"ஆயும் புகழ்த்தில்லை அம்பலவாணர் அருகில் சென்றால்,
பாயும் இடபம், கடிக்கும் அரவம், பின்பற்றிச் சென்றால்
பேயும் கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்,
போய் என்செய்வாய் மனமேவ! பிணக்காடு அவர் போம் இடமே."
பொழிப்புரை --- உலகில் நல்லோரால் புகழப் பெறுகின்ற அம்பலவாணனின் திருவடியை அடைய, அவர் அருகில் சென்றால், அவர் ஏறியுள்ள காளையானது பாயும், அவர் அணிந்துள்ள பாம்பானது கடிக்கும், பின் தொடர்ந்து போனாலோ, பேய்களும், பூதகணங்களும், பெருந்தலையை உடைய பூதங்களும் பின்தொடர்ந்து வரும். மனமே! அவர் போகும் இடமோ பிணங்களைச் சுடுகின்ற காடு. அங்கே போய் நீ என்ன செய்வாய்.
விளக்கம் -- இப்பாடலின் உட்பொருளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இறைவன் திருவடியை அடைய முற்பட்டால், மெத்தக் கடினம் தான். இருவினைகளானவை சீறும். இருவினைகளுக்கு அஞ்சக் கூடாது. இன்ப துன்பங்கள் நம்மை வருத்தும். போகங்களை விழைந்து, துன்பத்தை வெறுக்கவும் கூடாது. இரண்டையும் சமமாக எண்ணி அனுபவித்துத் தான் ஆகவேண்டும். பேய் மனத்தோடு போராடித்தான் ஆகவேண்டும். உலகில் உள்ள அத்தனை விஷயங்களோடும் போராடித்தான் ஆகவேண்டும். எவ்வளவு துன்பம் வந்தபோதும், திருவடிப் பற்றை விடக்கூடாது என்பது கருத்து.
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்,
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்,
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்,
உயிரை மேவிய உடல் மறந்தாலும்,
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்,
கண்கள் நின்றுஇமைப்பது மறந்தாலும்,
நல் தவத்தவர் உள்இருந்து ஓங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
வன்மை செய்திடும் வறுமை வந்தாலும்,
மகிழ்வு செய்பெரு வாழ்வு வந்தாலும்,
புதுமை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும்,
பொருந்தினாலும், நின்றாலும், சென்றாலும்,
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும்,
சான்ற மேலவர் தமைஅடைந்தாலும்,
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
இன்னும் பற்பல நாள் இருந்தாலும்,
இக்கணம் தனிலே இறந்தாலும்,
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்,
சோர்ந்து மாநரகத்து உழன்றாலும்,
என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும்,
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்,
நன்னர் நெஞ்சகம் நாடிநின்று ஓங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே. --- திருவருட்பா.
No comments:
Post a Comment