருப்பதிகளுடன் கூடி, திருவையாறு என்னும் திருப்பதியும் கூட்டி, ஏழூர்களில் (சப்தத் தானம்) எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

 

நறுமணம் உலவுகின்ற, முடித்துள்ள கூந்தலை வேண்டுமென்றே அவிழ்த்துக் குலைப்பவர்கள், போருக்கு உரிய வேல் என்று சொல்லும்படியான நீண்ட கண்களை உடையவர்கள்,  உள்ளத்தில் வஞ்சனை வளர்கின்ற வேசியர்கள், இரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும், காமப் போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள்,  இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற முலைகளை உடையவர்கள், இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள், தெருவிலேயே கொஞ்சிக் குலாவி, பொருள் உள்ள யாரையும் தமது வீட்டுக்கு வரும்படி அழைப்பவர்கள்,  பொருள் பெறுவதிலேயே வெகுவாக ஆசை பரந்துள்ள மனத்தினை உடையவர்கள், எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய இவர்களை நான் நெருங்காமல்,  தாமரையை ஒத்த தேவரீரது திருவடிகளையே மனதால் நினைத்து, முன்னம் திருவண்ணமாலை என்னும் திருப்பதியில் ஓதிய திருப்புகழையே, உள்ளம் குளிர, மகிழ்ச்சியுடன் எப்போதும் திருப்பதிகள் தோறும் சென்று வழிபட்டு, ஓதும்படியாக அடியேனுக்குத் திருவருள் புரிவாயாக.

 

 

விரிவுரை

 

 

மனதிலே கபடு ஊரு பரத்தையர் ---

 

வஞ்சனை ஊற்று எடுக்கின்றது போல் வளர்கின்ற உள்ளத்தை உடையவர்கள் விலைமாதர்கள்.

 

ரதிகேள்வர் மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் ---

 

இரதியின் மணவாளன் மன்மதன். சிவபெருமானது நெற்றி விழியால் எரிந்து சாம்பலானவன். இரதியின் வேண்டுதலுக்கு இசைந்து, அவளது கண்களுக்கு மட்டும் தோன்றுமாறும், மற்றவர் கண்களுக்குப் புலப்படாதவாறும் ஆனதால், அவன் "அநங்கன்" எனப்பட்டான். மன்மதனைப் போன்று கண்ணுக்குத் தோன்றாமல், உண்டோ இல்லையோ என்னும்படி மெலிந்து இருப்பதால் அடிகளார் இவ்வாறு அருளினார்.

 

தெரு மீதே சருவி யாரையும் வா என அழைப்பவர், பொருளிலே வெகு ஆசை பரப்பிகள் ---

 

"தெருவூடே சிந்துகள் பாடி முழக்கி, செங்கயல் அம்புகள் போல விழித்து......பொன்பறி விலைமாதர்" என அடிகளார் பிறிதொரு திருப்புகழில் பாடி உள்ளார்.

 

நடு வீதியில் நின்று, அவ்வீதி வழியே செல்லும் இளைஞர்களை வலிந்தழைத்து, பல இனிய வார்த்தைகளைக் கூறி கண்வலை வீசித் தமது நடை உடைகளால் மயக்குவார்கள். பொருளில் தமக்குப் பற்று இல்லாத்து போலச் சாகசமாகப் பேசுவார்கள். ஆனாலும் பொருளைப் பறித்த பின்னரே கலவிக்கு உடன்படுவார்கள். மனமுடனே பொருளையும் ஆவியையும் பறிமுதல் புரியும் விலைமகளிரது சாகசங்களை எடுத்துக் கூறி, அவர்களிடத்து மயங்கா வண்ணம் விழிப்பை உண்டுபண்ணுகிறார் அடிகளார். சிவஞானம் தலைப்படுமாறு பக்திநெறி சென்று முத்தி நிலையடைய விழைவார்க்கு முதற்படி மாதர் ஆசையை நீக்குவதே ஆகும். முதலில் விலைமகளிரை வெறுத்து, இல்லறத்தில் இருந்து, பின்னர் அதனையும் வெறுத்து, நிராசையை மேற்கொள்ள வேண்டும்.

 

பிற திருப்புகழ்ப் பாடல்களிலும் அடிகளார் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளது காண்க.

 

எங்கேனும் ஒருவர்வர, அங்கேகண் இனிதுகொடு,

     "இங்குஏவர் உனதுமயல்                தரியார்"என்று

"இந்தாஎன் இனியஇதழ் தந்தேனை உறமருவ"

     என்றுஆசை குழைய,விழி               இணையாடி

தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள்

     சந்தேகம் அறவெ பறி                   கொளுமானா

சங்கீத கலவிநலம் என்று ஓது முத்திவிட

     தண்பாரும் உனது அருளை             அருள்வாயே”   --- திருப்புகழ்.

                                                                                                

அங்கை மென்குழல் ஆய்வார் போலே,

     சந்தி நின்று அயலோடே போவார்,

       அன்பு கொண்டிட, நீரோ போறீர்? ......    அறியீரோ?

அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர்,

     பின்பு கண்டு அறியோம் நாம், தே?

     அன்றும் இன்றும் ஒர் போதோ போகா, ......துயில்வாரா,

 

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?

     பண்டு தந்தது போதாதோ? மேல்

     இன்று தந்து உறவோதான்? துஏன்? ......இதுபோதாது?

 

இங்கு நின்றது என்? வீடே வாரீர்,

     என்று இணங்கிகள் மாயா லீலா

     இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே. --- திருப்புகழ்.

 

அம்கை நீட்டி அழைத்து, பாரிய

     கொங்கை காட்டி மறைத்து, சீரிய

     அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ......    உறவாடி

 

அம்பு தோற்ற கண் இட்டு, தோதக

     இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்

     அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை

 

பங்கம் ஆக்கி அலைத்து, தாடனை

     கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்

     பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்

 

பண்டு இராப் பகல் சுற்றுச் சூளைகள்,

     தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி

     பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ......   அருள்வாயே.. ---  திருப்புகழ்.

 

சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே ---

 

சகல தோதகம் --- எல்லாவிதமான வஞ்சகங்களையும், வஞ்சகம் என்று தெரியாதவாறு மயக்கும் வித்தைகள் அறிந்தவர் விலைமாதர் என்கின்றார் அடிகளார். இவர்கள் கூட்டுறவை விட்டு ஒழிக்கவேண்டும்.

 

சலசம் மேவிய பாத(ம்) நினைத்து ---

 

சலசம் --- தாமரை.

 

முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ் தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே ---

 

முன்னம் திருவண்ணமாலை என்னும் திருப்பதியில் முருகப் பெருமான் திருவருளால் ஓதிய திருப்புகழையே, உள்ளம் குளிர, மகிழ்ச்சியுடன் எப்போதும் ஓதும்படியாகத் திருவருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார். நமது வேண்டுகோளும் இதுவாகத் தானே அமையவேண்டும்.

 

அரிய கானகம் மேவும் குறத்தி தன் இதணிலே சிலநாளு(ம்) மனத்துடன் அடவி தோறுமெ வாழ்இயல் பத்தினி மணவாளா ---

 

இக் கருத்தைப் பின்வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் அடிகளார் அமைத்துப் பாடி இருப்பதை உணர்க.

 

நாவலர் பாடிய நூல்இசை யால்வரு

     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக

     நாயக மாமயில் ...... உடையோனே.     --- (ஏவினைநேர்) திருப்புகழ்.

 

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,

     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,

நாணம் அழிந்து, உரு மாறிய வஞ்சக!

     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

 

மார சரம் பட, மோகம் உடன் குற-

     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,

மா முநிவன் புணர் மான் உதவும், தனி

     மானை மணம் செய்த ...... பெருமாளே.  --- (பாரநறுங்) திருப்புகழ்.

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

 

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

 

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

 

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

 

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

 

நாந்தகம் அனைய உண்கண்

     நங்கை கேள், ஞாலம் தன்னில்                     

ஏந்திழையார்கட்கு எல்லாம்

     இறைவியாய் இருக்கும்நின்னைப்                                

பூந்தினை காக்க வைத்துப்

     போயினார், புளினர் ஆனோர்க்கு                       

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்

     அயன் படைத்திலன்கொல் என்றான்.

 

வார் இரும் கூந்தல் நல்லாய்,

     மதி தளர்வேனுக்கு உன்தன்                 

பேரினை உரைத்தி, மற்று உன்

     பேரினை உரையாய் என்னின்,                                   

ஊரினை உரைத்தி, ஊரும்

     உரைத்திட முடியாது என்னில்

சீரிய நின் சீறுர்க்குச்

     செல்வழி உரைத்தி என்றான்.

 

மொழிஒன்று புகலாய் ஆயின்,

     முறுவலும் புரியாய் ஆயின்,                              

விழிஒன்று நோக்காய் ஆயின்

     விரகம் மிக்கு உழல்வேன்,உய்யும்                               

வழி ஒன்று காட்டாய் ஆயின்,

     மனமும் சற்று உருகாய் ஆயின்                             

பழி ஒன்று நின்பால் சூழும்,

     பராமுகம் தவிர்தி என்றான்.    

    

உலைப்படு மெழுகது என்ன

     உருகியே, ஒருத்தி காதல்

வலைப்படுகின்றான் போல

     வருந்தியே இரங்கா நின்றான்,

கலைப்படு மதியப் புத்தேள்

     கலம் கலம் புனலில் தோன்றி,

அலைப்படு தன்மைத்து அன்றோ

      அறுமுகன் ஆடல் எல்லாம்.

 

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி, தன் பரிசனங்கள் சூழ அங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

 

கரிய வரிகள் பொருந்திய, போர் செய்யும் அம்பு போன்ற கூர்மையான  திருக்கண்களை உடைய குறமகள் ஆகிய வள்ளிநாயகியின் கண் எதிரில் முன் ஒரு நாள் முருகப் பெருமான் வேங்கை மரமாக ஆனதை அடிகாளர் பாடுவதைக் காண்க.

 

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட, மாமுனியும்

     வேங்கையுமாய் மறமின் ...... உடன்வாழ்வாய்!

பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக!

     பாண்டியன் நீறு அணிய ...... மொழிவோனே!

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர்

     வேங்கட மாமலையில் ...... உறைவோனே!

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே.    --- திருவேங்கடத் திருப்பகழ்.

 

வனசரர் ஏங்க, வான முகடுஉற ஓங்கி, ஆசை

     மயிலொடு பாங்கிமார்கள் ...... அருகாக

மயிலொடு மான்கள் சூழ, வளவரி வேங்கை ஆகி,

     மலைமிசை தோன்று மாய ...... வடிவோனே!    --- சீகாழித் திருப்புகழ்.

 

 

திருவின் மாமரம் ஆர் பழனப்பதி ---

 

"குலவெம் சிலையான் மதின்மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்

கலவமயிலும் குயிலும்பயிலும் கடல்போல் காவேரி

நலம் அஞ்சுஉடைய நறுமாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்திப்

பலவின் கனிகள் திரைமுன்சேர்க்கும் பழன நகராரே".

 

எனத் திருஞானசம்பந்தர் அருளியவாற்றால், திருப்பழனம் என்னும் திருத்தலம், மாமரங்கள் நிறைந்தது என்பது பெறப்படும்.

 

திருப்பழனம் என்னும் திருத்தலம், திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தொலைவில் சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

 

குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தானத் திருத்தலங்களில் இரண்டாவதாகும். நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.  அப்பர் பெருமான் தனது திருப்பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். விடம் தீர்த்த திருப்பதிகம் என்று போற்றப்படும் "ஒன்று கொலாம்" என்ற திருப்பதிக நிகழ்ச்சிக்கு இடமான திருத்தலம்.

 

அயிலும் சோறவை ஆளு(ம்) துறைப்பதி ---

 

திருச்சோற்றுத் துறை என்னும் திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தூரத்திலும், திருக்கண்டியூரில் இருந்து 4 கி.மீ. தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.  திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் திருவேதிகுடி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தேவார மூவரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருள்பெ பெற்றது.

 

திசையில் நான்மறை தேடிய முன்குடி ---

 

திசைகள் தோறும் நான்கு வேதங்களும் ஈசனைத் தேடிப் பூசித்த பழம்பதியாகிய திருவேதிக்குடி, திருஞானசம்பந்தரும், அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

 

விதி ஆதிச் சிரமும் மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி ---  

 

பிரமனுடைய முதல் உச்சித்தலை பெரிய பூமியில் சிவபரம்பொருளால் கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் என்ற திருப்பதி, "திருக்கண்டியூர் வீரட்டம்" ஆகும். தஞ்சை - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 9-கி. மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. தொலைவிலும் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

 

பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் - கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.

 

பதும நாயகன் வாழ்பதி ---

 

தாமரைக்கு நாயகன் ஆகிய சூரியன் பூசித்திருந்த திருப்பதியாகிய திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர் என்ற திருத்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை வழியில் 4 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது.  திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.

 

இரண்டு ஆற்றிற்கு நடுவே அமைந்துள்ள ஊர்கள் துருத்தி என்று அழைக்கப்படும். இத்தலம் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. ஊர் மேலத் திருப்பூந்துருத்தி, கீழத் திருப்பூந்துருத்தி என்று இரண்டு பகுதிகளாக உள்ளது. கோயில் உள்ள பகுதி மேலத் திருப்பூந்துருத்தி ஆகும்.

 

நெய்ப் பதி ---

 

திருநெய்த்தானம் என்னும் திருப்பதி, திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவையாற்றில் இருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

 

திருநெய்த்தானம் திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய திருத்தலம்.

 

திருவையாறுடன் ஏழு திருப்பதி பெருமாளே ---

 

(ஆகிய இந்த ஆறு திருப்பதிகளுடன் கூடி, திருவையாறு என்னும் திருப்பதியும் கூட்டி, ஏழூர்களில் (சப்தத் தானம்) எழுந்தருளி உள்ளவர் முருகப் பெருமான்.

 

தஞ்சாவூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

 

தேவார மூவரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.

 

காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவத்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவத்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.

        

சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் திருவையாறு வரும்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

 

திருநாவுக்கரசர் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். கயிலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கயிலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கயிலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கயிலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்

 

மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்

போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது

காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

 

என்ற பாடலுடன் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை தரிசித்தார்.

 

திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாறப்பர்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் நினைவை விட்டு, உனது திருவடித் தாமரையையே மனதில் கொண்டு, உனது திருப்புகழை ஓதி உய்ய அருள்.

 

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...